2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு சிறப்பு நிதியொதுக்கீடு வேண்டும்

Suganthini Ratnam   / 2010 ஜூலை 09 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

போருக்குப் பின்னர், போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் சிறப்பு நிதி ஒதுக்கீடு, சிறப்புத் திட்டமிடல்கள் அவசியம் என்பது உலகம் முழுவதுக்குமான பொது விதியாகும். ஆகவே அந்தப் பொது விதியின் அடிப்படையில் வடக்கு, கிழக்கு பிரதேசங்களுக்கும் இந்த மக்களுக்கும் நிதித் திட்டமிடல் அமைச்சு சிறப்பு நிதி ஒதுக்கீட்டையும் திட்டமிடலையும் செய்ய வேண்டும்.

இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தனது உரையில் தெரிவித்தார்.

அவர் தனது உரையில் மேலும் கூறியதாவது:-

போர் நடைபெற்ற வடக்குக் கிழக்குப் பிரதேசம் இந்த நாட்டில் மிகவும் பின்தங்கியிருக்கிறது என்பதை, அந்தப் பகுதிகளுக்கு அடிக்கடி சென்று வந்து கொண்டிருக்கின்ற அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நன்றாகவே அறிவர். அதிலும் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ  இந்த மாவட்டங்களுக்கு அடிக்கடி விஜயம் செய்து அங்குள்ள நிலைமைகளை நேரில் கண்டறிந்து வருகின்றமை இங்கே குறிப்பிடத்தக்கது.

ஆகையால், அந்தப் பிரதேசங்களை துரிதமாக மீள் நிலைக்குக் கொண்டுவந்து நாட்டின் ஏனைய மக்களுடன் இணைக்க வேண்டிய பொறுப்பு எங்கள் எல்லோருக்கும் உண்டு. அதிலும் குறிப்பாக கிளிநொச்சி, முல்லைத்தீவுப் பிரதேசங்களை மீள் நிலைக்கு கொண்டுவர நாம் கூடுதலான கவனத்தைச் செலுத்த வேண்டியுள்ளது.

எனவே, இதற்கான சிறப்பு நிதி ஒதுக்கீட்டைச் செய்வதன் மூலம் நாம் முழுநாட்டினுடைய அபிவிருத்தி ஒழுங்கை முழுமைப்படுத்தலாம் என நம்புகின்றேன்.

தன்னிறைவான அபிவிருத்திக்கு நிதியும் திட்டமிடலும் அவசியமானது என்ற அடிப்படையில், யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலுள்ள தொழில் வளங்களை, பொருளாதார அபிவிருத்திக்காகவும், மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காகவும் திட்டமிட்டு, நிதிப்பங்களிப்பை வழங்கிப் பயன்படுத்த வேண்டும்.
 
இந்த மாவட்டங்களில் விவசாயம், கடற்றொழில், பனை - தென்னைவள அபிவிருத்தி, கால்நடை வளர்ப்பு, உப்பு உற்பத்தி என்பன முக்கியமான தொழில் விருத்தி பொருளாதார விருத்திக்காரணிகளாக இருக்கின்றன.

இவற்றை மேம்படுத்துவதற்கான அடிப்படைத் தேவைகளில் நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. குறிப்பாக, விவசாய அபிவிருத்தியைச் சிறப்பாக மேம்படுத்துவதற்கு விவசாயிகளுக்கான உதவித் திட்டங்கள் அவசியமாகவுள்ளன.  

உழவு இயந்திரங்கள், நீர் இறைக்கும் இயந்திரங்கள், மருந்து தெளிக்கும் கருவிகள், நீர்ப்பாசன ஏற்பாடுகள், குளங்களின் புனரமைப்பு, விவசாயத் திணைக்களங்களுக்கான வளத்தேவைகளை நிறைவேற்றுதல், பயிர்ச்செய்கைக்கான ஏற்பாடுகளும் ஊக்குவிப்புகளும் என்று இந்த உதவித் திட்டங்களாக அமைகின்றன.

இதில் முக்கியமானவையாக நீர்ப்பாசனமும் விவசாயச் செய்கைகளுக்கான இயந்திரங்களைப் பெற்றுக்கொள்வதில் இந்த மக்கள் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். இந்த நெருக்கடிக்கான தீர்வைக் காண்பதற்கு நிதித் திட்டமிடல் அமைச்சின் பங்களிப்பு மிகவும் அவசியமாகும். குறிப்பாக மானியத்துடன் கூடிய இலகு கடன்கள், இலகு கடன் திட்டங்கள் மூலமாக இந்த நெருக்கடிகளைத் தீர்த்துக்கொள்ள உதவவேண்டும்.

அவ்வாறே கிளிநொச்சி மாவட்டத்திலிருக்கும் நீர்ப்பாசனக் குளங்களின் புனரமைப்பும் நீர்ப்பாசன விநியோகத்துக்கான வாய்க்கால் புனரமைப்பும் அவசியமாகவுள்ளன. இவை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவிதமான புனரமைப்பும் செய்யப்படாத நிலையிலேயே இருக்கின்றன.

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள இன்னொரு இயல்பான பொருளாதார வளம், கால்நடை வளர்ப்பாகும். கால்நடை வளர்ப்போருக்கான இலகு கடன் வசதிகளை வழங்குவதற்கு ஏற்பாடுகளை நிதி திட்டமிடல் அமைச்சு செய்ய வேண்டும்.
 
அத்துடன் பால் உற்பத்தியை மேம்படுத்துவதற்கு அங்கே பால்ச்சாலைகளை அமைக்க வேண்டும். பால் பதனிடும் நிலையங்களையும் உருவாக்க வேண்டும்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின் அடுத்த முக்கியமான தொழில்வளம் மீன்பிடியாகும். கடற்றொழிலை விரிவாக்கம் செய்து அதை மேம்படுத்துவதற்கு சில அடிப்படையான உதவிகள் தேவையாக இருக்கின்றன. அத்துடன் நன்னீர் மீன்பிடியும் இங்கே முக்கியமான ஒரு பொருளாதார, வாழ்வாதார விடயமாகும். இந்த நன்னீர் மீன்பிடிக்கு அவசியமான ஏற்பாடுகளையும் உதவிகளையும் நிதித் திட்டமிடல் அமைச்சு செய்ய வேண்டும்.

தொடர்ந்து நடைபெற்று வந்த போரின் காரணமாக இந்த மாவட்டங்களின் கடற்றொழில் நவீனப்படுத்தப்படவில்லை. மீன்பிடித் துறைமுகங்களின் அபிவிருத்தி, கடலில் நீண்ட நாள்கள் தங்கிநின்று மீன்பிடிப்பதற்கான நவீன படகுகள் என்பவை அவசியமாகவுள்ளன. யாழ் மாவட்ட மீனவர்களுக்கு, ஆழ்கடலில் பலநாள் தங்கி தொழில்புரியும் படகுகள், சமாசம் ஒன்றிற்கு 5 வீதம், 50 படகுகள் தேவைப்படுகின்றன. 

மீள்குடியேறிய மீனவர்கள் தமது தொழிலை மேம்படுத்துவதற்கு அடிப்படையான வெளியிணைப்பு இயந்திரங்கள், படகுகள், வலைகள் என்பனவற்றை பெற்றுக்கொள்வதற்கு மானியத்துடன் கூடிய இலகு கடன் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என  நிதித் திட்டமிடல் அமைச்சரைக் கேட்டுக் கொள்கிறேன்.

அத்துடன் கிளாலி, பளை, இயக்கச்சி, தட்டுவன்கொட்டி, வடமராட்சி கிழக்கு  உள்ளிட்ட பிரதேசங்கள் உள்ளடங்கலாக மேலுமொரு தொகுதி மீனவக் குடும்பங்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் மீளக்குடியேற வேண்டியுள்ளது. அவர்களுக்கான தொழில் விருத்தித் தேவைகளும் செய்யப்பட வேண்டியுள்ளன.

பள்ளிக்குடா, நாச்சிக்குடா, வலைப்பாடு ஆகிய இடங்களில் மீன்பிடித்துறை அமைப்பதற்கும், ஐஸ் உற்பத்தி நிலையம்,  குளிர்சாதன வாகனங்கள்  என்பனவற்றுக்காகவும்  மீன்பிடி - நீரியல்வள அமைச்சிடம் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. ஆகவே, இவற்றுக்கான  நிதி வழங்கல்களை நிதித் திட்டமிடல் அமைச்சு வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் இந்த இரண்டு மாவட்டங்களிலும் பனை, தென்னை வளங்கள் மிக முக்கியமான பொருளாதாரக் காரணிகளாகும். இந்த வளங்களைப் பயன்படுத்துவதற்கான நிதி அவசியமாகின்றது. பனம் பொருள் உற்பத்திகளை நவீனப்படுத்தி, மென்பானங்கள் ஆக்கும் திட்டத்துக்கும் ஏனைய பனை உற்பத்திகளுக்கும் இது தேவை. அத்துடன் பனை மீள் நடுகைத் திட்டமும் அவசியமாக இருக்கின்றது.

அவ்வாறே பளைப் பிரதேசம் தென்னை வள உற்பத்தியில் குறிப்பிடத்தக்கது. பளையில் அமைந்திருக்கும்  தென்னை ஆராய்ச்சி நிலையத்தை மீள வினைத்திறனோடு இயங்கவைக்க வேண்டியுள்ளது.

அத்துடன் பனை, தென்னைவள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களை நாம் மீண்டும் திறம்படச் செயலாற்ற வைப்பதன் மூலம் இந்த வளங்களைப் பொருளாதார அபிவிருத்திக்கு ஏற்றவாறாகப் பயன்படுத்தலாம்.

கிளிநொச்சியிலிருக்கின்ற இன்னொரு முக்கியமான பொருளாதாரச் சிறப்பம்சம், ஆனையிறவு உப்பளத்தின் உப்புவளம். இந்த உப்பளத்தை மீண்டும் இயக்குவதன் மூலம் பொருளாதார வளத்தைப் பெறுவதுடன் 4000க்கும் அதிகமானோருக்கான வேலை வாய்ப்புகளையும் வழங்க முடியும்.
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--