2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

காங்கேசந்துறை சீமெந்து தொழிற்சாலை எந்த நாட்டுக்கும் விற்கப்படமாட்டாது-அமைச்சர் தயாரட்ன

Suganthini Ratnam   / 2010 ஜூலை 14 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

"காங்கேசந்துறை சீமெந்து தொழிற்சாலை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எந்தவொரு நாட்டுக்கோ அன்றி தனியார்களுக்கோ வழங்கப்படமாட்டாது. வெகு விரைவில் சீமெந்து தொழிற்சாலையை இயக்க நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும்." இவ்வாறு யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த அரச சொத்துடமைகள் மற்றும் கைத்தொழில் அமைச்சர் பி.தயாரட்ன தெரிவித்தார்

யாழ்ப்பாணத்திற்கு நேற்று விஜயம் மேற்கொண்ட அரச சொத்துகள் மற்றும் கைத்தொழில் அமைச்சர் பி.தயாரட்ன பிரதி அமைச்சர் கரத் குணரட்ன மற்றும் அமைச்சின் செயலாளர் வினிகமகே இலங்கை சீமெந்துக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா சீமெந்து லிமிட்டட்டின் தலைவர் சிசில பரணகம ஆகியோர் ஜக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் வீட்டில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை பிற்பகல் 2.15 மணியளவில்  நடத்தியுள்ளனர்.

இச்சந்திப்பில் ஊடகவியலாளர்கள் தற்போதைய சீமெந்து தொழிற்சாலையின் நிலைமை பற்றி கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வெகுவிரைவில் சீமெந்து  தொழிற்சாலையைக் கட்டம் கட்டமாக இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

கடந்த பல வருடங்களாக இந்த தொழிற்சாலை படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்றது. இந்நிலையில் உடனடியாக இதனை இயங்க வைக்க முடியாது.

கடந்த காலத்தில் இந்த தொழிற்சாலை இந்தியாவுக்கு விற்கப்பட்டதாக கேட்கப்பட்டது. இது உண்மைக்குப் புறம்பானதாகும். எந்த சந்தர்ப்பத்திலும் காங்கேசந்துறை சீமெந்துத் தொழிற்சாலையை இந்தியாவுக்கு அல்ல எந்தவொரு நாட்டுக்கும் வழங்கப் போவதில்லை.

அடுத்து வரும் சந்ததியும் கூட  இதனைப் பயன்படுத்த வேண்டும். தற்போது கூட தொழிற்சாலையிலுள்ள இயந்திரங்களில் ஒரு பகுதி பாதிக்கப்பட்டாலும் கூட பெரும் பகுதி இயங்கக்கூடிய தன்மையில் காணப்படுகின்றன.

வெகு விரைவில் பாதுகாப்பு அமைச்சிடம் தொடர்பு கொண்டு இதனை இயக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. சீமெந்துத் தொழிற்சாலை அமைந்துள்ள பகுதியிலும் கூட தற்போதும் படையினரின் செயற்பாடுகள் காணப்படுகின்றன. இவர்களை அங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்றிய பின்னர் தொழிற்சாலையை கட்டம் கட்டமாக இயங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--