2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

'மர்ம சிறுநீரக நோய்க்கான காரணம் ஜனவரியில் கண்டறியப்படும்'

Super User   / 2010 ஜூலை 16 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கெலும் பண்டார, லக்னா பரணமன்ன)

அண்மையில் இலங்கையின் சில பிரதேசங்களில் பரவியிருந்த மர்ம சிறுநீரக நோய் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழு, இந்நோய்க்கான காரணத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் கண்டறிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆலோசகரான பேராசிரியர் சாந்தி மெண்டிஸ் இன்று தெரிவித்தார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் உதவியுடன் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. நீரினாலா, விவசாயத்துறையில் பயன்படுத்தப்படும் இரசாயணங்கள் காரணமாகவா அல்லது ஏதேனும் மீன்வகைளை உண்பதாலா இந்த நோய் ஏற்படுகிறது என்பதை இந்நிபுணர் குழு கண்டறியும் என கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் பேராசிரியர் சாந்தி மெண்டிஸ் கூறினார்.

இந்நோய் அநுராதபுர மாவட்டத்தின் மதவாச்சி, பதவியா, கெப்பிட்டிகொல்லாவ, பொலன்னறுவை மாவட்டத்தின் மெதரிகிரிய போன்ற பகுதிகளில் அதிகமானோரை பாதித்திருந்ததுடன் ஊவா மாகாணத்தின் கிராந்துருகோட்டே, கிழக்கு மாகாணத்தின் தெஹியத்தகண்டிய போன்ற பகுதிகளிலும் சிலரை பாதித்திருந்தது.

இந்நோய்க்கான காரணத்தை கண்டறிவதற்கு முன்னாள் சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உலக சுகாதார ஸ்தாபனத்தின் உதவியை கோரியிருந்தார். அதேவேளை சிறுநீரக நோயாளர்களுக்காக அரசாங்கம் 350 மில்லியன் ரூபாவை ஒதுக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுமார் 5000 பேரை இந்நோய் பாதித்திருந்ததாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் டாக்டர் பி.ஜி. மஹிபால தெரிவித்தார்.

இதேவேளை, இச்செய்தியாளர் மாநாட்டில் பங்குபற்றிய உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதி டாக்டர் பிர்தோஸி ரஸ்டம் மேதா, மேற்படி நோய் உலகின் ஏனைய சில பகுதிகளிலும் காணப்படுவதாகவும் இலங்கையினால் மேற்கொள்ளப்படும் ஆய்வு ஏனைய நாடுகளுக்கும் உதவியாக இருக்கும் எனவும் கூறினார்.

மக்களின் நன்மைக்காக இத்தகைய ஆராய்ச்சியை மேற்கொள்ள முன்வந்தமை குறித்து இலங்கை அரசாங்கத்திற்கும் முன்னாள் சுகாதார அமைச்சருக்கும் டாக்டர் மேதா பாராட்டுத் தெரிவித்தார்.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--