Super User / 2010 ஜூலை 17 , பி.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளாக செல்லும் தமிழர்கள் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்று கூறுவது பொய்யானது எனவும் அவர்கள் அவுஸ்திரேலியாவில் புகலிடம் பெற்றுவிட்டால், யுத்தக் குற்ற விசாரணைகளில் சாட்சிகளாக மாறி விடுவார்கள் என்ற அச்சத்திலேயே இலங்கை அரசாங்கம் அவர்கள் மீது குற்றம் சுமத்துவதாகவும் ஐ.நா.வின் முன்னாள் பேச்சாளர் கோர்டன் வைஸ் கூறியுள்ளார்.
அண்மையில் இலங்கையின் பயங்கரவாத விவகார நிபுணர் ஒருவர், அவுஸ்திரேலியா செல்கின்ற இலங்கை தமிழர்களில் அரைவாசிப்பேர் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டினை தெரிவித்திருந்தார்.
இந்த குற்றச்சாட்டை கோர்டன் வைஸ் நிராகரித்துள்ளதாக ரேடியோ ஆஸ்திரேலியா எனும் வானொலியின் நேற்றைய செய்தி அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழர்கள் அவுஸ்திரேலியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர்கள் என்ற நிலைப்பாட்டை இலங்கை அரசாங்கம் ஏன் வலியுறுத்துகிறது என கோர்டன் வைஸிடம் கேட்கப்பட்டது.
இதற்கு பதில் வழங்கிய அவர், "யுத்த காலத்தின் போது வடக்கில் நடைபெற்றது என்ன என்பதைக் கண்டவர்கள் அவுஸ்திரேலியாவில் புகலிடம் பெறுவதை இலங்கை தடுக்க முயற்சிக்கிறது என்பதே இதற்கான ஒரே காரணமாகத் தோன்றுகிறது" என பதிலளித்தார்.
இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் வடக்கில் சுமார் 40,000க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதாகவும் அவர் கடந்த பெப்ரவரி மாதம் அவுஸ்திரேலிய செய்திச் சேவையொன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்திருந்தார்.
இக்குற்றச்சாட்டை இலங்கை அரசாங்கம் திட்டவட்டமாக நிராகரித்திருந்தது. அதேவேளை, இக்கருத்து கோர்டன் வைஸின் சொந்தக் கருத்து மாத்திரமே எனவும் அது ஐ.நா.வின் கருத்து அல்ல எனவும் ஐ.நா. தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பேச்சாளராக இருந்த கோர்டன் வைஸ், தமது 14 வருட ஐ.நா. சபையின் சேவையின் பின்னர் இராஜினாமாச் செய்துவிட்டு தமது சொந்த நாடான அவுஸ்திரேலியாவிற்குத் திரும்பியமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
25 Oct 2025