2021 மார்ச் 04, வியாழக்கிழமை

கட்சியின் முன்மொழிவுகள் ஏற்றுக் கொள்ளாவிட்டால் வாக்களிக்க மாட்டோம்-ஸ்ரீல.மு.கா

Super User   / 2010 ஒக்டோபர் 15 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

உத்தேச உள்ளூராட்சி திருத்தச் சட்ட மூலம் தொடர்பில் எமது கட்சியின் முன்மொழிவுகள் மாகாண சபைகளில் ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் வாக்களிப்பில் கலந்து கொள்ளமாட்டோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹசன் அலி தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

எனினும், எமது கட்சியின் முன்மொழிவுகள் மாகாண சபைகளில் ஏற்றுக் கொள்ளப்படும் பட்சத்தில் ஆதரவாக வாக்களிப்போம் என அவர் கூறினார்.

அடுத்த வாரம் மாகாண சபைகளில் சமர்பிக்கப்படவுள்ள உத்தேச உள்ளூராட்சி திருத்தச் சட்ட மூலம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாகாண சபை உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் கட்சித் தலைமையகமான தாருஸ்ஸலாமில் இன்று மாலை இடம்பெற்றது.

இக்கூட்டத்தினை அடுத்து தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு பிரத்தியேகமாக கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

"உத்தேச உள்ளூராட்சி திருத்தச் சட்ட மூலத்தில் சிறுபான்மையினத்தவருக்கு சாதகங்களும் பாதகங்களும் காணப்படுகின்றன.

அத்துடன், இச்சட்ட மூலத்தில் சில தெளிவின்மைகள் காணப்படுகின்றன. இத்தெளிவின்மைகள் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

கடந்த சில வருடங்களுக்கு முன் உத்தேச உள்ளூராட்சி திருத்தச் சட்ட மூலம்  முன்வைக்கப்பட்ட போது சிறுபான்மையினருக்கு முற்றிலும் பாதிப்பு எனத் தெரிவித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.

இதன் பின்னர் உள்ளூராட்சி திருத்தச் சட்ட மூலம் தொடர்பிலான நாடாளுமன்றக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி எமது கட்சியின் முன்மொழிவுகளை தெரிவித்தோம்.

தற்போது புதிதாக முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச உள்ளூராட்சி திருத்தச் சட்ட மூலத்தில் சில தெளிவின்மை காணப்படுகின்றன.

இச்சட்ட மூலத்தில், உள்ளூராட்சி மன்றங்களில் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவுத் திட்டம் இரண்டு தடவைகள் தோற்கடிக்கப்படின் குறித்த சபை ஆணையளாரின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும்.

உள்ளூராட்சி சபைகளுக்கான ஆணையாளரை அமைச்சர் நியமிப்பார் என குறிப்பிட்டப்பட்டுள்ளது. ஆணையாளரை நியமிப்பது மாகாண அமைச்சரா அல்லது மத்திய அமைச்சரா என குறிப்பிடப்படவில்லை.

மக்களால் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட ஒரு சபையை கலைப்பது தவறான விடயமாகும். அத்துடன் அச்சபையை விசேட ஆணையாளரின் கீழ் கொண்டு வருவது அதை விட பெரிய தவறாகும்.

வரவு செலவுத் திட்டம் தோல்வியடையும் பட்சத்தில் குறித்த சபைகளுக்கு இடைத் தேர்தலை நடத்தி புதிய தலைவரை தெரிவு செய்ய வேண்டும்.

உள்ளூராட்சி சபைகளுக்கான உறுப்பினர்கள் 30% விகிதாசார முறையில் தெரிவு செய்யப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இது எவ்வாறு என குறிப்பிடப்படவில்லை என்பன சில தெளிவின்மைகளாகும்.

மாகாண சபைகளில் உத்தேச உள்ளூராட்சி திருத்தச் சட்ட மூலம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் போது எமது கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் இத்தெளிவின்மைகள் குறித்தான முன்மொழிவுகளை சமர்ப்பிப்பார்கள்" எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசன் அலி தெரிவித்தார்.


 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .