2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

ஜனநாயகம் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போகும் அபாயம்: சிவாஜிலிங்கம்

Super User   / 2010 நவம்பர் 10 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(க.கோகிலவாணி)

'இந்த நாடு ஜனநாயகப் படுகொலையை நோக்கிச் சென்றுக்கொண்டிருக்கிறது. ஜனநாயகம் என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லாத நிலைதோன்றப் போகின்றது. இவற்றை உணர்ந்துதான் பல முற்போக்கு கட்சிகளும், மலையகத்தை பிரதி நிதித்துவப்படுத்துபவர்களும், வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப் படுத்துபவர்களும் ஒன்றினைந்து இலங்கைத் தீவிலே சமூக ஜனநாயகவாதிகளின் பேரவையை ஆரம்பிப்பதற்கு தீர்மாணித்தோம்.'

- இவ்வாறு சமூக ஜனநாயகவாதிகளின் பேரவை உருவாக்கப்பட்டதன் நோக்கம் குறித்து விவரிப்பற்காக இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

இச்செய்தியாளர் மாநாட்டில் சிவாஜிலிங்கம் மேலும் உரையாற்றுகையில்,

 'இன்று இலங்கையில் ஜனநாய படுகொலைகள் தினம் தினம் அரங்கேறிக்கொண்டு வருகின்றன. ஜனநாயகம் என்ற ஒன்றே இங்கு இல்லாமல் போய்விட்டது. இவற்றை தட்டிக்கேட்க முடியாத வகையில் மனித உரிமைமீறல்கள் இடம்பெற்றுக்கொண்டுள்ளன.

அப்படி எதிர்த்து தட்டிக்கேட்பவர்கள் அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்படுவார்கள் என்பதை உணர்ந்து விலகி நிற்கின்றார்கள். உதாரணமாக பல்கலைக்கழகங்களின் போராட்டங்களைக் கூறலாம். இன்று அரச பயங்கரவாதம் தலைவிரித்தாடுகிறது.

குறிப்பாக, வடக்குகிழக்கில் இராணுவ ஆட்சியே நிலவுகின்றது. இவ்வாட்சியின் கீழ் மக்கள் பெரிதும் துன்ப துயரங்களை அனுபவிக்கின்றார்கள்.

யுத்தம் முடிவடைந்து விட்ட நிலையில் எதற்காக இந்த இராணுவப் பலத்தை அதிகரிக்க வேண்டும்? நாட்டின் பாதுகாப்பிற்கு அவர்களை பயன்படுத்திவிட்டு மீதமானவர்களை சிவில் பாதுகாப்புக்கு பயன்படுத்தும்படியே நாங்கள் அரசை வலியுறுத்துகின்றோம்.

போர்க்கைதிகள் அரசியல் கைதிகளை விடுதலை செய்வது குறித்து அரசாங்கம் அக்கறையின்றி இருக்கின்றது. இதேபோல் அங்கு மீள்குடியேற்றப்பட்ட மக்களின் துன்பங்கள் இன்னும் தொடர்ந்த வண்ணமே உள்ளன.

இவற்றையெல்லாம் கருத்திற்கொண்டு இந்த இலங்கைத் தீவில் ஜனநாயகத்தை மிளிரச்செய்வதற்கான ஒரு முயற்சியாகத்தான் நாட்டிலே இருக்கும் அனைத்து மக்களையும் ஒன்று திரட்டவேண்டும் எனும் நோக்கில் சமூக ஜனநாயகவாதிகளின் பேரவையை உருவாக்கியிருக்கிறோம்.

இதில் பங்களிப்புச் செய்ய வேண்டும் என்பதற்காகவே தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு இதில் இணைந்திருக்கிறது. நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும் என்பதே இதனது குறிக்கோளாக உள்ளது. ஐக்கிய

ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக பலர் அவ்வப்போது போராட்டங்களை முன்னெடுத்துக்கொண்டு இருக்கின்றனர். அவர்களுடன் இணைந்து நாங்களும் அந்தப்போராட்டங்களில் கலந்துக்கொண்டோம்.

ஆனால் ஜனநாயகத்தை நிலைநாட்டும் மூன்றாவது அணியாக ஜனநாயக பேரவை பார்க்கப்படவேண்டும். ஜனநாயகத்தை பலப்படுத்தும் செயற்பாடாக அமையவேண்டும் என்பதே இதனது நோக்கம்' என்றார்.

 

"நாட்டை துபாய்மயப்படுத்த முயற்சி"

இச்செய்தியாளர் மாநாட்டில் மேல் மாகாண சபை ஐ.தே.க. உறுப்பினர் ஸ்ரீலால் லக்திலக்க உரையாற்றுகையில், ராஜபக்ஸ அரசாங்கத்தின் ஆட்சியில் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தை தூக்கியெறிந்துவிட்டு நாட்டை துபாய் மயமாக்குவதற்கு முயற்சிக்கிறார்கள்.  துபாய் மயமாக்கம் என்பது தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்குள்ள முக்கியத்துவத்தை ஒதுக்கிவிட்டு நிறைவேற்று அதிகாரிகள் ஊடாக நிர்வாகத்தை நடத்துவதாகும்.

இலங்கையின் பொருளாதாரத்தை விருத்தி செய்வதாகக் கூறிக்கொண்டு இலங்கை முழுவதும் சூதாட்ட வியாபாரத்தை ஆரம்பிப்பதற்கு முயற்சிக்கிறார்கள்.

இந்த அரசாங்கம் சிங்கள பௌத்த தர்மராஜ்ஜியத்தை கட்டியெழுப்புவதற்காக வந்ததாகக் கூறிக்கொண்டு, எமது நாடு முழுவதும் சூதாட்டத்தை ஆரம்பிப்பதற்கு நாடாளுமன்றில் விவாதம் நடத்துகிறது.
ஜனாதிபதியின் இரண்டாவது தவணைக்கால பதவிப் பிரமாணத்தையொட்டி பாரிய தமாசா கொண்டாட்டங்களை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து போட்டியிட்ட சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டு இராணுவ நீதிமன்றத்தின் மூலம் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.

இந்நாட்டின் அதிகாரமிக்க தனி நபர்களை எதிர்த்து ஜனநாயக ரீதியில் போட்டியிடுவதுகூட ஆபத்தானதாக மாறியிருக்கிறது.
சிங்கள பௌத்த கலாசாரத்தின்படி பார்த்தால் எல்லாளன் - துட்டகைமுனு யுத்தம் குறித்து எல்லோருக்கும் தெரியும். எல்லாளன் யுத்தத்தில் இறந்தபின் அவருக்கு துட்டகைமுனு கல்லறை எழுப்பி அனைவரும் அதற்கு மரியாதை செலுத்த வேண்டுமென கோரினார்.

பொன்சேகாவுக்கு இழைக்கப்படும் அநீதிகள் ஏற்றுக்கொள்ளப்பட்ட  ஜனநாயகக் கொள்கைகளுக்கு விரோமான, மனிதாபிமான கொள்கைகளுக்கு விரோத நடவடிக்கைளாகும்' என்றார். (Pix By: Kithsri De Mel)
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--