2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

நான் அரசியல் நடத்தவில்லை: யாழ். அரச அதிபர்

A.P.Mathan   / 2010 நவம்பர் 10 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னிலையில் நான் வழங்கிய சாட்சியங்களை சிலர் திரிவுபடுத்தி அறிக்கைகளை வெளியிடுகின்றனர். சில ஊடகங்களும் என்னுடைய அறிக்கைகளை தவறான வழியில் பிரசாரப்படுத்துகின்றன என யாழ். மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்:

நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னிலையில் நான் சாட்சியமளிக்கையில் அவர்களுக்கு தெளிவாக குறிப்பிட்டிருந்தேன் ஜனவரி 22ஆம் திகதிவரை நடந்த சம்பவங்களைத்தான் சாட்சியமாக வழங்குகின்றேன் என்று. ஜனவரி 22ஆம் திகதி பாதுகாப்பு வலயத்துக்குள் செல்லும்வரை மக்கள் அனுபவித்த துன்பங்களைத்தான் நான் சாட்சியமாக வழங்கியிருந்தேன். நல்லிணக்க ஆணைக்குழுவினருக்கு நேரடியாக விளங்கவேண்டும் என்பதற்காக தெளிவான ஆங்கிலத்தில் எனது சாட்சியங்களை பதிவுசெய்தேன். இந்த சாட்சியங்களின் மொழிபெயர்ப்பில் பல தவறுகளை ஊடகங்கள் தமக்கு விருப்பம்போல் எழுதிவருகிறார்கள். இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

முள்ளியவளையில் நடைபெற்ற சம்பவங்களை நான் சாட்சியமாக குறிப்பிட்டதை சில ஊடகங்கள் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற சம்பவங்கள் என பிழையாக வெளியிட்டிருக்கின்றன. சரியான மொழிபெயர்ப்பு இன்மையால் என்மீது வீணான பழியினை சுமத்திவருகின்றார்கள் இவர்கள். நான் அரசியல் நடத்துகின்ற அரசியல்வாதியில்லை, நிர்வாக கடமைகளை செய்கின்ற அரச உத்தியோகத்தர் என்பதை இவர்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். அரசியல்வாதிகளின் விருப்பத்திற்கு என்னால் நடக்கமுடியாது என்று குறிப்பிட்டார்.

என்னுடைய சாட்சியங்களில் பலமுறை தெளிவுபடுத்தி கூறியிருந்தேன், நான் ஜனவரி 22ஆம் திகதி வெளியேறும்வரை நடைபெற்ற சம்பவங்களைத்தான் சாட்சியமாக வழங்குகின்றேன் என்று. இந்த சாட்சியம் நல்லிணக்க ஆணைக்குழுவில் பதிவிலிருக்கிறது என்பதையும் அரச அதிபர் மேலும் சுட்டிக்காட்டினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .