2020 நவம்பர் 23, திங்கட்கிழமை

ஹந்துன்நெத்தி மீதான தாக்குதலுக்கு கண்டனங்கள்

Super User   / 2010 நவம்பர் 15 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி, கெலும் பண்டார)

நேற்று இரவு யாழ்ப்பாணத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி உட்பட மூவர் தாக்கப்பட்டமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழ் தேசிய விடுதலை கூட்டமமைப்பு ஆகிய கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இது தொடர்பாக கூறுகையில்,

'நூறு சதவீதம்  பொலிஸ் மற்றும் இராணுவத்தின் பாதுகாப்பில் உள்ள யாழ். நகரில் இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றமைக்கு அரசாங்கமே முழுப் பொறுப்புக் கூற வேண்டும்.

இச்சம்பவத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டிக்கின்றது. ஜனநாயக ரீதியில் எந்தவொரு கட்சியும் இந்நாட்டில் எங்கும் கூட்டங்களை நடத்துவதற்கு உரிமையுள்ளது. யாழ்ப்பாணத்தில் இத்தகைய சம்பவம் நடைபெற்றமை குறித்து வருந்துகிறேன்' என்றார்.

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி

இதேவேளை இச்சம்பவத்தை யாழ் மாநகர சபையும் ஈ.பி.டி.பியும் வன்மையாக கண்டிப்பதாக யாழ் மாநகர மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்தார்.

யுத்தத்திற்கு பின்னரான ஒரு சூழலில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றமை மனவருத்தத்திற்குரியதொரு செயற்பாடாகும் என்றார் அவர்.


தமிழ்த் தேசிய விடுதலை முன்னணி

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதனின் வீட்டில் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தாக்கப்பட்டமை தமிழ்த் தேசிய விடுதலை முன்னணியின் அரசியல் செயற்பாட்டுக்கு விடுத்த ஒரு அச்சுறுத்தலாகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.

'இதன் மூலம் எமது கட்சியின் அரசியல் செயற்பாட்டை தடுக்க முனைகின்றார்கள். இச்சம்பவத்திற்கு அரசாங்கமே முழு பொறுப்பு கூறவேண்டும்'  என்றார் அவர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--