2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

எனது சமூகம் அறிவை மேம்படுத்துவதற்கான போட்டிப் பயணத்தைச் செய்ய வேண்டியவர்களாக இருக்கிறோம்: மு.சந்திரக

Super User   / 2010 டிசெம்பர் 09 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எனது சமூகம் ஏனைய சமூகங்களுக்கு இணையாக அறிவை மேம்படுத்துவதற்கான போட்டிப் பயணத்தைச் செய்ய வேண்டியவர்களாக இருக்கிறோம் என ஈ.பி.டி.பி. நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற உயர் கல்வி அமைச்சுக்கான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் தொடர்ந்து உரையாற்றிய அவர்,

எதிலும் பின்தங்கும் போதும் பிற்படுத்தப்படும் போதுமே பிரச்சினைகள் உருவாகின்றன.

வரவு செலவுத்திட்டத்தில், உயர் கல்வி அமைச்சுக்கான இந்தக் குழுநிலை விவாதத்தில் வடபகுதி மக்களின் சார்பாக என்னுடைய முன்வைப்புகளை இங்கே சமர்ப்பிக்கிறேன்.

அறிவியலில் இன்று உலகம் அதிவேகப் பயணத்தைச் செய்கிறது. அபிவிருத்தி, பொருளாதாரம், அரசியல், விஞ்ஞானம், கலை என எல்லாமே அறிவியல் மயப்பட்டுள்ளன.

இன்று இனம், மதம், மொழி, பிரதேசம் என்ற வேறுபாடுகளைக் கடந்து, அறிவுப் பரிமாற்றம் நடைபெறுகிறது. இந்த வளர்ச்சிக்குக் காரணம் தொடர்பாடலின் வளர்ச்சியும் பரவலாக்கமுமே.

தொடர்பாடலினால் ஏற்பட்ட அறிவு வளர்ச்சியை ஒவ்வொரு நாடும் முழுமையாகப் பயன்படுத்த முயற்சிக்கின்றன.

ஆகவே நாம் உலக ஓட்டத்திலிருந்து பின்னிற்கவும் முடியாது. எந்தக் காரணங்களினாலும் சமூக நிலையில் பிற்படுத்தப்படவும்  இயலாது.

அதேவேளை எதிலும் முன்னிற்க வேண்டும் என்ற தேவையும் விருப்பமும் எல்லோருக்கும் இன்று ஏற்பட்டுள்ளது.

ஆகவே தங்களின் முன்னே இருக்கும் தேவைகளை நிறைவேற்றுவதற்கும் - தாங்கள் எதிர்கொள்ள வேண்டிய போட்டிச் சூழலை வெற்றிகொள்வதற்கும் கல்வி இன்று அனைவருக்கும் அவசியமாக இருக்கிறது.

இதனால், எமது நாட்டின் உயர்கல்வி குறித்த அக்கறைகள் இன்று பரவலாக எல்லா மட்டங்களிலும் தீவிரமாகியுள்ளன.

இந்த உயர்கல்வி என்பது சர்வதேசத் தரத்திலானதாக இருப்பது அவசியமாகும். இன்று உலகம் ஒரு கிராமத்தைப் போல பல வழிகளிலும் சுருங்கியுள்ளது. ஒரு சாதாரண கிராமத்தில் கூட பல நாட்டவர்களுடன் பணியாற்றவேண்டிய நிலை இன்று வளர்ந்துள்ளது.

இதனால் எந்தத் துறையில் செயற்படுவதாக இருந்தாலும் அதில் நிபுணத்துவம் இருக்க வேண்டும். இல்லையெனில் மற்றவர்களுக்கு இணையாக எங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் முடியாது. அவர்களோடு சமாந்தரமாகப் பயணஞ்செய்யவும் முடியாது.

இந்த நிலையில்தான் நாம் எங்களுடைய உயர்கல்வியை நோக்க வேண்டும் என விரும்புகிறேன்.

இங்கே நான் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நிலைமைகளைப் பற்றி என்னுடைய கவனங்களை முன்வைக்கிறேன்.

இந்த நாட்டிலே உள்ள பல்கலைக்கழகங்களில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் முக்கியமான ஒன்றாகும். ஒரு வளமான தனித்துவப் பாரம்பரியம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்குண்டு.

அந்தப் பல்கலைக்கழகத்திலே ஆற்றலும் ஆளுமையும் மிக்க பேராசிரியர்கள் பங்காற்றியிருக்கிறார்கள். அவர்கள் பல ஆளுமையுள்ள அறிஞர்களையும் துறைசார்ந்தோரையும் உருவாக்கியிருக்கிறார்கள்.

ஆனால், நாட்டிலே நீடித்த போர் - முக்கியமாக வடக்குக் கிழக்கின் இயல்பு வாழ்க்கையையும் அங்குள்ள வளங்களையும் பாதித்ததைப் போல - அங்கே உயர் கல்வியையும் பாதித்தே உள்ளது.

இதனால் துரதிஷ்டவசமாக - வடக்கின் ஒரே ஒரு பல்கலைக்கழகமான யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், உரிய வளர்ச்சியை அடைவதற்கான சூழல் கடந்த காலங்களில் இல்லாமற் போய்விட்டது.

இதற்கு அங்கே நிலவிய அரசியற் சூழலும் ஒரு காரணமாகும். இதனால்   ஏனைய பல்கலைக்கழகங்களையும் விட யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மிக நெருக்கடியான நிலையிலும் வளப்போதாமைகளின் மத்தியிலும் சிரமங்களுடன்  இயங்கியிருக்கிறது.  

ஆனாலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தினர் அனைத்து நிலைமைகளிலும் தாக்குப் பிடித்துக் கடுமையாக உழைத்து, அந்தப் பல்கலைக்கழகத்தின் இயங்கு தளத்தைப் பேணியிருக்கிறார்கள்.

அத்துடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கான பாரம்பரியத்தைப் பேணுவதிலும் அதன் தனித்துவங்களை மேலும் வளர்த்தெடுப்பதிலும் அவர்கள்  ஆர்வமாக இருக்கின்றனர்.

இதற்காக நான் இந்தச் சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு என்னுடைய நன்றியைக் கூறிக்கொள்கிறேன்.

ஆனால், இன்று நிலைமைகள் மாறியிருக்கின்றன.

இந்தப் புதிய மாற்றத்தில் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியையும் மறுமலர்ச்சியையும் வடபகுதி மக்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள்.

இந்தப் புதிய சூழலில்  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கான உதவிகளையும் ஏது நிலைகளையும் அரசாங்கம் ஏற்படுத்தித் தரும் என்று அவர்கள் நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.

இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல தேவைகள் இருக்கின்றன. இவற்றை அங்கே விஜயம் செய்த உயர் கல்வி அமைச்சரும் நேரில் பார்த்து அறிந்திருக்கிறார்.

குறிப்பாக - நான் ஆரம்பத்திலே குறிப்பிட்டதைப் போல, தொடர்பாடல் விருத்தியை மேம்படுத்துவதற்கு புதிய வளங்களையுடைய கணனிகளும் தனியான கட்டிடத் தொகுதியும் அங்கே அவசியமாக உள்ளது.

இப்பொழுது பல்கலைக்கழக நூலகத்தின் ஒரு பகுதியிலேயே இந்தத் தொகுதி இயங்கிவருகிறது.  

அத்துடன் விரைவான சேவையைப் பெற்றுக்கொள்ளக்கூடிய  வகையில் இதற்கான இணைப்புகளும் தொழில்நுட்ப வளங்களும் தேவைப்படுகின்றன.

சில துறைகளில் பயிற்றுவிப்பதற்கான ஆசிரிய வளத்தின் குறைபாடுகளும் நீக்கப்படவேண்டியுள்ளது. குறிப்பாக தொழில்வாய்ப்பைப் பெறக்கூடிய கடற்றொழில் போன்ற கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அதற்கான துறைகள் குறைந்தளவு வளங்களோடு ஆரம்பிக்கப்பட்டன.

இந்த மாதிரித் துறைகளை ஆரம்பிக்கும்போது தொடக்கத்தில் உருவாகும் நெருக்கடியைத் தீர்ப்பதற்கும் நடைமுறைப்பிரச்சினைகளைக் கவனத்தில் எடுக்கக் கூடிய மாதிரியும் திறைசேரி, மானியங்கள் ஆணைக்குழு ஆகியவற்றின் கொள்கைகள் அமைவது தேவை.

அதாவது, இந்தத் துறைகளை ஆரம்பிக்கும்போது தொடக்கத்தில் வளப்பற்றாக்குறைகள், ஆளணிப் பற்றாக்குறைகள், மாணவரின் ஈடுபாடு போன்றன குறைவாக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட கால எல்லை வரையும் இந்தத் துறைகளுக்கான உதவிகளையும் வளங்களையும் வழங்குவதற்கு ஏற்பாடுகள் இருப்பது நல்லது.  
 
மேலும் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் தாம் சார்ந்த துறைகளுக்கு அப்பாலான கணினி, தொடர்பாடற் தொழில் நுட்பம்,  மற்றும் ஆங்கில அறிவினைப் பெற்றுக் கொள்வதற்கான வசதிகளையும் செய்ய வேண்டியது அவசியமாகவுள்ளது.

இதற்கான சாதன வளங்கள், விரிவுரையாளர் உள்ளிட்ட ஆளணி வளங்கள் போன்றவற்றை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியுள்ளது.

இந்த வளங்கள் இல்லாத காரணத்தினால், இந்த மாணவர்கள் தமது துறைசார்ந்த அறிவுக்கு அப்பாலான ஏனைய அறிவையும் ஆற்றலையும் வளர்த்துக் கொள்வதில் சிரமங்களை எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது என  அவதானிக்கப்பட்டுள்ளது.

இதனால், அவர்கள் தாம் பெற்றுக்கொண்ட கல்வியை தாம் பயின்ற துறையில் பிரயோகப்படுத்தவே சிரமமான நிலை உருவாகியுள்ளது.

ஆகவே, நாட்டிலுள்ள ஏனைய பல்கலைக்கழக மாணவர்கள் பெற்றுக் கொள்ளும்  அளவுக்குச் சமாந்தரமான வளங்களையும் ஏற்பாடுகளையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களும் கொண்டிருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

இதைத் தவிர, வடபகுதி மக்களின் நீண்டகால விருப்பமாக இருக்கும் பொறியியற் பீடத்தை நாம் விரைவாக அமைக்க வேண்டியுள்ளது.

உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸநாயக்க அவர்கள் அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்த போதும் இந்தக் கோரிக்கை பலராலும் முன்வைக்கப்பட்டிருந்தது.

பொறியியற் பீடத்துக்கான நிலம், கிளிநொச்சியில் நீண்டகாலத்துக்கு முன்னரே ஒதுக்கப்பட்டுள்ளது. இடையில் நாட்டில் நிலவிய அரசியற் சூழலின் காரணமாக இந்தப் பொறியியற் பீடத்தை அங்கே அமைக்க முடியாமற் போய் விட்டது.

ஆனால், இப்போது நிலைமைகள் மாறி, அதற்குச் சாதகமான சூழலை உருவாக்கியுள்ளன.

ஆகவே இந்தச் சந்தர்ப்பத்தில் பொறியியற் பீடத்தை வடக்கில் விரைவாக உருவாக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

அதற்கு அடிப்படை வசதியாக இப்போது கிளிநொச்சியில் போதுமான கட்டிடத் தொகுதியும் உள்ளது.
 
எனவே -  ஏனைய வளங்களை வழங்கி இந்தப் பொறியியற் பீடத்தை அமைப்பதற்கு எமது அரசாங்கம் முன்வர வேண்டும்.
 
வடக்கிலே பொறியியற் பீடத்தை அமைத்த பெருமையை இந்த அரசாங்கம் பெற்றுக் கொள்ள வேண்டும். அந்தப் பங்களிப்பை இந்த அரசாங்கமே செய்ய வேண்டும் எனவும் நான் இந்த மன்றையும் மாண்புமிகு ஜனாதிபதி அவர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.

கிளிநொச்சியில் இயங்கிய விவசாய பீடத்தை மீண்டும் அங்கே கொண்டு செல்வதற்கான ஏற்பாட்டைச் செய்யவும் வேண்டுகிறேன். இப்போது இந்த விவசாய பீடமானது ஒரு சிறிய கட்டிடத் தொகுதியில் - செய்முறை விளக்கங்களுக்கும் பயிற்சிகளுக்கும் போதிய வளங்கள் குறைந்த நிலையிலேயே  காணப்படுகிறது.

ஆகவே அதை உரிய வளங்களோடு கிளிநொச்சிக்கு மீண்டும் மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்  வேண்டும். இதன் மூலம் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய விவசாய மாவட்டங்களின் வளர்ச்சிக்கும் கூடுதலாக உதவ முடியும்.

எனவே இதற்கான ஏற்பாடுகளை விரைவாகச் செய்து தரவேண்டும் எனவும் உயர் கல்வி அமைச்சைக் கேட்டுக் கொள்கிறேன்.

அத்துடன், துறைசார்ந்த ஆசிரிய வளங்களை  நிரப்பி - மேலும்  கல்வி சாராத பதவி நிலைகளில் உள்ள வெற்றிடங்களையும் பூர்த்தி செய்து கல்வி மற்றும் கல்விக்கான  நடவடிக்கைகளுக்கு வசதியளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.

இதேவேளை வெளிமாவட்ட மாணவர்கள் முதல் யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு உள்ளேயே இருக்கும் பல மாணவர்களுக்குத் தங்குமிட வசதிகள் இல்லாமையைப் போக்குவதற்கான விடுதி வசதிகளும் தேவையாக உள்ளன.

இதேவேளை இங்கே இன்னும் சில முக்கியமான விடயங்களைக் கவனப்படுத்தவும் விரும்புகிறேன். பல்கலைக் கழகங்களில் படித்து வெளியேறும் பட்டதாரிகள் உயர் கல்வியை முடித்த பின்னரும் நீண்டநாட்களுக்கு வேலைவாய்ப்புகளில்லாத நிலையில் காத்திருக்கிறார்கள்.

இது அவர்களிடத்திலே பெரும் சோர்வையும் நம்பிக்கை ஈனத்தையும் ஏற்படுத்துகிறது.

கல்வியியற் கல்லூரிகளில் படித்து வெளியேறுவோருக்கு ஆசிரிய நியமனத்தில் இருக்கின்ற ஏற்பாட்டினைப் போல பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியை முடித்து வெளியேறுவோருக்கான தொழில் வாய்ப்பு உத்தரவாதங்களையும் அரசாங்கம் வழங்க வேண்டும்.

நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் பல்கலைக்கழகத்தில் கல்விக்காகச் செலவிட்ட பின்னரும் வேலை வாய்ப்புகளில்லாமல், மேலும் நான்கைந்து ஆண்டுகள் இந்தப் பட்டதாரிகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இது - அவர்களுடைய ஆற்றலும் துடிப்பும் மிக்க இளமைக்காலத்தை நாம் வீணடிப்பதாகவே அமைகிறது.

நாட்டின் அபிவிருத்திக்கும் முன்னேற்றத்துக்கும் இளைய தலைமுறையின் பங்களிப்பு அவசியமானது. ஆனால் அவர்கள் தயார் நிலையில் இருந்தும் அவர்களை  உள்வாங்கிக் கொள்வதற்கான ஏற்பாடுகளை நாம் செய்யாது தவறுவதன் மூலம் அவர்களுக்கான சந்தர்ப்பத்தை நாம் வழங்கத் தவறுகிறோம்.

இதேவேளை வேலையற்ற பட்டதாரிகளாக ஆயிரக்கணக்கானவர்கள் காத்திருக்கும்போது நாம் மீள் நியமனங்களில் முதியவர்களை நியமித்துக் கொண்டிருக்கிறோம்.

இதனால் ஒரு வீட்டில் ஒருவர் இரண்டு தடவைகள் வேலைவாய்ப்பைப் பெறுகிறார். ஆனால் இன்னொருவர் வேலைக்கான வாய்ப்பைத் தேடிய நிலையில் காத்துக் கொண்டிருக்கிறார்.

மீள் நியமனம் மூலமாக தந்தை இரண்டு தடவை வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொள்ளும்போது –   மகன் உயர் கல்வியை முடித்துக்கொண்டும் வீட்டில் வேலைக்காகக் காத்துக் கொண்டேயிருக்கிறார்.

இவ்வாறான நிலைமை இன்று பல இடத்திலும் காணப்படுகிறது.

இது இளைய தலைமுறையினரிடத்திலே அதிக மன உளைச்சலைத் தருகின்றது.  பிரச்சினைகள் உருவாகுவதற்கு இவை அடிப்படைக் காரணங்களாக அமைகின்றன.

ஆகவே உயர்கல்வித் தகமையுடைய இளைய தலைமுறைக்கான தொழில் வாய்ப்பை அரசாங்கம் விரைவில் வழங்க வேண்டும். அதற்கான உத்தரவாதங்களை இளைஞர்களின் மனதிலே ஏற்படுத்தவும் வேண்டும்.

இல்லையெனில் பல்கலைக்கழகங்களில் கல்வியைப் பயிலும் ஆர்வம் இளைய தலைமுறையினர் மத்தியில் எதிர்காலத்திற் குறைந்து விடும்.

இது நாட்டின் கல்விப் புலத்திலும் ஆற்றலாளர், அறிவாளர் மட்டத்திலும் வீழ்ச்சியை ஏற்படுத்தக் கூடிய அபாயநிலையை உருவாக்கும்.

எனவே இதற்கு நாம் இடமளிக்காமல் அதற்கான தேசியக்கொள்கை ஒன்றை வகுத்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், தனியார் பல்கலைக்கழகங்களின் புதிய வருகையை அரசாங்கம் வரவேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தத் தனியார் பல்கலைக்கழகங்களின் வருகையானது எந்த வகையிலும் ஏற்கனவே இருக்கின்ற பல்கலைக் கழகங்களின் கல்வியின் தரத்துக்குக் குறைவதாக இருக்கக் கூடாது என்பதைப் பலரும் வலியுறுத்துகிறார்கள்.  

ஆகவே உயர் கல்வியில் வீழ்ச்சியை ஏற்படுத்தக் கூடிய ஏதுநிலைகளுக்கு நாம் அனுமதி அளிக்கக் கூடாது என்பதையும் இந்தச் சந்தர்ப்பத்தில் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் கடற்றொழிலில் உயர் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் மன்னாரில் அமைக்கத் தீர்மானிக்கப்பட்ட கடற்றொழில்துறைக்கான மையத்தை ஆரம்பிக்க உயர் கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும்;.

அவ்வாறே, இராமாதன் நுண்கலைத்துறையையும் யாழ் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவத்துறையையும் பீடங்களாக்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து அவற்றைத் தரமுயர்த்த வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.

இதேவேளை, இன்னொரு முக்கியமான விடயத்தையும் இங்கே குறிப்பிட வேண்டியுள்ளது. வவுனியா வளாகத்தின் வளங்களை அதிகரிப்பதும் மற்றும் அதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் கட்டிட வசதிகளை ஏற்படுத்துவதும் இன்று மிகமிக அவசியமாகியுள்ளது.

வடபகுதி மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிலும் பிரதேச அபிவிருத்தியிலும் கூடிய அக்கறையைக் கொண்டிருக்கும் இந்த அரசாங்கம் அந்த மக்களுடைய கல்வி மேம்பாட்டிலும் கல்வி மையங்களின் வளர்ச்சியிலும் கூடுதலான கரிசனையோடு செயற்படும் என்ற நம்பிக்கை எமக்குண்டு.

இந்த நம்பிக்கையோடுதான் எங்கள் மக்களும் இருக்கிறார்கள் என்பதை இந்த மன்றிலே நான் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.

அத்துடன், மக்களின் விருப்பங்களையும் அவர்களுடைய தேவைகளையும் இந்த மன்றிலே தெரியப்படுத்தும் பொறுப்பையும் நான் கொண்டிருக்கிறேன்.

வடக்கின் கல்விக்கு அளிக்கும் இடமானது இந்த நாட்டின் அபிவிருத்தியிலும் முன்னேற்றத்திலும் அந்த மக்களையும் ஒருங்கிணைப்பதாகவே அமையும்.

நாங்கள் இலங்கையர் என்ற எண்ணக்கருத்தை உருவாக்குவதற்கு அனைத்து நிலைகளிலும் சமநிலைகள் தேவை. இதையே உலகம் இன்று வலியுறுத்தி வருகின்றது.

ஆகவே வடக்கில் வசந்தத்தைப் போல வடக்கின் கல்விக்கான ஒரு முறைப்படுத்தப்பட்ட துரிதகால புதிய முன்னேற்றத்திட்டங்களையும் வள வாய்ப்பளிப்புகளையும் உயர் கல்வி அமைச்சுச் செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .