2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

இனிமேல் சிங்களத்தில் மாத்திரமே தேசிய கீதம், தமிழ்ப் பதிப்பு நீக்கம் : அமைச்சரவை தீர்மானம்

Super User   / 2010 டிசெம்பர் 13 , மு.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 இலங்கையின் தேசிய கீதம் இனிமேல் சிங்களத்தில் மாத்திரமே இருக்குமென அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அதாவது,  உத்தியோகபூர்வ அரச வைபவங்களில் இனிமேல் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட மாட்டாது என கடந்த புதன்கிழமை அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக தமிழ் மிரரின் சகோதர ஆங்கில வார இதழான சண்டே ரைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது,  ஸ்ரீலங்கா மாதா என ஆரம்பிக்கும் தேசிய கீதத்தின் சிங்கள பதிப்பு வடக்கு கிழக்கு தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் பயன்படுத்தப்படுகிறது. தமிழ் பேசும் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட வடக்கு கிழக்கில் தமிழ் பதிப்பு பயன்படுத்தப்படுகிறது.
 

புதன்கிழமை இரவு நடைபெற்ற அமைச்சரவையின் நீண்ட கலந்துரையாடலின் பின்னர் தேசிய கீதத்திலிருந்து தமிழ் பதிப்பை நீக்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக சண்டே ரைம்ஸுக்குத் தெரிய வருகிறது.
 

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஓக்ஸ்போர்ட் யூனியனில் ஆற்றவிருந்த உரை பாதுகாப்புக் காரணங்களுக்காக இரத்துச் செய்யப்பட்டு அவர் இலங்கைக்குத் திரும்பிய பின்னர் நடைபெற்ற முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இதுவாகும்.
 

வேறெந்த நாட்டிலும் தேசிய கீதம் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளின் பாடப்படுவதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமைச்சர்களுக்கு சுட்டிக்காட்டியுள்ளார். முன்பொரு தடவை வடக்கில் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்ட வைபவமொன்றிலிருந்து முன்னாள் அமைச்சர் சிறிமாவோ பண்டாரநாயக்க வெளிநடப்புச் செய்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இரு தேசிய கீதங்கள் இருக்க முடியாது எனவும் இக்குறைபாடு தீர்க்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார். 'நாம் அனைவரும் இலங்கை ஒரே நாடு என எண்ண வேண்டும்' என அவர் கூறினார்.
 

அமைச்சர் விமல் வீரவன்ஸ ஜனாதிபதியின் யோசனைக்கு ஆதரவு தெரிவித்தார். 300 மொழிகள் புழக்கத்திலுள்ள அயல்நாடான இந்தியாவில்கூட இந்தி மொழியில் மாத்திரமே தேசிய கீதம் உள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.
 

எனினும் இரு அமைச்சர்கள் தமது மாறுபட்ட அபிப்பிராயத்தை வெளியிட்டனர். தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒற்றுமை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, இத்தீர்மானம் பொருத்தமானதொன்றல்ல எனக் கூறினார்.

அமைச்சர் ராஜித சேனாரட்னவும் இதேவிதமான கருத்தை தெரிவித்ததாக சண்டே ரைம்ஸுக்குத் தெரியவருகிறது.

பின்னர் சிங்கள மொழிப் பதிப்பை மாத்திரம் தக்க வைத்துக்கொள்ள அமைச்சரவை தீர்மானித்தது.

சிங்கள மொழி தேசிய கீதத்தை மாத்திரம் பாடுவது தொடர்பான அறிவித்தல் பொதுநிர்வாக அமைச்சினால் அனுப்பப்படவுள்ளது. பிரதேச செயலகங்கள் உட்பட அனைத்து அரச நிறுவனங்களும் இத்தீர்மானத்தை அமுல்படுத்தும்படி கோரப்படும்.
(சண்டே ரைம்ஸ்)

 


  Comments - 0

 • Niyas Mohamed Monday, 13 December 2010 03:18 PM

  அறிவில்லாத அரசியல்வாதிகளுக்கு அயல் நாடுகளின் தேசிய கீதம் என்ன மொழி என்பதுகூட தெரியாமல்தான் இருக்கும். இந்தியாவின் தேசிய கீதம் என்ன ஹிந்தியிலா உள்ளது?

  Reply : 0       0

  yarro oruvan Monday, 13 December 2010 07:09 PM

  இன்னும் வரும் பொருத்து இருந்து பாருங்கள்,தற்போது தேசியகீதம் பிறகு வேறு விதமான கட்டளைகளை எதிர்பாருங்கள்.தமிழ் மொழியே இல்லாமல் போகும் நாள் வெகு தூரத்தில் இல்லை ஸ்ரீ லங்காவில்.

  Reply : 0       0

  Sri Lankan Tuesday, 14 December 2010 11:19 PM

  இனப் பிரச்சினை முதலில் ஆரம்பித்தது மொழியில் என்பதை மறந்து விட்டாங்கள்? நாட்டில் சமாதானம் வந்த பிறகும் இப்படி யோசித்தால் என்ன நடக்கும்? இது ஒரு பெரும்பான்மை யோசனை எண்டுதான் தோண்டுது. இவ்வளவு காலமும் இருந்த தேசிய கீதத்தை இப்படி மாற்ற எந்த தேவையும் இல்லை. இது தமிழ்இமுஸ்லிம் மக்களின் மனதை புண் படுத்துமே தவிர சமாதனத்துக்கு வலி ஆட்படாது. தயவு செய்து இதை கவனத்தில் கொள்ளவும். இதை நாட்டின் நலனை கருத்திற் கொண்டு கவனத்தில் எடுக்கவும். நமக்கு மற்ற நாட்டின் தேசிய கீதம் அவசியம் இல்ல. எங்கட நாட்டுக்கு இறைமை இருக்கு.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--