2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

தமிழில் தேசிய கீதம் பாடுவதை தடுத்து எத்தகைய ஐக்கியம் கட்டியெழுப்பப்படும்? : மனோ கணேசன் கேள்வி

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 13 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

'தேசிய கீதம் தமிழ் மொழியிலும் பாடப்படுவது பெருமைக்குரிய ஒரு விடயம் என்பது அரசாங்கத்திற்கு புரியவில்லையா? அல்லது நீங்கள் இந்நாட்டை சேர்ந்தவர்கள் அல்லவென தமிழ் மக்களுக்கு அரசாங்கம் செய்தி விடுக்கின்றதா? தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்படுவது தடைசெய்யப்படுவது தொடர்பில் எழுந்துள்ள தேவையற்ற சர்ச்சைக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்.' இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.


தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்படுவதற்கு எதிராக அமைச்சரவையில் நடைபெற்ற கருத்து பரிமாற்றம் தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,


தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்படுவதை தடைசெய்வது தொடர்பாக அமைச்சரவையில் கருத்து பரிமாறப்பட்டது உண்மையாகும். ஆனால், இது தொடர்பில் அரச நிறுவனங்களுக்கும், பாடசாலைகளுக்கும் சுற்றுநிரூபம் அனுப்பப்படுவதற்கு இறுதி முடிவெடுக்கப்பட்டதா என்பது தொடர்பாக தமிழ் பேசும் மக்களுக்கு அரசாங்கம் உடனடியாக விளக்கமளிக்க வேண்டும். இறுதி முடிவு எடுக்கப்படாவிட்டாலும் கூட இத்தகைய முறையில் கருத்து பரிமாற்றம் நடைபெறுவதே தமிழ் பேசும் மக்களை ஆத்திரமடைய வைத்துள்ளது. அமைச்சரவையில் இவ்விவகாரம் பேசப்பட்டபொழுது தமிழிலும், தேசிய கீதம் பாடப்படுவது தொடரவேண்டும் என்ற கருத்துகளை தெரிவித்த அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, ராஜித சேனாரத்ன ஆகியோரை நாம் பாராட்டுகின்றோம். அதேவேளையில் இந்த அமைச்சரவை கூட்டத்தில் தமிழ் பேசும் சமூகங்களைச் சார்ந்த அமைச்சர்களும் கலந்துகொண்டார்களா என்பதையும், கலந்துகொண்டவர்கள் கருத்து தெரிவித்தார்களா என்பதையும் அறிந்துகொள்வதற்கு தமிழ் பேசும் மக்கள் ஆவலாக இருக்கின்றார்கள்.
 
உலகில் எந்தவொரு நாட்டிலும் தேசிய கீதம் இரண்டு மொழிகளிலும் பாடப்படுவதில்லை என்று கூறுவதே அடிப்படையில் ஒரு தவறான தகவலாகும். உலகில் முன்னணி நாடுகளில் ஒன்றான கனடாவில் தேசிய கீதம் ஆங்கிலத்திலும், பிரெஞ்சு மொழியிலும் உத்தியோகப்பூர்வமாக பாடப்படுகின்றது. ஆரம்பத்தில் பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்ட கனடிய தேசிய கீதம் பிறகு ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் விமல் வீரவன்ச தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படுவதை தடுக்கும் முகமாக எமது அயல் நாடான இந்தியாவை உதாரணம் காட்டியுள்ளதாக கூறப்படுகின்றது. இந்தியாவின் தேசிய கீதம் அந்நாட்டின் பெரும்பான்மையினர் பேசும் மொழியான இந்தி மொழியில் பாடப்படுவதாக இவர் திருவாய் மலர்ந்துள்ளார். இது இவரது பெரும்பான்மை வாதத்தையும், அறியாமையையும் காட்டுகின்றது. உண்மையில் இந்தியாவின் தேசிய கீதம் வங்காள மொழியில் பாடப்படுகின்றது. இந்தியாவின் சனத்தொகையை மொழி ரீதியாக வரிசைப்படுத்தினால், முதலில் இந்தியும், அடுத்து தெலுங்கும், மூன்றாவதாக தமிழும் இருக்கின்றன. நான்காவதாக அதிகம் பேர் பேசும் வங்காள மொழியில் அமைந்துள்ள தேசிய கீதத்தை அனைத்து இந்தியர்களும் பாடுவது இந்தியாவின் பெருமையாகும்.


இந்தியாவில் 15இற்கும் மேற்பட்ட தேசிய மொழிகள் இருக்கின்ற காரணத்தினால் அனைத்து மொழிகளிலும் தேசிய கீதம் பாடப்படுவது சாத்தியம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இரண்டே மொழிகளை கொண்டுள்ள இலங்கையில் இது நீண்டகாலமாகவே சாத்தியமாகியுள்ளது. இந்த பெருமைக்குரிய விடயத்தை தகர்த்து எறிந்து இந்த அரசாங்கம் எத்தகைய தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்பப்போகின்றது என்பது கடளவுக்குத்தான் வெளிச்சம். இதை இந்நாட்டில் உள்ள தமிழ் பேசும் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளக்கூடாது.


  Comments - 0

 • mohamed Tuesday, 14 December 2010 01:29 AM

  அரச கரும மொழியான சிங்களமும் தமிழும் இருக்கும்போது, தமிழை புறந்தள்ளிவிட்டு சிங்கள மொழியினை நாம் எவ்வாறு ஏற்றுகொள்வது ஒரு இனத்தின் மொழிக்கு செய்யும் துரோகம். இவர்கள் தான் தேசத்தின் இனத் துரோகிகள்.

  Reply : 0       0

  xlntgson Thursday, 16 December 2010 09:35 PM

  சிங்களத்தில் லங்கா என்று சொல்லலாம், ஸ்ரீலங்கா என்றும் சொல்லலாம், யாராவது ஒரு சிங்களவர் லங்கா என்று சொன்னவரை ஏன் ஸ்ரீலங்கா என்று சொல்லவில்லை என்று கேட்க இயலுமா?
  அதுபோலவே லங்கா என்பதுதான் தமிழ் இலக்கணப்படி இலங்கை ஆகிறது. அதாவது எந்த ஒரு சொல்லும் தமிழில் ல என்னும் எழுத்தில் தொடங்கினால் இ சேர்க்கவேண்டும் முதலில்.
  அதுபோல ஆ என்று முடிவடையாது அன் அல்லது அம் ஆம் என்று முடியவேணும் ஆகவே தான் லங்கா இலங்கை ஆகிறது.
  இலக்கணம்: பகுதி, விகுதி, மொழி முதல்.
  பிழையாக தமிழர் சிங்களத்தில் பாடுவதோ அல்லது தமிழை சிங்களவர்-

  Reply : 0       0

  xlntgson Friday, 17 December 2010 09:08 PM

  விளங்காமல் மொழிவதோ மிகவும் கடினமாக தெரியும்!
  இவர் உண்மையில் மாணவரா அல்லது வேண்டும் என்றே நம் மொழியை அவமதிக்கிறாரா என்று அறியாமல் சண்டை சச்சரவுகள் ஏற்பட காரணமாகிறது.
  பிரச்சினை பண்ண வேண்டும் என்று நினைப்பவர்கள் சிறிய வேறுபாடுகளை பெரிது படுத்தி கை கலப்பில் ஈடுபட்ட சந்தர்ப்பங்கள் அநேகம்,
  உதாரணமாக சுத்த என்னும் சொல்லே கூட சிங்களவருக்கு அசுத்தமாகப்படும் என்றால் அதற்கு மேல் சொல்வதற்கில்லை. த- என்ற ஒலியில் மென்மை வன்மை தமிழில் பார்க்கப்படமாட்டாது ஆனால் சம்ஸ்கிரித உச்சரிப்பில் அதன் அர்த்தமே வேறாகிவிடும்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--