Editorial / 2026 பெப்ரவரி 13 , பி.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய ஒன்றியம் (EU) மற்றும் இலங்கை ஆகியவை ஐரோப்பிய ஒன்றியம்- இலங்கை கூட்டு ஆணையக் கூட்டத்தின் 27வது அமர்வை கொழும்பில் 2026, பெப்ரவரி 12, அன்று, கூட்டின.
நட்பு மற்றும் திறந்ததொரு மனப்பாங்கின் அடிப்படையில் நடைபெற்ற இக்கூட்டம், இருதரப்பு உறவுகளை மீளாய்வு செய்து, ஆளுகை, நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் முதல் வர்த்தகம், அபிவிருத்தி ஒத்துழைப்பு, கல்வி,மீன்வளம், கடல்சார் ஒத்துழைப்பு, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், பாதுகாப்பு ஒத்துழைப்பு, மீளனுமதி மற்றும் பிராந்திய மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு வரையிலான இருதரப்பு ஆர்வமுள்ள பல்வேறு தலைப்புகளில் கருத்துகள் மற்றும் இற்றைப்படுத்தல்களைப் பரிமாறிக் கொண்டது.
இக்கூட்டம், இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார முன்னேற்றங்கள் குறித்து ஆலோசிக்க இரு தரப்பினருக்கும் ஒரு வாய்ப்பை வழங்கியதுடன், பரஸ்பர ஆர்வமுள்ள விடயங்களில் இரு தரப்பினரும் எடுத்த கொள்கைசார் சீர்திருத்தங்கள், நடைமுறை மேம்பாடுகள் மற்றும் சட்டரீதியான முயற்சிகள் குறித்த இற்றைப்படுத்தல்களை வலியுறுத்தியது.
2025, மே 5 அன்று நடைபெற்ற ஆளுகை, மனித உரிமைகள் மற்றும் சட்ட ஆட்சி குறித்த ஐரோப்பிய ஒன்றிய- இலங்கை செயற்குழு, 2025, நவம்பர் 13 அன்று மெய்நிகர் முறையில் நடைபெற்ற வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்த செயற்குழு மற்றும் 2026, பெப்ரவரி 11 அன்று நடைபெற்ற அபிவிருத்தி ஒத்துழைப்பு குறித்த செயற்குழு ஆகியவற்றின் பணிகளை கூட்டு ஆணையம் ஆய்வு செய்தது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) இரத்து செய்யப்பட்டமை நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தில் (OSA) திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டமை, சிறுபான்மையினரின் உரிமைகள், பெண்கள், குழந்தைகள் மற்றும் தொழிலாளர் உரிமைகள், இலஞ்சம் மற்றும் ஊழலை எதிர்த்துப் போராட எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், கருத்து மற்றும் சங்க சுதந்திரம் உள்ளிட்ட ஜனநாயகம், நிர்வாகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகள் ஆகிய துறைகளில் இலங்கையின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து கூட்டு ஆணையத்தின் கலந்துடையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.
நல்லிணக்கத்தை முன்னேற்றுவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் சுயாதீன தேசிய நிறுவனங்கள், குறிப்பாக காணாமல் போனோர் அலுவலகம் (OMP), இழப்பீட்டு அலுவலகம் (OR) மற்றும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம் ஆகியவற்றால் ஆற்றப்படும் வலுப்படுத்தப்பட்ட வகிபாகம் குறித்தும் இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்திற்குத் தெரிவித்தது.
சட்டவிரோத, அறிக்கையிடப்படாத மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத (IUU) மீன்பிடி நடைமுறைகளைத் தடுப்பதிலும் நீக்குவதிலும், மீன்வளத் துறையில் உள்ள உறுதிமொழிகளை மதிப்பதிலும் தொடர்ச்சியான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். மேலும், எராஸ்மஸ்+ மற்றும் ஹொரைசன் ஐரோப்பா கட்டமைப்புத் திட்டங்கள் மூலம் உயர்கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பில் கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து இரு தரப்பினரும் ஆலோசித்தனர். சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை ஒத்துழைப்பு, அத்துடன் புலம்பெயர்வு மற்றும் மீளனுமதிக் கொள்கைகள் குறித்தும் பயானுறுதிமிக்க பரிமாற்றங்கள் நிகழ்ந்தன.
பொதுவான கட்டண விருப்பத்தேர்வுகள் ப்ளஸ் (GSP) திட்டத்தின் புதிய விதிமுறைகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு இற்றைப்படுத்தலை வழங்கியது. நாட்டில் நிலைபேறான வளர்ச்சிக்கு GSP சிறப்பு ஊக்கத்தொகை ஏற்பாட்டின் (GSP+) பங்களிப்பை இலங்கை பாராட்டியதுடன், தற்போதைய சுழற்சி முடிவடைந்ததும் இத்திட்டத்திற்கு மீண்டும் விண்ணப்பிக்கும் நோக்கத்தை வெளிப்படுத்தியது. தற்போதைய GSP+ ஒப்பந்தத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்பட்ட உறுதிமொழிகளை காலக்கெடுவுக்குள் நிறைவேற்றுவதின் முக்கியத்துவத்தையும், குறிப்பாக, பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களை சர்வதேச உடன்படிக்கைகளுடன் ஒத்துப்போகும் வகையில் திருத்தி அமுல்படுத்தும் பணியின் அவசியத்தையும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியது. இது சம்பந்தமாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான ஐக்கிய நாடுகளின் தகுதிவாய்ந்த அமைப்புகளுடன் ஈடுபடுவதை ஊக்குவித்தது. தற்போதைய GSP+ திட்டத்தின் கீழ் 27 முக்கிய சமவாயங்களை செயற்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை இலங்கை மீண்டும் உறுதிப்படுத்தியது. முன்னேற்றம் குறித்த வழக்கமான புதுப்பிப்புகளை ஐரோப்பிய ஒன்றியம் ஊக்குவித்தது.
விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கு, பயனுறுதிமிக்க பன்முகத்தன்மை மற்றும் சர்வதேச சட்டத்தின் கொள்கைகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சாசனத்தை நிலைநிறுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை ஐரோப்பிய ஒன்றியமும், இலங்கையும் மீண்டும் வலியுறுத்தின. சுதந்திரமான மற்றும் திறந்த இந்து-பசிபிக் பிராந்தியத்தில் தங்கள் ஆக்கபூர்வமான ஈடுபாட்டை இரு தரப்பினரும் குறிப்பிட்டதுடன், ஐக்கிய நாடுகளின் கடல் சட்டம் குறித்த சமவாயத்தின் (UNCLOS) முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டினர்.
உலகளாவிய நுழைவாயில் மூலோபாயத்தின் (Global Gateway strategy) கீழ் ஐரோப்பியக் குழுவுடன் மேலும் முதலீட்டு வாய்ப்புகளை ஆராய இரு தரப்பினரும் இணங்கினர். இது தொடர்பில், ஐரோப்பிய ஒன்றிய தனியார் துறையின் ஈடுபாட்டை ஆதரிப்பதில் ஐரோப்பிய ஒன்றியம் தனது ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் உறுதிப்படுத்தியது.
பாதுகாப்புத் துறையில், குறிப்பாக இந்து-பசிபிக் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகளை இலங்கையும் ஐரோப்பிய ஒன்றியமும் ஆராய்ந்தன.
அடுத்த கூட்டு ஆணையக் கூட்டத்தை 2027 ஆம் ஆண்டு பிரஸ்ஸல்ஸில் கூட்டுவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்திற்கு இலங்கை வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் திருமதி அருணி ரணராஜ மற்றும் ஐரோப்பிய வெளிவிவகார நடவடிக்கை சேவையில் ஆசியா மற்றும் பசிபிக் பகுதிக்கான பதில் முகாமைத்துவப் பணிப்பாளர் திருமதி பாவோலா பம்பலோனி ஆகியோர் இணை தலைமை தாங்கினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .