2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

'பொன்சேகாவுக்கு எதிரான ஹைகோர்ப் வழக்கை விசாரிக்க மேல் நீதிமன்றத்திற்கு நியாயாதிக்கம் இல்லை'

Super User   / 2011 பெப்ரவரி 14 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.பாருக் தாஜுதீன்)

இராணுவ நீதிமன்றம் அரசியலமைப்பின்படி ஓர் நீதிமன்றமாகும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால் இராணுவ நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்ட ஹை கோர்ப் வழக்கை கொழும்பு மேல் நீதிமன்றம் விசாரிப்பதற்கு நியாய ஆதிக்கம் கிடையாது என சரத் பொன்சேகாவின் சட்டத்தரணி இன்று வாதாடினார்.

அவுஸ்திரேலியாவிலுள்ள பிரிட்டிஷ் போர்னியோ டிபென்ஸ் கம்பனி எனும் நிறுவனத்தின் முகவரென போலி ஆவணங்களை சமர்ப்பித்து இராணுவத்தில் பதிவு செய்துகொண்டு, கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டதன் மூலம், பொதுமக்கள் பணத்தை தவறாக கையாண்டதாக சரத் பொன்சேகாவுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இவ்வழக்கு இன்று திங்கட்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நீதிபதி சுனில் ராஜபக்ஷ விசாரிக்கப்பட்டபோது பொன்சேகாவின் சார்பாக ஆஜரான சட்டத்தரணி சாலிய பீரிஸ் மேற்படி வாதத்தை முன்வைத்தார்.

சரத் பொன்சேகா ஏற்கெனவே இராணுவ நீதிமன்றதால் விசாரிக்கப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.  இரு வழக்குகளிலும் குற்றச்சாட்டுகள் ஏறத்தாழ ஒரே மாதிரியானவை என்ற நிலையில் மேல் நீதிமன்றத்திற்கு இவ்வழக்கை விசாரிப்பதற்கான நியாய ஆதிக்கம் இல்லை என சட்டத்தரணி சாலிய பீரிஸ் வாதாடினார்.

இதை ஆட்சேபித்த அரச தரப்பு சட்டத்தரணி தமித் தொட்டவத்த, இரு வழக்குகளும் ஒரே மாதிரியாக தென்பட்டாலும் உண்மைத் தரவுகளின் அடிப்படையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார். அடுத்த விசாரணைத் தினத்தில் தனது வாதத்தை முன்வைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, இராணுவ நீதிமன்றின் தீர்ப்பின் பிரதியை வழக்குத் தொடுநர்கள் அல்லது இராணுவத் தளபதி மேல் நீதிமன்றதிற்கு சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடுமாறு  பொன்சேகாவின் சட்டத்தரணி கோரினார்.

அதையடுத்து இவ்வழக்கை மார்ச் 9 ஆம் திகதிக்கு நீதிபதி சுனில் ராஜபக்ஷ ஒத்திவைத்தார்.

தனுன திலகரட்ன, ஹைகோர் லிமிடெட் பணிப்பாளர்களில் ஒருவரான வெலிங்டன் டி ஹோட்டம், சரத் போன்சேகா ஆகியோர் மீது சட்டமா அதிபரால் மேல் நீதிமன்றில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--