2021 மே 06, வியாழக்கிழமை

முறையான சட்ட உதவி கிடைக்காததால் ஜோர்தான் சிறையில் வாடும் இலங்கைப் பெண்

Super User   / 2011 செப்டெம்பர் 14 , பி.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.செல்வநாயகம்)

போதிய சட்ட உதவிகள் கிடைக்காததால் இலங்கைப் பெண்ணொருவர் ஜோர்தானில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக ஹொங்கொங்கை தளமாகக் கொண்ட ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 காலி மாவட்டத்தின் ரத்கம, கொடவுதாவத்த எனும் இடத்தைச் சேர்ந்த 33 வயதான கே. ஸ்ரீயானி எனும் இப்பெண் 2006.11.06 ஆம் திகதி ஜோர்தானுக்குச் சென்றுள்ளார் என அவ்வாணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜோர்தானின் சஹாப் நகரிலுள்ள ஐவரி ஆடைத்தொழிற்சாலையில் (தையல்) இயந்திர இயக்குநகராக பணியாற்ற அவர் சென்றார். அங்கு சிரமங்களை எதிர்கொண்டதன் காரணமாக அத்தொழிற்சாலையிலிருந்து விலகியதுடன் தங்குவதற்கு வேறொரு இடத்தை தேடிக்கொண்டார்.

அதையடுத்து, அவருக்கு உதவ முன்வந்த சட்டவிரோத குடியேற்றவாசியொருவர் பின்னர் அப்பெண்ணை விபசாரத்திற்கு தள்ளினார்.  அப்பெண் அதை கடுமையாக எதிர்த்தார்.

அதன்பின் அப்பெண்ணை கொல்ல முயற்சியொன்று நடந்தது. அப்போது தன்னை தாக்க வந்தவருடன் அப்பெண் சண்டையிட்டார்;. இதில் தாக்க வந்த நபர் பலியானார்.

அச்சம்பவத்தையடுத்து கைது செய்யப்பட்ட ஸ்ரீயானிக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டு 15 வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

தனக்கு முறையான மொழிபெயர்ப்பு உதவியும் தனக்கும் தனது சட்டத்தரணிக்கும் இடையில் முறையான தொடர்பாடல் இல்லாததாலும் தான் சுயபாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டமைக்கான ஆதாரத்தை முன்வைத்து, தான் அப்பாவி என்பதை  நிரூபிக்க முடியாத சூழலில் குற்றவாளியாக காணப்படும் நிலை ஏற்பட்டதாக ஸ்ரீயானி கூறியுள்ளார்.

தனது பிரச்சினைகளை தீர்க்கவும் தனக்கு நியாயம் கிடைக்கவும் உதவுமாறு இலங்கை அரசாங்கத்திடமும் சர்வதேச அமைப்புகளிடமும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .