2021 மே 10, திங்கட்கிழமை

கொலை வழக்கு; அமைச்சர் டக்ளஸை கைது செய்ய முடியாது: இந்திய அரசு

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 21 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியாவுக்கு விஜயம் செய்யும் பாரம்பரிய மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கொலைக் குற்றச்சாட்டு வழக்கின் கீழ் கைது செய்ய முடியாது என சென்னை உயர் நீதிமன்றத்திடம் இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சென்னையில் இளைஞர் ஒருவரின் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதான சந்தேக நபர் என்ற அடிப்படையில், கடந்த வருடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இந்தியாவுக்குச் சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை உடனடியாகக் கைது செய்யுமாறு வலியுறுத்தி இந்திய சிறைக்கைதிகள் உரிமைகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் சட்டத்தரணியுமான புகழேந்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.  

எனவே, சென்னை வந்துள்ள அமைச்சரைக் கைது செய்ய உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது. இந்த மனுவுக்கு இந்திய மத்திய அரசின் சார்பில் இலங்கைக்கான வெளியுறவுத்துறைச் சார்பு செயலாளர் கே.எம்.பி.சர்மா பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், 'கைதிகள் பரிமாற்றம் தொடர்பாக இலங்கையுடன் இந்தியா எந்த உடன்படிக்கையும் செய்து கொள்ளவில்லை. இருப்பினும் கைதிகள் பரிமாற்றம் சட்டத்தின்கீழ் இரு நாடுகளுக்கு இடையே 1978இல் கைதிகள் பரிமாற்றம் தொடர்பாக ஒரு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

டக்ளஸ் தேவானந்தா இலங்கையின் அமைச்சராக உள்ளார். இந்தியாவுக்கு வருகை தந்தபோது அவரை கைது செய்ய முடியாது. அவரை கைது செய்வது என்பது இரு நாடுகளுக்கிடையேயான தூதரக உறவுக்கு எதிரானதாகும்.

ஆகவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதிகள், இதன் விசாரணையினை 4 வார காலத்துக்கு ஒத்திவைத்தனர்.

சென்னை, சூளைமேட்டைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்ற இளைஞர், கடந்த 1986ஆம் ஆண்டில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

இதில் கைதான டக்ளஸ் தேவானந்தா பிணையில் விடுதலை செய்யப்பட்ட நிலையில் இலங்கை வந்தடைந்தார். இவர் மீதான வழக்கு சென்னை நீதிமன்றில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 1994ஆம் ஆண்டு, அமைச்சர் டக்ளசஸுக்கு எதிராக தேடப்படும் குற்றவாளியாக அறிவித்த நீதிமன்றம் அவரைக் கைது செய்யுமாறு பிடியாணையும் பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

 • bzukmar Wednesday, 21 September 2011 04:49 PM

  சட்டத்தரணி புகளேந்தியின் வழக்கு புஸ்வாணமாகி விட்டதினால் , தேவானந்தாவுக்கு தேனாமிர்தம் தான்.

  Reply : 0       0

  xlntgson Wednesday, 21 September 2011 09:08 PM

  தமிழ் நாட்டில் எதுவும் நடக்கலாம். அவர்கள் நீதி மன்ற முற்றுகை போன்ற காரியங்களில் ஈடுபடுவதை உள்துறை அமைச்சு ஒன்றும் செய்யாமல் பார்த்துக் கொண்டு இருக்கும்- சட்டமா அதிபர் ஆலோசனைகள் ஒன்று கூட ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை. இலங்கை சம்பந்தப்பட்ட வழக்குகளில்! அதனால் 'ராஜீவ் கொலை சதிகாரர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளை வேறு மாநிலத்துக்கு கொண்டு போக வேண்டும்' என்று ராஜீவ் கொலையினால் பாதிப்படைந்தவர்கள் நீதி கேட்டு மனு செய்திருப்பதை காண்க.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X