2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

இலங்கை அகதிகளுக்கு வீடுகள் அமைக்கும் ஜெயலலிதாவுக்கு நன்றி: பிரபா கணேசன் எம்.பி.

A.P.Mathan   / 2012 நவம்பர் 15 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல வருட காலமாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு தமிழ்நாடு சென்றுள்ள இலங்கை அகதிகளுக்கு 25 கோடி இந்திய ரூபா நிதி ஒதுக்கீட்டில் 2500 வீடுகள் கட்டிக் கொடுக்க முன் வந்திருக்கும் தமிழக முதல்வர் டாக்டர் செல்வி ஜெயலலிதாவிற்கு இலங்கை தமிழ் மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்வதாக ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்தார்.

மேலும் தெரிவித்ததாவது...

1983ஆம் ஆண்டு கலவரம் முதற் கொண்டு யுத்தம் நடைபெற்ற காலம்வரை பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள் - தமிழ் நாட்டில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். இவர்களது நலன் மீது தமிழ் நாடு அரசாங்கங்கள் எவ்வித அக்கறையும் கொண்டிருக்கவில்லை. இன்றைய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா இவர்களது நலனில் அக்கறை கொண்டு 2500 புதிய வீடுகளை பல மாவட்டங்களில் அமைத்து கொடுக்க முன்வந்திருப்பது அகதிகளின் வாழ்வில் நிச்சயமாக மறுமலர்ச்சியை ஏற்படுத்தும்.

1983ஆம் ஆண்டு கலவரத்திற்கு பின்பு சுமார் 6 வருடங்கள் தமிழ் நாட்டில் வசித்தவன் என்ற முறையில் தமிழ் நாட்டிலுள்ள இலங்கை அகதிகளின் கஷ்ட நிலவரங்களை நேரில் கண்டறிந்துள்ளேன். இன்று அகதி முகாம்களில் வாழ்பவர்களில் கணிசமானவர்கள் இந்தியாவில் பிறந்தவர்கள்.

உலகத் தமிழ் மக்களின் தலைவர் என்று சொல்லிக் கொள்ளும் டாக்டர் கருணாநிதி வெறுமனே ஊடகங்களுக்கு உணர்ச்சிவசப்பட்ட செய்திகளை வழங்குவதிலும் மேடைகளில் ஈழத்தமிழர்களுக்காக கண்ணீர் வடிப்பதிலுமே காலத்தை கடத்தி வருகின்றார். இப்போது புதிதாக டெசோ என்ற ஆயுதத்தை கையில் எடுத்திருக்கின்றார். ஈழத்தமிழர்களுக்காக இவர் நடத்திய ஆர்ப்பாட்டம் எதுவும் எமக்கு நன்மை பயக்கவில்லை. மாறாக தமிழ் நாட்டு தமிழர்கள் சிங்கள மக்களுக்கு எதிரானவர்கள் என்ற நிலைப்பாட்டையே தோற்றுவித்துள்ளது. அது மட்டுமின்றி இவரது காலத்தில் தான் இறுதிகட்ட யுத்தம் நடைபெற்றது. பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் யுத்தத்தில் பலியான போது இவர் வாய்மூடி மௌனித்திருந்தார். ஆனால் தமிழ் மக்களுக்காக உணர்ச்சிப் பொங்க பேசாத ஜெயலலிதா எவ்வித ஆர்ப்பாட்டமும் விளம்பரமும் இல்லாமல் அமைதியான முறையிலே 25கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 2500 வீடுகள் கட்டிக் கொடுக்க உள்ளார். இதுவே எம் மக்களுக்கு இன்றைய தேவையாகும்.

இலங்கையிலும் தமிழ் மக்களுக்கு எதிரான அரசாங்கத்தின் போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்பவர்களையும் குரல் கொடுப்பவர்களையும் நாம் மதிக்கின்றோம். ஆனால் இவர்கள் அரசாங்கத்தை மாற்றுவது மட்டும் தான் குறிக்கோளாக கொண்டு செயல்படுகின்றார்கள். எந்த அரசாங்கம் வந்தாலும் எமது மக்களுக்கான தீர்வினை வழங்கப் போவதில்லை. ஆகவே ஜெயலலிதாவை முன்மாதிரியாகக் கொண்டு உள்நாட்டில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீள்குடியேற்றம் முதற் கொண்டு தேவையானவற்றை செய்து கொடுப்பது மக்கள் பிரதிநிதிகளின் முதல் பணியாக இருக்க வேண்டும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .