2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

இலங்கை பிரச்சினைக்கு தீர்வுகாண முதலமைச்சர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டவேண்டும்:பா.ம.க.

Kanagaraj   / 2012 நவம்பர் 17 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கு முதலமைச்சர் ஜெயலலிதா அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டவேண்டும் என்று பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி கூறினார்.

ஐரோப்பா சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு சென்னை திரும்பிய பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 சென்னைக்கு நேற்று திரும்பிய அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கையில் மனித உரிமையை மீறி ஆயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதற்கான ஆதாரங்களை பா.ம.க. மற்றும் பசுமை தாயகம் சார்பில் கொடுத்துள்ளோம். பன்னாட்டு நீதி விசாரணை தேவை என்றும் வலியுறுத்தினோம்.

இலங்கை கடற்படையினரால் இதுவரை 500 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சுட்டுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் எடுத்துக்கூறினோம். இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கு முனைப்போடு செயல்படுவோம் என்று ஐ.நா. மன்றத்தினர் உறுதி அளித்துள்ளனர்.

பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் என்னிடம் நீங்கள் தமிழ்நாட்டுக்கு போய் என்ன செய்யப்போகின்றீர்கள் என்று கேட்டனர். உடனே நான் தமிழ்நாட்டை சேர்ந்த நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் இலங்கை தமிழர் பிரச்சினையில் தமிழ்நாட்டில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என்று கூறினார்கள்.

போர் குற்றவிசாரணை


அடுத்தபடியாக இலங்கை பிரச்சினைக்கு தீர்வுகாண தமிழக முதல்–அமைச்சரை அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டும்படி வற்புறுத்தவேண்டும் என்றும் கூறினார்கள். இந்த கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தவறாமல் கலந்து கொள்ளவேண்டும் என்றும் சொன்னார்கள். இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் தமிழ்நாடு ஒரே குரலில் ஒலிக்கிறது என்ற நிலைமையை உருவாக வேண்டும். இதற்கு பா.ம.க. முயற்சிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

இது மட்டும் அல்லாமல் முதல்அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் அனைத்து கட்சியினரும் டெல்லி சென்று பிரதமர், சோனியாகாந்தி ஆகியோரை சந்தித்து அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வழங்கவேண்டும். அப்போது இலங்கை மீது போர் குற்றவிசாரணை நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கவேண்டும் என்றும் கூறினார்கள்.

அனைத்து கட்சி கூட்டம்

நடைபெற உள்ள இந்திய பாராளுமன்ற கூட்டத்தில் எல்லா கட்சிகளும் இலங்கை தமிழர் பிரச்சினைக்கு ஆதரவாக குரல் கொடுக்கவேண்டும் என்று உலக தமிழ் மாநாட்டுக்கு வந்தவர்கள் கூறினார்கள். உலக தமிழக தலைவர்களின் இந்த வேண்டுகோளை ஏற்று இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வுகாண முதலமைச்சர் ஜெயலலிதா அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவேண்டும் என்பது பா.ம.க.வின் வேண்டுகோள் ஆகும்.

பல்வேறு அரபுநாடுகளுக்கும் நாங்கள் சுற்றுபயணம் செய்தோம். அவர்கள் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு நலவாரியம் அமைத்துத்தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். டெசோ மாநாட்டு தீர்மானங்கள் குறித்து பல்வேறு கருத்துகள் சொல்லப்படுவது நாடு அறிந்த செய்திதான். அங்கு டெசோ மாநாடு தீர்மானங்கள் குறித்து ஆதரவாகவும் பேசுகிறார்கள். எதிர்ப்பாகவும் பேசுகிறார்கள். லண்டனில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை பிரச்சினையில் தமிழர்களிடையே ஒற்றுமை இல்லையே என்று வருத்தப்பட்டனர் என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .