2021 ஜனவரி 23, சனிக்கிழமை

பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்ற நிலையில் தமிழ் மக்கள்: பிரபா கணேசன்

A.P.Mathan   / 2012 நவம்பர் 17 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இனப்பிரச்சினை தீர்வில் மேலதிகமாக பெறுவதனை விடுத்து இருப்பதை காப்பாற்ற முடியாத நிலையில் பிச்சை வேண்டாம் நாயைப்பிடி என்ற நிலையில் தமிழ் மக்களின் நிலைமை உள்ளது என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது...

கடந்த காலங்களில் இனப்பிரச்சினை தீர்வாக பெடரல், சமஷ்டி முறையினை கூட கொடுப்பதற்கு சிங்கள அரசு தயாராக இருந்தது. இருப்பினும் விடுதலைப் புலிகள் அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை. எவ்வித தீர்வினையும் பெறாமல் விடுதலைப் புலிகள் வீழ்ச்சியடைந்தமை, தமிழ் மக்களின்  துரதிர்ஷ்டம். யுத்த வெற்றிக்குப் பின்பு தமிழ் மக்களுக்கான தீர்வினை வழங்குவதற்கு சிங்களத் தலைவர்கள் தயாராக இல்லை. அவர்களது கோணத்திலிருந்து பார்க்கும்பொழுது தமிழ் மக்களுக்கான தீர்வினை வழங்கிவிட்டால் அரசியல் செல்வாக்கு வீழ்ச்சியடையும் என்ற பயமுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் தமிழ் மக்களுக்கு முறையான தீர்வினை வழங்க முற்பட்டால் ஐக்கிய தேசிய கட்சி சிங்கள வாக்குகளை அபகரித்துக் கொள்ளும் முகமாக எதிர்ப்பினை தெரிவிப்பார்கள். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தீர்வினை கொண்டு வந்த பொழுது அது அதிகபட்சமான அதிகார பரவலாக்கல் என்று ஜேவிபியுடன் இணைந்து ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்றத்தில் தீர்வின் பிரதியை தீயிட்டு கொழுத்தியதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

யுத்தம் முடிவடைந்து இந்திய வெளியுறவு அமைச்சரின் வருகைக்குப் பின் ஜனாதிபதி தனது வாயாலே 13பிளஸ் கொடுக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதனைப் பெற்றுக்கொள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்குள் வருமாறு கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தார். அப்பொழுது விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க போன்றவர்கள் 13ஆவது திருத்த சட்டம் அகற்றப்பட வேண்டும் என கூக்குரல் இடவில்லை. ஒன்றரை வருடங்களுக்கு முன்பு கூட்டமைப்பினர் நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்குள் சென்றிருந்தால் 13பிளஸ்சைப் பற்றி விவாதித்திருக்கலாம். அரசாங்கமும் அதிலிருந்து விலகியிருக்காது இன்று நிலைமை தலைகீழாக போய்விட்டது. 13ஆவது திருத்த சட்டத்தை அகற்ற வேண்டும் என அரச பங்காளி கட்சிகள் மட்டுமின்றி அரசாங்கமும் முற்படுகின்றது. இந்நிலையில் பேச்சுவார்த்தை எவ்வாறு சாத்தியப்படும் என புரியவில்லை. ஐக்கிய தேசிய கட்சியும் 13ஆவது திருத்த சட்டத்தை அகற்ற கூறும் அமைச்சர் விமல் வீரவன்சவை சந்தித்து அவருக்கு அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. சிங்கள பேரினவாதம் இன்று தலைதூக்கியுள்ளது.

13வது திருத்த சட்டத்தை அகற்றுவதற்கு பெரும்பான்மையின சிங்கள மக்களும் அரசுக்கு ஆதரவளிக்க முன்வருவார்கள். அந்தளவிற்கு சிங்கள மக்கள் மத்தியில் இன்று இனவாதத்தை சிங்கள அரசியல் தலைவர்கள் உருவாக்கியுள்ளனர். இன்று 13பிளஸ் மறைந்து 13ஆவது திருத்த சட்டத்தையே அகற்றும் அளவுக்கு நிலைமை சென்றுள்ளது. எதிர்காலத்தில் தமிழ் மொழியும் ஏனைய மதங்களும் அரசியலமைப்பிலிருந்து அகற்றப்பட்டு சிங்கள மொழியும் பௌத்த மதமும் மட்டுமே இந்நாட்டுக்கு சொந்தமானது என சட்டத்தை கொண்டு வருவார்கள். கிடைத்த சந்தர்ப்பங்களை பற்றிப் பிடிக்காமல் சர்வதேச தலையீட்டை மட்டுமே நம்பியிருந்தமையினால் இன்று பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்ற நிலைக்கு இலங்கைத் தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் சாணக்கியமான சில இராஜதந்திர முயற்சிகளை கூட்டமைப்பினர் எடுக்க வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்ப்பார்ப்பாகும். வெறுமனே நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவதும் வெளியில் ஊடகங்களுக்கு அறிக்கை விடுவது மட்டும் எவ்வித பிரயோசனமும் இல்லை. இன்றைய அபாயகரமான நிலையில் கட்சி பேதமின்றி அனைத்து தமிழ் அரசியல் தலைவர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .