2021 ஜனவரி 27, புதன்கிழமை

காஸ், மின்கட்டணம் அதிகரிக்கும் சாத்தியம்

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 01 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

காஸ் மற்றும் மின்கட்டணம் அதிகரிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தகவல்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளமையால், காஸ் மற்றும் மின்கட்டணம் இன்னும் ஒரு சில நாட்களில் அதிகரிக்கப்படலாமெனத் தெரிவிக்கப்படுகின்றது. 

எரிவாயுவின் விலையை அதிகரிக்க அனுமதி கோரியுள்ள எரிவாயுக் கம்பனிகளின் வேண்டுகோள் நுகர்வோர் விவகார அதிகாரசபையால் பரிசீலிக்கப்பட்டுவருவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் பேச்சாளர் கூறியுள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கடந்த வாரம் பல அனல் மின் நிலையங்களில் மின்னுற்பத்திக்கு பயன்படுத்தப்படும் 2 வகை உலை எண்ணெய்யின் விலையை உயர்த்திவிட்டது.

இலங்கை மின்சாரசபை மற்றும் வேறு அனல் வெப்ப  மின்னுற்பத்தி நிலையங்களுக்கு மானிய விலையில் எரிபொருளை வழங்குவதால் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மாதமொன்றுக்கு 4,194 மில்லியன் ரூபா நட்டமடைவதாக பெற்றோலிய கைத்தொழில் அமைச்சின் பேச்சாளர் டபிள்யூ.பி.எம்.ஜி.றொஷான் கூறினார்.

129 ரூபாவுக்கு விற்கவேண்டிய எண்ணெயை 115 ரூபாவுக்கு விற்பதால் ஒரு லீற்றரில் 14 ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.

மின்கட்டணத்தை உயர்த்த வேண்டியதன் அவசியத்தை விளக்கி இலங்கை மின்சாரசபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு சகல விபரங்களையும் அனுப்பியுள்ளதென இலங்கை மின்சாரசபையின் பொதுமுகாமையாளர் நிஹால் விக்கிரமசூரிய கூறினார்.

உலை எண்ணெயின் விலை உயர்வினால் ஏற்படும் தாக்கங்களை ஆராய்வதற்காக நாளை நடைபெறவுள்ள கூட்டத்திற்கு மின்சக்தி, வலு அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமை தாங்குவார். இதன் பின் உலை எண்ணெய் விலை உயர்வு தொடர்பாக நாம் ஓர் அறிக்கையை பொதுப் பயன்பாடு ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைப்போமெனவும் அவர் கூறினார்.

கடந்த நவம்பர் மாதம் தொடக்கம் செயலிழந்துள்ள நுரைச்சோலை அனல் மின் நிலையம் இன்னும் சில நாட்களில் மின்னுற்பத்தியை தொடங்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .