2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

சிங்கள ஊடகவியலாளர்களும் கொல்லப்படுகின்றனர்: மாவை

Kanagaraj   / 2013 பெப்ரவரி 10 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரி.லோஹித்

'இலங்கையில் இன்று பத்திரிகைச் சுதந்திரம் அற்ற சூழலில் இனப்பற்றோடு, விடுதலை உணர்வுகளோடு உழைத்துவரும் தமிழ்ப் பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல நீதி நியாயாத்திற்காகக் குரல் கொடுத்து வரும் சிங்கள ஊடகவியலாளர்களும் கொல்லப்பட்டும் அச்சுறுத்தப்பட்டும் வருகின்றனர்' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

'சிவராம் நினைவுப் பணிமன்றம்' ஏற்பாடு செய்த ஐந்தாவது நினைவுக் கருத்தரங்கு சுவிஸ் சூரிச் மாநகரில் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றது.

ஊடகவியலாளர் கனகரவி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கலந்து கொண்டு 'இனப்பிரச்சினையும் சமகால அரசியலும்' என்ற தலைப்பில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்;ந்தும் உரையாற்றுகையில்,

'எங்கள் மனதில் என்றும் இடம்கொண்டிருக்கும் உத்தம மனிதர் பத்திரிகையாளர் சிவராம் நினைவாக மன்றம் அமைத்து அறிவுக்கும் ஆய்வுக்கும் களம் அமைத்து தமிழர் விடிவிற்கு உழைத்துவரும் சிவராம் ஞாபகார்த்த மன்ற நிர்வாகிகளுக்கு இவ்வேளையில நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இலங்கையில் இன்றும் பத்திரிகைச் சுதந்திரம் அற்ற சூழலில் இனப்பற்றோடு, விடுதலை உணர்வுகளோடு உழைத்துவரும் தமிழ்ப் பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல நீதிநியாயாத்திற்காகக் குரல் கொடுத்து வரும் சிங்கள ஊடகவியலாளர்களும் கொல்லப்பட்டும் அச்சுறுத்தப்பட்டும் வருகின்றனர்.

அரசின் சர்வாதிகார, இனவாத ஆட்சியினால் அச்சுறுத்தலுக்கு உள்ளான ஊடகவியலாளர்கள் வெளிநாடுகளில் தஞ்சம் கோரியுள்ளனர். அரசின் இத்தகைய நடவடிக்கைகளால் கொல்லப்பட்ட ஊடகவிலாளர்கள்; குறிப்பாக சிவராம் அவர்களுக்கும் என் இதயபூர்வமான அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கை மண்ணில் களப்பலியாகிவிட்ட எம் உறவுகளுக்கும் இச்சந்தர்ப்பத்தில் எனது இதயபூர்வமான அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்று உலக அரசியல் அரங்கில் இலங்கைத் தமிழர் பிரச்சினை முக்கிய அங்கம் வகித்து வருவதை அறிவோம். உலக வல்லாண்மை நாடுகள் உலகின் பல நாடுகளின் பிரச்சினைகளில் அக்கறை கொண்டு நடவடிக்கையில் ஈடுபடுகையில் இந்துமா சமுத்திரப் பிராந்தியத்தில் இலங்கைப் பிரச்சினையிலும் ஒரு தீர்வு ஏற்பட வேண்டுமென  ஈடுபாடுகொண்டு அரசியல், இராஜதந்திர நடவடிக்கைகளை எடுத்துவரும்போது நாமும் இராஜதந்திரத்துடன் நடந்து கொள்வது அவசியமானதாகும்.

இலங்கையில் தமிழ், முஸ்லிம் மக்களின் விடுதலைக்கும், சுதந்திர ஆளுகைக்குமாய் குறிப்பாக கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலான ஜனநாயக அறவழிப் போராட்டங்களும், ஆயுதப் போராட்டங்களும் தமிழ் மக்களின் விடுதலை எனும் கொள்கை மீதான திடசங்கற்பமுமே சர்வதேசத்தில் இன்று ஏற்பட்டுவரும் இராஜதந்திர நடவடிக்கைகளுக்குக் காரணம் ஆகும்.

இச்சந்தர்ப்பத்தை நாம் இழந்துவிடக் கூடாது. சர்வதேச நாடுகளை அனுசரித்து இந்த இராஜதந்திரப் போரில் தமிழ்த் தலைவர்கள் ஒன்றுபட்டுச் செயற்பட்டு வெற்றிபெற வேண்டும். அல்லது அணிதிரண்டுவரும் சர்வதேச நாடுகள் விரக்தியடைந்துவிட நேரும். குறிப்பாக புலம்பெயர்நத தமிழர்கள் இந்த இராஜதந்திர நடவடிக்கையில் செயலாற்றி வருவது முக்கியமானதொன்றாகும்.

மேலும் புலத்திலும், களத்திலும் புரிந்துணர்வுடன் ஒன்றுபட்டுச் செயலாற்ற வேண்டிய கட்டாயத்தை வலியுறுத்தி நிற்கின்றேன். அதற்கான அர்த்தமுள்ள பேச்சுக்களில் ஈடுபட்டு வருகின்றோம்.

புலம்பெயர்ந்த தமிழர்களின் கொள்கை, இலட்சியப் பற்றுடனான செயற்பாடுகள் இலங்கையில் ஒரு சிறந்த அரசியல்தீர்வை, தமிழர் தாயகத்தில் தமிழர் ஆட்சியை நிலைநாட்டுவதற்கு பேருதவியாய் அமையும் என்பதைக் கூறவேண்டும்.
எந்தத் தமிழர் தாயகத்தில் சுதந்திரமும், விடுதலையும் ஏற்படவேண்டும் என்று போராடுகின்றோமோ, தியாகம் செய்திருக்கின்றோமோ அந்த நிலம் கடந்த மூன்று ஆண்டுகளில், அறுபது ஆண்டுகளின் தொடர்ச்சியாக சிங்கள மயமாக்கப்படுகின்றது. அதற்காக இராணுவ மயமாக்கப்பட்டுள்ளது.

பௌத்த மயமாக்கப் படுகின்றது. இந்த அரசின் நிகழ்ச்சி நிரல் தமிழ்த் தேசிய இனத்துக்குரித்தான இறைமை, சுயநிர்ணய உரிமைத் தத்துவத்தை அழித்து விடுவதை நோக்கமாகக் கொண்டது. தமிழ் முஸ்லிம் மக்களின் வாழ்வுரிமையை அழித்து, இன அடையாளத்தை அழித்துவிடும் இன ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றது.

1983 ஓகஸ்ட் 16 ஆம் திகதி இந்திரா காந்தி அவர்களே அதற்கு முதல் நாட்களில் அமிர்தலிங்கத்துடன் நடாத்திய பேச்சுவார்த்தைகளை இந்திய மக்களவையில் மேற்சபையில் அறிவித்து விட்டுக் கூறும்போது 'இலங்கையில் நடப்பது இன அழிப்பு நடவடிக்கைகள்  தான்' என அறிவித்ததை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

ஏனெனில் இலங்கைக்கான இந்திய அரசின் அரசியல், இராஜதந்திர நடவடிக்கைகளில் இராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின்னர் ஒருவகை மாற்றம் ஏற்பட்டிருந்தமையை அவதானிக்கலாம். இந்த நிலையில் இந்தியநாடு மாற்றத்தை ஏற்படுத்தி இலங்கைத் தமிழர் நிலைப்பாட்டை ஆதரிக்க வைக்க வேண்டும். அதற்கான பேச்சுக்களை மேற்கொண்டு வருகின்றோம் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--