2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யவும்: மனோ

Super User   / 2013 பெப்ரவரி 13 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்தது போன்று, மிக நீண்ட காலமாக அல்லலுறும் தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் மனோ கணேசன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

அரசியல் கைதிகள்: 

தெற்கிலும் வடக்கிலும் ஒரே மன நிலையில்தான் பல்கலைக்கழக மாணவர்கள் சிந்திக்கிறார்கள். ஆனால் தெற்கிலே ஒரு விதமாகவும் வடக்கிலே இன்னொரு விதமாகவும் மாணவர்கள் நடத்தப்படுகிறார்கள்.அந்த அடிப்படையில்தான் தமிழ் மாணவர்கள் கைது செய்யப்பட்டார்கள். இன்று மாணவர் விடுதலை என்பது மகிழ்ச்சிக்குரியது.

ஆனால், இந்த அரசாங்கம் தமிழ் மக்களpன் மனங்களை வெல்ல  இன்னும் நெடுந்தூரம் செல்ல வேண்டியதுள்ளது. அந்த நெடுந்தூர பயணத்தில ஒரு மைல்கல்தான் தமிழ் அரசியல் கைதிகள் பிரச்சினையாகும். கொழும்பு, வவுனியா, நீர்கொழும்பு, கண்டி மற்றும் களுத்தறை சிறைக்கூடங்களிலும் பூசா தடுப்பு முகாமிலும் இருக்கின்ற கைதிகள் தொடர்பில்  நியாயம் வேண்டும்.

தீர்ப்பு வழங்கப்பட்டோர், நீண்ட  காலம் வழக்காடுவோர்,  விசாரணையின்றி இருப்போர் ஆகியோர் விடுவிக்கப்பட்டு அவர்களுக்கும் தேசிய நல்லிணக்க சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.  சோறு கொடுத்தார்கள், தண்ணீர் கொடுத்தார்கள், வீடு கொடுத்தார்கள் என ஏறக்குறைய ஆயிரம் பேரை சமூகத்தில் இருந்து பிரித்து வைக்காதீர்கள்.

ஆயிரமாயிரம் குற்றங்களை இழைத்துவிட்டு, ஒரேயொரு காயத்துக்கு மாத்திரம்  மருந்து தடவினால் நாம் மகிழ்ந்துவிடப் போவதில்லை. கண்ணெதிரே தெரியும் நடைமுறை உண்மைகளை நாம் மறந்துவிடமுடியாது.  எனவே தமிழ் கைதிகள் தொடர்பில் நீண்ட காலம் நீங்கள் வழங்கி வரும் உறுதிமொழிகளை நடைமுறை படுத்துங்கள்.      

பொதுநலவாய மாநாடு:

பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் ஷர்மா இங்கு வந்து சொன்னது என்ன? பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாடு இலங்கையில் நடைபெறும் என்பதை உறுதி செய்யவே அவர் வந்தார் என்று அரசாங்கம் சொல்லி திரிகிறது.
அது உண்மை அல்ல. மாநாடு நடைபெறுவது சம்பந்தமாக அவர் எந்த ஒரு உறுதிமொழியையும்  தரவில்லை என பொதுநலவாய செயலகம் தெரிவித்துள்ளது.

உண்மையில் மாநாடு நடைபெற வேண்டுமானால் அரசாங்கம் மனித உரிமைகள், ஊடக சுதந்திரம் ஆகியவை தொடர்பில் பொதுநலவாய  கொள்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சொல்வதற்கே அவர் வந்தார்.

இன்று இந்த அரசின் மனித உரிமை, ஊடக சுதந்திரம் என்பவை பற்றிய வரலாறு எமக்கு தெரியும். எனவே இன்று, பொதுநலவாய அமைப்பை ஏகாதிபத்திய அமைப்பு என்று சொல்லி அதிலிருந்து வெளியேற அரசாங்கத்திற்குள் ஆலோசிக்கப்படுகிறது.

தேசிய நல்லிணக்கம்:


இந்த நாட்டில் இன்று தேசிய நல்லிணக்கம் பற்றி பேசப்படுகிறது. நமக்கும் தேவை தேசிய நல்லிணக்கம்தான். சிங்கள, தமிழ், முஸ்லிம், பெளத்த, இந்து, இஸ்லாம், கத்தோலிக்க மக்கள் ஐக்கியமாக வாழ வேண்டும் என்றால் சமத்துவம் இருக்க வேண்டும். சமத்துவம்தான் ஐக்கியத்துக்கு உள்ள முதல் நிபந்தனை.

நாட்டின் ஒவ்வொரு அசைவிலும்பெரும்பான்மை இனத்தை மாத்திரம் தூக்கி வைத்துக்கொண்டு  தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை ஒதுக்கி வைத்துகொண்டு செயல்படுவது சமத்துவம் இல்லை.  பொதுபல சேனாவை தட்டி கொடுத்து வளர்ப்பதும் அவர்களுக்கு நாட்டில் எதையும் பேசவும் செய்யவும் அதிகாரம் வழங்குவது  நல்லிணக்க செயல்பாடு இல்லை.

பள்ளிகளையும் கோவில்களையும் இடித்துவிட்டு ஒன்றும் நடக்கவில்லை என பொய் சொல்வது நல்லிணக்கம் இல்லை. அதுதான் பிரிவினைவாதம். இன்று இந்த நாட்டில் பிரிவினைவாதிகளும் இனவாதிகளும் மதவாதிகளும் இருப்பது அரசாங்கத்துக்கு உள்ளேதான். வெளியே எதிர்கட்சிகள் மத்தியில் பிரிவினைவாதிகள் கிடையாது என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--