2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

வடக்கு தேர்தலை சர்வதேசம் அவதானிக்கிறது: ராம்

Kanagaraj   / 2013 ஜூலை 31 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடைபெறவிருக்கின்ற மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தலில் வடமாகாண சபை தேர்தலை சர்வதேசம் அவதானித்துக்கொண்டிருக்கின்றது.

ஆகையால், வடமாகாண மக்கள் சிந்தித்து வாக்களிக்கவேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான சி.வை.பி.ராம் வேண்டுகோள் விடுத்தார்.

எமது உரிமைகளை வென்றெடுக்க தமிழ் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தவேண்டும். அதற்காக எமது வாக்குரிமையை சரியாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஊடகங்களுக்கு அவர் இன்று புதன்கிழமை விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மாகாணசபைத்தேர்தலில் வடக்கின் நிலைமை வேறு, ஏனைய மாகாண சபைகளின் நிலைப்பாடு வேறாகும்.

எனவே, தமிழ் மக்கள் மிகவும் புத்திசாலித்தனமாகவும் நிதானமாகவும் சிந்தித்து தேர்தலில் வாக்களிக்கவேண்டும்.

எதிர்வரும் மாகாண சபைத்தேர்தல் தமிழர்களுக்கு மிகவும் முக்கியமானது என்றாலும் வட மாகாண சபைத்தேர்தலை சர்வதேச சமூகம் அவதானித்துக்கொண்டிருக்கின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த 30 வருடகாலமாக போராட்ட அனுபவங்களும் அதனால் ஏற்பட்ட அழிவுகளும் தமிழ் மக்களின் விடுதலைக்கான உந்துதலை வெகுவாக அதிகரித்துள்ள நிலையில் தமிழ் அரசியல் கட்சிகளுக்கிடையிலான ஒற்றுமையும் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. இந்த ஒற்றுமையானது மாகாண சபைத்தேர்தலில் தமிழ்; பிரதிநிதித்துவத்தின் வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளது.

அதேநேரத்தில், பெருந்தோட்ட தொழிலாளர்களை அதிகளவில் உள்ளடக்கிய மத்திய மாகாணத்தின் நிலைப்பாடு வேறுபட்ட தன்மையை கொண்டதாகவே அமைந்துள்ளது.

இன்றைய ஆட்சியாளர்களை தோற்கடித்து புதியதோர் ஆட்சிமாற்றத்தை உருவாக்கவேடுமென்ற நிலைப்பாடு அங்குள்ள மக்கள் மத்தியில் தோன்றியுள்ள போதிலும் அதற்கு எதிரான அரசியல் வியூகங்கள் முரண்பட்ட தன்மையை கொண்டதாகவே காணப்படுகின்றது.

பிரதான கட்சிகளிலும், சுயேட்சைக்குழுக்களாகவும்; பெருமளவான தமிழ்கள் களமிறங்கியுள்ளதால் வாக்குகள் சிதறுண்டு தமிழ் பிரதிநித்துவம் இழக்கப்படுவதற்கான சாத்தியங்களும் தென்படுகின்றன.

எனவே, மத்தியமாகாணத்திலுள்ள தமிழ்மக்கள் கடந்தகாலங்களை போலன்றி பசப்பு வார்த்தைகளை நம்பி சோரம் போய்விடக்கூடாது. எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கு தமிழ் பிரதிநிதித்துவத்தை வென்றெடுக்கவேண்டும் அதற்காக எமது வாக்குரிமையை பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

பதவிக்காகவும் பணத்திற்காகவும் சோரம் போகும் அரசியல்வாதிகளை இனங்கண்டு சமூக சிந்தனையுள்ளவர்களுடன் இணைந்து செயற்படவேண்டும். அவ்வாறானதோர் நிலைப்பாட்டையே எதிர்வரும் மாகாண சபைத்தேர்தலில் மலையக மக்கள் முன்னெடுக்கவேண்டும்.

தற்போதைய ஜனநாயகவிரோத வன்முறை ஆட்சியதிகாரத்தை மாற்றயமைக்க புதியதோர் அரசியல் மாற்றம் அவசியமாகும். அதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்த செயற்பட முன்வரவேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .