2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

கோபி உள்ளிட்ட குழுவினர் இராணுவத்தினரால் சுட்டுக்கொலை?

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 11 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என்று கூறப்படும் கோபி உள்ளிட்ட மூவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா, நெடுங்கேணி பிரதேசத்தில் இராணுவத்தினருக்கும் கோபி உள்ளிட்ட குழுவினருக்கும் இடையில் இன்று அதிகாலை இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகத்திலேயே இவர்கள் மூவரும் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் சம்பவத்தில் இராணுவ வீரர் ஒருவரும் பலியாகியுள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வேலுபிள்ளை பிரபாகரனுக்குப் பின்னர் புலிகள் இயக்கத்தின் தலைவர் என்று கூறப்படும் கோபி என்றழைக்கப்படும் பொன்னையா செல்வநாயகம் கஜீபனைத் தேடி வவுனியா, நெடுங்கேணி பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவினரால் விசேட தேடுதல் நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, அப்பகுதியில் இராணுவத்தினருக்கும் கோபி குழுவினருக்கும் இடையில் பரஸ்பரம் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது. இதில் இராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் அவரது சடலம் இன்று காலை பதவியா வைத்தியசாலைக்கு எடுத்துவரப்பட்டுள்ளது.

நேற்றிரவு 9 மணியளவில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை அடுத்து சந்தேகநபர்களான கோபி உள்ளிட்ட குழுவினர் அங்கிருந்த தப்பி வேறு இடத்துக்குச் சென்றதாகவும் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றுள்ள இராணுவத்தினர் அவர்கள் மீது இன்று அதிகாலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதை அடுத்து கோபி உள்ளிட்ட மூவர் கொல்லப்பட்டதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், உயிரிழந்த மூவரின் சடலங்கள் தொடர்பில் இரர்ணுவத்தினர் விசாரணை நடத்தி வருவதாகவும் அவ்வாறு உயிரிழந்தவர்களில் கோபியும் அடங்குகின்றாரா என்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--