2021 மே 18, செவ்வாய்க்கிழமை

அரசியல் கூட்டமைப்பு தொடர்பில் தீர்மானிக்கப்படவில்லை: மனோ

George   / 2015 பெப்ரவரி 01 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னிலங்கை தமிழ் கட்சிகள் மத்தியில் புதிய அரசியல் கூட்டமைப்பு ஒன்று உருவாவது தொடர்பில் இதுவரை எந்த வித இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை கொழும்பு பிரைட்டன் உணவகத்தில் நடைபெற்ற ஜனநாயக மக்கள் முன்னணியின் அங்கத்தவர் ஒன்றுகூடலில் உரையாற்றிய போது அவர் இதனை கூறியுள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், தென்னிலங்கை தமிழ் கட்சிகள் மத்தியில் புதிய அரசியல் கூட்டமைப்பு ஒன்று உருவாவது தொடர்பிலான தகவல்கள் சமூக ஊடகங்களிலும் இணைய தளங்கள் வெளியானதுடன் அதற்கு மக்கள் மத்தியில், குறிப்பாக இளைஞர் மத்தியில் பாரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

எனினும் இது தொடர்பில் இதுவரை எந்த வித இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை. இதுபற்றி சம்பந்தப்பட்ட கட்சி தலைவர்கள் மத்தியில் கலந்துரையாடல்கள் மாத்திரமே இதுவரையில் நடைபெற்றுள்ளன.

இந்த யோசனையையிட்டு சம்பந்தப்பட்ட கட்சிகள் மற்றும் தலைவர்கள் பொது உடன்பாட்டுக்கு வர  முடியுமானால் மாத்திரமே இந்த கூட்டமைப்பு உருவாகும்.

நாம் அமைக்க முயல்வது தென்னிலங்கை தமிழ் கட்சிகள் மத்தியிலான ஒரு அரசியல் கூட்டமைப்பு. மத்திய, ஊவா, சப்ரகமுவ மாகாண இந்திய வம்சாவளி மலையக தமிழ் மக்களை இந்த கூட்டமைப்பு அரவணைக்கும்.

ஆனால், இது மலையகம் என்ற வரையறையை மாத்திரம் கொண்ட ஒரு கூட்டமைப்பு அல்ல. கொழும்பில் வாழும் வட-கிழக்கை பூர்வீகமாக கொண்ட தமிழ் மக்களையும், களுத்துறை முதல் கொழும்பு, கம்பஹா, புத்தளம் உட்பட மேற்கு கரையோர மாவட்டங்களிலேயே பிறந்து வளர்ந்துவிட்ட  அடையாளத்தை கொண்ட தமிழ் மக்களையும், நாம் கூட்டிணைப்போம்.

வடக்கு-கிழக்கில் வாழ்கின்ற பெரும்பான்மை தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இருக்கின்றார்கள். வடக்கில்  கிளிநொச்சி, வன்னி மாவட்டங்களில் குடியேறி வாழும் மலையகத்தை பூர்வீகமாக கொண்ட பெருந்தொகை மக்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.

அதுபோல் தென்னிலங்கையில் வாழும் அனைத்து தமிழ் மக்களும் நமது கூட்டமைப்புடன் இருப்பார்கள். ஏற்கனவே கொழும்பில் வாழும் பெரும்பான்மை தமிழ் மக்கள்,  நமது ஜனநாயக மக்கள் முன்னணியை ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.

இந்நிலையில் தென்னிலங்கையின்  நுவரெலியா, கொழும்பு, பதுளை, கண்டி, இரத்தினபுரி, கம்பஹா, கேகாலை, மாத்தளை, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் நிலவும் விசேட களநிலவரங்களின் அடிப்படையில் நமது கூட்டமைப்பு பெரும்பான்மை கட்சிகளுடனான தேர்தல்கால உறவுகளை தீர்மானிக்கும்.

இந்த அடிப்படையிலேயே கலந்துரையாடல்கள் நடைபெறுகின்றன. இந்த பேச்சுவார்த்தைகளில் சிவில் சமூக பிரதிநிதிகளும் பங்களிப்பு செய்கின்றனர். இந்த முயற்சிகள் வெற்றி பெற்றால் மாத்திரமே இந்த கூட்டமைப்பு உருவாகும் என மனோ மேலும் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .