2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

அரசாங்கத்தின் 100 நாட்கள் திட்டத்துக்கு அமெரிக்கா ஆதரவு

Thipaan   / 2015 பெப்ரவரி 02 , பி.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் ஆட்சிக்கு வந்துள்ள புதிய அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டத்துக்கு நட்பு நாடு என்ற ரீதியில் அமெரிக்கா தனது ஆதரவை வழங்குவதாக, நேற்று இலங்கை வந்தடைந்த தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கு பொறுப்பான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் தெரிவித்தார்.

நேற்று காலை இலங்கை வந்தடைந்த நிஷா பிஸ்வால், வெளிவிவகார அமைச்சில், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்து கலந்துரையாடினார். தொடர்ந்து நேற்று மாலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும், அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடினார். அத்துடன் பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் ருவன் விஜயவர்தனவையும் அவர் சந்தித்து கலந்துரையாடினார்.

இந்நிலையில், வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய நிஷா பிஸ்வால், இலங்கையில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலை அடுத்து ஏற்பட்ட ஆட்சி மாற்றம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி ஆகியோர் தங்களது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில், இலங்கையின் முன்னேற்றம் குறித்து கண்டறிவதற்காக நான் மிகவும் ஆவலாக உள்ளேன்' என்றார்.

'ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் 100 நாட்கள் வேலைத்திட்டத்தைப் போன்று பொருளாதார அபிவிருத்தி, இலஞ்ச ஊழல் ஒழிப்பு, ஜனநாயக ஆட்சி, மனித உரிமை பாதுகாப்பு போன்ற விடயங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க அமெரிக்கா தயாராக இருக்கின்றது என பிஸ்வால் கூறினார்.

இதனைத்தொடர்ந்து கருத்து கூறிய பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பி.பெரேரா, 'மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியின் புதிய அரசாங்கம் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றாக வாழக்கூடிய நாடு ஒன்றை உருவாக்க முயற்சிக்கிறது. இதற்கு சர்வதேச ஒத்துழைப்பு மிகவும் அவசியம். இதற்கு அமெரிக்காவுடனான உறவை மேல்நிலையில் வைத்துக்கொள்வது அவசியம்' என்றார்.

அத்துடன், 'அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி இலங்கைக்கு விஜயம் செய்ய எதிர்பார்த்துள்ளார். அவருக்கான அழைப்பை, அடுத்த வாரம் 12ஆம் திகதி வாஷிங்டனுக்கு பயணமாகவுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர விடுக்கவுள்ளார். அதன்பின் உயர்மட்ட இராஜதந்திர உறவு மற்றும் உயர் இராஜதந்திர வருகை ஒன்றை நாம் எதிர்பார்க்கின்றோம்' என்று அஜித் பி.பெரேரா மேலும் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X