2021 மே 06, வியாழக்கிழமை

சிறையில் உள்ள இலங்கை அகதிகளை விடுவிக்குமாறு கோரிக்கை

George   / 2015 பெப்ரவரி 03 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறைகளில் உள்ள இலங்கை அகதிகளை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என  வலியுறுத்தி, மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவஹிருல்லா , நேற்று திங்கட்கிழமை(02) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழகத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான இலங்கை அகதிகள் உள்ளனர். அரசின் உதவிகளை பெற்று, அவர்கள் கண்ணியத்துடனும் பாதுகாப்புடனும் முகாம்களிலும் முகாம்களுக்கு வெளியிலும் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஜனவரி 28ஆம் திகதி எழுதிய கடிதத்தில்,  2013ஆம் ஆண்டில் இருந்து இலங்கையில் இருந்து ஒருவர்கூட அகதியாக வரவில்லை என்று தெரிவித்துள்ளார். 

விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவடைந்த நிலையில், இலங்கையில் அமைதி திரும்பி விட்டதாக அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் அறிவித்திருந்தது.

ஆனால், தமிழர்கள் அதிகமாக வாழக்கூடிய வடகிழக்குப் பகுதிகளில் இலங்கை இராணுவம்தான் முற்றுகையிட்டுள்ளது.

இதனால், இலங்கையில் இருந்து அகதிகள் இராமேசுவரம் வருவது 2013ஆம் ஆண்டுக்குப் பின்னரும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. 

தற்போது இலங்கையில் இருந்து அகதிகள் தமிழகம் வந்தால் அவர்களை முகாம்களுக்குக் கொண்டு செல்லாமல் கடவுச்சீட்டு ஆவணச் சட்டத்தின் கீழும் சட்ட விரோதமாக வந்ததாகவும் கூறி வழக்குப் பதிவு செய்து தமிழக காவல் துறையினர் சிறைகளில் அடைக்கிறனர்.

சொந்த நாட்டில் வாழ வழியில்லாமல் அகதிகளாக வருபவர்களை சிறையில் அடைக்காமல் முன்பு போலவே முகாம்களில் தங்க வைக்க வேண்டும்.

மேலும் 2013ஆம் ஆண்டுக்குப் பிறகு, தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் அகதிகளையும் விடுதலை செய்ய தமிழக அரசு முன் வர வேண்டும் என்று அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .