2021 மே 08, சனிக்கிழமை

வெளிநாட்டு வங்கிகளிலுள்ள சொத்துக்களை கண்டறிய உலக வங்கி உதவி

Menaka Mookandi   / 2015 பெப்ரவரி 09 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் கொள்ளையிடப்பட்டு வெளிநாட்டு வங்கிகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள சொத்துக்கள் தொடர்பில் கண்டறிவதற்காக உலக வங்கியின் (ஸ்டார்) ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நடவடிக்கை எடுத்துள்ளார்.

ட்ரான்ஸ்பெரன்சி இன்டர்நெஷனல் நிறுவனத்தின் தலைவர் ஜே.சி.வெலியமுனவுடன் அடுத்த வாரமம் அமெரிக்காவின் வொஷிங்டன் நகரிலுள்ள உலக வங்கியின் விஷேட பிரிவுக்குச் செல்லவுள்ள அமைச்சர் சமரவீர, கொள்ளையிடப்பட்ட சொத்துக்கள் தொடர்பில் கண்டறிய நடவடிக்கை எடுக்கவுள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கொள்ளையிடப்படும் சொத்துக்கள் தொடர்பில் கண்டறியும் உலக வங்கியின் பிரிவு, ' இலங்கை போன்றதொரு நாட்டில் சொத்துக்கள் கொள்ளையிடப்படுவதென்பது பாரியதொரு பிரச்சினையாகும்' என்று கூறியுள்ளது.

ஒரு வருடத்துக்கு 2 ஆயிரம் கோடி அமெரிக்க டொலர்கள் முதல் 4 ஆயிரம் கோடி டொலர்களை அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கொள்ளையிட்டு வெளிநாடுகளிலுள்ள வங்கிகளில் வைப்பிலிட்டு வருகின்றனர் என்றும் உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

எதிர்வரும் 12ஆம் திகதி வொஷிங்டன் நகருக்குச் செல்லவுள்ள சமரவீரவும் வெலியமுனவும், தங்களிடமுள்ள அடிப்படைத் தகவல்களை ஸ்டார் பிரிவு அதிகாரிகளிடம் கையளிக்கவுள்ளனர். இலங்கை சொத்துக்களையும் பணத்தையும் கொள்ளையிட்ட அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் பெயர்ப் பட்டியலும் அவ்வதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளது.

இதேவேளை, அண்மையில் இலங்கைக்கு வந்திருந்த, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் விடுத்த அழைப்புக்கமைய, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை பிரிட்டனுக்கு விஜயம் செய்துள்ளார்.

சில நாட்கள் அங்கு தங்கியிருக்கும் நிலையிலேயே அவர், அமெரிக்காவுக்கு பயணமாவார் என்று வெளிவிவகார அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X