2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

நல்லாட்சியை திருப்பக்கூடாது: ரணில்

Kanagaraj   / 2015 ஓகஸ்ட் 19 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அழகன் கனகராஜ்

ஐக்கிய தேசியக் கட்சிக்கு நாடாளுமன்ற அதிகாரம் கிடைத்துள்ளது. நியமிக்கப்படவிருக்கின்ற புதிய அரசாங்கத்தில் பிரதமர் பதவியை நான் பொறுப்பேற்க இருக்கின்றேன் என தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க,  கருத்தொற்றுமையை கட்டியெழுப்புவதற்கு கைக்கோர்க்குமாறு சகல கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தார்.

அலரி மாளிகையின் திறந்தவெளியில் வைத்து புதன்கிழமை (19) காலை ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்துரைத்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தனது பாரியாரான மைத்திரி விக்கிமசிங்கவுடன் அலரி மாளிகையின் பிரதான வாயிலுக்கு நேற்றுக் காலை 11.36க்கு வந்தடைந்த அவர், அங்கு குழுமியிருந்த புகைப்பட ஊடகவியலாளர்களை நோக்கி கையசைத்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார். 

அவரது பாரியாரான மைத்திரி விக்கிரமசிங்க, குடையொன்றை பிடித்துக்கொண்டு ஓரமாக நின்றுக்கொண்டிருக்க, புற்தரையில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு மேசையின் முன்பாக நின்றிருந்தவாறு ரணில் விக்கிரமசிங்க ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

சிங்களம், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் மட்டும் உரையாற்றிய ரணில் விக்கிமசிங்க, அங்கு குழுமியிருந்த ஊடகவியலாளர்கள் எழுப்பிய இரண்டே இரண்டு கேள்விகளுக்கு மட்டுமே பதிலளித்தார்.

ஊடகவியலாளர்கள் தொடர்ந்து கேள்விகளை கேட்டபோதிலும், வெயிலில் நின்று காய்வதைவிட உள்ளேசென்று தேநீர் அருந்திகொண்டு பேசலாம் என பிரதான மண்டபத்துக்குள் ஊடகவியலாளர்களையும் அழைத்துச்சென்றார்.

ரணில் விக்கிரமசிங்கவும் அவரது பாரியாரும் தேநீர் அருந்திகொண்டே அங்கு குழுமியிருந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களிடம் பல்வேறு பட்ட விடயங்கள் தொடர்பிலும் அளவளாவினர். 
இதற்கு முன்னர் அவர் அலரி மாளிகைக்கு வெளியே வைத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேலும் கூறியதாவது, 

'கடந்த ஜனவரி 8ஆம் திகதி நாங்கள் முன்வைத்த நல்லாட்சிக் கொள்கை வெற்றிபெற்றுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து நல்லாட்சி கொள்கைளை முன்கொண்டு செல்வதற்காக எங்களுக்கு மக்கள் வரம் கிடைத்துள்ளது. தேசியப் பணியை முன்னெடுப்பதற்கு இணையுமாறு சகல கட்சிகளுக்கும் நான் இத்தருணத்தில் அழைப்பு விடுகின்றேன்' என்றார்.  

'கருத்தொற்றுமையை முன்கொண்டு செல்வதற்கு அரசாங்கத்தில் இணைந்து அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர் பதவிகளை பொறுப்பேற்று அல்லது நாடாளுமன்றத்தில் உருவாக்கப்படும் பதவியை பொறுப்பேற்றல் இந்த இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுத்துகொள்ள முடியும். 

நாங்கள் நாடாளுமன்றத்தில் தெரிவுக்குழுவை நியமிப்போம். மாவட்ட அபிவிருத்தி தொடர்பு சபையை உருவாக்கி நாடாளுமன்ற உறுப்பினர்களை அவற்றுக்கு தலைவராக நியமிப்பேன். சிவில் பிரிவில் ஆலோசனை சபையை உருவாக்கி பொறுப்புகளை கையளிப்பேன். 

கருத்தொற்றுமைக்குள் இணைவோர் தங்களுக்கு விருப்பமான மாற்றீடை தெரிந்துகொள்ள முடியும். பழைய அரசியலை ஒதுக்கி தள்ளிவிட்டு சகலரும் இணைந்து அடிப்படைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஐக்கியப்படுவோம்' என்றும் அவர் கூறினார். 

'5 வருடங்கள் பார்ப்போம் இல்லையேல் இரண்டு வருடங்கள் பார்ப்போம். நான், பிரதமராக பதவியேற்றதன் பின்னர் கருத்தொற்றுமை என்ற நாடாளுமன்றத்தில் நல்லாட்சிக்கான அங்கீகாரத்துடன் நடவடிக்கை எடுக்கமுடியும். 

சட்டத்தை மதிக்கும் தேர்தலுக்கு முகம்கொடுத்தோம். அந்த பாதையில் முன்சென்று துன்பப்படுவோருக்கு நல்லத்தை செய்வதற்கான நிர்வாகத்தை ஏற்படுத்துவோம்' என்று அவர் மேலும் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .