2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

சம்பூர் அபிவிருத்திக்கு அமெரிக்கா நிதியுதவி

Gavitha   / 2015 ஓகஸ்ட் 26 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கான இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா பிஸ்வால், சம்பூர் பிரதேசத்தின் அபிவிருத்திக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியுதவியளிக்க அமெரிக்கா முன்வந்துள்ளதாக அறிவித்தார்.

அத்துடன், புதிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கு தாம் எதிர்பார்ப்புடன் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று செவ்வாய்க்கிழமை (25) அதிகாலை இலங்கையை வந்தடைந்த அவர், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை அவ்வமைச்சில் சந்தித்து கலந்துரையாடிய பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிஸ்வால், 'ஒரு மில்லியன் டொலர் பெறுமதியான வளங்களுக்கான அர்ப்பணிப்புடன், சம்பூர் பிரதேசத்தின் மீள்குடியேற்றம் மற்றும் கல்வி வளர்ச்சிக்கு நாங்கள் உதவவுள்ளோம். அத்தோடு, இந்நாடானது தனது முழுமையான ஆற்றலளவை அடைவதற்கு, இந்த விடயத்திலும் ஏனைய விடயங்களிலும் ஜனாதிபதியுடனும் பிரதமருடனும் புதிய அரசாங்கத்துடனும் இணைந்து பணியாற்றுவதற்கு அமெரிக்கா, எதிர்பார்ப்புடன் உள்ளது' என்றார்.

முன்னதாக, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அங்கு உரையாற்றுகையில், 'அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஜோன் கெரி, கடந்த மே மாதம் இலங்கை வந்திருந்த போது,  பல புதிய விடயங்கள் இனங்காணப்பட்டன. அப்போது  அடையப்பட்ட உடன்பாடுகளின் தொடர்ச்சி குறித்து பிஸ்வால் மற்றும் ஜனநாயகத்துக்கான அமெரிக்காவின் உதவிச் செயலாளர் ரொம் மலினோஸ்கி  ஆகியோருடனான இன்றைய (நேற்று) சந்திப்பின்போது கவனம் செலுத்தப்பட்டது' என்றார்.

'நல்லாட்சி, மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல், பொருளாதாரத்தை உறுதிப்படுத்தல் உட்பட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் நாம் பேசினோம். ஜனாதிபதி, தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியிருந்தவைக்கு அமைய மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு தொடர்பான விடயங்களை கவனிக்க எடுக்கப்பட்ட  நடவடிக்கைகளை பற்றி நான்  விவரித்தேன்.

நாம் நெருக்கமான  பொருளாதார ஒத்துழைப்புக்கு முக்கியத்துவம் வழங்க உடன்பட்டோம். எமது ஏற்றுமதியில் 23 சதவீதம் அமெரிக்காவுக்கு செல்கிறது. இலங்கையில் உருவாகியுள்ள நல்ல வாய்ப்புகளை அமெரிக்க முதலீட்டாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென உடன்பட்டோம்' என்றும் மங்கள சமரவீர இதன்போது மேலும் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .