2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

பரீட்சை எழுதாமலிருக்க தந்தையிடம் ரூ. 8 மில்லியன் கப்பம் கோரிய மகன்

Gavitha   / 2016 டிசெம்பர் 14 , பி.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

80 இலட்சம் ரூபாய் கப்பம் கோரி, இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் 17 வயது சிறுவனை, பொலிஸார் புதன்கிழமை அதிகாலை மீட்டுள்ளனர்.    

தங்கொட்டுவ, கோனவில தெற்கு பிரதேசத்தில் வசிக்கும் சுவர்ணாதிபதி குரனகே கவிஷ்க கிம்ஹான் குரேரா (17) என்ற பாடசாலை மாணவனே, இவ்வாறு கடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த மாணவன், பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்பதுடன், தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதிக்கொண்டிருக்கும் நிலையிலேயே கடத்தப்பட்டிருந்தார்.

  தங்கொட்டுவ, கொடெல்ல வித்தியாலய மைதானத்துக்கு, செவ்வாய்க்கிழமை விளையாடச் சென்ற மாணவன், பகல் 1 மணியாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் தேடிப் பார்த்துள்ளனர். மகனின் அலைபேசிக்கு அழைப்பு ஏற்படுத்திய போதும், அதற்கு பதில் கிடைக்கவில்லை.

இரவு, தந்தையின் அலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்திய குறித்த மாணவன், அறிமுகமற்ற சிலர் தன்னை கடத்தியிருப்பதாகவும், தான் இருக்கும் இடம் தெரியாதென்றும் கூறியுள்ளார். தன்னை விடுவிப்பதாயின், 80 மில்லியன் ரூபாயினை கடத்தல்காரர்கள் கப்பமாகக் கோருவதாகவும், அம்மாணவன் கூறியுள்ளார்.

இதுகுறித்து, குறித்த மாணவனின் தந்தையால், பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். இந்நிலையில், கடத்தப்பட்டதாக கூறப்பட்ட குறித்த மாணவன், புதன்கிழமை அதிகாலை, தங்கொட்டுவ பிரதேசத்தில் உள்ள மூடப்பட்ட எண்ணெய் ஆலையில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டார்.  

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட போது, அம்மாணவனை எவரும் கடத்தவில்லை என்றும் புதன்கிழமை இடம்பெற்ற கணிதபாட பரீட்சைக்குத் தோற்ற விரும்பாமையினால், தான் கடத்தப்பட்டதாக நாடகமொன்றை அரங்கேற்றியதாகவும் இதற்காக, தன்னுடைய நண்பரொருவரின் அலைபேசியைப் பயன்படுத்திக்கொண்டதாகவும், பொலிஸ் விசாரணைகளின் போது, அம்மாணவன் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--