2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

‘3 தசாப்த வடுக்களை, 3 வருடங்களில் தீர்ப்பது சாதாரண விடயமல்ல’

Editorial   / 2018 செப்டெம்பர் 17 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், டி.விஜிதா

30 வருட கால போரின் வடுக்களை மூன்று வருட காலத்தில் தீர்ப்பதென்பது சாதாரண விடயமல்லவென தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் எம். பியான விஜயகலா மகேஸ்வரன், நல்லாட்சி அரசாங்கம், ஆட்சிப்பீடம் ஏறியதன் பின்னர், வடக்கில் இராணுவத்தினரிடமிருந்த காணிகளில் பலவற்றை விடுவித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.  

யாழ்ப்பாண பிரதேச செயலகத்துக்கான, உத்தியோகபூர்வ பணி ஜனாதிபதி மக்கள் சேவை ஆரம்ப நிகழ்வு, யாழ். மத்திய கல்லூரியில் நேற்று (16) நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,  

“குறிப்பாக நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து, மூன்று வருடங்கள் ஆகின்றன. எனினும், 30 வருடங்களாக நிலவிய போரின் வடுக்களுக்கு இந்த மூன்று வருடகாலப்பகுதிக்குள் தீர்வு காண்பது என்பது சாதாரணவிடயமல்ல. எனினும், இந்த நல்லாட்சி அரசாங்கமானது மூன்று ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளது மக்களுக்குச் செய்யவேண்டிய பலவற்றை செய்துள்ளது” என்றார். 

எஞ்சியுள்ள காலப்பகுதியில் ஏனையவற்றை செய்யுமென நம்பிக்கை வெளியிட்டுள்ள விஜயகலா மகேஸ்வரன், நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னரே வடக்கில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது. முன்னைய ஆட்சியில் ஜனநாயகம் என்ற சொல்லுக்கே இடமில்லாத நிலையே காணப்பட்டது. வடக்கில் இராணுவத்தினரிடமிருந்த காணிகளை இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் தான், விடுவித்திருக்கிறோம் என்றார். 

“அதுமட்டுமன்றி, மக்களுக்கு பயன்தரகூடிய, மேலும் பல வேலைத்திட்டங்களை இந்த நல்லாட்சி அரசாங்கத்தினால், நாம் செய்து வருகிறோம்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--