2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

உயிர்ப் பிணங்களின் ஊழை

Thipaan   / 2016 ஓகஸ்ட் 02 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ப. தெய்வீகன்

முஸ்லிம் மக்களின் அரசியல் வரலாற்றில், எம்.எச்.எம்.அஷ்ரப், ஏ.ஆர்.எம். மன்சூர் ஆகிய இரண்டு தலைவர்களும் மறக்க முடியாத மாமனிதர்கள். இதற்குக் காரணம் இருவரும் வௌ;வேறு அரசியல் போக்கினைக் கொண்டிருந்தார்கள் என்பது மட்டுமல்ல, இருவரும் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளாத அளவுக்கு அரசியல் முரண்பாட்டினைக் கொண்டிருந்தனர்.

இருந்தபோதும் தமது இனத்துக்கான சேவை என்ற விடயத்தில் சமரசமற்ற தனித்தனிப் பாதைகளில் பெருவீச்சுடன் செயற்பட்டார்கள். இவர்களுக்கு இடையிலான உறவு இலங்கை அரசியலில் விநோதம் நிறைந்தது. ஆனால், இந்த நகைமுரண்தான் அநேக தருணங்களில் மக்கள் சேவைக்கான இலக்கணமாகவும் அமைந்திருந்தது.

இதற்கு மிகப் பொருத்தமான உதாரணமாக தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தினைக் குறிப்பிடலாம். முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகரான அஷ்ரப், கிழக்கு முஸ்லிம் மக்களின் கல்விக் கண்ணைத் திறக்கும் பெருமுயற்சியாக அங்கு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தினை உருவாக்கி சமூகத்தின் கல்வி மேம்பாட்டுக்கான மிகப்பெரிய அடியைத் தொடக்கி வைத்தார். அதற்காக அந்தப் பல்கலைக்கழகம் அவருக்கு கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கி கௌரவித்துமுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியில் அங்கம் வகித்த முன்னாள் வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் ஏ.ஆர்.எம்.மன்சூரும் அதே மக்களுக்கு உதவி புரியவேண்டும் என்ற நோக்கத்துடன் பலமில்லியன் ரூபா பணத்தினை தனது செல்வாக்கின் மூலம் கிழக்குக்குக் கொண்டு வந்து அதே தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தினை மேலும் செழிப்புறச் செய்தார். அத்துடன் மத்திய கிழக்கின் தூதுவர் என்ற வாய்ப்பினைப் பயன்படுத்தியும் பெருமளவு நிதியைத் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அபிவிருத்திக்காகப் பெற்றுக் கொடுத்தார்.

மக்களுக்கான சேவை என்பது, அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது என்பதனை மிகச்சாதரணமாகச் செய்துகாட்டினார் ஏ.ஆர்.எம். மன்சூர். தனது அரசியல் வைரியின் பல்கலைக்கழகம் என்ற வரட்டுப் பிடிவாதத்துடனும் காழ்ப்புடனும் மக்களைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்தவில்லைஅவர். இதற்காகப் பிற்காலத்தில் அவருக்கும்கூட தென்கிழக்குப் பல்கலைக்கழகம் கௌரவ கலாநிதிப் பட்டம் கொடுத்துக் கௌரவித்தது.

அதாவது, அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட மக்கள் சேவையில் தங்களை தூய்மையாக இணைத்துக் கொண்ட தலைவர்களைமக்கள் மறப்பதுமில்லைƒ அதை மீறியவர்களை வரலாறு மன்னிப்பதுமில்லை.

முஸ்லிம் அரசியல்வாதிகள் தங்களது சமூகத்திற்காக மேற்கொண்ட இந்த மாதிரியான முன்னேற்றத்துக்குரிய நடவடிக்கைகள் இலங்கை வரலாற்றைப் பொறுத்தவரை எல்லாச் சமூகத்தினரும் ஆழமாக ஆய்வு செய்து படித்துக்கொள்ள வேண்டிய பாலபாடங்கள். அதற்காக அவர்கள் மேற்கொண்ட அரசியல் பரிசோதனைகள், முஸ்லிம் நாடுகளுடன் உருவாக்கிக் கொண்ட உறவுகள், அரசவழியில் அந்த உதவிகளை தமது மக்களை நோக்கிக் கொண்டு வருவதறற்கு வகுத்துக் கொண்ட வியூகங்கள் என்று எத்தனையோ நுண்ணிய புலங்களை மிகக் கவனமாகக் கையாண்டதன் விளைவாக இன்று முஸ்லிம் மக்களின் மேம்பாடும் அவர்கள் செறிந்து வாழும் பிரதேசங்களின் அபிவிருத்தியும் விசாலமாகி இருக்கின்றன.

போர் முடிவடைந்த பின்னரும்கூட வடக்கில் முஸ்லிம் மக்கள் மீள் குடியமர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டபோது மத்தியகிழக்கு நாடுகளிடமிருந்தும் ஏனைய முஸ்லிம் நாடுகளிலிருந்தும் விசேட பிரதிநிதிகள் நேரடியாக வடபகுதிக்கு விஜயம் செய்து அவர்களின் தேவைகளை அறிந்து தங்களது உதவிகளுக்கான பூர்வாங்க மதிப்பீடுகளை மேற்கொண்டு சென்றனர்.

இவ்வளவு புத்திபூர்வமான செயற்பாடுகளின் மூலம் தங்களது காரியங்களை முன்னகர்த்திச் செல்லும் இந்த அரசியல் செயல்வீரர்களை இதுவரை காலமும் நேரடியாக் கண்டும், கதைத்தும், புரிந்தும் வைத்துள்ள தமிழ் அரசியல் தலைவர்கள் தமிழர் பிரதேச அபிவிருத்தி என்ற விடயத்திலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மறுவாழ்வு என்ற அவசிய நிலையிலும் கற்றுக்கொண்ட பாடங்கள் என்ன?

பிரதேச சபை முதல் நாடாளுமன்றம் வரை சகலஅரசியல் பரப்புக்களிலும் ஏகபோக ஆணையை அள்ளித்தந்த மக்கள் தங்கள் விடிவுக்கான சிறிய வெளிச்சமாவது கிடைக்குமா என்று காத்துகாத்துக் கிடந்து களைத்து விட்டார்கள்.

அரசியல் தீர்வைப் பெற்றுத் தருவதற்குத்தான் ஆயிரம் தடைகள் உள்ளன என்றால் மறுவாழ்வு விடயத்திலும் அபிவிருத்தியிலும் ஏதாவது கிடைக்குமா என்று இன்று வரை கடைவிரித்து காத்திருக்கும் மக்களது எதிர்பார்ப்புகளும் நாளுக்குநாள் நரைவிழுந்து கொண்டே செல்கின்றன.

மேலே குறிப்பிட்ட அஷ்ரப் - மன்சூர் உறவு நிலைக்கு முற்றிலும் மாறான அரசியல் கலாசாரத்தைக் கட்டியெழுப்பி அதில் குளிர் காய்ந்து கொண்டிருக்கும் தமிழ் அரசியல் தலைமைகள் 'நீ கட்டிய மடத்தில் நான் படுக்க மாட்டேன்ƒ நீ வெட்டிய கிணற்றிலே நான் குளிக்க மாட்டேன்' - என்று வரட்டுப் பிடிவாதமும் முரட்டு சண்டைகளிலும் காலத்தைக் கடத்திக் கொண்டு மக்களை 'வத்தல்' போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைக்கப் பெற்ற பெரும் அங்கிகாரமும் அரசியல் ராஜ மகுடமும் எதற்கும் உதவாத வெம்பல் காய்போல நாளுக்கு நாள் அழிந்து கொண்டே போகிறது.

வடக்கு அரசியல் நிலத்தில் தமிழ்க் கூட்டமைப்பு ஓர் அரசாங்கம் போலவும் மாகாண சபை அதற்கு எதிர்க்கட்சி போலவும் தனிநபர் அரசியல் முரண்பாடுகளால் சீழ் பிடித்த புண் போலச் சிதைந்து கொண்டே செல்கிறது. சம்பந்தப் பட்டவர்கள் அனைவரும் தங்களுக்குள் பலம் பார்க்கும் வெட்டி நிலமாகவே நடப்பு அரசியல் களத்தைப்  பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆளுக்காள் கொம்பு சீவிவிட்டு இருப்புக்களை உறுதிப்படுத்திக் கொள்வதுதான் எப்போதும் நிலைக்கும் அரசியல் என்று திருப்தி கொள்கிறார்கள்.

மக்களின் எதிர்பார்ப்புகள் வாக்குச் சாவடிகளுக்குள் எவராலும் தீண்டப்படாமல் இன்னமும் குற்றுயிராகத்தான் கிடக்கின்றன. யுத்தம் முடிந்த பிறகு தமிழ் அரசியல் தலைமைகளை பல நாடுகளின் தலைவர்களும் தூதுவர்களும் சந்தித்துள்ளனர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வந்த போது அவரிடம் கேட்பதற்கு எதுவும் இல்லாதது போல திணறிப்போய் கடைசியில் 'தீர்வு விரைவாகக் கிடைக்க நீங்கள்தான் உதவி செய்ய வேண்டும்' என்று சொல்லி அனுப்பினார்கள் கூட்டமைப்பினர். இன்று தீர்வும் கிடைக்கவில்லைƒ உதவிகளும் கிடைக்காத நிலையில் மக்கள் கூட்டமைப்பை எட்டிப் பார்க்க, கூட்டமைப்பு ஜெனீவாவை நோக்கி விரல் காட்டிக் கொண்டு நிற்கிறது.

முஸ்லிம் நாடுகளுக்கு ஓயாமல் பயணம் செய்து செய்து தங்களது பிரதேச அபிவிருத்திக்காக உழைக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் ஒப்பிடுகையில், தமிழ் அரசியல்வாதிகள் அருகில் உள்ள இந்தியாவிடமிருந்து பெற்றுக் கொள்ளக் கூடியவைகளைப் பெற்றுக் கொள்வதற்கே இன்னமும் சுபநேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.  இதைப் போல வெளிநாட்டு தூதுவர்களிடம் கூட வெறுமனே கைலாகு கொடுத்துபடமெடுத்து ஊடகங்களுக்கு அனுப்புவதில் தீவிரமாக இருக்கிறார்களே தவிர, மக்களின் தேவைகளை எடுத்துக்கூறி அதற்கான உதவிகளை உடனடியாகத் தருவிப்பதற்காக இந்த நாடுகளின் தயார் நிலைகளைப் பயன்படுத்துவதற்கு கிஞ்சித்தும் அவசரப்படுவதாகத் தெரியவில்லை.

தமிழர் தரப்பினசை; சந்திப்பதற்கு வருகைதரும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளை முறையாகக் கையாளுவதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தரப்பில் ஓர் அரசியல் விவகாரக் குழு என்றும் அபிவிருத்தி விவகாரக் குழு என்றும் 'லொபி' செய்யக் கூடிய - வினைதிறன் கொண்ட குழுக்கள் இருந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி எந்த வடிவங்களையும் காணவில்லை. பிரதிநிதிகள் வருகிறார்கள்ƒ சம்மந்தன் தரப்பைச் சந்திக்கிறார்கள்ƒ பிறகு முதலமைச்சரைச் சந்திக்க யாழ்ப்பாணம் போய்விட்டு கொழும்புக்குத் திரும்பி விடுகிறார்கள்.  கடந்த ஏழு வருடங்களாக இதுதான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வந்தவர்கள் என்ன கேட்டார்கள்? அதற்கு இவர்கள் என்ன சொன்னார்கள்? அதற்கு வந்தவர்கள் அளித்த உறுதி மொழி என்ன? கொடுத்த உறுதி மொழியின் பிரகாரம் செய்த காரியங்கள் என்ன? அதனால் ஏதாவது முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றதா? அடுத்த தடைவ வரும் போது இதுபற்றி இவர்கள் ஏதாவது கேட்டார்களா? இன்னமும் எந்த முன்னேற்றமும் ஏற்படாத விடயங்களில் தொடர்ந்து மௌனம் காண்பிக்கும் இந்தத் தரப்புக்களைத் தொடர்ந்து சந்தித்துக் கொண்டிருப்பதில் என்ன பயன்?

இவ்வாறு இனம் சார்ந்த எந்தச் சுயமதிப்பீடும் இல்லாமல் - சமூகத்தின் உடனடித் தேவைகள் குறித்த எந்த அரசியல் பிரக்ஞையும் இல்லாமல் - எழுந்தமானமாக ஏழு வருடங்கள் போய்விட்டன. வெட்டவெளியில் விழுந்து கிடக்கும் சருகைப் போல தமிழர் விவகாரம் அவ்வப்போது மூசிவீசும் காற்றுக்கு எழுந்து பறந்து விட்டு மீண்டும் கீழே விழுந்து விடுகிறது.

போர் குதறிச் சென்ற வன்னிப் பெருநிலத்தில் ஊனமான ஓர் இனம் இன்னமும் கண்ணி வெடிகளுக்குள் காய்ந்து கொண்டும் போர்ப் புண்களால் வருந்திக் கொண்டும் உயிர்ப் பிணங்களான பல்லாயிரக் கணக்கானவர்கள் தொடர்ந்து அழுந்திக் கொண்டும் கிடக்க – அவர்களின் எண்ணிக்கை கூடத் தெரியாத 'மக்களின் பிரநிதிகள்' அமைதி காக்குமாறு கட்டளையிட்டவாறு திரிகிறார்கள். அண்மையில் வன்னியில் ஒருவருடன் பேசும் போது அவர் ஒரு புதிரான கேள்வியைக் கேட்டார். 'ஆட்சியை இழந்த மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் அதனைக் கைப்பற்றுவதற்காக வெறிகொண்டு அலைகிறார்;. தன்னுடைய எழுபதாவது வயதிலும் பழைய நிலையை மீண்டும் அடைய வேண்டும் என்று பாதயாத்திரை செய்கிறார். சிங்கள தேசத்தின் பிடரியைப் பிடித்து உலுப்பி தனக்குப் பின்னால் மீண்டும் ஒரு மக்கள் சேனையைத் திரட்டுகிறார்.

'ஆனால், நாங்கள்? எங்கட இனத்தின் அடிப்படைகளையே இழந்து போயிருக்கிறம். ஆட்சியை மாத்திரமா சகலதையும் இழந்து இடுகாட்டில் கிடக்கிறம். ஆனால், எங்கட பிரதிநிதிகள் எண்டு சொல்லுற ஆக்களுக்கு இதுகளைப் பார்த்து ஏதாவது உணர்ச்சி வருதா எண்டு பாருங்கோ. மஹிந்த தன்னுடைய அரசியல் வெற்றிக்காக நடக்கிறார். பாதயாத்திரை போகிறார். தமிழ்த் தலைவர்கள் அப்படி நடக்க முடியாதவர்களாக இருக்கலாம். இருந்தாவது ஒரு போராட்டம் செய்யலாமே, அதாவது ஏதாவதோர் இடத்தில் உண்ணா விரதமிருந்து போராடலாமே. ஏன் அண்ணை இவங்களால மட்டும் அது முடியுதில்ல'

அவரைப் போலவே அந்த பதில் என்னிடமும் இருக்கவில்லை.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X