2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

காட்சி கெடுத்திடல்

Editorial   / 2019 நவம்பர் 11 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

​வேண்டாத கற்பனை செய்துபார்த்தால், நமக்குள் நாமே, நமட்டுச்சிரிப்பு சிரித்துக்கொள்ள வேண்டியதுதான், தனிமையில் இருக்கும் போது, பழைய ஞாபகங்களைக் கிளறிப்பார்த்தால் மனதுக்குள்ளே சிரிப்பு வரும், பொதுப் போக்குவரத்தில், பஸ்ஸின் கூரையை முட்டுமளவுக்கு வளர்ந்திருக்கும் ஒருவரும், மேல் கைப்பிடியை பிடிக்கமுடியாமல் நின்றுகொண்டு பயணிக்கும் பயணியொருவரின் தவிப்பையும் பார்த்திருப்போம். 

அதேபோல, நமது பற்கள், கை, கால்களைப் போல, மேலும், கீழும் வளர்ந்திருந்தால், மார்பைப் போல கண்கள் பெருந்திருந்தால், வேறேதாவது உறுப்பொன்று முகத்தில் முளைத்துவிட்டால், பாம்புவிரலைப்போல (நடுவிரல்) மூக்கு இருந்தால். இவையெல்லாம் வேண்டாத கற்பனைகள். ஆனால், எமது ஐம்புலன்களான கண்,காது,மூக்கு, வாய், மெய் இவையாவும் அழகானவை.  

அவை ஒழுங்கானவை, ஆனால், நாம்தான், அவ்வப்போது, அவற்றுக்கு இடையூறுவிளைவித்து, உறுப்புகளுக்குத் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருக்கின்றோம் அல்லது தொந்தரவை ஏற்படுத்தி விடுகின்றனர்.  

புதுடெல்லியை ஊடறுத்துவீசும் காற்று, இலங்கையை நோக்கிய திசையில் வீசியமையால், கொழும்பில் தூசுமாசு ஏற்பட்டது. எனினும், அது காற்றுமாசாக மாறுவதற்குள், காற்றின் திசை மாறிவிட்டதால், கொழும்பில் வாழ்வோர் எல்லாம் ஓரளவுக்குத் தப்பித்துக்கொண்டனர் என்றுதான் சொல்லவேண்டும்.  

காற்றுமாசிலிருந்து நாமெல்லாம் தப்பித்துக்கொண்டாலும், “காட்சி மாசு” சிக்கித்தவிக்கின்றோம் என்பது எத்தனைப்பேருக்கு தெரியுமென தெரியாது. இது, தொடருமென்பதில் மாற்றுக்கருத்தில்லை. இதன்போதுதான், மூளையில் ஏதோவோர் இடத்தில் நெருடிக்கொண்டிருந்த மகா கவி பாரதியாரின் கவியில், “கண்கள் இரண்டினில் ஒன்றைக் குத்திக் காட்சி கெடுத்திடலாமோ?” என்ற வரியை, இக்காலம் ஞாபகத்துக்கு இழுத்துச் சென்றுவிட்டது. 

என்னதான் வெறுப்பேற்றும் அளவுக்கு மழை பெய்துகொண்டிருந்தாலும் அதில் நனைகையில் ஏற்படும் ஜில் என்றோர் உள்ளுணர்வை ஒவ்வொருவரும் அனுபவிக்க வேண்டும். ஒருசில நேரங்களில் சுழற்றியடிக்கும் காற்று, குடையைத் தலைகீழாக்கி, வர்ணக்காட்சிகளைத் தரும். இவையெல்லாம் பார்ப்பதற்கு அழகு. 

வீதிகளில் வெள்ளநீர் ஆறுகளைப் போல சலசலத்து ஓடும், வாகனங்கள் தத்தித் தத்தித் தவழும், மனக்கண்களின் வேண்டிய உருவங்களுக்குக் கற்பனை செய்து நீர்த்துளிகளை இரசிக்கலாம். இவை வேண்டாத கற்பனைகள் அல்ல. ஆனால், தற்போதெல்லாம் இந்தக் காட்சிகளைக் கெடுக்குமளவுக்கு விளம்பரங்கள், விளம்பரப் பலகைகள், பதாகைகள் பிரமாண்டமாகக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 

இது தேர்தல் திருவிழா என்பதால், மூலைமுடுக்குகள் எல்லாம், பல முகங்களைக் கொண்ட வர்ணச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இதனால், வர்த்தக நோக்கத்துடன் ஒட்டப்படவேண்டிய சுவரொட்டிகள் பல ஓடி ஒளிந்துகொண்டுள்ளன. எப்போதுமே இடம்பிடித்துக்கொண்டு, சுவர்களை சொற சொறப்பாக்கிக்கொண்டிருக்கும் தனியார் கல்வி நிறுவனங்களின் பிரசார விளம்பரங்களைக் காணக்கிடைப்பதில்லை. 

ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வகையிலான இரசனைகள் இருக்கும். இவை, அவரவர் சிந்தனையில் உதிக்கும். ஆனால், தேர்தல் கால விளம்பரங்கள், “காட்சியை மாசுபடுத்துகின்றன” எனக் கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரீட் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுமீதான தீர்ப்பு, நவம்பர் 1ஆம் திகதி வழங்கப்பட்டது. 

அதில், காட்சி மாசுவை கட்டுப்படுத்துவதற்கான ஒழுங்குவிதிகளை அமுல்படுத்தவேண்டுமாயின், அந்த ஒழுங்குவிதிகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலில், ஜனாதிபதி கைச்சாத்திடவேண்டுமென, நீதிமன்றத்தின் கவனத்துக்கு சட்டமா அதிபர், கொண்டுவந்தார்.  

இந்த ரிட் மனுவை, சுற்றுச்சூழல் நீதி மய்யம் தாக்கல் செய்திருந்தது. நவம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு, சுவரொட்டிகள், பதாகைகள், பாரியளவிலான விளம்பரங்களைக் காட்சிப்படுத்தும் போது ஏற்படும், “காட்சி மாசு” க்கு எதிராகவும், காட்சி மாசு ஒழுங்குவிதிகளுக்கு அமைய, செயற்படுமாறு பொலிஸ்மா அதிபருக்குக் கட்டையிடுமாறு அதில் கோரப்பட்டிருந்தது.  

ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதியன்று, மன்றுக்கு வந்த அந்த ரீட் மனுவில் பிரதிவாதிகளாக, மத்திய சுற்றாடல் அதிகார சபை, முன்னாள் பொலிஸ்மா அதிபரான ஜயந்த விக்ரமரத்ன, சட்டமா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டிருந்தனர். 

இதுவொன்றும் புதுமையான வழக்கல்ல. மேற்கத்தேய நாடுகளில் இவ்வாறான வழக்குகள் பல தொடுக்கப்பட்டுள்ளன. இலங்கையிலும் முன்னர் இவ்வாறான வழக்குத் தொடுக்கப்பட்டு, ஒழுங்கு விதிகளை அமுல்படுத்தவேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. எனினும், ஒழுங்குவிதிகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படாமையால், அது தொடர்கிறது. 

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர், நாடாளுமன்றத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல், அதற்குப் பின்னர், உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களிலாவது அவற்றை கடைப்பிடிக்கப்படுமா? என்பது, எமது நாட்டின் சட்டம்தான் பதில்கூறும்.  

எனினும், இன்று பலர் இது குறித்தான தெளிவின்றிக் காணப்படுகின்றனர். சூழல் மாசு, வளி மாசு, ஒலி மாசு பற்றித்தானே அறிந்துள்ளோம். அது என்ன “காட்சி மாசு”எனப் பலர் கேட்பர். காரணம், நம்மில் பலர் இது பற்றித் தேடிப் பார்த்ததில்லை. எனினும், அறிந்தோ அறியாமலோ காட்சி மாசுக்கு முகங்கொடுத்திருப்போம். 

உதாரணத்துக்கு கடற்கரையிலிருந்து சுமார் 100 மீற்றர் தூரத்தில் இருக்கும் வீடொன்றில் வசிக்கும் ஒருவருக்கு சூரிய உதயக் காட்சியின் தரிசனம் ஒவ்வொரு நாளும் கிட்டும். சிறிது காலத்தின் பின்னர், அவ்வீட்டுக்கும் கடற்கரைக்கும் இடையே சுமார் 50 மீற்றர் தூரத்தில் புதிதாக வானோங்கும் கட்டடமொன்று கட்டப்படும் போது, குறித்த நபர் கண்டுவந்த சூரிய உதயக் காட்சி தென்படாது. பதிலாக இடையே வந்த கட்டடமே தென்படும்.  

இவ்வாறே, தனது வீட்டுக்கு அருகே கோவில் இருந்தமையால் காலையில் தினமும் எழும்பி, சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்திருந்த கோவில் கோபுரத்தை இரசித்து வந்திருந்ததாகவும் இடையே கட்டப்பட்ட வர்த்தகக் கட்டடமொன்றால் தற்போது கோபுரத் தரிசனம் இல்லாமல் போய்விட்டதாக, நெருங்கிய நண்பியொருவரும் புலம்பியதைக் கேட்டேன். இதுவே காட்சி மாசு எனப்படுகின்றது. 

வரைவிலக்கணப்படுத்திக் குறிப்பிடுவதாயின், ஒருவரின் காட்சிச் சுதந்திரத்துக்கு இடையூறு ஏற்படுத்துதை “காட்சி மாசு” எனக் குறிப்பிடலாம்.  

இது கண்களுடன் தொடர்புபட்ட பார்வையைக் குறித்து நிற்கிறது. வாய் உறுப்புடன் தொடர்புபட்ட கருத்துச் சுதந்திரத்துக்கு வழங்கும் ஓரளவு முக்கியத்துவத்திலும் காட்சிச் சுதந்திரத்துக்கு வழங்குவதில் பெரிதாக யாரும் இங்கு அலட்டிக்கொள்வதில்லை. 

எனினும், நாம் காணும் காட்சிப் பின்னணிக்கு இடையூறு ஏற்படுத்தப்படுகின்ற பல காரணிகளைக் காணலாம். அதாவது, மேற்படி விளம்பரப் பலகைகள், பதாகைகள், வானோங்கும் கட்டடங்கள், தொலைத்தொடர்புக் கோபுரங்கள், மின்சார வயர்கள், தொலைபேசி வயர்கள் உள்ளிட்ட பல காட்சி மாசுக்குக் காரணங்களாக உள்ளன. 

குப்பைகூழங்கள், வாகனங்களின் அதி நெருக்கடிகள், அதிகரித்த மக்கள் கூட்டங்களும் காட்சி மாசுக்குக் காரணங்களாக உள்ளனவெனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இவ்வாறான விடயங்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், கண் பாதிப்புக்குள்ளாவதுடன், மன உளைச்சல்களுக்கும் மக்கள் உள்ளாகின்றனர் என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். தவிர, இதனால் உயிர் ஆபத்துகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.  

தமிழ் நாட்டுக்கு வருகை தந்த  பிரதமர் மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங் உள்ளிட்டோரை வரவேற்கும் முகமாக பதாகைகள் வைக்கத் திட்டமிடப்பட்டன. எனினும், இந்த விவகாரம் நீதிமன்றத்துக்கு வந்தமையால், “பெரியளவிலான பதாகைகள் அல்லாமல் சிறிய அளவிலான பேனர்களை வைத்துக்கொள்ளலாம்” என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

இவ்வாறே, இலங்கையில், சுற்றுச்சூழல் நீதி மய்யத்தால், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த “காட்சி மாசு”தொடர்பிலான மனு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போது, “காட்சி மாசு” தொடர்பிலான ஒழுங்கு விதிகள், எதிர்வரும் தேர்தலில் அமுல்படுத்தப்படுமென, சட்டமா அதிபர், மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அறிவித்தார்.  

“காட்சி மாசு ஒழுங்குவிதிகளை அமுல்படுத்த வேண்டுமாயின் ஜனாதிபதி கையொப்பமிட வேண்டும். அந்தச் செயற்பாடுகள் நிறைவடைந்ததன் பின்னர், ஒழுங்குவிதிகள் அமுல்படுத்தப்படும்” என, சட்டத்தரணி அனுஷா சமரநாயக்க, நீதிமன்றில் இதன்போது தெரிவித்தார்.  

எது எவ்வாறிருப்பினும், ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் 05 நாள்களே எஞ்சியுள்ள நிலையில், தேர்தல் நடவடிக்கைகள் காட்சிகளை மாசுபடுத்துகின்றனவா அல்லது மாசுபடுத்தவில்லையா என்பதை நாம் காணக்கூடியதாக இருக்கும்.  

தற்போது டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட வர்த்தக விளம்பரங்கள் பலவும் நாம் அன்றாடம் பயணிக்கும் வீதிகளை நிறைத்துள்ளன. இதனால் அதி வெளிச்சம் கண்ணில் பட்டு, கண் பாதிக்கப்படுவதுடன், விபத்துகளும் அதிகரித்துள்ளன.  

நாட்டின் பல்வேறு பாகங்களிலும், கண் நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக, தேசிய கண் வைத்தியசாலையின் வைத்தியர் பிரசாத் கொலம்பகே அண்மையில் தெரிவித்திருந்தார். தேசிய கண் வைத்தியசாலையில், கண் நோய்க்கு சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.  

கண் சிவப்பு நிறமாகுதல், கண்ணில் வலி ஏற்படுதல், கண்ணீர் வருதல் முதலான நிலைமைகள், இந்த கண்நோயின் தன்மைகளாகும் என்றும் இதுகுறித்து பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். 

காட்சி மாசு தொடர்பில் மேற்கத்தேய நாடுகள் மிகவும் விழிப்பாக உள்ளனவென்றே கூறவேண்டும். 2006ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம், பிரேசிலில் உள்ள நகரமொன்றில், சுத்தமான நகரத்துக்கான சட்டம் அமுல்படுத்தப்பட்டு, அதன் கீழ், நகர வெளிப்புறங்களில் கடைகளில், போக்குவரத்துகளில் காட்சிப்படுத்தப்படும் அனைத்து விளம்பரங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது.  

ஐக்கிய அமெரிக்காவில், காட்சி மாசுபாட்டைத் தவிர்ப்பதற்காக, பல்வேறு முயற்சிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. 1965ஆம் ஆண்டின் நெடுஞ்சாலை அழகுபடுத்தும் சட்டத்தின் கீழ், மாநிலங்களுக்கு இடையேயான நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட பெரும் வீதிகளில், விளம்பரப் பலகைகளை வைப்பது கட்டுப்படுத்தப்பட்டது. இதனால் விபத்துகள், உயிரழப்புகளும் தடுக்கப்பட்டன.  

இவ்வாறான சட்டங்கள், இந்தியா உட்பட நம் நாட்டிலும் நடைமுறைக்கு வந்து, கடுமைப்படுத்தப்படுமானால் இங்கும் உயிரிழப்புகள் தடுக்கப்படுவதுடன், காட்சி மாசுபாட்டைத் தவிர்க்கலாம். எனினும், இது எவ்வளவுக்கு சாத்தியமாகுமென்பது கேள்விக்குறியே.  

காரணம், காதுகுத்திலிருந்து, திருமணம், சினிமா என எல்லாற்றுக்குமே பாரியளவில் பதாகைகள் வைக்கும் தமிழ்நாட்டுக் கலாசாரமும் தற்போது நாம் காணும் அலங்கரித்து நிற்கும் தேர்தல் பதாகைகளும் நீண்டுகொண்டேதான் செல்கின்றன.  

ஆனால், அநாவசியமான காட்சிக் கெடுதலைத் தவிர்த்து, இயற்கையுடன் ஒன்றித்திருந்த மனித இனமாக நாம் வாழ முயற்சிப்போமானால், பல அனர்த்தங்களிலிருந்து தவிர்ந்து வாழலாம்.      


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .