2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

களையிழந்த ‘லோக்பால்’ பிரசாரம்?

எம். காசிநாதன்   / 2020 ஜனவரி 13 , மு.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியத் தேர்தல்க் களத்தை நிர்ணயித்த ‘லோக்பால்’ அமைப்பு பற்றி, இப்போது யாருமே பெரிய அளவில் பேசாமல் இருப்பது, ஊழல் எதிர்ப்பாளர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.   
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்துக்கு எதிரான, மிகப்பெரிய பிரசார ஆயுதமாக மாறியிருந்த லோக்பால், அண்ணா ஹசாரே போன்றோரின் போராட்டக் களமாகவே மாறியது.   

தற்போது, புதுச்சேரி ஆளுநராக இருக்கும் கிரன்பேடி, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, டெல்லி முதலமைச்சராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர், ஊழல் ஒழிப்புப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவர்கள் ஆவார்.   

இன்றைக்கு ஊழலை ஒழிக்கும் லோக்பால் அமைப்பு அமைந்திருக்கிறது என்றால், அதற்கு இவர்களின் போராட்டம் மிக முக்கிய காரணமாகும். இதே பிரசாரத்தை முன் வைத்ததும் ஆதரித்ததுமான பாரதிய ஜனதாக் கட்சி தலைமையிலான அரசாங்கம், மத்தியில் அமைந்த பிறகும், குறிப்பாக பிரதமர் மோடியின் முதல் முறை ஆட்சியின் கடைசிக் காலத்தில்தான், லோக்பால் அமைப்பு உருவாக்கப்பட்டது.  

லோக்பால் அமைப்பின் தலைவராக, ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி பி.சி.கோஸ் நியமிக்கப்பட்டார். மார்ச் 2019இல் அவர் பதவியேற்றுக் கொண்டார். அதே மாதத்தில் லோக்பால் அமைப்பில், நான்கு நீதித்துறை உறுப்பினர்களும் நீதித்துறையைச் சாராத மீதி நான்கு உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டார்கள். 

ஏறக்குறைய ஒரு வருடத்தைத் தொடப் போகின்ற இந்த லோக்பால் அமைப்பின் முன்பு, முக்கிய அரசியல்வாதிகள் மீதான புகார்கள் ஏதும் பெறப்பட்டிருப்பதற்கான அறிகுறிகள் இல்லை. 
லோக்பால் அமைப்பின் இணையத் தளத்தில் பார்த்தால், ‘செப்டம்பர் 30, 2019 வரை 1,065 புகார்கள் பெறப்பட்டதாகவும் அதில், 1,000 புகார்கள் முடித்து வைக்கப்பட்டதாகவும்’ தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

இப்படி முடித்து வைக்கப்பட்ட புகார்களில், அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், உயரதிகாரிகள் குறித்த புகார்கள் இருக்கிறதா என்ற விவரங்கள் இல்லை. 

அதேபோல், மீதியுள்ள 65 புகார்கள் யார் மீது கொடுக்கப்பட்டவை, அவற்றின் விசாரணைகள் எந்த நிலையில் உள்ளன என்ற விவரங்களும் இடம்பெறவில்லை. 

சுதந்திர இந்தியாவில், முதன் முதலில் உருவாக்கப்பட்டுள்ள இந்த லோக்பால் அமைப்பை, ‘ஊழல் ஒழிப்புக்கு’ப் பயன்படுத்த, பிரதான எதிர்க்கட்சிகள் ஏதேனும் முன் வந்துள்ளனவா போன்ற விவரங்கள் வெளியாகவில்லை. 

ஆனால், ஊழல் புகார்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என்று, உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. லோக்பால் அமைப்பின் முன்பு, இந்த ஊழல் புகார்களைக் கொண்டு செல்ல, எந்த அரசியல் கட்சியும் குறிப்பாக, இந்த அமைப்பை உருவாக்குவதற்குச் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றிய காங்கிரஸ் கட்சி கூட, முன்வரவில்லை என்பது ஆச்சரியம் அளிக்கிறது.  

 எல்லாவற்றுக்கும் மேல், ஆச்சரியமளிக்கும் இன்னொரு விடயம், இந்த லோக்பால் அமைப்பின் முன்பு, எப்படிப் புகார் அளிக்க வேண்டும் என்பதுதான். ஒரு வரையறுக்கப்பட்ட படிவத்தில், ஊழல் புகார்களைக் கொடுக்க வேண்டும் என்பது, இந்த அமைப்பு வெளியிட்டுள்ள மிக முக்கிய நிபந்தனையாகும். 

ஆனால், அந்தப் படிவம் குறித்த விவரம் எதுவும் இதுவரை இணையதளத்தில் வெளியிடப்படவில்லை. ஊழலை ஒழிக்க அமைக்கப்பட்ட அமைப்பு, புகார் படிவத்தை, இதுவரை ஏன் வெளியிடவில்லை? இதுவரை, அரசியல் கட்சிகளோ, ஊழல் எதிர்ப்பாளர்களோ ஏன் கேள்வி எழுப்பவில்லை? 

இதற்கான போராட்டத்தில் ஈடுபட்டு, வெற்றி கண்ட சமூக நலப் போராளி அண்ணா ஹசாரேயும் இது பற்றி ஏன் கேள்வி கேட்கவில்லை? எல்லாம் விடை தெரியாத கேள்விகளாகவே தொடருகின்றன.

 புகார் படிவத்தை வெளியிடாமலேயே, 1,065 புகார்களை லோக்பால் அமைப்பு பெற்றிருக்கிறது என்றால், முறைப்படியான படிவம் வெளியிடப்பட்டிருந்தால், ஊழல் ஒழிப்புப் போராட்டத்தில், லோக்பால் அமைப்பு, இன்னும் வலுவான சக்தியாக நிலைபெற்றிருக்க முடியும்.  

இதேபோன்று, தேர்தல் களத்தைத் தீர்மானித்த இன்னோர் அமைப்பு, சி.ஏ.ஜி அமைப்பு ஆகும். அரசமைப்பின் கீழ் உருவாக்கப்பட்ட, மத்திய கணக்கு தணிக்கை அமைப்பு இதுவாகும்.

முதன் முதலில்,  உத்தேசக் கணக்கின் மூலம் 1.76 இலட்சம் அலைக்கற்றை ஊழல் என்று கூறி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் ‘நம்பகத்தன்மை’ இழப்புக்கும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அஸ்தமனத்துக்கும் தொடக்கவுரை எழுதியது இந்த அமைப்புத்தான்.

சி.ஏ.ஜி பல காலகட்டங்களில், ஊழல்களைச் சுட்டிக்காட்டி, முறைகேடுகளைச் சுட்டிக்காட்டி, அரசியல் பிரசாரத்துக்குத் தீனி போட்டது. என்றாலும், இந்திய அரசியலைத் திருப்பிப் போட்ட, இதனுடைய இரண்டு அறிக்கைகள், இன்றைக்கும் எந்தத் தலைமுறை அரசியல்வாதிகளும் மறக்க முடியாது. 

முதலில், போபர்ஸ் பீரங்கி ஊழல் வழக்கு, ராஜீவ் காந்தியின் அரசாங்கத்துக்கு முடிவுரை எழுதியது. 

வி.பி.சிங் போன்ற சமூக நீதி காக்கும் பிரதமர் ஒருவர், இந்தியாவுக்குக் கிடைக்க, இந்த போபர்ஸ் பீரங்கி வழக்கில், சி.ஏ.ஜி கொடுத்த அறிக்கை மிக முக்கிய பங்கு வகித்தது. 

அடுத்ததாக, 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு, காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு அடியோடு குறைந்து போவதற்கு, இந்த சி.ஏ.ஜி. அறிக்கை காரணமாக அமைந்தது. அதாவது, அலைக்கற்றை ஊழல் வழக்கில், (2-ஜி ஊழல் வழக்கு) கற்பனைக் கணக்கை சுட்டிக்காட்டி, இத்தனை இலட்சம் கோடி ஊழல் என்று அறிக்கை வெளியிட்டது. 

அதேபோல், நிலக்கரி பேர ஊழல் பற்றியும் பல இலட்சம் கோடி நஷ்டம் என்று அறிக்கை வெளியிட்டது. 

இந்த அறிக்கைகள், பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கின் ஆட்சிக்கு முடிவு கட்டியது.

 சி.ஏ.ஜி அமைப்பு அறிக்கை வெளியிட, “லோக்பால் அமைப்பு வேண்டும்” என்று எதிர்க்கட்சிகள் போராட, ஊழல் வழக்கைத் தினந்தோறும் உச்சநீதிமன்றம் விசாரித்திட, 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் களம், பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குச் சாதகமாக அமைந்தது. 

‘நம்பிக்கையான, நேர்மையான தலைவர்’நாட்டுக்குத் தேவை’ என்று, மக்களின் ஏக்கத்தைப் பயன்படுத்திய அந்தக் கூட்டணி, பிரதமராக நரேந்திர மோடியை முன்னிறுத்தியது; வெற்றியும் கண்டது. 

அந்த வெற்றி, இரண்டாவது முறையும் தொடருகிறது. ஆனால், அரசியல் களத்தைப் புரட்டிப் போட்ட அறிக்கைகளை வெளியிட்ட, இந்த சி.ஏ.ஜி  அமைப்பு, இப்போது அவ்வாறு, ‘கற்பனைக் கணக்குகள்’ எதையும் வெளியிட்டு, அறிக்கை அளிக்கவில்லை. 

அதுபோன்ற, இலட்சம் கோடிக் கணக்கில் நட்டம் என்றும், அறிக்கை ஏதும் வெளிவரவில்லை. ஆகவே, இந்திய அரசியல் களத்தைத் தீர்மானித்த லோக்பால் அமைப்பும், சி.ஏ.ஜி அமைப்பும் தற்போது அமைதியாக இருக்கின்றன.  

இது, இப்போது நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கமே, ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபடுகிறது என்ற எண்ணவோட்டத்தின் வெளிப்பாடாக இருக்கும் என்றே நம்புவதற்கு இடமிருக்கிறது. 

முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் கைது, ‘அகஸ்டாலேன்ட்’ விமானப் பேர வழக்கில் கைது என்று, பல நிகழ்வுகள் இதற்கு அடையாளங்களாக இருக்கின்றன.  அதே நேரத்தில், அப்போது ஊழல் எதிர்ப்புக்காகப் போராடிய அண்ணா ஹசாரே அமைதியாகி விட்டார். 

அரவிந்த் கெஜ்ரிவால் புதுடெல்லி முதலமைச்சராகி விட்டார். .இ கிரன்பேடி புதுச்சேரி ஆளுநராகி விட்டார். ஆகவே, இவர்களின் ஊழல் எதிர்ப்புப் போராட்டங்கள், அமைதியாகி விட்டன. 

இவை ஒருபுறமிருந்தாலும், எதிர்க்கட்சிகள் மிகப்பெரிய அளவில் முன்னெடுத்துச் சென்ற தேர்தலில் பிரசாரம் செய்த, ‘ரபேல்’ போர் விமான ஊழல்க் குற்றச்சாட்டை உச்சநீதிமன்றம் ஒரு முறைக்கு, இரு முறை நிராகரித்து விட்டது. 

ஆகவே, ஊழல் போராட்டங்களின் முனை மழுங்கிப் போனதற்கு, லோக்பால் அமைப்பு இன்னனும், புகார் படிவம் வெளியிடாதது காரணமா? 

ஆதாரபூர்வமாக, எந்த ஊழல் புகாரையும் இப்போது எதிர்க்கட்சிகளால் முன் வைக்க முடியவில்லை என்பதே, முக்கியக் காரணம் என்று யூகிக்க முடிகிறது.  

ஆகவே, பொருளாதாரப் பின்னடைவு என்ற பிரசாரத்தை, எதிர்க்கட்சிகள் முன்னெடுத்துச் சென்றாலும், ஊழல் பிரசாரத்தின் மீது இருந்த கவர்ச்சி, இந்தப் பொருளாதாரம் சார்ந்த பிரசாரத்தில் இல்லை. 

மஹராஷ்டிரா, ஹரியானா, ஜார்கன்ட் போன்ற மாநிலங்களில் பா.ஜ.க கூட்டணியை எதிர்த்து, காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வெற்றி பெற்றிருந்தாலும், அது தனிப்பெரும் வெற்றியாக இல்லாமல் போனதற்கு, மிக முக்கியக் காரணம், நாடு முழுவதும் அறிந்த தலைவரான பிரதமர் நரேந்திர மோடி மீது, எவ்வித ஊழல் குற்றச்சாட்டுகளையும் ஆதாரபூர்வமாக எடுத்து வைக்க முடியாததே ஆகும்.

இதே தாக்கம், பெப்ரவரி மாதத்தில் நடக்கப் போகும், டெல்லி சட்டமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும். ஏனென்றால், ஊழல் பிரசாரத்துக்கும் இந்துத்துவா பிரசாரத்துக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான பிரசாரத்துக்கும் இருக்கும் மவுசு, இந்திய அரசியல் களத்தில், பொருளாதாரம் சார்ந்த தோல்விகள் மீதான பிரசாரத்துக்கு  இல்லை என்பதை, இந்திய வாக்காளர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். 

ஆனால், தேர்தலில் நிற்கும் கட்சிகள், குறிப்பாக ஆளுங்கட்சிகளுக்கு எதிராக உள்ள எதிர்க்கட்சிகள், புரிந்து கொள்வதில் இன்னும் தயக்கம் இருக்கிறது என்பதே, இன்றைய நிலைமை.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--