2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

குழம்பும் குட்டைகள்

Thipaan   / 2016 ஜூலை 18 , பி.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

முகம்மது தம்பி மரைக்கார்

குட்டைகளைக் கிளறும் வரை, அதன் நாற்றம் வெளியே வருவதில்லை. நாற்றத்துக்குப் பயந்தவர்கள் குட்டைகளைக் கிளறுவதில்லை. நாற்றமெடுக்கும் என்று தெரியாமலேயே, குட்டைகளை சிலர் கிளறி விடுகின்றனர். நாற்றமெடுக்க வேண்டும் என்பதற்காகவும் சிலர் குட்டைகளை கிளறுவதுண்டு. குட்டைகளின் லாயக்கு என்னவென்று, அவை கிளறப்படும் வரை நமக்குத் தெரிவதில்லை.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுடைய குட்டைகளில் ஒன்றினை, அந்தக் கட்சியின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் மீண்டும் ஒரு தடவை கிளறி விட்டிருக்கிறார். காங்கிரஸின் சொத்துக்கள் மற்றும் வருமானங்கள் தொடர்பில் கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பி, கட்சியின் தலைவருக்கு தவிசாளர் பஷீர் சேகுதாவூத் எழுதிய கடிதமொன்று கடந்த வாரம் ஊடகங்களில் வெளியாகியிருந்தது. காங்கிரஸின் நிதி மற்றும் சொத்து விவகாரங்களில், அந்தக் கட்சியின் தலைமையானது வெளிப்படைத் தன்மையுடனும் நேர்மையாகவும் நடக்கவில்லை என்கிற சந்தேகத்தினை பஷீருடைய கடிதம் படிப்பவர்களிடத்தில் ஏற்படுத்தி விட்டுள்ளது.

காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் அந்தக் கட்சியின் செயலாளர் எம்.ரி. ஹசன் அலி மற்றும் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் ஆகியோருக்குமிடையில் பிரச்சினைகள் வெடிக்கத் தொடங்கிய பின்னர், கட்சித் தலைவரின் பல்வேறு இரகசியங்கள் அம்பலமாகத் தொடங்கியுள்ளன. அதிலும் அண்மைக் காலமாக கட்சிக்காரர்களுக்கு பஷீர் எழுதும் கடிதங்களும் ஊடகங்களில் விடுக்கின்ற அறிக்கைகளும் பல்வேறு அதிர்வுகளை ஏற்படுத்தி வருகின்றன. காங்கிரஸின் சொத்துக்கள் மற்றும் வருமானங்கள் தொடர்பில் தனக்குள்ள சந்தேகங்களை தெளிவுபடுத்துமாறு கோரி, கட்சித் தலைவர் ஹக்கீமுக்கு பஷீர் எழுதிய கடிதம் அவற்றில் ஒன்றாகும்.

சொத்து மோசடி

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான - பல கோடி ரூபாய் பெறுமதியுள்ள 'தாறுஸ்ஸலாம்'கட்டடத்தின் உரிமை, கட்சிக்காகக் கொள்வனவு செய்யப்பட்ட - தாறுஸ்ஸலாமுக்கு  அருகிலுள்ள காணி, அதில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மாடிக்கட்டடம் ஆகியவற்றின் உரிமைகள், இவற்றிலிருந்து கிடைக்கும் வருமானம் போன்றவை பற்றியும் முஸ்லிம் காங்கிரஸின் சொத்துக்களை நிர்வகிப்பதற்காக உருவாக்கப்பட்ட நம்பிக்கை நிதியம், அதன் தற்போதைய நிலைவரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும், மு.காங்கிரஸின் தலைவருக்கு எழுதியுள்ள தனது கடிதத்தில் பஷீர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜுன் மாதம் ஆறாம் திகதி எழுதப்பட்ட அந்தக் கடிதமானது ஐந்து பக்கங்களைக் கொண்டதாகும். அக்கடிதத்தில், மேற்சொன்ன விடயங்கள் தொடர்பில் மு.கா தலைவரிடம் 12 கேள்விகளை பஷீர் தொடுத்துள்ளார். தனது கேள்விகளுக்குரிய பதில்களை இரண்டு வாரங்களுக்குள் மு.கா தலைவர் வழங்கவில்லையாயின், 'இவ் விவகாரங்களை பிரசித்தப்படுத்துவேன்' என்றும், குறித்த கடிதத்தில் பஷீர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையிலேயே, தன்னுடைய கடிதத்தினையும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களையும் தற்போது பஷீர் அம்பலப்படுத்தியுள்ளார். அவ்வாறாயின், மு.காங்கிரஸின் சொத்துக்கள் மற்றும் வருமானங்கள் தொடர்பில் அந்தக் கட்சியின் தவிசாளர் முன்வைத்துள்ள கேள்விகளுக்கு, கட்சித் தலைவர் உரிய பதில்களை வழங்கவில்லை என்று அர்த்தமாகிறது.

பேச்சும் - மௌனமும்

'முஸ்லிம் காங்கிரஸின் சொத்துக்கள் மற்றும் வருமானம் குறித்து, தவிசாளர் பஷீர் சேகுதாவூத் இவ்வளவு காலமும் மௌனமாக இருந்து விட்டு, இப்போது திடீரென பேசத் தொடங்குவதன் காரணம் என்ன?' என்கிற கேள்வி, பொது அரங்கில் எழுந்துள்ளது. கூடவே, அதற்கான பதிலும் - கேள்வியைத் தொடுத்தவர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது. 'முஸ்லிம்

காங்கிரஸுக்குள் இவ்வளவு காலமும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி உள்ளிட்ட, அனைத்து சுகங்களையும் அனுபவித்து வந்தவர் பஷீர் சேகுதாவூத். இம்முறை அவருக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படவில்லை. பஷீருக்கு மு.கா தலைவர் ஹக்கீம் 'காய்'வெட்டி விட்டார்; அந்தக் கோபத்தில்தான் பஷீர் இவ்வாறு நடந்து கொள்கின்றார்' என்று அவர்கள் கூறுகின்றனர்.

மு.கா தலைவர் பஷீருடைய நடத்தைக்குச் சொல்லப்படும் மேற்படி காரணம் உண்மையானது. பஷீருக்கு இம்முறையும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டிருந்தால், அவர் வாயை மூடிக்கொண்டு 'சும்மா'இருந்திருக்கக் கூடும். ரவூப் ஹக்கீம் தன்னை 'எத்தி உதைத்து விட்டார்'என்கிற கோபத்தில்தான், ஹக்கீமுடைய குட்டைகளை, பஷீர் குழப்பத் தொடங்கியுள்ளார்.

ஆனாலும், மு.கா தவிசாளர் பஷீர் தெரிவித்திருக்கும் விடயங்கள் பாரதூரமானவை; தட்டிக்கழிக்க முடியாதவை. முஸ்லிம் காங்கிரஸின் சொத்துக்கள் தொடர்பிலும் அதனூடாகக் கிடைக்கும் வருமானங்கள் குறித்தும், கட்சியின் உச்சபீடத்துக்கு இதுவரை வெளிப்படைத் தன்மையுடன் மு.காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தகவல்களை வழங்கவில்லை என, தவிசாளர் பஷீர் சேகுதாவூத் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

'முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகமான தாருஸ்ஸலாம் கட்டடத்தின் உரித்து, பாரமரிப்பு மற்றும் கணக்கு வழக்கு தொடர்பாக கட்சியின் சில உச்சபீட உறுப்பினர்கள், அண்மையில் கடிதமொன்றின் மூலம் செயலாளரிடம் கேள்வி எழுப்பியிருந்தனர் என்பதனை தாங்களும் அறிவீர்கள். இக்கேள்விகளுக்கு உச்சபீட கூட்டமொன்றில் நீங்களும் நாடாளுமன்ற உறுப்பினர் முகம்மட் சல்மானும் பதிலளித்திருந்தீர்கள். உங்கள் இருவரின் மழுப்பலான விளக்கங்களால் அன்று எனக்கும் இன்னும் பல உச்சபீட உறுப்பினர்களுக்கும் திருப்தி ஏற்பட்டிருக்கவில்லை'என்று, மு.கா தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில், முன்னைய நிகழ்வொன்றினையும் பஷீர் நினைவுபடுத்தி இருக்கின்றார்.

முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகமான 'தாறுஸ்ஸலாம்'உள்ளிட்ட அசையாச் சொத்துக்கள் பலவற்றின் உரிமையானது, கட்சியின் தலைவர் உள்ளிட்ட - சில தனிநபர்களைச் சென்றடையும் வகையில், மிக இரகசியமாகக் கைமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கட்சிக்குள் பரவலான சந்தேகமும் குற்றச்சாட்டுக்களும் உள்ளன. இந்தச் சந்தேகங்களை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு விடயங்களும் நடந்தேறியுள்ளன. இந்த நிலையில்தான், தவிசாளர் பஷீருடைய கடிதம் வெளியாகியுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகக் கட்டடத்தின் உரிமை யாரிடம் உள்ளது என்பதையும் கட்சியின் அசையாச் சொத்துக்கள் யாரின் பெயரில் உள்ளன என்பது குறித்தும், அவற்றின் மூலம் பெறப்படும் வருமானங்கள் என்ன என்பது பற்றியும் அந்தக் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவரான தவிசாளருக்கே தெரியவில்லை என்பது ஆச்சரியமளிக்கும் விடயமாகும். இவை குறித்து விபரமாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் கட்சியின் உயர்பீடக் கூட்டங்களில் தகவல்கள் வழங்கப்பட்டிருந்தால், மேற்படி சந்தேகங்களை எழுப்பி, தலைவருக்கு தவிசாளர் கடிதம் எழுதியிருக்க வேண்டிய தேவை எழுந்திருக்காது. ஆக, மு.காங்கிரஸின் நிதி மற்றும் சொத்து விவகாரங்களில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பதற்கு இதுவே ஆதாரமாகவும் உள்ளது.

மூடு மந்திரம்

முஸ்லிம் காங்கிரஸுக்குள் கணிசமான விடயங்கள் மூடு மந்திரமாகவே உள்ளமை குறித்து, கட்சியின் உயர்பீட உறுப்பினர்களிடையே அதிருப்திகள் நிலவுகின்றன. கட்சியின் சொத்து விவகாரம் அவற்றில் ஒன்றாகும். காங்கிரஸின் தலைமையகமான தாருஸ்ஸலாம் என்கிற கட்டடத்தின் உரிமை தொடர்பில் தெளிவானதொரு தகவல், கட்சியின் உயர்பீடத்துக்கு இதுவரை வழங்கப்படவில்லை. இது குறித்து முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும் மு.கா தலைவரின் மச்சான் முறையானவரும், தற்போது அமைச்சர் ஹக்கீமின் பிரத்தியேக செயலாளராகவும் பணிபுரிகின்ற நயீமுல்லா என்பவர், கடந்த வருடம் கட்சியின் உயர்பீட உறுப்பினர்களுக்கு கடிதமொன்றினை எழுதியிருந்தார். தாருஸ்ஸலாமினுடைய உரித்து தொடர்பில், நயீமுல்லாவின் கடிதம் பல்வேறு சந்தேகங்களையும் கேள்விகளையும் கிளறி விட்டிருந்தன.

மேலும், கட்சியின் உயர்பீட அங்கத்தவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கே.எம். ஜவாத், மற்றோர் உயர்பீட உறுப்பினரும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான எம்.ஏ. அன்சில் உள்ளிட்டவர்களும் கூட, தாருஸ்ஸலாம் யாருடைய பெயரில் உள்ளது? கட்சிக்கு உரித்தாக்கப்பட்டு விட்டதா? என்று உயர்பீடத்தில் கேட்டிருந்தனர். ஆனாலும், அந்தக் கேள்விகளுக்கான நம்பகத்தன்மையுடைய பதிலை தலைவர் ஹக்கீம் வழங்கியிருக்கவில்லை என்று, உயர்பீட உறுப்பினர்களில் கணிசமானோர் கூறுகின்றனர்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்கிற அரசியல் கட்சி, இப்போது பணம் உழைக்கின்றதொரு நிறுவனமாக மாறிப்போய் விட்டதாக, கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் விமர்சனங்கள் உள்ளன. மட்டுமன்றி, கட்சியும் அதன் சொத்துக்களும் ஒருசில கரங்களுக்குள் மட்டும் சிக்கிப்போய் விட்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன. ஆனால், இவை குறித்து கட்சியின் உயர்பீட உறுப்பினர்களில் அதிகமானோர் அலட்டிக் கொள்வதில்லை. வேறு சிலர் 'நமக்கெதற்கு வம்பு'என்று பேசாமல் உள்ளனர். 'தலைமைத்துவம் விடுகின்ற தவறுகளைத் தட்டிக்கேட்க கட்சிக்குள் ஆட்கள் இல்லை. சிலவேளை ஓரிருவர் தட்டிக்கேட்டாலும் அவர்களுக்கு ஆதரவாகக் கூட யாரும் குரல் எழுப்புவதில்லை. தலைமையின் தவறுகளுக்கு எதிராக குரலெழுப்பியவர்கள் பழிவாங்கப்பட்டு விடுகின்றனர். அவர்களின் அரசியல் எதிர்காலத்துக்கு 'சாவுமணி'அடிக்கப்பட்டு விடுகிறது. அதனால்தான், உயர்பீட உறுப்பினர்களில் அதிகமானோர் பேசாமல் இருக்கின்றனர்' என்று, காங்கிரஸின் பிரமுகரொருவர் தனது ஆதங்கத்தினைக் கொட்டித் தீர்த்தார்.

தலைமைத்துவ பக்த வாதம்

முஸ்லிம் காங்கிரஸுக்குள் 'தலைமைத்துவ பக்த வாதம்'என்பது மிக நீண்டகாலமாக உள்ளது. கட்சியை நேசிப்பதை விடவும் கட்சியின் தலைவருக்கு துதிபாடும் நிலைவரம் முஸ்லிம் காங்கிரஸுக்குள் புரையோடிப் போயுள்ளது. அதனால், காங்கிரஸின் தலைமை செய்கின்ற தவறுகளை, அந்தக் கட்சியினுடைய தொண்டர்களில் கணிசமானோர், ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை. காங்கிரஸின் தொண்டர்களில் அதிகமானோர் 'தலைவர் பிழை செய்ய மாட்டார்'என்று நம்புகிறார்கள். 'தலைவர் மட்டும்தானா பிழை செய்கிறார்' என்று மறுகேள்வி கேட்கின்றார்கள். 'தலைவர் பிழை செய்தால்தான் என்ன' என்று வாதிடுகின்றனர். தலைவரின் குற்றங்கள் தொடர்பில் கேள்வியெழுப்புகின்றவர்கள் கட்சிக்குள் துரோகிகளாகப் பார்க்கப்படுகின்றனர். இந்த நிலைவரமானது கட்சிக்கு மிகவும் ஆபத்தானதாகும்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மீது அண்மைக்காலமாக மிக அதிகமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. மு.கா தலைவருடன் மிகவும் நெருக்கமாக இருந்த தவிசாளர் மற்றும் செயலாளர் போன்றவர்கள்தான் தலைவர் மீது, அதிக குற்றச்சாட்டுக்களைக் கூறுகின்றனர். எனவே, இவை குறித்து கட்சியின் தொண்டர்கள், ஆதரவாளர்கள் அதிக கரிசனை செலுத்துதல் வேண்டும். குற்றச்சாட்டினை யார் முன்வைக்கின்றார்கள் என்று பார்ப்பதை விடவும், குற்றச்சாட்டின் தன்மை குறித்து ஆராய வேண்டும். அதிலுள்ள உண்மைகளைக் கண்டறிய முற்பட வேண்டும்.

விடுபடுதல்

இன்னொருபுறம், முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் தன்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை தொடர்ந்தும், வெறுமனே தட்டிக்கழித்துக் கொண்டிருக்கக் கூடாது. ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படும்போது, அதனை ஆதாரபூர்வமாக மறுக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். உதாரணமாக, மு.கா தவிசாளர் தற்போது முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களை எடுத்துக்கொள்ளலாம். முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகமான

தாருஸ்ஸலாம் கட்டடத்தின் உரித்து, கட்சியின் ஏனைய அசையாச் சொத்துக்கள் பற்றிய தகவல்கள் மற்றும் அவற்றிலிருந்து கிடைக்கும் வருமானம் போன்ற விபரங்களை சட்டபூர்வ ஆவணங்களுடன் கட்சியின் உயர்பீடத்துக்கு தலைவர் ஹக்கீம் வழங்க வேண்டும். அவ்வாறு நடந்து கொள்வதன் மூலம், தன்மீதான குற்றச்சாட்டுக்களிலிருந்து மு.கா தலைமை விடுபட முடியும்.

இதை விடுத்து, குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்கள் மீது, பதிலுக்குக் குற்றச்சாட்டுக்களைச் சுமத்துவதும் அவர்களுக்கு எதிரான பிரசாரப் போரில் ஈடுபடுவதும் மு.கா தலைமைக்கு நல்லதல்ல. 'காங்கிரஸின்

சொத்துக்கள் பற்றிய விபரங்களைக் கூறு' என்று, அந்தக் கட்சியின் தலைவரிடம் தவிசாளர் கேட்கிறார். கேட்டதைக் கொடுப்பதுதான் - இங்கு உரிய பதிலாக அமையும். அதைவிடுத்து, 'தவிசாளருக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கொடுக்காததால்தான், அவர் இப்படி சொத்து விபரம் கேட்கிறார்' என்று சொல்வது, தவிசாளரின் கேள்விக்கான பதிலாக அமையாது.

தூக்குக் கயிறுகளை விடவும், சில கேள்விகள் - ஆபத்தானவை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .