Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 நவம்பர் 16 , மு.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்.கே.அஷோக்பரன் LLB(Hons)
தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 14)
1961ஜனவரி 21ஆம் திகதி இடம்பெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சி மாநாட்டில் 'தனிச் சிங்கள' சட்டத்தின் அமுலாக்கத்துக்கெதிராக அஹிம்சை வழியில் சத்தியாக்கிரகப் போராட்டத்தையும், ஒத்துழையாமை மற்றும் குடியியற் சட்டமறுப்புப் போராட்டத்தையும் முன்னெடுப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது. இதன் பின்னர் தமிழரசுக் கட்சி சார்பில் சா.ஜே.வே.செல்வநாயகம் கையெழுத்திட்ட துண்டுப்பிரசுரம் ஒன்று பொதுச் சேவை உத்தியோகத்தர்களிடையே விநியோகிக்கப்பட்டது.
அந்தத் துண்டுப்பிரசுரத்தில் 'அன்புடைய சகோதரரே, உங்களுக்கெதிராக தனிப்பட்ட குரோதமேதும் எமக்கில்லை. ஆனால், தமிழ்ப் பிரதேசங்களில் 'தனிச் சிங்கள' சட்டத்தை நீங்கள் அமுல்படுத்தும் பணியிலிருந்தால், உங்களிடம் நாங்கள் இந்த வேண்டுகோளை முன்வைக்கிறோம். சிங்களம் பேசும் மக்களுக்கு சிங்களமொழி எப்படியோ, அதுபோலவே தான் தமிழ் பேசும் மக்களுக்கு தமிழ்மொழி இருக்க வேண்டும். நீதியற்ற, ஜனநாயகமற்ற அரசாங்கமானது, வடக்கு- கிழக்கு பிரதேசங்களில் தமிழ்மொழி நிர்வாக மொழியாக இருக்க வேண்டும் என்ற தமிழர்களின் ஏகமனதான கோரிக்கையை நிராகரித்துவிட்டது. மாறாக, அரசாங்கமானது சிங்களத்தை எங்கள் தொண்டையினுள் திணிக்கப்பார்க்கிறது.
அரசாங்கத்தினது இந்த கொடுங்கொள்கையை எதிர்ப்பதைத் தவிர தமிழ் மக்களுக்கு வேறு வழியில்லை. எங்கள் பிறப்புரிமைக்காக நாங்கள் வாழ்வா-சாவா என்ற போராட்டத்தை எதிர்கொண்டுள்ளோம். ஆதலால், நாங்கள் உங்களிடம் வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம், நீங்கள் உங்கள் அலுவலகத்தில் சிங்களத்தில் வேலை செய்யாதீர்கள். சிங்கள மூலமான எந்த உத்தியோகபூர்வ தொடர்பாடலிலும் ஈடுபட வேண்டாம். சிங்களத்தில் எந்த முத்திரையையும் பதிக்க வேண்டாம், சிங்களத்தில் கையெழுத்திடவும் வேண்டாம்' எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.
ஆங்கிலம் என்பது அந்நிய மொழி, 150 ஆண்டு கால பிரித்தானிய காலனித்துவ ஆட்சியில் ஆங்கிலம் நிர்வாக மொழியாக இருந்தது. அக்காலத்தில் கல்விபெற்ற இலங்கையர் ஆங்கிலத்திலேயே கல்வி கற்று தேர்ந்து நிர்வாக சேவையில் ஆங்கிலத்திலேயே பணிபுரிந்தனர். சுதந்திரத்துக்குப் பின், காலனித்துவத்தின் எச்சங்களைத்தாண்டி சுதேசிய மொழிக்கும், கலாசாரத்துக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்ற வாதம் ஏற்புடையதே.
அநேக காலனித்துவ நாடுகளும் காலனித்துவ அடையாளங்களைக் கைவிட்டு, தமது சுதேசிய அடையாளங்களை மீட்டுக்கொள்ளும் வழிமுறைகளை நடைமுறைப்படுத்தின. இலங்கையிலும் சுதேசிய மொழிகளையும், கலாசாரங்களையும் மீட்டெடுத்து, அவற்றுக்குரிய இடத்தை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் எந்தத் தவறுமில்லை.
ஆனால், அதனைச் செய்யும் போது பெரும்பான்மையினரின் மொழியான சிங்களத்தை மட்டும் முன்னிறுத்தி, சிறுபான்மையினரின் மொழியான தமிழைப் புறந்தள்ளியமையானது சுதேசியத்தை முன்னிறுத்தும் செயலாக அன்றி, பெரும்பான்மையினரின் பேரினவாதத்தை முன்னிறுத்தும் செயலாகவே அமைந்தது. ஒட்டுமொத்த இலங்கையிலும் தமிழ் மக்கள் சிறுபான்மையினராக இருந்தபோதும் வடக்கு-கிழக்கு பிரதேசங்களில் தமிழ் மக்களே பெரும்பான்மையினராக இருந்தனர்.
இந்திய வம்சாவளி மக்களுக்கு பிரஜாவுரிமை மறுக்கப்பட முன்பு மலையகத்தின் அநேக பிரதேசங்களிலும் தமிழ் மக்களே பெரும்பான்மையினராக இருந்தனர். ஆகவே, தமிழ் மக்களுடைய மொழியுரிமையைப் புறந்தள்ளி, சிங்களத்தைத் திணித்ததானது இலங்கை அரசியல் வரலாற்றில் அழிக்கப்பட முடியாத பெருங்கறையாக உருவாகிவிட்டிருந்தது. இதுவே பலதசாப்தங்களாக ஓடிய இரத்த வெள்ளத்துக்கும் மூலகாரணமானது.
1961 பெப்ரவரி 4 சுதந்திரதினத்தன்று 'தனிச் சிங்கள' சட்டத்துக்கெதிரான எதிர்ப்பு ஊர்வலம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 'தனிச் சிங்கள' சட்டத்தின் பிரதிகளையும், நீதிமன்ற மொழிச் சட்டத்தின் பிரதிகளையும், அரசியலமைப்புச் சட்டத்தின் பிரதிகளையும் சவப்பெட்டியொன்றிலிட்டு, உரும்பிராயிலிருந்து யாழ்ப்பாணம்வரை ஊர்வலமாக எடுத்துச்சென்று, இறுதியில் அதற்கு ஊர்காவற்றுறை நாடாளுமன்ற உறுப்பினரான வி.ஏ.கந்தையா இறுதிக் கடன்களைச் செய்து எரியூட்டி, சிங்களத் திணிப்புக்கெதிரான தமிழ் மக்களின் எதிர்ப்பை வெளிக்காட்டினார்.
1961 பெப்ரவரி 20, சத்தியாக்கிரக போராட்டங்கள் வடக்கு, கிழக்கெங்கும் இடம்பெற்றன. அரச அலுவலகங்களை சத்தியாக்கிரகிகள் முற்றுகையிட்டு, 'தனிச் சிங்கள' சட்டத்துக்கெதிரான தமது எதிர்ப்பை வெளியிட்டனர். இந்த அஹிம்சை வழிப் போராட்டங்கள் தொடர்ந்து இடம்பெற்றன.
பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் வேண்டுகோள்
இந்த தொடர்ச்சியான சத்தியாக்கிரக மற்றும் ஒத்துழையாமை மற்றும் குடியியற் சட்டமறுப்புப் போராட்டங்களைத் தொடர்ந்து 1961 மார்ச் 25இல் வானொலியினூடாக தேசத்துக்கு உரையாற்றிய பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, 'எந்தத் தாமதமுமின்றி சத்தியாக்கிரகத்தை உடனடியாக கைவிடுமாறு, சத்தியாக்கிரகம் இருக்கும் தலைவர்களை நான் வேண்டிக்கொள்கிறேன். நான் மீண்டும் சொல்கிறேன். உங்கள் பிரச்சினைகளை கேட்க நாம் தயாராக இருக்கிறோம், உரியவற்றைக் கருத்திற்கொண்டபின் தேவையேற்படும் இடங்களில் மாற்றங்களை ஏற்படுத்தவும் தயாராக இருக்கிறோம். எனக்கு மேலும் கிடைத்துள்ள தகவல்களின் படி, குறித்த அரசியல் அமைப்புக்கள் சில, தமிழ் மக்களை மொழி உரிமைகளைக் காட்டி தவறாக வழிநடத்தி, வடக்கு- கிழக்கில் அரச இயந்திரத்தை ஸ்தம்பிக்கச் செய்வதினூடாக தனி நாடொன்றை ஸ்தாபிக்க முயல்கின்றனவோ என்ற ஐயம் எழுகிறது' எனக் குறிப்பிட்டார்.
பிரதமரின் வேண்டுகோளைப் பரிசீலித்த இலங்கைத் தமிழரசுக் கட்சி அதனை நிராகரித்தது. பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் வேண்டுகோளானது, எந்தவித நிபந்தனையுமின்றி எமது சத்தியாக்கிரகப் போராட்டத்தைக் கைவிடக் கோரியதற்கு ஒப்பானது. அவர், எமக்கு எதனையும் தருவதற்கு உறுதியளிக்கவில்லை. குறைந்த பட்சம் எமது மொழியுரிமை பற்றி பரிசீலிப்பதாகக் கூட உறுதிமொழியொன்று தரவில்லை மாறாக 'தனிச் சிங்கள' சட்டத்தின் அமுலாக்கத்தால் ஏதேனும் பாதிப்புக்கள் ஏற்படுமானால் அதுபற்றிக் கவனத்தில்கொள்வது பற்றியே அவர் பேசினார். ஆகவே, பிரதமரது வேண்டுகோளானது தெளிவற்றதொன்றாக, நிச்சயமற்றதொன்றாகவே இருக்கிறது, இந்த விஷயம் பற்றிப் பேச்சுவார்த்தைகள் நடத்துவது பற்றிக் கூட அவர் எந்த முன்மொழிவையும் வைக்கவில்லை என சா.ஜே.வே.செல்வநாயகம் கூறினார்.
பிரதமரானவர் உண்மையில் நல்லெண்ணங்கொண்டிருப்பின் குறைந்தபட்சம் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க நிறைவேற்றிய தமிழ்மொழி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தை நடைமுறைப்படுத்தவேனும் நடவடிக்கை எடுத்திருக்கலாம். அவ்வாறு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காது, தமிழர்கள் 'தனிநாடு' கேட்கிறார்கள் என்ற பிரிவினைப் பயத்தை பெரும்பான்மை சிங்கள மக்களிடம் விதைக்கும் விதத்திலேயே தனது பேச்சை அமைத்திருந்தமை கவலைக்குரியது. சிங்கள மக்களுக்கு சிங்கள மொழி எப்படியோ, அதுபோலவே தான் தமிழ் மக்களுக்கு தமிழ் மொழி என்ற யதார்த்தம் பெரும்பான்மை மக்களால் புரிந்துகொள்ளப்படவில்லை.
தமிழ்த் தரப்போடு பேச்சுவார்த்தை
இந்நிலையில், 1961 ஏப்ரல் 4ஆம் திகதி நாட்டில், குறிப்பாக வடக்கு-கிழக்கில் சட்ட ஒழுங்கு சீர்குலைவு பற்றி ஆராய அமைச்சரவை கூடியது. அமைச்சர் ‡பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க தலைமையிலான கடும்போக்காளர்கள் உடனடியாக அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு, இராணுவத்தின் மூலம் சத்தியாக்கிரகம் அடக்கப்பட வேண்டும் எனக் கூறினர். அமைச்சர் சி.பி. டி சில்வா, சாம்
பி.ஸி. ஃபெணான்டோ ஆகியோரைக் கொண்ட மிதவாதப்போக்காளர்கள் இந்தப் பிரச்சினை அரசியல் ரீதியாகத் தீர்க்கப்பட வேண்டும் என்று கூறினர். அமைச்சரவை தமிழ்த் தலைவர்களோடு பேசுவதற்கு ஒப்புதல் அளித்தது.
சாம் பி.ஸி.ஃபெணான்டோ, தனது நண்பரும் முன்னாள் மன்றாடியார் நாயகமுமாகிய எம். திருச்செல்வம் அவர்களூடாக, சா.ஜே.வே.செல்வநாயகம் அவர்களோடு தொடர்பினை ஏற்படுத்தி பேச்சுவார்த்தையை முயற்சித்துப் பார்க்குமாறு கேட்டுக்கொண்டார். சா.ஜே.வே. செல்வநாயகம், எஸ்.எம்.ராசமாணிக்கம், அ.அமிர்தலிங்கம், டொக்டர் ஈ.எம்.வி.நாகநாதன் ஆகியோர் நீதி அமைச்சர் சாம் பி.ஸி. ஃபெணான்டோவை, எம்.திருச்செல்வத்தின் இல்லத்தில் சந்தித்துத்துப் பேசினர். ஆனால், எந்தவொரு இணக்கப்பாடும் எட்டப்படவில்லை.
செல்வநாயகம் சாம் பி.ஸி. ஃபெணான்டோவிடம் தமிழரசுக் கட்சியின் குறைந்தபட்ச கோரிக்கைகளைக் கையளித்தார். தமிழ்மொழி, வடக்கு-கிழக்கில் நிர்வாக மொழியாகவும், நீதிமன்றமொழியாகவும் இருத்தல், 'தனிச் சிங்கள' சட்டத்தினால் அல்லற்படும் தமிழ் பொதுச்சேவை உத்தியோகத்தர்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் அத்துடன் வடக்கு-கிழக்குக்கு வெளியில்வாழும் தமிழ் பேசும் மக்களின் நிலை பற்றி தெளிவுபடுத்தப்படவேண்டும் என்ற குறைந்த பட்சக் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
அன்றைய நிலையில் தமிழரசுக் கட்சியோ, முக்கிய தமிழ்த் தலைமைகளோ மிகக் குறைந்த பட்சமான தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதற்கான சமரசத்துக்கு தயாராகவே இருந்தார்கள். ஆனால், அந்தக் குறைந்தபட்சக் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளவோ, அதனை நிறைவேற்றுவதற்கோ சிங்களத் தலைவர்கள் தயாராக இருக்கவில்லை.
அவர்களால் தொடர்ந்து சொல்லப்பட்ட காரணம் நாம் இதனை ஏற்றுக்கொண்டால் சிங்கள மக்கள் கிளர்ந்தெழுவார்கள் என்பதாகும். சிங்கள கடும்போக்காளர்களைத் திருப்திப்படுத்துவதற்காக, எங்கே தாம் அவர்களை விசனமடையச் செய்துவிட்டால் அது எதிர்க்கட்சிக்கு சாதகமாகிவிடும் என்ற எண்ணத்தால், தொடர்ந்து ஆட்சிக்கட்டிலேறிய ஒவ்வொரு அரசாங்கமும் இனமுறுகலைத் தீர்ப்பதில் தீர்க்கமான ஒரு நிலைப்பாட்டை எடுக்கத்தவறின.
அமைச்சர் சாம் பி.ஸி. ஃபெணான்டோ, தமிழரசுக் கட்சியினரின் குறைந்தபட்சக் கோரிக்கைகளை 1961 ஏப்ரல் 6ஆம் திகதி அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பித்தார். அமைச்சரவை தமிழரசுக் கட்சியினரின் கோரிக்கையை நிராகரிப்பதாகத் தீர்மானித்தது. ஏப்ரல் 7ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சி.பி. டி சில்வா, தமிழரசுக் கட்சியினரின் கோரிக்கை உத்தியோகபூர்வ மொழிச் சட்டத்துடன் ('தனிச் சிங்கள' சட்டத்துடன்) முரண்படுவதால் அதனை அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ள முடியாது என அறிவித்தார்.
பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, சத்தியாக்கிரகப் போராட்டத்தையும் ஒத்துழையாமை மற்றும் குடியியற் சட்டமறுப்புப் போராட்டத்தையும் தொடர்வதைத் தவிர வேறுவழியில்லை என தமிழரசுக் கட்சி அறிவித்தது.
தமிழரசு முத்திரை வெளியீடு
ஒத்துழையாமை என்பது, அரச இயந்திரம் ஒன்று செயற்படுவதற்கு ஒத்துழைப்பை மறுத்தல். அதுபோல குடியியல் சட்டமறுப்பு என்பது ஒருவரின் உள்ளுணர்வுக்கு அல்லது மனச்சாட்சிக்கு எதிரானது என ஒருவர் கருதும் அரச சட்டங்களையும் செயற்பாடுகளையும் குடிசார் முறையில் முயன்று மறுப்பது அல்லது எதிர்ப்பது ஆகும். சட்ட மறுப்பு என்ற போராட்டம் என்பது அஹிம்சை வழயிலான அறப்போராட்ட வடிவமாகும். அரசு தனிநபர்களின் உள்ளுணர்வுக்கு அல்லது மனச்சாட்சிக்கு எதிராக சட்டமியற்றுவதை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று தனது 'குடிசார் சட்டமறுப்பு' என்ற நூலில் குறிப்பிடுகிறார். ஹென்றி டேவிட்
தூரோ, காந்தியின் போராட்ட வடிவங்களாக சத்தியாக்கிரகம், ஒத்துழையாமை மற்றும் குடியியல் சட்டமறுப்பு என்பன இருந்தன. இந்த போராட்ட வடிவத்தை அமெரிக்காவில் கறுப்பினத்தவர்களின் விடுதலைக்கான போராட்டத்தில் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் கையாண்டார்.
குடியியல் சட்டமறுப்புப் போராட்டத்தின் ஒரு படியாக அஞ்சலகக் கட்டளைச்சட்டத்தை மீற தமிழரசுக் கட்சி முடிவெடுத்தது. அச்சட்டமானது முத்திரைகள் வெளியிடும், அஞ்சல் சேவை நடத்தும் அதிகாரத்தை தபால் திணைக்களத்துக்கு வழங்கியது. 1961 ஏப்ரல் 14 அன்று இலங்கை தமிழரசுக் கட்சி 'தமிழரசு' முத்திரைகளை வெளியிட்டது.
சா.ஜே.வே.செல்வநாயகம் தமிழரசு தபாலகத்தில் தபால் அதிபராக இருந்து முதலாவது 10 சத முத்திரையை விற்பனை செய்ய, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் 'உடுப்பிட்டிச் சிங்கம்' எம்.சிவசிதம்பரம் அதனை வாங்கிக்கொண்டார். இதன் தொடர்ச்சியாக குடியியல் சட்டமறுப்புப் போராட்டத்தின் ஓரங்கமாக தமிழரசு தபால் சேவை முன்னெடுக்கப்பட்டது.
எம்.சிவசிதம்பரம் மற்றும் வி.என்.நவரட்ணம் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழரசு தபால்சேவையில் தபாற்காரர்களாக அஞ்சல் விநியோகிக்க முன்வந்தனர். இந்த குடியியல் சட்டமறுப்புப் போராட்டம் அரசாங்கத்தை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
(அடுத்த வாரம் தொடரும்...)
2 hours ago
5 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
7 hours ago
7 hours ago