2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

தமிழ், முஸ்லிம், மலையகச் சமூகங்களுக்குள் ஏற்பட்டிருக்கும் தோல்வி

எஸ்.கருணாகரன்   / 2017 ஜூன் 14 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரச  ஆதரவைக் கொண்டிருக்கும் முஸ்லிம், மலையகக் கட்சிகளும்  நெருக்கடிக்குள்ளாகியுள்ளன. 

அரசாங்கத்தின் போதாமைகளைச் சுட்டிக்காட்ட  முடியாமலும் தாமதமான அல்லது பாராமுகமான நடவடிக்கைகளை எதிர்க்க முடியாமலும்  தத்தளிக்கும் இரண்டும் கெட்டான் நெருக்கடி நிலைக்குள், இவை இன்று  தள்ளப்பட்டிருக்கின்றன.

அதாவது ‘உள்ளே இருக்கவும் முடியாது, வெளியேறிச்  செல்லவும் முடியாது” என்ற பெரும் பொறிக்குள் சிக்கியிருக்கின்றன. 

இந்த  நிலையானது, ஒரு வகையில் இந்தக் கட்சிகளுக்கும் தமிழ், முஸ்லிம், மலையகச்  சமூகங்களுக்கும் ஏற்பட்டிருக்கும் தோல்வி என்றே கூறவேண்டும். 

ஏனென்றால், இந்த அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்துவதற்குப் பெரும்  பங்களிப்பை வழங்கியவர்கள் சிறுபான்மையின மக்களே. சிறுபான்மையின மக்களின்  பாதுகாப்பு, அவர்களுடைய உரிமைகள் மற்றும் அந்தஸ்து, அவர்கள் எதிர்கொண்டுவரும் நெருக்கடிகளுக்கான தீர்வு, ஜனநாயக நெருக்கடியைக் குறைத்தல், அதிகாரக் குறைப்பு என்பவற்றைப் பிரதானப்படுத்தியே, இந்த அரசாங்கம் ஆட்சியை  அமைப்பதற்குரிய அங்கிகாரத்தைக் கோரியிருந்தது 

முக்கியமாகப்  பல்லினத்தன்மைக்கான அங்கிகாரம் அல்லது பன்மைத்துவத்துக்கு இடமளித்தல்  என்பதை அடிப்படையாகக் கொண்ட ஆட்சிக்கும் கடந்தகாலத் தவறுகளுக்கான  பொறுப்புக்கூறலுக்கும் பகை மறப்பு மற்றும் நல்லிணக்கத்துக்கும்  நிலைமாறு காலகட்ட நீதிக்குமாக  இலங்கையின் இரண்டு பிரதான கட்சிகளான ஐ.தே.கவும் ஸ்ரீ லங்கா  சுதந்திரக் கட்சியும் இணைந்து உறுதியளித்திருந்தன. 

அதுமட்டுமல்ல, நாட்டின் மிக  நெருக்கடியான (ராஜபக்ஷர்களின் அதிகார எல்லை மீறல் என்று கூறப்பட்ட)  காலகட்டத்தை எதிர்கொள்ளும் ஒரு நிலையிலேயே இந்த ஆதரவை சிறுபான்மையின  மக்களிடம் மேற்படி இரண்டு கட்சிகளும் கோரியிருந்தன.  

இதற்கு மிகப் பெறுமதியான பங்களிப்பை வழங்கியவர்கள்  சிறுபான்மையினத்தினர். அவர்களுடைய பங்களிப்பில்லாதிருந்தால் இன்று இந்த  ஆட்சி அமைந்திருக்க வாய்ப்பேயில்லை. ஆகவே அத்தகைய மகத்தான பங்களிப்பின்  மூலமே ‘ஜனவரி 08 ஜனநாயகப் புரட்சி’ என்று வர்ணிக்கப்பட்ட அதிகார மாற்றம்  அல்லது நல்லாட்சி உருவாகியது.

இந்தப் பங்களிப்பைச் சிறுபான்மையின மக்கள்  ஒடுக்குமுறைக்குள்ளாகிய காயங்களின் மத்தியிலேயே வழங்கியிருந்தனர். இது  முக்கியமான கவனத்துக்குரிய ஒரு விடயமாகும். தங்களுடைய காயங்களை ஆற்றக்கூடிய  மருந்தாக ‘நல்லாட்சி’ அமையும் என அவர்கள் முழுமையாக நம்பினர். அதற்கான  சாத்தியப்பாடுகளை ஆட்சியை அமைப்பதற்கு முயற்சித்தவர்களும் வெளியுலகச்  சக்தியினரும் காண்பித்திருந்தனர் என்பதை இங்கே குறிப்பிட வேண்டும்.  

இப்படியான ஒரு பின்புலத்தில், வழக்கப்பட்ட ஆதரவுக்குரிய -  வாக்குறுதிக்குரிய நம்பிக்கை இன்று காப்பாற்றப்படவில்லை. சிறுபான்மையினச்  சமூகங்கள் இப்பொழுது மீண்டும் புறக்கணிக்கப்பட்டு, அச்சமடையக்கூடிய  ஆபத்தான கட்டத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர்;  தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள். 

இது ஏற்படுத்தப்பட்ட நம்பிக்கைக்கும்  வழங்கப்பட்ட வாக்குறுதிக்கும் எதிரானது. மட்டுமல்ல, இந்த அரசாங்கத்தின்  ஆட்சிக்கும் நாட்டின் எதிர்காலத்துக்கும் நன்மையளிக்கக்கூடியதுமல்ல.  

மிக அபூர்வமானதொரு சந்தர்ப்பமே இப்போதைய ஆட்சிக்காலமாகும். நாட்டின்  அரசியல் வரலாற்றில் எதிரும் புதிருமாக இருந்த ஐ.தே.கவும் சு.கவும்  கூட்டிணைந்த ஆட்சிக் காலம் இது. 

அதாவது, நாட்டின் பிரதான பிரச்சினைகளில்  தீர்வுகளைக் காண்பதில் முரண்பட்டு நின்ற தரப்புகள் ஒன்றிணைந்து நிற்கும்  அபூர்வத்தருணம் ஆகும். அத்துடன், சிறுபான்மையினக் கட்சிகளும் நீண்டகாலத்துக்குப்  பிறகு ஆட்சிக்கு - அரசாங்கத்துக்குத் தமது ஆதரவை அளித்து வரும்  காலகட்டமாகும்.   

இந்தச் சந்தர்ப்பத்தில்தான் நாட்டிலுள்ள பிரச்சினைகளுக்கான தீர்வுகளைக்  காணமுடியும். நாட்டுக்குத் தேவையான மறுசீரமைப்புகளைச் செய்ய இயலும். கடந்த  இரண்டு வரவு செலவுத்திட்டங்களும் எதிர்ப்பின்றி, எதிர்க்கட்சியின்  ஆசீர்வாதத்துடன் ஒப்பேற்றப்பட்டுள்ளதைப்போல, இனப்பிரச்சினை உட்பட்ட ஏனைய  விவகாரங்களும் சம்மதங்களோடு நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். 

ஆனால், அதைச்  செய்வதிலே கடுமையான தயக்கங்கள் அரசாங்கத்திடம் காணப்படுகிறது. இதற்கு  கட்சிகளுக்கிடையே உள்ள முரண் நிலையையும் கூட்டு எதிரணி மற்றும் பௌத்த  தீவிரவாத அமைப்புகளின் எதிர்ப்புகளையும் சாட்டாக முன்வைக்க  முயற்சிக்கின்றனர் நல்லாட்சியினர்.  

இதனால் முன்னர் இருந்த ஆட்சிகளைப்போல, அரசாங்கங்களைப் போலவே, இந்த  ஆட்சியும் இந்த அரசாங்கமும் இழுத்தடிப்பு, காலதாமதம், பராமுகம்,  புறக்கணிப்பு, இனவாத சக்திகளுக்கு இடமளித்தல் என்ற விதமாக நடந்து கொள்வதாக  உணரக்கூடிய நிலை உருவாகியுள்ளது. 

இதுவே நல்லாட்சி அரசாங்கத்தை  சிறுபான்மையின மக்களும் ஜனநாயகவாதிகளும் சந்தேகிப்பதற்கான காரணமாகும்.  அரசாங்கத்தின் இத்தகைய போக்கு, சிறுபான்மையின மக்களிடத்தில் ஏமாற்றத்தையும்  வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தாங்கள் நம்பிக்கை மோசடி  செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் கருதுகிறார்கள். அதனால்தான், தங்களுடைய தலைமைகள்  தொடர்ந்தும் அரசாங்கத்தின் ஆதரவைக் கொண்டிருப்பதை அவர்கள் வெறுக்கின்றனர். இந்த வெறுப்பின் அடையாளங்களை நாம் தெளிவாகவே பல இடங்களிலும் அவதானிக்கிறோம்.  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட  முஸ்லிம்கட்சிகள், தமிழ் முற்போக்குக் கூட்டணி (Tamil Progress Alliance,  TPA) என்பவற்றின் மீதான விமர்சனங்கள் சம்மந்தப்பட்ட தரப்பு மக்களிடமிருந்து  எதிர்ப்பலையாக மேற்கிளம்பத்தொடங்கியிருக்கின்றன.

இந்தத் தரப்புகளின்  தற்போதைய அரசியல் செயற்பாடுகளும் நிலைப்பாடுகளும் எப்படியிருக்கிறது என்ற  கேள்விகளை ஆய்வாளர்களும் விமர்சகர்களும் மேலெழுப்பி வருகின்றனர். இதில்  உச்ச எதிர்ப்பைச் சந்தித்திருப்பது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீ லங்கா  முஸ்லிம் காங்கிரஸுமாகும்.  

ஆகவே, இப்படி நெருக்கடியானதொரு நிலைக்குள் இந்தத் தரப்புகளை  வைத்திருப்பதன் மூலமாக, இந்தக் கட்சிகளையும் இந்தச் சமூகங்களையும் அரசாங்கம்  வெளித்தெரியாமல் தோற்கடித்து வருகிறதா என்று  எண்ணவேண்டியுள்ளது. 

இதை, இன்னும் சற்று வெளிப்படையாகச் சொன்னால், இனிப்பாகப்  பேசிக்கொண்டே சிங்களப் பேரினவாதம் தன்னுடைய தீவிரச் செயற்பட்டை இரகசியமாகவும்  மிகத் தீவிரமாகவும்  செயற்படுத்தி வருகிறது எனலாமா? அதாவது ‘அணைத்துக்  கெடுப்பது’ என்று சொல்வார்களே அதுதான். 

\

இதை இந்தத் தரப்புகள்  உணர்ந்தாலும்கூட, எதிர்ப்பதற்கோ ஆட்சியை விட்டு விலகுவதற்கோ அல்லது  ஆட்சிக்கு வழங்கிவரும் ஆதரவை நீக்குவதற்கோ இவற்றினால் முடியவில்லை.  எதிர்த்தீர்மானம் எடுப்பதற்குத் தலைவர்கள் தயங்குகிறார்கள். இது ஏன்?  

பொருத்தமான சந்தர்ப்பங்களில் சரியான தீர்மானங்களை எடுக்கவில்லை என்றால்  அதுவே மரணக்குழியாக அமைந்து விடுவதுண்டு. இங்கும் அதுதான் நடந்து  கொண்டிருக்கிறது. ஏறக்குறைய ஓர் அரசியல் தற்கொலை நிலையை தமிழ், முஸ்லிம்,  மலையகக் கட்சிகள் எதிர்நோக்கியுள்ளன.

இதேவேளை உண்மையில் இந்தக் கட்சிகளே  பலமானவையாக உள்ளன. அரசாங்கத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக்கூடிய பலம்  இவற்றிடம் உண்டு. அதற்கான ஆற்றலை இவை வளர்த்துக்கொள்ள வேண்டும். 

நல்லாட்சி  அரசாங்கத்தின் கால்களாக இருக்கும் இந்தத் தரப்புகள் தமது ஆதரவை விலக்கிக்  கொண்டால், இந்த ஆட்சி கவிழ்ந்து விடும். ஆகவே, இந்தப் பலத்தை  வைத்துக்கொண்டு, தமது பேரம்பேசும் ஆற்றலை, நிபந்தனைகளைத் தாராளமாக  வளர்த்துக் கொள்ள முடியும். ஆனால், அதைச் செய்வதில் இவை ஏனோ  பின்னிற்கின்றன.  

இதற்குப் பிரதான காரணம், இந்தத் தரப்பிடையே ஒரு கூட்டுணர்வும் கூட்டுப்  பொறிமுறையும் இல்லை என்பதே. அத்துடன், மக்களின் நலனை விடத் தமது நலனே  முக்கியமானது என்ற தவறான தெரிவு. இது ஒரு போதும் சுயாதீனமாகச் சிந்திக்க  விடாது. இலாபங்களில் குறியாக இருக்கும்போது, இலட்சியங்கள்  முக்கியமாகப்படுவதில்லை. 

இந்த நிலை சகபாடிகளிடையே முரண்களை உண்டாக்கும்.  இதனால் பிளவுகளேற்படும். தமக்குள் பிளவுண்டிருக்கும்வரையில் இவற்றினால்  பலமடையவே முடியாது. இது சிங்கள மேலாதிக்கவாதச் சிந்தனைக்கு நல்லதொரு  வாய்ப்பாகிறது.

ஆகவே இனரீதியாகச் சிறுபான்மைத்தரப்புகளாக இருப்பவை  அவசியமாகவும் அவசரமாகவும் தமக்கிடையே ஒரு கூட்டுறவையும் கூட்டுப்  பொறிமுறையையும் உருவாக்க வேண்டியுள்ளது.  

ஆனால், இந்த மாதிரியான நிலைமைகள் தீர்மானங்களை எடுப்பதற்குக்  கடினமானவையாக இருக்கும் என்பதுண்மை. ஏனென்றால் அத்தகைய ஓர் அரசியல்  பண்பாடும் கள யதார்த்தமும் தமிழ், முஸ்லிம், மலையத்தரப்புகளுக்கிடையே  இல்லை. இருந்தாலும் பிரதான எதிர்ச்சக்தியை எதிர்கொள்வது என்ற அடிப்படையில்  இவை தமக்குள் ஐக்கியப்படலாம். அது தேவையான ஒன்று. ஆகவே அதற்காக இன்று  அனைவரும் சிந்திக்க வேண்டியுள்ளது.  

இதேவேளை, இன்னொரு வாதத்தையும் இந்தச் சந்தர்ப்பத்தில் சிலர்  முன்னிறுத்தக்கூடும். தற்போது இந்த அரசாங்கத்துக்கு அளித்து வரும் ஆதரவை  சிறுபான்மையினச் சக்திகள் விலக்கினால், அடுத்த கணத்தில் ராஜபக்ஷக்கள்  அதிகாரத்தைக் கைப்பற்றி விடுவர் என்று. 

அதாவது தீவிர இனவாதச் சக்திகள்  மீண்டும் அதிகாரத்துக்கு வந்து விடும் என. இது ஒரு தேவையற்ற கற்பனையே.  ராஜபக்க்ஷகள் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதொன்றும் இலகுவான காரியமல்ல.  அதற்கான களச்சூழலும் இன்றில்லை. அப்படித்தான் அவர்கள் அதிகாரத்தைக்  கைப்பற்றினாலும் அதற்கேற்ப அரசியலைக் கையாள வேண்டியதுதான் மீதியுள்ள வேலை. 

 அரசியலில் நிரந்தர எதிரியுமில்லை; நிரந்தர நண்பனுமில்லை. அங்கே  கையாளப்படவேண்டியது கூர்மையான தந்திரோபயமே. தவிர, ராஜபக்ஷக்களுக்கோ  நல்லாட்சி அரசுக்கோ சளைத்ததில்லை, தற்போதைய அரசாங்கமும் என்பதையும் நாம்  நினைவிற் கொள்ள வேணும். அதாவது மோதகமும் கொழுக்கட்டையும் என்ற  மாதிரித்தான்.  

ஆகவே, இங்கே எந்தத் தடுமாற்றங்களுக்கும் இடமில்லை. எந்தக் கடினமான  நிலைமையையும் எதிர்கொண்டு, நுட்பமான முறையில் காய்களை நகர்த்துவதே அரசியல்  சாணக்கியமாகும். அதுவே வெற்றியைப் பெற்றுத்தரும்.

அதிலும் குறிப்பாகச்  சிறுபான்மைத் தேசிய இனங்களாகவும் ஆட்சி அதிகாரம் இல்லாதவையாகவும்  ஆட்சியினால் ஒடுக்கப்படுகின்றவையாகவும் இருக்கின்ற தரப்புகள் மிக உச்சமான  விழிப்போடும், மிகச் சாதுரியமாகவும் மிகத் துணிச்சலோடும் இயங்க வேண்டும்.  

அப்படிச் செயற்படும்போதே குறித்த தரப்பு மக்களைக் காப்பாற்ற முடியும்.  அவர்களுடைய வாழ்க்கையை மேம்படுத்தலாம்.  

தற்போதைய நிலையில் முஸ்லிம் விரோத நடவடிக்கைகள் மிகப் பகிரங்கமாக  சிங்களச் சக்திகளால் மேற்கொள்ளப்படுகின்றன. இது ஏனைய இனங்களின் மீது  விரிவடைவதற்கு காலம் செல்லாது.

உரிய காலத்தில் இனப்பிரச்சினைக்கான  தீர்வும், பல்லினத்தன்மைக்கான இடமும் ஜனநாயக மறுசீரமைப்பும் பொருளாதார  மேம்பாடும் ஏற்படவில்லை என்றால் மிகக் கடிமான ஒரு நிலைக்கு அனைத்துத்  தரப்பினரும் உள்ளாக வேண்டியிருக்கும். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X