2021 மே 08, சனிக்கிழமை

தமிழக நிதிநிலை அறிக்கையும் பின்னணியும்

Thipaan   / 2016 ஜூலை 25 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழக அரசாங்கத்தின் நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம். புதிய வரி விதிக்கப்படாதது, ஏழைகளுக்கு 10 இலட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்பது 2016-17 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையின் இரு  முக்கிய அம்சங்கள். 'அளப்பரிய கருணைக்கும், மதி நுட்பத்துக்கும் உறைவிடமாகத் திகழ்கிறார் முதலமைச்சர் ஜெயலலிதா' என்ற பாராட்டுரையுடன் ஜூலை 21 ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது நிதி நிலை அறிக்கை. வருகின்ற செப்டெம்பர் முதல் வாரம் வரை இந்த நிதி நிலை அறிக்கை மற்றும் மானியங்களின் மீதான விவாதங்கள் தமிழக சட்டமன்றத்தில் எதிரொலிக்கும்.

உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற ஒக்டோபர் மாதத்தில் நடத்தப்படும் என்று நிதி நிலை அறிக்கையில் கூறியிருப்பதால், தமிழகம் அடுத்த கட்ட தேர்தலுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது. அரசியல் வியூகங்களுக்கும் இனிப் பஞ்சமில்லை என்ற நிலையை நோக்கி மாநில அரசியல் நகர்ந்து கொண்டிருக்கிறது. அதனால் இந்த நிதி நிலை அறிக்கையில், உள்ளாட்சி தேர்தலை மனதில் வைத்து சில சலுகைகள், திட்டங்கள் கூறப்பட்டுள்ளன. அந்த வகையில் அ.தி.மு.க அரசாங்கத்துக்கு முதல் சவாலாக இருப்பது மாநில அரசாங்கத்துக்கு உள்ள 2.52 இலட்சம் கோடி கடன்.

அடுத்து சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை. மூன்றாவதாக 40 ஆயிரம் கோடி ரூபாய் நிதிப் பற்றாக்குறை. இந்த அளவுகோலைப் பார்த்தால் தமிழகத்தின் நிதி நிலைமை அ.தி.மு.க அரசாங்கத்துக்கு இந்த ஐந்து வருடத்தில் மேலும் புதுப் புது சவால்களை ஏற்படுத்தும். நிதி ஆதாரத்தை பெருக்கியே ஆக வேண்டிய நிர்ப்பந்தம் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு இருப்பதால், வரும் காலங்களில் வரி விதிப்புக்கு வாய்ப்புக்கள் உருவாகலாம். ஆகவே 'வரி இல்லாத பட்ஜெட்' என்ற நிலைப்பாடு இனி வருகின்ற வருடங்களிலும் நீடிக்குமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகவே இருக்கிறது. இந்நிலையிலிருந்து தப்பிக்க அ.தி.மு.க அரசாங்கம் மத்திய அரசாங்கத்தின் மீதுதான் நிதி ஆதாரத்துக்கு நம்பிக்கை வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

ஆனால் பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசாங்கத்துக்கும், அ.தி.மு.க தலைமையிலான மாநில அரசாங்கத்துக்கும் இடையிலான உறவில் இன்னும் ஒரு தெளிவு பிறக்கவில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு 89 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறது என்பது என்னவோ உண்மை. ஆனால் அக்கட்சி காங்கிரஸுடன் கூட்டணியாக தொடருகின்ற வரை அல்லது காங்கிரஸுடன் இணக்கமான சூழலைக் கடைப்பிடிக்கும் வரை தமிழக அரசியலில் பாரதிய ஜனதா கட்சி தி.மு.கவுக்கு உதவும் வகையில் எந்த நடவடிக்கையையும் எடுப்பதற்கு வாய்ப்பில்லை.

குறிப்பாக திருப்பூரில் மூன்று கொள்கலன்களில் சென்ற 570 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை கோரி தி.மு.க தரப்பில் மத்திய அரசாங்கத்துக்கு எவ்வளவோ அழுத்தம் கொடுத்துப் பார்த்தார்கள். இன்னும் சொல்லப்போனால் தி.மு.க தலைவர் கருணாநிதி திரும்பத் திரும்ப கடிதங்கள் எழுதி, பிரதமர் நரேந்திரமோடிக்கே நேரடியாக கோரிக்கை விடுத்தார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் எம்.பியாக இருக்கும் டி.கே. எஸ். இளங்கோவன் பிரதமரிடம் புகார் கொடுத்தார். ஆனாலும் சென்னை உயர்நீதிமன்றம்தான் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதே தவிர, மத்திய அரசாங்கம் தானாகவே முன்வந்து அப்படியொரு விசாரணைக்கு உத்தரவு போடவில்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை அ.தி.மு.கவை இப்போதைக்கு பகைத்துக் கொள்ள வேண்டாம் என்பதில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாக் கட்சி அரசாங்கம் தீர்மானமாக இருக்கிறது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அ.தி.மு.கவுக்கு இருக்கும் 50 எம்.பிக்களின் எண்ணிக்கை, அந்தப் பாதுகாப்பை அ.தி.மு.க அரசாங்கத்துக்குத் தருகிறது. இதுவே தி.மு.கவுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது.

இதனால் தி.மு.க சார்பில் மத்திய அரசாங்கத்தையும் விமர்சிக்கிறார்கள். ஆந்திராவிற்கும் தமிழகத்துக்கும் இடையில் உள்ள பாலாறு நதி நீர்ப்; பிரச்சினையாக இருக்கட்டும், கர்நாடக மாநிலத்துக்கும் தமிழகத்துக்கும் இடையே உள்ள காவிரி நதி நீர்ப் பிரச்சினையாக இருக்கட்டும் ஏன் கேரள மாநிலத்துக்கும் தமிழகத்துக்கும் இடையில் உள்ள முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையிலும் கூட மத்திய அரசாங்கம் தமிழகத்தை வஞ்சிக்கிறது என்ற குற்றச்சாட்டை முன் வைக்கிறது தி.மு.க. அதிலும் 77 தமிழக மீனவர்களை இலங்கை இராணுவம் கைது செய்த விவகாரத்திலும் மத்திய அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை வலுவாகவே முன் வைக்கிறார்கள். ஆகவே தி.மு.கவைப் பொறுத்த மட்டில் அ.தி.முகவும் பா.ஜ.கவும் நட்பாக இருக்கிறார்கள் என்ற செய்தியை தமிழக மக்கள் மத்தியில் தீவிரமாகக் கொண்டு செல்லவே முனைகிறது.

தி.மு.கவின் இந்தத் தாக்குதலை அ.தி.மு.க உணர்ந்தே இருக்கிறது. அதனால் 'எங்களுக்கும், மத்தியில் உள்ள பா.ஜ.க அரசாங்கத்துக்கும் எந்த உறவும் இல்லை' என்பதை தமிழக மக்கள் மத்தியில் தெளிவுபடுத்த அ.தி.மு.க போராடிக் கொண்டிருக்கிறது. மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு அகில இந்திய நுழைவுத் தேர்வு விவாதம் வந்த போது நாடாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளது அ.தி.மு.க. அதேபோல் சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவில் இதுவரை மத்திய அரசாங்கத்துக்கு தன் ஆதரவை அறிவிக்காமல் இழுத்தடித்து வருகிறது. தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதில் மத்திய அரசாங்கம் பாராமுகமாகவே இருக்கிறது என்று பகிரங்கமாகவே நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டியிருக்கிறது. இப்படி அடுத்தடுத்து பா.ஜ.க அரசாங்கத்துக்கு எதிரான அஸ்திரங்களை வீசி அ.தி.மு.கவுக்கும் பா.ஜ.கவிற்கும் நட்பு இல்லை என்பதை அரங்கேற்றி வருகிறார் அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

ஆனால், அரசியல் ரீதியாக இரு கட்சிகளுக்கும் கூட்டணியோ, உறவோ இல்லை என்பதை தொடர்ந்து அ.தி.மு.க வாக்காளர் மத்தியில் தெளிவாக எடுத்துரைத்து வருகிறது. 2011 சட்டமன்றத் தேர்தல், 2014 நாடாளுமன்றத் தேர்தல், 2016 சட்டமன்றத் தேர்தல் என்று மூன்று தேர்தல்களில் தொடர் வெற்றிச் சாதனை படைத்த அ.தி.மு.கவுக்கு இந்த யுக்தி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சியுடன் 1998 முதல் 2004 வரை அ.தி.மு.க, தி.மு.க ஆகிய இரு கட்சிகளும் மாறி மாறி கூட்டணி வைத்திருந்தன. அக்கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் பயனுள்ளதாகவும், சட்டமன்றத் தேர்தலில் பயன் அற்றதாகவும் போன காட்சிகளை இரு கட்சிகளுமே தெரிந்து கொண்டுள்ளன. உதாரணமாக 2001 சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வரும் வாய்ப்பை இழந்தது தி.மு.க. அந்தத் தவறை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா செய்யத் தயாராக இல்லை.

பா.ஜ.கவுடன் அ.தி.மு.க நெருங்கிச் சென்று கூட்டணி இருப்பது போல் காட்டிக் கொள்வது, தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் மற்றக் கட்சிகள் அனைத்தையும் அணி சேர வைக்கும் என்பதை உணர்ந்திருக்கிறார் ஜெயலலிதா. அதனால் மாநில அரசாங்கத்துக்கு - பா.ஜ.க தலைமையில் உள்ள மத்திய அரசாங்கத்துடன் மறைமுக நட்பு, அரசியலுக்கு - அ.தி.மு.கவுக்கும், பா.ஜ.கவுக்கும் நட்பு இல்லை என்ற வித்தியாசமான நிலைப்பாட்டை எடுத்துள்ளார் அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா. இந்த சூழ்நிலையில்தான் தமிழக மக்கள் மீது புதிய வரிகளைப் போட்டு ஒரு நிதி நிலை அறிக்கையை உள்ளாட்சி தேர்தல் வரவிருக்கின்ற நேரத்தில் தாக்கல் செய்ய அ.தி.மு.க அரசாங்கம் விரும்பவில்லை. ஆனால் மாநில அரசின் நிதி நிலைமை அ.தி.மு.கவை மத்திய அரசாங்கத்துடன் நெருங்கிச் செல்ல வேண்டிய கட்டாயத்தை உருவாக்கும்.

இப்போது சட்டமன்றத் தேர்தலில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதி நிலை அறிக்கை குறித்து கண்டனம் தெரிவிக்கும் வகையில்தான் தி.மு.கவின் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், 'இந்த நிதி நிலை அறிக்கை ஒரு வெத்து வேட்டு அறிக்கை' என்று பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியிருக்கிறார். அநேகமாக அனைத்து எதிர்கட்சிகளுமே நிதி நிலை அறிக்கையை சாடியிருக்கின்றன.

அதேநேரத்தில் 'பாரதிய ஜனதாக் கட்சி வேண்டாம்' என்ற விரதத்தை ஒக்டோபரில் நடக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகும் அ.தி.மு.க தலைமை தொடருமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது (2014 நாடாளுமன்ற தேர்தல்) தி.மு.க பலவீனமாக இருந்தது போல் இனி வரப் போகும் நாடாளுமன்றத் தேர்தலின் போது (2019 நாடாளுமன்றத் தேர்தல்) இருக்கப் போவதில்லை. அதேபோல் சென்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது இருந்த பலம் இனி வரும் நாடாளுமன்றத் தேர்தலின் போது அ.தி.மு.கவுக்கும் இருக்கப் போவதில்லை. எல்லாவற்றிற்கும் மேலாம் இனி வரும் ஐந்து வருடங்களில் மாநில அரசின் நிதி நிலைமையை ஸ்திரப்படுத்திக் கொள்ள மத்திய அரசின் உதவி அ.தி.மு.கவுக்கு நிச்சயம் தேவை. அந்தக் காலகட்டத்தை நோக்கி அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க உறவு வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X