2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

தேர்தல் காய்ச்சல்

மொஹமட் பாதுஷா   / 2020 மார்ச் 06 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

மீண்டும், தேர்தல் காய்ச்சல் தொற்றியிருக்கின்றது. இலங்கை அரசியலில், பெப்ரவரி மாதம் இருந்த நிலைமைகள் சட்டென மாறி, ஒரு புதுவித பரபரப்புமிக்க களச்சூழல், உருவாகி இருக்கின்றது. 

அரசமைப்பின்படி, தனக்குள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, நாடாளுமன்றத்தை மார்ச் இரண்டாம் திகதி நள்ளிரவு முதல் கலைத்து, நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ,  வெளியிட்டமையால், அரசியலில் இந்தப் பரபரப்பு ஏற்பட்டிருக்கின்றது.

அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தின் பிரகாரம், ஒரு நாடாளுமன்றம் ஸ்தாபிக்கப்பட்டு, நான்கரை வருடங்களுக்கு முன்னதாக, அதைக் கலைக்க முடியாது என்ற நிபந்தனை காணப்படுகின்றது. எனவேதான், இந்த நிபந்தனை பூர்த்தி செய்யப்பட்டு, 24 மணித்தியாலத்துக்குள் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதுடன், ஏப்ரல் 25ஆம் திகதி சனிக்கிழமையன்று, வாக்கெடுப்பு நடைபெறும் எனவும், இம்மாதம் 12 ஆம் திகதி தொடக்கம் 19 ஆம் திகதி வரையும், வேட்புமனுத் தாக்கல் செய்யப்படும் எனவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தேர்தலும், பொதுவாக நாட்டு மக்களுக்கும் குறிப்பாக, சிறுபான்மைச் சமூகங்களுக்கும் முக்கியமானவைதான். கடந்த தேர்தலை விட, இந்தத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்தது என்றோ, தீர்க்கமானது என்றோ யாரும் சொல்வார்கள் என்றால், அது அவர்களது பிரசார உத்தியே அன்றி, வேறொன்றுமில்லை. எனவே, முஸ்லிம்களும் தமிழர்களும் மிகக் கவனமாக இந்தத் தேர்தலையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது.

2015ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்று ஜனாதிபதியானார், அதேபோன்று, பொதுத் தேர்தலின் மூலம், ரணில் விக்கிரமசிங்க பிரதமரானதுடன் ஐ.தே.கட்சி ஆளும் கட்சியாகியது. 

‘நல்லாட்சி’ என்ற அடைமொழியோடு, வந்த அந்த ஆட்சியின் வினைத்திறன் தோல்வியே, குறுகிய காலப்பகுதிக்குள் அதாவது, 2019இல் ராஜபக்‌ஷக்களை நோக்கி, அலையடிக்கக் காரணமாகியது எனலாம். 

இதற்குப் புறம்பாக, பயங்கரவாதத் தாக்குதல்களைச் சந்தைப்படுத்தி, மேலெழுந்த இனவாதம் போன்ற காரணங்கள், தேர்தல் வெற்றியின் துருப்புச் சீட்டாக அமைந்தன.

இந்தப் பின்னணியிலேயே, அரசாங்கம் தற்போது அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஒருவித தொங்குநிலை நாடாளுமன்றத்தை வைத்துக் கொண்டிருக்காமல், மொட்டுச் சின்னத்தின் பக்கம் அடிக்கின்ற காற்றைப் பயன்படுத்தி, உரிய காலத்தில் ‘தூற்றிக் கொள்வதற்கு’, ராஜபக்‌ஷக்கள் முனைப்புக் காட்டுகின்றார்கள் எனலாம். 

சிங்களப் பெரும்பான்மை மக்களின் பெரும்பான்மையான வாக்குளால், ஜனாதிபதியைத் தெரிவு செய்த பாணியில், நாடாளுமன்றத்தையும் பெரும்பான்மையினரால் தெரிவு செய்வதற்கும், சிங்களக் கடும்போக்குச் சக்திகள், ஆசைப்படுவதாக தெரிகின்றது.

இன்னும் ஒரு வாரத்தில், வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய வேண்டியுள்ளது. ஒரு மாத காலமே, தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ள முடியும். இவ்வாறிருக்கையில், பிரதான கட்சிகள் இத்தேர்தலில் எவ்வாறு களமிறங்குவது என்ற முடிவை, நாடாளுமன்றம் கலைக்கப்படும் போதே, கிட்டத்தட்ட இரகசியமாக எடுத்துவிட்டன. 

சுதந்திரக் கட்சி, ஆளும்தரப்பின் பொதுஜன பெரமுன கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. சிறு கட்சிகளும் இக்கூட்டில் இணைந்துள்ளன. 

இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சி இரண்டுபட்டுள்ளது. அதாவது, ஐ.தே.க என்ற ஒட்டுமொத்த பிம்பமும், இரு துண்டுகளாகியுள்ளது. இது, அக்கட்சியின் வாக்குவங்கியை இரண்டாக உடைக்கும் என்பதை, சிறுபிள்ளைகள் கூட அறியும்.

இதேநேரம், ஓரிரு தமிழ்க் கட்சிகளும் சஜித் தலைமையிலான அணிக்கு ஆதரவளிக்கப் போவதாக அறிவித்துள்ளன. வேறு சில சிறு தமிழ்க் கட்சிகள், ‘மொட்டு’ சார்பு நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றன. 

த.தே.கூட்டமைப்பைப் பொறுத்தவரை, யாரையும் நம்ப முடியாத சூழ்நிலையில், தமிழ் மக்களின் வாக்குகளை ஒருகூடையில் சேர்க்க வேண்டிய அவசியம் இருப்பதால், அக்கட்சி தனித்தே போட்டியிடும் என எதிர்பார்க்கலாம்.

இந்தச் சூழலில், முஸ்லிம் அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும், எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கப் போகின்றார்கள் என்ற கேள்வி, முஸ்லிம் மக்கள் மத்தியில் எழுந்திருக்கின்றது. 

கடந்த தேர்தல்களில், பெரும்பான்மையான முஸ்லிம்கள் எடுத்த முடிவுகள், அதனால் ஏற்பட்ட முன்-பின் விளைவுகள், முஸ்லிம்கள் பற்றிய ஏனைய சமூகங்களின் பார்வை, புதிய அரசாங்கம் முஸ்லிம்களை நடத்திய விதம், எல்லாவற்றையும் மனதில் கொண்டே, இந்தத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பதென முஸ்லிம் சமூகம் சிந்திக்கத் தொடங்கியிருக்கின்றது. அதுவே சரியானதும் கூட!

கடந்த நாடாளுமன்றத்தில் எம்.பிகளை கொண்டிருந்த முஸ்லிம் கட்சிகளாக, முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் கட்சிகள் காணப்படுகின்றன. 

இவ்விரு கட்சிகளுக்கும் மேலதிகமாக, தேசிய காங்கிரஸ், ஐக்கிய தேசிய முன்னணி, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி போன்ற கட்சிகளும் முஸ்லிம் அரசியலில் இயங்குநிலையில் இருக்கின்றன. இவற்றுள் வாக்கு வங்கிகள் உள்ள கட்சிகளும் சில்லறை வாக்குகளை மட்டும் நம்பியிருக்கின்ற கட்சிகளும் உள்ளடங்குகின்றன. 

இந்தக் கட்சிகளுக்குப் புறம்பாக, ஒரு குறிப்பிட்ட அளவான வாக்குகளை எப்போதும் தம்வசம் வைத்திருக்கின்ற தனிப்பட்ட முஸ்லிம் அரசியல்வாதிகள் மட்டுமன்றி, ‘தமக்கும் மக்கள் ஆதரவு இருக்கின்றது’ என்ற மாயத் தோற்றத்துடன் உள்ள அரசியல்வாதிகளும், இம்முறை களத்தில் குதிக்க எத்தனிக்கின்றனர்.

எது எவ்வாறிருப்பினும், ஐக்கிய தேசியக் கட்சியூடாகவும், சில இடங்களில் சுதந்திரக் கட்சியிலும் முஸ்லிம் வேட்பாளர்கள் களமிறக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கக் கூடியதாகவுள்ளது.

சஜித் பிரேமதாஸ தலைமையில், புதிதாக உருவாகியுள்ள கூட்டணியில் இணைந்து கொள்வதாக, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆரம்பத்திலேயே அறிவித்து விட்டார். ஒருவித மிதப்பு நிலையில் இருந்த மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீனும் தற்போது சஜித்தின் கூட்டணியில் இணைவதாக அறிவித்துள்ளார். மீண்டும், சஜித்துடன் இரு பிரதான முஸ்லிம் கட்சிகளும் சங்கமித்துள்ளன.

பொதுஜன பெரமுன கட்சி, ஏற்கனவே “ஹக்கீமையும் ரிஷாட்டையும் இணைக்க மாட்டோம்” என்று, ஏற்கெனவே அறிவித்து விட்டது. கடந்த தேர்தல்களில், தொடர்ச்சியாக ஐ.தே.க சார்பாக நிலைப்பாட்டை இவ்விரு கட்சிகளும் எடுத்ததுடன், முஸ்லிம் காங்கிரஸ்,  மக்கள் காங்கிரஸ் கட்சிகளைக் கையாள்வதும் தலையிடியென ராஜபக்‌ஷ அரசாங்கம் கருதுகிறது. 

அதுமட்டுமன்றி, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ரிஷாட், ஹக்கீம் போன்ற முஸ்லிம் தலைவர்களை மய்யப்படுத்தியும் உயிர்த்த ஞாயிறுத் தாக்குலைச் சந்தைப்படுத்தியும் இனவாதப் பிரசாரங்களை மேற்கொண்டே, சிங்களப் பெரும்பான்மை மக்களின் வாக்குகளைப் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் பெற்றுக் கொண்டார். 

எனவே, இக்குறுகிய காலப்பகுதிக்குள்ளே பிரதான முஸ்லிம் கட்சிகளை இணைத்துக் கொண்டால், சிங்கள மக்கள் மத்தியில் கட்டியெழுப்பியுள்ள ‘பிரசாரச் சுவர்’ உடைந்து நொறுங்கிவிடும் என்று, ஆளும் தரப்புக் கருதுகின்றது எனலாம்.

ஆகவேதான், இப்போதைக்கு மு.காவையும் ம.காவையும் தம்மோடு இணைத்துக் கொள்வதில்லை என்ற உறுதியான நிலைப்பாட்டில் இருக்கின்றன. 

அத்தோடு, புதியதொரு முஸ்லிம் அணியை உருவாக்கும் முயற்சியிலும் பொதுஜன பெரமுன கட்சி ஈடுபட்டுள்ளது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகளைப் பொறுத்து, ‘மொட்டு’ அணி, முஸ்லிம் அரசியல் கட்சிகளை எந்த இடத்தில் வைப்பது, என்ன செய்வது என்பது பற்றிய இறுதி முடிவுகளை எடுக்கும் என, அனுமானிக்க முடிகின்றது.

இந்த அடிப்படையில் நோக்கினால், சஜித் கூட்டணியுடன் இரு முஸ்லிம் கட்சிகளும் இணைந்து கொண்டமை, எதிர்பார்க்கப்பட்டதே; ஆச்சரிமானதல்ல. விடாக் கொண்டனான ரணில் விக்கிரமசிங்கவை விட, சஜித் பிரேமதாஸவுடன் பயணிப்பது பரவாயில்லை என்ற தீர்மானத்துக்கு ஹக்கீமும் ரிஷாட்டும் வந்திருக்கலாம். 

பெரும்பான்மைக் கட்சியுடன் இணைந்தே இத்தேர்தலில் போட்டியிடுவது என்றால், இப்போதைக்கு இக்கட்சிகளுக்கு, இதைத் தவிர வேறு தெரிவுகளும் இல்லை.

அதேபோன்று, கடந்த தேர்தலில், முஸ்லிம் மக்கள் அதிகளவான வாக்குகளை, சஜித்துக்கே அளித்திருந்த பின்னணியில், அவரது கூட்டணியில் இணைந்து கொள்வதன் ஊடாக, முஸ்லிம்கள்,  தமிழர்களின் வாக்குகளை, அதிகளவில் பெற முடியும் என்ற ஒரு கணிப்பும், அவர்களுக்கு நிச்சயமாக இல்லாமலிருக்காது.

ஆனால், முஸ்லிம் கட்சிகளின் ஒற்றுமை பற்றியும், சமூகத்தின் திரண்ட வாக்குப்பலம் பற்றியும் பேசப்படுகின்ற இன்றைய காலகட்டத்தில், முஸ்லிம் கட்சிகள் இணைந்து தனியாகப் போட்டியிட்டிருக்கலாம். அதன்மூலம், தங்களது பலத்தை ஒன்றுதிரட்டி, பேரம்பேசலை மேற்கொண்டிருக்கலாம் என்பது கவனிப்புக்குரியது. 

அப்படிச் செய்வது என்றால், நூறு சதவீதம் (அதாவுல்லாஹ், ஹிஸ்புல்லாஹ், அசாத்சாலி உள்ளடங்கலாக) எல்லா முஸ்லிம் அரசியல்வாதிகளும் ஓர் அணியில் போட்டியிட்டாலேயே, எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியும். என்றாலும், பிரதான முஸ்லிம் கட்சிகளாவது, தனியான ஓர் அணியில் போட்டியிடுவது பற்றி யோசித்திருக்கலாம்; ஆனால் அப்படிச் செய்யவில்லை.

சமகாலத்தில், பொதுஜன பெரமுனவுக்குச் சார்பாகச் செயற்படும் நிலைப்பாட்டில், தேசிய காங்கிரஸ், ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு போன்ற கட்சிகள் இருக்கின்ற போதும், வடக்கு, கிழக்கில் நேரடியாக, மொட்டு சின்னத்தில் முஸ்லிம் வேட்பாளர்களைக் களமிறக்கும் முடிவை பொதுஜன பெரமுன இன்னும் எடுக்கவில்லை. 

இச்சூழலில், எவ்வகையான சூத்திரத்தின் ஊடாக, மொட்டு சார்பான முஸ்லிம் கட்சிகள் களமிறங்கப் போகின்றன என்பது, இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

குறிப்பாக, ரணிலைப் பகைத்துக் கொண்டு, சஜித்தோடு பயணிக்க, முஸ்லிம் காங்கிரஸ்,  மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் எடுத்திருக்கின்ற முடிவு, மிகவும் சவால்மிக்கதாகும். 

அவர்கள், கணிசமான எம்.பிகளைப் பெறுவதற்கு, இந்த வியூகம் வசதியாக அமையலாம் என்று வைத்துக் கொண்டாலும், பிளவுபட்டுள்ள யானையின் வாக்குகளில் கணிசமான பங்கை தம்வசப்படுத்தும் என எதிர்பார்க்கப்படும் சஜித் கூட்டணி, நாட்டில் ஆட்சியமைப்பதென்றால் தீயாக வேலை செய்ய வேண்டும்.

அதேபோல், மொட்டு அணியில் அல்லது, அதன் சார்பாக, வேறு கட்சியில் களமிறக்கப்படும் வேட்பாளர்களின் ஒரு சிலர், வெற்றி பெறுவார்கள். ஆயினும், அவர்களில் பலர், முஸ்லிம் சமூகம் பற்றிய உணர்வு மேலீட்டால், அரசியலுக்கு வந்தவர்கள் இல்லை.

எனவே, அவர்களது ‘மூக்கணாங்கயிறு’ வேறு யாரிடமோ இருக்கும் என்பதாலும், முஸ்லிம்கள் என்ற அடையாள அரசியல், இன்னும் மறைந்து போகலாம். அது தவிர்க்க முடியாததும் கூட.
ஆக, இந்தத் தேர்தலிலும் ரணில், சஜித், ராஜபக்‌ஷக்களால் ஆட்டுவிக்கப்படும் சமூகமாகவே, முஸ்லிம்கள் இருக்கப் போகின்றார்கள் என்பது மட்டும் நிச்சமானது.

எது எவ்வாறிருப்பினும், இந்தத் தேர்தலில் முஸ்லிம்களின் பிரதிநிதிதித்துவத்தை உறுதிப்படுத்துவதா, தமது கட்சிக்கு அதிக எம்.பிக்களை எடுப்பதா, முஸ்லிம் சமூகம், எதிர்காலத்தில் குறைவான சிக்கல்களை எதிர்கொண்டு, தேசிய அரசியலில் ஸ்திரமான நிலைக்கு வருவதா, போன்ற விடயங்களில் எதற்கு இப்போது முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதை, முஸ்லிம் அரசியல்வாதிகள் சிந்திக்க வேண்டும். 

இதன் அடிப்படையிலேயே, உருப்படியான தேர்தல் வியூகங்கள் வகுக்கப்பட வேண்டும்.

பள்ளிக்குள் வைக்கப்பட்ட புத்தர் சிலையின் கதை

இராகமை பிரதேசத்திலுள்ள, மஹர சிறைச்சாலை வளாகத்தில் அமைந்துள்ள தொன்மை வாய்ந்த பள்ளிவாசலின் பெரும்பகுதி, ஓய்விடமாக மாற்றப்பட்டதுடன் அங்கு, புத்தர்சிலை ஒன்றும் வைக்கப்பட்டமை, முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் பெரும் மனக்கிலேசத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், அதை அகற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தமை, முஸ்லிம் மக்களுக்குச் சற்று ஆறுதலாக அமைந்துள்ளது எனலாம்.

புத்தபெருமான் இந்த உலகுக்கு, அற்புதமான நல்ல செய்திகளைச் சொல்லிச் சென்ற மகான் ஆவார். உயிரினங்கள் மீது அன்புகாட்டச் சொன்னவர்; மற்றவரை நோகடிக்காமல் வாழ்வது பற்றிப் போதித்தவர் ஆவார். புத்தபிரானிடம் ஏனைய இன மக்கள், கற்றுக் கொள்ள நிறைய முன்னுதாரணங்கள் உள்ளன. அவர் இனவாதத்தை ஒருபோதும் போதிக்கவே இல்லை.

அந்தவகையில், பள்ளிவாசலுக்கு அருகில் புத்தர்சிலை இருப்பது ஒன்றும் குற்றமல்ல. அவ்வாறு, நாட்டில் பல இடங்களில் அருகருகே மத ஸ்தலங்கள் அமைந்திருப்பதையும் நாமறிவோம். 

ஆனால், மஹர சிறைச்சாலைக்கு உட்பட்டதாகக் கிட்டத்தட்ட 100 வருடங்கள் பழைமை வாய்ந்ததும், வக்பு சபையில் 50 வருடங்களுக்கு முன்னரே பதிவு செய்யப்பட்டதுமான ஒரு பள்ளிவாசலில், புத்தரின் சிலையைக் கொண்டுவந்து வைத்தமைதான் புதுவிதமான ஆக்கிரமிப்பாக, முஸ்லிம்களால் நோக்கப்பட்டது. அத்துடன், இப்பிரதேச முஸ்லிம்கள், தமது மார்க்கக் கடமைகளை நிறைவேற்ற முடியாத நிலையும் ஏற்பட்டது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர், நெலுந்தெனிய பள்ளிவாசல் வளாகத்தில் இரவோடிரவாகப் புத்தர் சிலை வைக்கப்பட்டதற்கும், மஹர சிறைச்சாலைப் பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டதற்கும் பெரிய வேறுபாடுகள் இருப்பதாகத் தெரியவில்லை.

இந்நிலையில், இவ்விவகாரம் அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, நீதியமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, இந்தச் சிலையை அகற்றி, பள்ளிவாசலின் வழமையான செயற்பாட்டுக்கு இடமளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு நடைமுறைக்கு வருமாயின், அதற்காக அரசாங்கத்தைப் பாராட்டலாம். 

ஆனால், பல்லினத் தன்மையையும் புரிந்து கொள்ளாமல், ஏனைய மதங்களை அவமதிக்கும் விதத்தில், அரச அதிகாரிகளே செயற்படுவதற்கு இடமளிக்க முடியாது.

மட்டக்களப்பில் ஒரு கிறிஸ்தவ தேவாலயத்துக்குள்  நுழைந்த முஸ்லிம்கள், கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுவது தவறில்லை. ஆனால், பள்ளிவாசல்கள், கோவில்கள் ஆகியவற்றுக்குள் அத்துமீறுகின்ற கடும்போக்காளர்களும் இனவெறுப்பைக் கக்குகின்றவர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

உலகெங்கும், எல்லா மதங்களும் கூறுகின்ற போதனைகளைச் சரியாகப் பின்பற்றத் தவறுகின்றவர்களாலேயே குழப்பங்களும் சண்டைகளும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன என்பதும், இங்கு நினைவு கொள்ளத்தக்கது. 

இஸ்லாமிய பெயர்தாங்கிய அமைப்புகளும் இதற்கு விதிவிலக்கல்ல; இந்தியாவின் ஆர்.எஸ்.எஸ், இலங்கையின் ‘சேனா’க்களும் விதிவிலக்காக இருக்க முடியாது.

ஆனால், அண்மைக் காலமாகத் தமிழர்கள், முஸ்லிம்கள் வாழ்கின்ற பிரதேசங்களில், வலிந்து புத்தர் சிலைகள் வைக்கப்படுவதையும் விகாரைகள் அமைக்கப்படுவதையும் தற்செயலாக நடக்கின்ற சம்பவங்களாக எடுத்துக் கொள்ள முடியாது.

ஒருமதத்தின் நல்ல கோட்பாடுகளை, பழக்க வழக்கங்களைத் தம்முடைய நடவடிக்கைகளின் மூலமாக வெளிப்படுத்தாமல், வெறுமனே மத ஸ்தலங்களை நிர்மாணிப்பதன் மூலமோ, பிற மதங்களை ஒடுக்குவதன் மூலமோ, தம்முடைய மதத்தை இலகுவாக முன்னிலைப்படுத்தலாம் என்று எண்ணுமளவுக்கு, கடும்போக்காளர்களை, இனவாத சிந்தனை  மூளைச்சலவை செய்திருக்கின்றது.

இந்தப் போக்கை இனவாதிகள் வெளிப்படுத்த, அரசாங்கம் முன்னிற்பது கவலைக்குரியதாகும். எனவே, இலங்கையில் இன, மத சகிப்புத் தன்மையுள்ள மூவின சமூகங்களையும் உருவாக்க வேண்டியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .