2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

நாடகம் ஆடுவதாக நாடகம் ஆடுதல்

காரை துர்க்கா   / 2018 செப்டெம்பர் 04 , மு.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம், நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவம் நடைபெற்று வருகின்றது. மாலைத் திருவிழா முடிந்தவுடன், ஆலயச் சுற்று வீதியில் பரப்பப்பட்டுள்ள மணல் மண்ணில், கச்சான், கடலை கொறித்தவாறு, நல்ல உள்ளங்களுடன் ‘நாலு’ கதை கதைப்பது, மனதுக்கு ஒருவித புதுத் தென்பைத் தரும்.   

தினசரி, வீட்டுக்கும் வேலைக்கும் இடையே, ஓயாது ஓடி ஓடி உழைக்கும் உழைப்பாளிகளுக்கும் ‘படிப்பு படிப்பு’ என ஒரே பரபரப்புக்குள் வாழும் இளவயதினருக்கும், ஓர் இடைக்கால நிவாரணம் இது, என்றால் மிகையல்ல.   

“என்னதான் வசதிகள், வாய்ப்புகள் கண்முன்னே பல்கிப் பெருகி இருந்தாலும், பதுங்குகுழியின் பக்கத் துணையோடும், குப்பி விளக்கின் ஒளியோடும், குண்டு வீச்சுகளுக்கு நடுவே வாழ்ந்த வாழ்வு, இப்போது உள்ள வாழ்க்கையிலும் அலாதியானது” என, தனது மனப்பாரத்தைக் கொட்டிக்கொண்டிருந்தார் ஒருவர்.  

‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ எனக் கூறுவது போல, தமிழ் மக்களது ஒட்டுமொத்த வாழ்வும் இவ்வாறாகவே கழிகின்றது. கொடும் போரின் வெடி ஓசை ஓய்ந்தாலும், ஓயாத அதிர்வுகள், சுற்றிச்சுற்றி வலம் வருகின்றன. போர் முடிந்தும், தமிழ் மக்கள் போருக்குள் வாழ்கின்றனர்.  

“வடக்கு முதலமைச்சர் நாடகமாடுகின்றார்; அந்த நாடகத்துக்குப் பின்னால், கஜேந்திரகுமார் செல்கின்றார்; அதற்குள் சம்பந்தன், மாவை, சுமந்திரன் சித்து விளையாட்டு விளையாடுகின்றனர்” என, மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன், யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தார்.    

“இவர் நாடகமாடுகின்றார்; அவர் சித்து விளையாட்டுக் காட்டுகின்றார்” எனக் கூறுபவர்கள், முதலில் தம்மை, தங்களது மனக் கண்ணாடியின் முன் அளவிடுவது மிகவும் அவசியம். ஒருவரை எதிர்க்கும் போதும், எதிர்த்து வார்த்தைகளைக் கொட்டும் போதும், த(ம்)ன் பக்க நியாயங்களையும் தொட்டுப் 
பார்க்க வேண்டும்.   

இதற்கு மேலதிகமாக, தான் கூறும் கூற்று, கேட்பவர்களுக்குச் சினத்தை மூட்டுமா, விருப்பை விளைவிக்குமா எனக் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். கொடிய போரில் சிக்கி, சமநிலை குழம்பி, முரண்பாடுகள் நிறைந்தும், வன்முறைகளைத் தரிசித்தபடியும் வாழும் ஒரு மக்கள் கூட்டத்தின் மத்தியில், தமது உரை, உறைக்குமா, இனிக்குமா என யோசிக்க வேண்டும்.  

இவ்வாறாகத் தமிழ்த் தலைவர்கள் மீது, அமிலத்தைக் கொட்டுவோர், அவர்களைச் சார்ந்தோர், அந்தக் கட்சிகளைச் சார்ந்தோர் ஆகியோர், கடந்த காலங்களில் தமிழ் மக்கள் விடயத்தில், புனிதர்களாக இருந்தார்களா, மீட்பர்களாக வாழ்ந்தார்களா?  

 புலிகளுக்கு எதிரான யுத்தம் எனத் தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தம் வீச்சுக் கொண்ட வேளை, ஒருவருமே மூச்சுக் கூடக் காட்டவில்லை.   

மேலும், இந்திய, இலங்கை ஒப்பந்தத்துடன் (1987) அண்ணளவாக இரு தசாப்தங்கள் (19 வருடங்கள்) ஒன்றாக இணைந்திருந்த வடக்கையும் கிழக்கையும் இரு கூறாக்க, நீதிமன்றம் (2006) சென்று, இணைந்த வடக்கு, கிழக்கு, தமிழர் தாயகம் என்ற தமிழ் மக்களது அபிலாஷையின் தொடர்பைத் துண்டித்தவர்கள், மக்கள் விடுதலை முன்னணி கட்சியினராவர்.    

“வடக்கு முதலமைச்சர், கொழும்பில் தனது இரு பிள்ளைகளுக்கும் சிங்களவர்களை மணம் முடித்துக் கொடுத்துள்ளார்; அவர்கள் அங்கு சந்தோஷமாக வாழ்கின்றார்கள். இங்கு (வடக்கில்) வந்து நாடகமாடுகின்றார்” என்றும் இராமலிங்கம் சந்திரசேகரன் அந்த ஊடகவியலாளர் மாநாட்டில் மேலும் தெரிவித்திருந்தார்.   

இந்த விடயத்தை, இவர் மட்டும் கூறவில்லை. வடக்கு ஆளுநர் உட்பட தெற்கிலுள்ள பல அரசியல்வாதிகள், அவ்வப்போது கூறி வருவதுண்டு.   

வடக்கு முதலமைச்சர், தனது பிள்ளைகளுக்கு பெரும்பான்மையின மருமக்கள் வர வேண்டும் என, அவர்களது ஜாதகக் குறிப்பைக் கொண்டு திரியவில்லை. அவ்வாறாக, அமைய வேண்டும் எனக் கோவிலில் நேர்த்திக்கடன் வைக்கவும் இல்லை. கா(தல்)லச் சூழ்நிலைகளால் அவ்வாறான திருமணங்கள் அமைந்திருக்கலாம். அதைத் தூக்கிப் பிடித்து, மேடையில் முழங்குதல், தேவையற்ற வெட்டிப் பேச்சாகும். ஏனெனில், தாயும் பிள்ளையும் என்றாலும் வாயும் வயிறும் வேறு அல்லவா?   

அண்மையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வவுனியா மாவட்டக் கிளை கூடியிருந்தது. அங்கு, கட்சியின் மாவட்ட அமைப்பாளர் பதவி தொடக்கம், அனைத்துப் பதவிகளுக்கும் நியமனங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. தமிழ் மக்கள் பல(ர்) அப்பதவிகளை அலங்கரிக்கின்றனர்.   

இதேநேரத்தில், முல்லைத்தீவு மண்ணை, பெரும்பான்மையின ஆக்கிரமிப்பிலிருந்து மண்ணை மீட்கும் மக்கள் போராட்டம், நடைபெறுகின்றது. தமிழ் மக்களது பூர்வீக உரித்துள்ள காணிகள்,பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த பலருக்கு, காணி உரிமம் வழங்கப்பட்டு உரித்தாக்கப்பட்டுள்ளது.    

மகாவலி அதிகாரசபை, முல்லைத்தீவில் தீவிர செயற்பாட்டில் ஈடுபட்டு, வெளிப்படையாகவே பெரும்பான்மையினரைக் குடியேற்றி வருகின்றது என்ற குற்றச்சாட்டு, அப்பிரதேசம் சார் வாழ் மக்களால், முன்வைக்கப்பட்டு வருகின்றது.   

முல்லைத்தீவில் கிராமப்புறங்களில் வாழும் தமிழ் மக்கள், தங்களது காணிகளை ‘மகாவலி’ அடித்துச் சென்று விடுமோ என ஏக்கத்துடன் சீவிக்கின்றனர். ‘ இலங்கையின் மிகப்பெரிய கங்கை, மகாவலி கங்கை’ எனச் சிறுவயது முதற்கொண்டு கற்றுவந்த தமிழ் மக்களுக்கு, ‘மனவலி’ தரும் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதுவே, சிங்கள மக்களுக்கு ‘மகாவலி’ யாக உள்ளது.   

கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்திய ஜனாதிபதி, அப்படிக் குடியேற்றம் ஒன்றுமே அங்கு நடைபெறவில்லை என அடித்துக் கூறி விட்டார். இதையே அமைச்சர் ராஜித சேனாரத்னவும் கூறுகின்றார். முல்லைத்தீவில் குறித்த பிரதேசங்களை அண்டிவாழும் மக்கள், “இது முழுப்பூசணிக்காயை அப்படியே சோற்றுக்குள் புதைத்த மாதிரி இருக்கிறது” என்று கடிந்து கூறுகின்றார்கள்.   

இங்கு ஒன்றுமே நடக்காமலா, தமிழ் மக்கள் வீதியில் அஹிம்சைப் போர் புரிகின்றனர்? இந்தப் போராட்டம், 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர், தமிழ் மக்களைப் பாரிய அளவில் ஒன்று திரட்டிய நிகழ்வாகப் பார்க்கப்படுகின்றது.  

ஆகவே, தென்னிலங்கை தேசியக் கட்சிகள் ஊடாகத் தமிழ் மக்களுக்குச் சேவை செய்யப் போகின்றோம் எனக் கிளம்பிய, வடக்கு, கிழக்கு தமிழ்ப் பிரதிநிதிகளால், தங்களது கட்சியின் தலைமைத்துவம் ஊடாக, ஆக்கிரமிப்புகள், பொருளாதாரச் சுரண்டல்களைத் தடுக்கக் கூடிய வலு உள்ளதா, மீண்டும் மீட்டெடுக்கக் கூடிய சக்தி உள்ளதா?   

நிச்சயமாக இல்லை. அவ்வாறெனில், ஏன் அவர்கள் கட்சியில், மனச்சாட்சியைத் துறந்து, தொடர்ந்து பயணிக்க வேண்டும்?  “அபிவிருத்தி” என, எவ்வளவு காலம் இவர்கள், வெறுவாய் மெல்லப் போகின்றார்கள்?   

“தமிழ்ப் பிரதேசங்கள் அபிவிருத்தியில் கடை நிலையில் உள்ளன; கூட்டமைப்புக்கு அபிவிருத்தி தொடர்பில் அக்கறை இல்லை. ஆகவே, அபிவிருத்தி அவசியம். அபிவிருத்திக்காக அல்லும் பகலும் உழைக்கின்றோம்” என, இவர்களால் நியாயம் கற்பிக்கப்படலாம்.   

அபிவிருத்தி முக்கியம்; அதில் எந்தவித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. ஆனால், வறுமைநிலையில் முதல் இடத்தில் உள்ள முல்லைத்தீவு மாவட்டத்தில், அங்கு பிறந்து தொழில்செய்து வந்தவன், வாடி வதங்க, எங்கிருந்தோ வந்தவன் படையினரின் நிழலில் வாடி அமைத்து, செல்வம் தேடுகின்றான்; இதனால், அங்கு தொழில்செய்து வந்தவனின் வருமானம் இல்லாமல் போகின்றது. ஆகவே, பொருளாதார அபிவிருத்தி இல்லாமல் போகின்றது.   

இந்தப் பொருளாதாரச் சுரண்டல், மிகப் பெரியளவில் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. பாரிய அளவில் கடல் உணவுகள் அள்ளப்பட்டு, தென்பகுதிக்குக் கொண்டு செல்லப்படுவதால், வன்னி மக்களுக்கு கடல் உணவு, தற்போது மலையளவு விலையில் கிடைக்கின்றது. இதனால் கிடைக்க வேண்டிய புரதச்சத்து இல்லாமல் போகின்றது. இதனால் அவர்களது உடல், உள அபிவிருத்தியும் பாதிக்கப்படுகின்றது. 

ஆகவே, தென்னிலங்கை தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள், இவ்வாறாக இழந்து கொண்டிருக்கும் பல அபிவிருத்திகளை, மீட்டுத்தர முன்வருவதுடன், இனியும் நிகழாமல் பாதுகாக்கவும் வேண்டும்; செய்வார்களா?   

1948ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நான்காம் திகதி தொடக்கம், நேற்று வரை, தமிழ் மக்களுக்குச் சேதாரங்களை வழங்கிய கொழும்பு தேசியக் கட்சிகள், இன்று மனம் திருந்தி, தமிழ் மக்களுக்கு ஆதாரமாக மாறும் என எந்தத் தமிழ் மகனும் மகளும் கருதவில்லை.   

நல்லிணக்கத்தை மலரச் செய்வார்கள் என வாக்களிக்க அவர்கள், நெடுங்கேணி, கொடுக்குநாறி மலையில், கடவுளைக் கும்பிடக் கூட தடை விதிப்பது, இதற்கான இறுதி உதாரணமாகும்.   

ஆகவே, தென்னிலங்கைக் கட்சிகளில், தமிழ்ப் பிரதிநிதிகள் பங்கு கொண்டு செயற்படுவதால், தமிழ் மக்களுக்குக் கிடைத்து வருகின்ற நன்மைகளைக் காட்டிலும், இதனால், பெரும்பான்மையின அரசாங்கங்களுக்குக் கிடைத்து வருகின்ற நன்மைகள் பன்மடங்கு அதிகம்.   

தற்போது, நல்லிணக்கம் என்ற முகமூடிக்குள் ஒளிந்திருந்து, இனவாதம் சத்தமில்லாது, தமிழ்ச் சமூகத்தின் கல்வி, பாரம்பரியங்கள், தொழில்முறைமைகள் போன்றவற்றின் போக்கை மாற்ற முனைகின்றது. இந்நிலையில், அதே பெரும்பான்மையினக் கட்சிகளுக்குத் தமிழ் மக்களது வாக்கைக் கோருவது கூட, ஒரு விதத்தில் நாடகமே.   

ஆகவே, “அவர் நாடமாடுகின்றார்; இவர் நாடகமாடுகின்றார்” எனக் கூறி, தங்களது சொந்த நலனுக்காக, மக்கள் சேவை என்ற முத்திரை குத்திப் பலர் நாடகமாடுகின்றார்கள்.   

தொடர்ந்தும் நாடகங்களைப் பார்க்கும் பார்வையாளராக தமிழ் மக்கள் இருக்கப் போகின்றார்களா?  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .