2025 ஜூலை 12, சனிக்கிழமை

நீக்கப்பட்டவரை மீண்டும் முதலமைச்சராக்கிய இந்திய உச்சநீதிமன்றம்

Thipaan   / 2016 ஜூலை 18 , மு.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மத்திய - மாநில அரசு உறவில் ஒரு மிக முக்கியமான மைல்கல்லை ஏற்படுத்தியிருக்கிறது. அருணாசல மாநிலத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் மாநில ஆளுநர் அதிகாரம் என்ன? மாநில சட்டமன்ற சபாநாயகரின் அதிகாரம் என்ன? ஆளுநர் அமைச்சரவையின் ஆலோசனைப்படி நடப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய கேள்விகளுக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ள ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன சட்ட அமர்வு வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை அளித்துள்ளது.

நீதிபதிகள் ஜே.எஸ்.ஹேகர் தலைமையில் மூன்று நீதிபதிகள் ஒரு தீர்ப்பு, நீதிபதி தீபக் மிஷ்ரா தலைமையில் ஒரு தீர்ப்பு, நீதிபதி மதன் லோகுர் தலைமையில் ஒரு தீர்ப்பு என ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கினாலும், மூன்று தீர்ப்புகளுமே ஒரு மனதாக 'அருணாசலப் பிரதேச ஆளுநரின் செயல் அரசியல் சட்ட விரோதமானது. அதனால் பதவி நீக்கம் செய்யப்பட்ட முதலமைச்சர் நேபம் துக்கி மீண்டும் பதவியில் அமர்த்தப்பட வேண்டும்' என்று ஒருமித்த கருத்தில் தீர்ப்பளித்துள்ளார்கள்.

ஆளுநர், சபாநாயகர், அரசியல் சட்ட விரோத நடவடிக்கைகளை நீதிபதி ஜே.எஸ். ஹேகர் தலைமையிலான மூன்று நீதிபதிகள் விளக்கினார்கள். ஆளுநர் பதவி குறித்தும் இந்திய அரசியல் சட்டத்தை எப்படி வகுத்துப் பார்க்க வேண்டும் என்பது பற்றியும் நீதிபதி தீபக் மிஷ்ரா இந்திய அரசியல் நிர்ணய சபையில் நடைபெற்ற விவாதங்களை அடிப்படையாக வைத்து விளக்கினார். சபாநாயகரை நீக்குவது, அது விடயத்தில் ஆளுநருக்கு எந்த உரிமையும் இல்லை என்பது உள்ளிட்ட விடயங்களை விளக்கிய நீதிபதி மதன் லோகூர் 'நடைபெற்ற சம்பவங்கள் எல்லாம் ஒரு 'பொலிடிக்கல் சர்க்கஸ்' போல் இருக்கின்றன' என்று கூறியிருக்கிறார்.

இந்திய அரசியல் சட்டத்தில் உள்ள 356 ஆவது பிரிவு மாநில அரசைக் கலைப்பதற்கான பரிந்துரை அனுப்பும் அதிகாரத்தை ஆளுநருக்கு அளிக்கிறது. அமைச்சரவையின் ஆலோசனைப்படி நிர்வாக விடயங்களில் ஆளுநர் முடிவு எடுப்பார் என்பதை அரசியல் சட்டத்தின் 163 ஆவது பிரிவு கூறுகிறது.  சட்டமன்றத்தை கூட்டும் ஆளுநரின் அதிகாரம் குறித்து அரசியல் சட்டப் பிரிவு 174 கூறுகிறது. சட்டமன்றத்துக்கு தகவல் அனுப்பும் உரிமை, சட்டமன்றத்தில் உரையாற்றும் உரிமை போன்றவற்றை ஆளுநருக்கு அரசியல் சட்டப் பிரிவு 175 வழங்குகிறது. 179 ஆவது பிரிவில் சட்டமன்ற சபாநாயகரை நீக்கும் முறை பற்றி தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. கட்சித் தாவல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் உரிமையை சட்டமன்றத்தில் உள்ள சபாநாயகருக்கும் நாடாளுமன்ற சபாநாயகருக்கும் இந்திய அரசியல் சட்டத்தில் 'பத்தாவது அட்டவணை' அதிகாரம் அளிக்கிறது. இந்த அதிகாரங்களைப் பயன்படுத்துவதில் நடைபெற்ற போட்டிகள் பற்றியும் அத்துமீறல்கள் பற்றியும் இந்த 328 பக்கத் தீர்ப்பில் இந்திய உச்சநீதிமன்றம் தோலுரித்துக் காட்டியிருக்கிறது. அத்துடன் இனிவரும் காலங்களில் ஒரு மாநிலத்தின் ஆளுநர் இது போன்ற நேரங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது என்பது பற்றிய வரையறைகளை வகுத்துக் கொடுத்து விட்டது.

அருணாசலப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. முதலமைச்சராக நேபம் துகி இருந்தார். 60 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 47 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருந்தது. பாரதீய ஜனதா கட்சிக்கு 11 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே‚ 2015 ஜூன் முதல் வாரத்தில் அருணாசலப் பிரதேச ஆளுநராக ராஜ்கோவா பதவியேற்றார். அதன் பிறகுதான் அருணாசலப் பிரதேச காங்கிரஸ் தேன் கூட்டில் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களே கல் வீசினார்கள். 47 காங்கிரஸ் ஆதரவு எம்.எல்.ஏக்களில் முதலில் 17 பேர், காங்கிரஸ் முதலமைச்சராக இருந்த நேபம் துகிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்கள். அகில இந்திய காங்கிரஸ் தலைமை உடனே இவர்களிடம் விளக்கம் கோரியது. இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்ட பிறகு 17 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் என்பது 21 ஆக உயர்ந்தது. இப்படி காங்கிரஸ் முதலமைச்சர் நேபம் துகி திக்குமுக்காடிக் கொண்டிருந்த நேரத்தில் ஆளுநர் ராஜ்கோவின் நடவடிக்கை அதிருப்தி எம்.எல்.ஏக்களையும் பாரதீய ஜனதா கட்சிக்கு இருந்த சட்டமன்ற உறுப்பினர்களையும் தைரியமாக செயல்பட வைத்தது.

இதன் அடுத்தகட்டமாக அதிருப்தி எம்.எல்.ஏக்களை காங்கிரஸ் கட்சியின் சார்பில் இருந்த சபாநாயகர் நேபம் ராபியா நீக்கினார். அப்படி நீக்கப்பட்டவரில் துணை சபாநாயகராகரும் அடக்கம். உடனே அவர், சபாநாயகரையும் மற்ற அதிருப்தி எம்.எல்.ஏக்களையும் பதவி நீக்கம் செய்யும் உத்தரவை இரத்துச் செய்தார். தன்னை நீக்கிய உத்தரவை தானே இரத்து செய்தார் துணை சபாநாயகர்.

இதற்கிடையில் சட்டமன்றத்தைக் கூட்ட ஏற்கெனவே நிர்ணயித்திருந்த திகதியை கவர்னர் ராஜ்கோவா மாற்றி, அந்தத் திகதிக்கு முன்பே ஒரு நாள் சட்டமன்றத்தைக் கூட்டி, பெரும்பான்மையை நிரூபிக்கும்படி முதலமைச்சர் நேபம் துகிக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவு அமைச்சரவையின் பரிந்துரை இல்லாமல் செய்யப்பட்டது என்பதால் விவகாரம் வெடித்தது. இந்நிலையில் நேபம் துகி அமைச்சரவை கூடியது. முன்கூட்டியே சட்டமன்றத்தை கூட்டும் ஆளுநர் உத்தரவு அரசியல் சட்ட விரோதமானது. ஆகவே அதை திரும்பிப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று அமைச்சரவை, தீர்மானம் நிறைவேற்றி அதை ஆலோசனையாக ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. அதற்கு கவர்னர் செவி சாய்க்கவில்லை. அதனால் திட்டமிட்டபடி முன்கூட்டியே அழைக்கப்பட்ட திகதியில் சட்டமன்றம் கூடியது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் சபாநாயகராக இருந்த நேபம் ராபியா நீக்கப்பட்டார். காங்கிரஸ் காட்சியின் சார்பில் முதலமைச்சராக இருந்த நேபம் துகி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தார். புதிய முதல்வராக கலிகோ பல் பொறுப்பேற்றார்.

இப்படி ஒரு ஆட்சி மாற்றத்தை முற்றிலும் அரசியல் சட்ட விரோதமாக நிகழ்த்தி விட்டார் அருணாசலப் பிரதேச மாநிலத்தின் ஆளுநர் என்பதுதான் உச்சநீதிமன்றத்துக்கு முன்பு சென்ற வழக்கு. இதில் மூன்று முக்கிய கேள்விகள் விவாதிக்கப்பட்டன. ஒன்று ஏற்கெனவே அமைச்சரவையின் ஆலோசனையின் கீழ் முடிவு செய்யப்பட்ட சட்டமன்ற கூட்டத்திற்கான திகதியை அந்த அமைச்சரவையின் ஆலோசனை இன்றி ஆளுநரே தன்னிச்சையாக 'முன்கூட்டியே சட்டமன்றக் கூட்டத்தைக் கூட்டுங்கள்' என்று கூற முடியுமா? இந்த கேள்விக்கு 'முடியாது‚ அது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது' என்று தீர்ப்பளித்துள்ளது உச்சநீதிமன்றம். இரண்டாவது கேள்வி 'ஆட்சியில் இருக்கும் கட்சி எம்.எல்.ஏக்களுக்குள் ஆளுநர் மூக்கை நுழைத்து அரசியல் செய்யலாமா' என்பது. இந்தக் கேள்விக்கும் 'முடியாது' என்பதுதான் பதில். அது ஆளுநரின் வேலை அல்ல‚ ஆட்சியில் இருக்கும் கட்சிக்குள் நடக்கும் விஷயங்களில் ஆளுநர் மூக்கை நுழைக்கக் கூடாது. அந்த கட்சியின் அமைச்சரவை நம்பிக்கையிழந்து விட்டது என்று ஆளுநர் நினைத்தால், சட்டமன்றத்தில் நம்பிக்கையைப் பெறுமாறு முதலமைச்சருக்கு உத்தரவிடலாம். மற்றபடி உள்கட்சி விவகாரங்களில் ஆளுநர் தலையிடக்கூடாது' என்று இந்திய உச்சநீதிமன்றம் அறுதியிட்டுக் கூறி விட்டது. மூன்றாவது கேள்வி சபாநாயகர் நீக்கம். இந்தக் கேள்விக்கு பதிலளித்த உச்சநீதிமன்றம், 'சபாநாயகர் நீக்கம் குறித்து அரசியல் சட்டம் தெளிவான நடைமுறைகளை வகுத்துள்ளது. அதை மீறி நடப்பதற்கு ஆளுநருக்கு அதிகாரமில்லை.' என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறது.

இப்படி அனைத்து விதத்திலும் மாநிலத்தில் நடைபெறும் ஆட்சியைச் சீர்குலைக்கும் அரசியல் சட்ட விரோத நடவடிக்கைகளில் அந்த மாநிலத்தின் ஆளுநரே தலையிடுவதற்கு இந்தத் தீர்ப்பு சம்மட்டி அடி கொடுத்திருக்கிறது. அரசியல் சட்டம் 356 ஆவது பிரிவின் கீழ் ஒரு மாநில அரசைக் கலைக்கும் அதிகாரம் தொடர்பாக ஆளுநருக்கும் குடியரசுத் தலைவருக்கும் உள்ள அதிகார வரம்புகளை 'எஸ்.ஆர் பொம்மை' வழக்கில் இந்திய உச்சநீதிமன்றம் வரையறுத்துக் கொடுத்தது. அதனால் மாநில அரசுகளை கலைக்கும் மத்திய அரசின் அதிகாரம் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இந்த தீர்ப்பால் கலைக்கப்பட்ட மாநில அரசுகளை மீண்டும் ஆட்சியில் அமர வைக்க வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு ஏற்பட்டது. சமீபத்தில் உத்தரகான்ட் மாநிலத்தில் அந்த வகையில்தான் கலைக்கப்பட்ட காங்கிரஸ் அரசு மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றது. 'குதிரை பேரம்' (எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குவது), சட்டம் ஒழுங்கு சீர்குலைவு போன்ற காரணங்களை வைத்து ஒரு மாநில அரசை கலைப்பதற்கு 'எஸ்.ஆர் பொம்மை' வழக்கில் உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு ஏற்கெனவே கடிவாளம் போட்டிருக்கிறது.

அரசியல் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தைத் தாண்டி ஆளுநர் பயணித்து, காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சராக இருந்தவரை பதவி நீக்கம் செய்தார். அப்படி பதவி நீக்கம் செய்யப்பட்ட முதலமைச்சரை மீண்டும் பதவியில் அமர்த்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. சட்டமன்ற விவகாரத்தில் ஆளுநர் தன் இஷ்டப்படி செயல்படுவதற்கு மூக்கணாங்கயிறு போட்டிருக்கிறது இந்திய உச்சநீதிமன்றம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .