2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

வெளிநாட்டு நீதிபதிகள் இறைமைக்கு ஆபத்தா?

Thipaan   / 2016 ஜூலை 14 , பி.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

போர்க்குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகள் இடம்பெறுவார்களா- இல்லையா என்ற விடயத்தில் அரசாங்கத்துக்குள் கருத்து முரண்பாடுகள் உச்சக்கட்டத்தில் இருப்பது போன்று அண்மைய நாட்களாக வெளிப்பட்டுக் கொண்டிருந்தன.

போர்க்குற்ற விசாரணையில் உள்நாட்டு நீதிபதிகளே இடம்பெறுவர் என்றும், வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை என்றும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கூறிவந்தனர்.

இராணுவ அதிகாரிகளுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அளித்திருந்த இதுபற்றிய வாக்குறுதியை முன்வைத்து, கடந்த மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பித்த வாய்மூல அறிக்கையில் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைன்; சந்தேகம் எழுப்பியிருந்தார்.

எனினும், ஜெனீவா கூட்டத்தொடருக்குப் பின்னர் கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், இதுபற்றிய ஜனாதிபதியின் கருத்து அவரது தனிப்பட்ட நிலைப்பாடே என்றும், அரசாங்கம் இதுபற்றி இன்னமும் முடிவெடுக்கவில்லை என்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்திருந்தார்.

இதற்குப் பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தாம் ஜனாதிபதியாக இருக்கும் வரை எந்தவொரு வெளிநாட்டு நீதிபதியையோ நிறுவனத்தையோ, நீதித்துறையில் தலையீடு செய்ய அனுமதிக்க மாட்டேன் என்று உறுதியாக கூறியிருந்தார்.

வெளிநாட்டு நீதிபதிகள் குறித்த ஜனாதிபதியின் கருத்துத் தனிப்பட்டதே என்ற மங்கள சமரவீரவின் கருத்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தான், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

ஜனாதிபதி மட்டுமன்றி, பிரதமர் மற்றும் பொறுப்பு வாய்ந்தவர்கள் பொது வெளியில் வெளியிடும் கருத்துக்கள் அனைத்தும் அரசாங்கத்தின் நிலைப்பாடுகளாகத்தான் கருத்தில் கொள்ளப்படும். அது சரியானதே என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்து.

இந்த விவகாரம் தொடர்பாக அரசாங்கம் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும், சம்பந்தப்பட்ட பங்காளர்கள் அனைவருடனும் கலந்துரையாடிய பின்னரே, விசாரணைப் பொறிமுறை தீர்மானிக்கப்படும் என்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, கொழும்பிலும் ஜெனீவாவிலும் வாக்குறுதிகளை அளித்திருக்கிறார்.

ஆனால், பொறுப்புக்கூறல் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள் உள்ளடக்கப்பட வேண்டும் என்ற விடயம், முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரச்சினையாக இருக்கும் நிலையில், அரசாங்கம் இந்த விடயத்தில் தெளிவான நிலைப்பாட்டில் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கும் விவகாரமும் வெளிநாட்டுப் பங்களிப்பை பெற்றுக்கொள்ளும் விவகாரமும் வௌ;வேறானவை என்று பிபிசிக்கு அளித்த பேட்டியின் மூலம், இந்த விடயத்தில் அரசாங்கம் ஒரே நிலைப்பாட்டில்தான் இருக்கிறது என்று உறுதிப்படுத்திக் கொள்ள முடிகிறது.

ஒரு பக்கத்தில் அனைத்துப் பங்காளர்களுடனும் கலந்து பேசி முடிவெடுக்கப்படும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு என்று கூறிக் கொண்டே, மறுபுறத்தில், அரசாங்கத்தின் நிலைப்பாட்டை பொறிமுறையின் மீது திணிக்க முயற்சிக்கப்படுகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ, அரசாங்கமோ இந்த விவகாரத்தில் தமது நிலையில் இருந்து விலக மறுக்கின்ற - நெகிழ்ந்து கொடுக்காத போக்கை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இப்படியான நிலையில் பாதிக்கப்பட்ட தரப்பாகிய தமிழர் தரப்பை, வெளிநாட்டு நீதிபதிகளில்லாத ஒரு விசாரணைப் பொறிமுறைக்கு இணங்கவைக்க முடியாது.

அவ்வாறானதொரு உள்நாட்டுப் பொறிமுறைக்கு அரசாங்கம் அழுத்தம் கொடுக்குமானால், அது முள்ளிவாய்க்காலில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்குச் சமமானதாகவே இருக்கும்.

தமிழர்களைப் புலிகளிடம் இருந்து மீட்பதற்கென்றே போரை நடத்தியதாக மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் கூறியது. ஆனால் தமிழர்களின் கருத்து அங்கு கேட்கப்படவில்லை.

தமிழர்களின் விருப்புக்கு மாறாக- வெளிநாட்டு நீதிபதிகளில்லாத ஒரு பொறிமுறைக்கு இணங்க வைப்பதும் அதுபோலவே அமையப் போகிறது.

வன்னிப் போரைத் தீர்மானிக்கும் சக்தியாக முன்னைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இருந்தது போலவே, விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள் விவகாரத்தில் தீர்மானிக்கும் சக்தியாக, இப்போதைய ஜனாதிபதியே இருக்கப் போகிறார் என்றால், சம்பந்தப்பட்ட பங்காளர்களுடன் பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடல்களை நடத்துவது அவசியமற்றது.

பொறுப்புக்கூறலுக்கான விசாரணைப் பொறிமுறை விடயத்தில் ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் வெளியிட்டு வரும் கருத்துக்கள் பாதிக்கப்பட்ட தரப்பினரான தமிழர்களை மட்டும் அதிருப்திக்குள்ளாக்கவில்லை.

இலங்கை அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பை வழங்கி வந்த, சர்வதேச சமூகத்துக்கும் இது ஏமாற்றத்தை அளிக்கின்ற விடயமாகவே இருக்கிறது.

அரசாங்கம், இந்த விவகாரத்தை எவ்வாறு எதிர்கொண்டு தீர்வு காணப்போகிறது என்பதில் ஆழமான சந்தேகங்கள் இப்போதே ஏற்பட்டு விட்டன.

விசாரணைப் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்குவது இலங்கைக்குப் புதிய விடயமல்ல. ஏற்கெனவே அவர்கள் இலங்கையில் நடந்த பல்வேறு அரசியல் படுகொலைகள் பற்றிய விசாரணைகளில் பங்கேற்றிருக்கின்றனர்ƒ அறிக்கைகளையும் வழங்கியுள்ளனர்.

அதனை வெளிவிவகார அமைச்சர், பலமுறை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

அதேவேளை, வெளிநாட்டு நீதிபதிகள் விசாரணைகளில் பங்கேற்பது - தீர்ப்புகளை வழங்குவது என்ற இரண்டு விடயங்கள் உள்ளன.

வெளிநாட்டு நீதிபதிகள் இலங்கையின் தற்போதைய நீதிமன்றக் கட்டமைப்பில் தீர்ப்புகளை வழங்க முடியாது என்று சட்டநிபுணர்கள் கூறுகின்றனர். எனினும் வெளிநாட்டு நீதிபதிகள் விசாரணைகளில் பங்கேற்ற முன்னுதாரணங்கள் காணப்படுகின்றன. அதாவது கண்காணிப்பு நிலையில் பங்கேற்பதற்கு சட்டரீதியான தடைகளோ தடங்கல்களோ இருப்பதாகத் தெரியவில்லை.

ஆனால், போர்க்குற்ற விசாரணை விடயத்தில் - விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகள் பங்கேற்பதைக் கூட ஜனாதிபதி அனுமதிக்கத் தயாராக இல்லை.

இந்தநிலையில் தீர்ப்புக்களை வழங்கும் வெளிநாட்டு நீதிபதிகள் போர்க்குற்ற விசாரணைகளில் பங்கேற்க வேண்டுமானால், அரசியலமைப்பு ரீதியான திருத்தங்களைச் செய்ய வேண்டும். அதற்கான வாய்ப்புகள் இருந்தாலும், அத்தகையதொரு மாற்றத்தை செய்ய அரசாங்கம் தயாராக இல்லை.

போர்க்குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்ற கருத்துடையோரை விட, போர்க்குற்றங்களை இழைத்தவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற கருத்துடையவர்கள் தான் அரசாங்கத்தில் அதிகளவில் இருக்கிறார்கள்.

எனவே, இப்படியானதொரு சட்டத் திருத்தத்தை அரசாங்கம் ஒருபோதும் கொண்டு வரப் போவதில்லை.

தற்போது இலங்கையின் நீதித்துறை சுதந்திரமாகச் செயற்படுகின்ற நிலையில், உள்நாட்டு நீதிபதிகள் நியாயமான தீர்ப்புக்களை வழங்குவார்கள் என்று தமிழர் தரப்பை நம்பிக்கை கொள்ள வைக்கும் கருத்துக்களை அரசதரப்பில் இருந்து பலரும் முன்வைத்து வருகின்றனர்.

ஆனால், தீர்ப்புக்களை வழங்கும் நீதிபதிகள் மாத்திரம் போர்க்குற்ற விசாரணையில் சுதந்திரமானவர்களாக இருந்தால் மட்டும் போதாது. வழக்குத்தொடுப்பவர்கள், விசாரணையாளர்கள், சட்டத்தரணிகள் ஆகிய தரப்பினரும் சுதந்திரமானவர்களாக - நம்பகரமானவர்களாக இருக்க வேண்டும்.

அப்போதுதான் எந்தவொரு வழக்கிலும் நீதியை நிலைநாட்ட முடியும். அதனால் தான், வெளிநாட்டு மற்றும் கொமன்வெல்த் நீதிபதிகள், வழக்குத்தொடுனர்கள், விசாரணையாளர், ஆகியோரை உள்ளடக்க வேண்டும் என்று ஜெனீவா தீர்மானத்தில் உறுதியாக வலியுறுத்தப்பட்டிருந்தது.

உள்நாட்டு வழக்குத் தொடுனர்கள், விசாரணையாளர்கள் போர்க்குற்றங்களை வெளிக்கொண்டு வந்து, நீதியைப் பெற்றுக்கொடுப்பார்கள் என்பதற்கு எந்த அடிப்படை நம்பிக்கையும் இன்று வரை கிடையாது.

சாதாரண வழக்குகளில் கூட படையினரையும் முன்னைய ஆட்சியாளர்களையும் பாதுகாக்கும் வகையில் இன்னமும் நீதித்துறையின் பல்வேறு அங்கங்களும் அக்கறை காட்டி வருவது வெளிப்படையான விடயம்.

இப்படியான நிலையில், போர்க்குற்றம் என்று வரும் போது, தனியே நீதிபதிகள் மாத்திரமன்றி, வழக்குத்தொடுப்பவர்களும் விசாரணையாளர்களும் கூட நம்பகரமானவர்களாக நடுநிலையானவர்களாக இருக்க வேண்டும். அதனால்தான் வெளிநாட்டவர்களின் பங்களிப்பை இந்த விடயத்தில் தமிழர் தரப்பு கோருகிறது.

இதனை மறுப்பதற்கே இறைமை என்ற விடயத்தை அரசாங்கம் பயன்படுத்திக் கொள்கிறது. வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் விசாரணையாளர்கள் பங்கேற்றால் நாட்டின் இறைமை பாதிக்கப்பட்டு விடும் என்று பிரசாரங்கள் செய்யப்படுகின்றன.

வெளிநாட்டில் இருந்து நீதிபதிகள் வந்து தீர்ப்பளிப்பதால் மாத்திரம் நாட்டின் இறைமை காப்பாற்றப்பட்டு விடாது.

இதேபோன்ற சிந்தனை பிஜி போன்ற நாடுகளில் இருந்திருந்தால், இலங்கை நீதிபதிகளுக்கு அங்கு தீர்ப்புகளை அளிக்கும் வாய்ப்புகள் கிடைத்திருக்காது.

இலங்கை நீதிபதிகள் பிஜியில் பணியாற்றுவதால் அந்த நாட்டின் இறைமை ஒன்றும் பாதிக்கப்பட்டு விடவில்லை. அது யாரிடமும் அடகு வைக்கப்பட்டு விடவில்லை.

இறைமை என்பதும், வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமளிக்கும் விவகாரமும் ஒன்றுடன் ஒன்று குழப்பிக் கொள்ள வேண்டிய விடயமல்ல‚

நீதியை நிலைநாட்டுவதில் நம்பகத் தன்மையை ஏற்படுத்திக் கொள்வதுதான் முக்கியமானது. அந்த நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தத் தவறும் அரசாங்கத்தினால் ஒருபோதும் நீதியை நிலைநாட்டவும் முடியாதுƒ இறைமையைக் காப்பாற்றவும் முடியாது.

நாம் இலங்கையர்கள் என்ற உளரீதியான சிந்தனைதான் இறைமையின் உச்சமாக இருக்க முடியும். தமிழர்கள் மத்தியில் அந்த நிலையை ஏற்படுத்த முடியாத எந்த அரசாங்கத்தினாலும் நாட்டின் இறைமையைக் காப்பாற்ற முடியாது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .