2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

வேரை இழத்தலின் வலி!

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 30 , பி.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(வடக்கிலிருந்து புலிகளால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட இருபதாவது ஆண்டு நினைவுக் கட்டுரை)

•    மப்றூக்

ஒரு தாவரத்தை அது முளைத்த மண்ணிலிருந்து பிடிங்கியெடுத்து வேறிடத்தில் நடுவதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அநேகமாக, அந்தத் தாவரம் பிழைப்பதென்பது மிக அரிது. அப்படிப் பிழைத்தாலும் செழிப்பாக வளராது. அது முளைத்து வளர்ந்த மண்ணில்தான் அதன் பாதி உயிர் ஒட்டிக் கிடக்கிறது. அதனால்தான் அந்த தாவரம் பிடுங்கியெடுக்கப்படும்போது கிட்டத்தட்ட அது இறந்து போகிறது.

ஆத்மா இல்லாத, ஒரு தாவரத்துக்கே அதன் பிறப்பிடத்திலிருந்து பிடுங்கியெடுக்கப்படும்போது இத்தனை இன்னல்கள் என்றால், மனிதனின் நிலை – மிகக் கொடுமை!

தான், பிறந்து – வளர்ந்த மண்ணிலிருந்து பலாத்காரமாக பிடுங்கியெறியப்படும் ஒருவன் அனுபவிக்கும் வலியும், இன்னல்களும், அவமானங்களும் - அனுபவத்தால் மட்டுமே உணரக் கூடியவை!

தமது மண்ணிலிருந்து புலிகளால் வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ்லிம்களுக்கும், யுத்தத்தின்போது தங்கள் வாழ்விடங்களிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட தமிழர்களுக்கும் வலிகள் என்பவை வேறு வேறானவைகள் அல்ல!

ஆனாலும், கடந்த காலத்தில் புலிகளால் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டபோது அதுபற்றி தமிழ் தரப்பிலிருந்து போதுமான அளவு எதிர்க்குரல் எழுப்பப்படவில்லை என்பது கசப்பானதோர் உண்மையாகும்.

புலிகள் செய்ததையெல்லாம் நியாயப்படுத்தும் தமிழர் தரப்பைச் சேர்ந்த ஒரு கூட்டம், வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டபோதும் அதற்கு நியாயம் கற்பிக்கத் தொடங்கியது. ஆனாலும், முஸ்லிம்கள் அவ்வாறு வெளியேற்றப்பட்டமையை தமிழ் மக்களில் மிக அதிகமானோர் வெறுத்தார்கள் அல்லது விரும்பவில்லை என்பதையும் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். இருந்தபோதும், புலிகள் மீதான அச்சத்தினால் தமது வெறுப்பினை தமிழ் மக்களால் அப்போது வெளியிட முடியவில்லை!

கொழும்பில் நான் ஊடக நிறுவனமொன்றில் கடமையாற்றியபோது, என்னுடன் வேலை செய்த தமிழ் நண்பரொருவர்ளூ வடக்கு முஸ்லிம்களை புலிகள் வெளியேற்றிய நடவடிக்கையினை அடிக்கடி நியாயப்படுத்திப் பேசுவார். முஸ்லிம்கள் ராணுவத்துக்கு உளவு பார்க்கும் செயலில் ஈடுபட்டமையினாலேயே அவர்கள் புலிகளால் வெளியேற்றப்பட்டார்கள் என்று – புலிகளுக்காக அவர் வாதாடிக் கொண்டேயிருப்பார்.

அந்த நண்பர் சொன்ன விடயங்கள் உண்மையாகக் கூட இருக்கலாம். சிலவேளைகளில் ராணுவத்தினருக்காக முஸ்லிம்களில் ஒருவரோ, இருவரோ, அல்லது சிலரோ - உளவு பார்க்கும் செயலில் ஈடுபட்டிருக்கலாம். அதற்காக, வடக்கிலிருந்த சுமார் ஒரு லட்சம் முஸ்லிம்களையும் இரண்டு மணி நேரத்துக்குள் அவர்களின் மண்ணிலிருந்து வேரோடு பிடுங்கியெறிந்தமை எந்த விதத்தில் நியாயமாகும்?!

இந்த இடத்தில் அப்பாவித்தனமாக நமக்குள் ஒரு கேள்வி எழுகிறது. வடக்கிலிருந்த தமிழர் தரப்பிலும் ராணுவத்துக்காக உளவு பார்த்தவர்கள், புலிகளைக் காட்டிக் கொடுத்தவர்கள் என நிறையப்பேர் இருந்தார்களல்லவா? அப்படியென்றால், அந்த உளவாளிகளைக் காரணமாக வைத்து வடக்கிலிருந்த தமிழர்களையெல்லாம் ஏன் புலிகள்; வெளியேற்றவில்லை!

எனவே, ராணுவத்துக்காக உளவு பார்த்ததால்தான் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டார்கள் என்று புலிகளாலும், புலி ஆதரவாளர்களாலும் கூறப்படும் கதையானது, வெற்றுக் கதைகள் அல்லது கட்டுக் கதைகளாகும்!

புலிகளால் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமைக்கு வேறு ஒரு கதை உள்ளதாகச் சொல்லப்படுகிறது. ஆனாலும், அது இங்கு - இப்போது தேவையில்லை!

பழையவற்றைக் கிளறிக்கொண்டும், ஆளாள் மீது குற்றம் சுமத்திக் கொண்டுமிருப்பதால் எதுவும் ஆகிவிடப்போவதில்லை. எனினும், நமது தரப்புத் தவறுகளை பெருமனதுடன் நாம் ஏற்றுக் கொள்வதாலும், அதற்காக பாதிக்கப்பட்ட தரப்பிடம் நாம் மன்னிப்புக் கோருவதாலும் எதுவும் எவர்க்கும் குறைந்து விடவும் போவதில்லை.

இடம்பெயர்வு, அதனால் ஏற்படும் இன்னல்கள், அவமானங்கள், கொடுமைகளை - போதும் என்றளவுக்கு தமிழ் மக்கள் அனுபவித்துவிட்டார்கள். பலாத்காரமாக இடம்பெயர்க்கப்படுதலின் வலியை அனுபவபூர்வமாக உணர்ந்து வைத்துள்ள தமிழ் மக்கள், புலிகளால் வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதை நியாயப்படுத்தமாட்டார்கள் என்பது நமது நம்பிக்கையாகும்.

யாழ்பாணத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவரை ஒரு தடவை கொழும்பில் வைத்துச் சந்திக்கக் கிடைத்தது. அவருக்கு 60 வயதிருக்கும். அவர் எனது நண்பரொருவரின் தூரத்து உறவினர். என்னை ஒரு முஸ்லிம் என அறிந்து கொண்டதும், அவரின் முஸ்லிம் நண்பர்கள் பற்றியும், யாழ்ப்பாணத்தில் அவர்களுடைய அயலவர்களாக இருந்த முஸ்லிம்கள் பற்றியும் அந்தப் பெரியவர் பேசத் தொடங்கினார். யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் இடம்பெயர்ந்த பிறகும் கூட, அவரின் குடும்பத்தினருக்கும், அயலவர்களாக இருந்த முஸ்லிம் குடும்பத்தவர்களுக்கும் இடையிலான தொடர்புகள் இன்னும் இருப்பதாக அவர் கூறினார். இப்படி, அந்த உறவை – நட்பைப் பற்றிப் பேசிக் கொண்டு போன அந்தப் பெரியவர் ஒரு கட்டத்தில் கண்கலங்கி அழுதே விட்டார்.

போலியற்ற அந்த அழுகையை இப்போது நினைத்தாலும், மெய் சிலிர்த்துப் போகிறது!

வடக்கிலிருந்து முஸ்லிம்கள் விரட்டப்பட்டு இன்றுடன் இருபது வருடங்கள் நிறைவடைந்து விட்டன. ஆனாலும், அந்த மக்களின் அவல வாழ்வு இன்னும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. 'அகதி' என்கிற பெயரால் அவர்கள் அழைக்கப்படும்போது, அவர்களுக்குள் ஏற்படுகின்ற வலி, அவமானம் குறித்தெல்லாம் நம்மில் எத்தனைபேர்தான் சிந்தித்திருக்கின்றோம்?

கோடீஸ்வரர்களாக உறக்கத்துக்குச் சென்ற எத்தனையோ வடக்கு முஸ்லிம்கள், விடியும்போது எதுவுமற்றவர்களாக வெளியேற்றப்பட்டார்கள். நாம் அகதி என்று அழைக்கும் வடக்கு முஸ்லிம்களில் அதிகமானோர், தமது மண்ணில்; மேல் தட்டு வாழ்க்கையினை அனுபவித்துக் கொண்டிருந்தவர்கள் என்பதை நம்மில் பலபேர் நினைத்துப் பார்ப்பதேயில்லை. ஆகவேதான் அவர்களை 'அகதி' எனும் சொல்லால் நாம் அழைத்துக் கொண்டிருக்கின்றோம். அவ்வாறு அழைப்பதால் அவர்களுக்கு ஏற்படும் 'ஆத்ம வலி' குறித்து நம்மில் பலர் கவலைப் படுவதேயில்லை!

இது ஒருபுறமிருக்க, வடக்கு முஸ்லிம்களை விரட்டியடித்த பாவத்தின் சொந்தக்காரர்களான சில முன்னாள் புலிகள் - இப்போது கூட அவர்களின் பிழைகளை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை என்பதும் மிக விசனத்துக்குரிய விடயமாகும்.

புலிகளின் முக்கிய பொறுப்புக்களில் இருந்த – தற்போதைய பிரதியமைச்சர் முரளிதரன், முதலமைச்சர் சந்திரகாந்தன் ஆகியோர் புலிகள் இயக்கத்தில் இருந்தபோது - புரிந்ததும், நிகழ்ந்ததுமான தவறுகளை இப்போது கூட, ஏற்றுக் கொண்டு மன்னிப்புக் கோருவதற்குத் தயாராக இல்லை! தமது தவறுகளுக்கு மன்னிப்புக் கோருவதற்கே மறுக்கும் இவர்கள், இவர்களாலும், இவர்கள் அங்கம் வகித்த இயக்கத்தினாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியாக எதைத்தான் செய்துவிடப் போகிறார்கள்!

புலிகளால் புரியப்பட்ட பிழைகளை சந்திரகாந்தன் - முரளிதரனின் தலையில் போடுவதும், பின்னர் முரளிதரன் அவற்றை பிரபாகரனின் தலையில் இறக்கி வைத்து அறிக்கை விடுவதும் வாடிக்கையான செயல்களாகிவிட்டன.

புலிகள் இயக்கத்தின் யுத்த வெற்றிகளுக்கும், சாதனைகளுக்கும் - தானே பிரதான காரணம் என மார்பு தட்டும் விநாயகமூர்த்தி முரளிதரன், புலிகளின் தவறுகளையும் பொறுப்பேற்றே ஆக வேண்டும். புலிகள் இயக்கத்திலிருந்து விலகி வந்து விட்டதனால் மட்டும், சந்திரகாந்தனோ, முரளிதரனோ புனிதர்களாகி விடப்போவதில்லை!

இவைதவிர, வடக்கு முஸ்லிம்கள் விடயத்தை அரசியலாக்கி அதன் மூலம் தமது பதவிகளையும், அரசியல் இருப்புக்களையும் தக்க வைத்துக் கொள்ளும் கேவலமான விளையாட்டுக்களில் நமது அரசியல்வாதிகள் ஈடுபட்டுவருவதும் வெட்கக்கேடான விடயமாகும். புத்தளத்தில் வாழும் வடக்கு முஸ்லிம்களின் பெயரால் சில அரசியல்வாதிகளும், அவர்களின் கூட்டத்தாரும் வயிறு வளர்த்துக் கொண்டிருப்பது சமூக துரோகம்!
 
புத்தளத்தில் வாழும் வடக்கு முஸ்லிம்களில் சில குடும்பத்தவர்கள் மட்டுமே தொடர்ந்தும் புத்தளத்தில் இருப்பதற்கு விரும்புவதாகக் கூறப்படுகிறது. ஏனையோர் தமது சொந்த மண்ணுக்குத் திரும்ப வேண்டுமென்றே ஆசைப்படுகின்றார்கள். ஆனால், இதுவரையும், சில நூற்றுக் கணக்கான குடும்பங்கள் மட்டுமே வடக்கில் குடியேற்றப்பட்டுள்ளன. ஏனையோர் 'அகதிகள்' என்கிற அழியாப் பெயருடன் புத்தளத்திலும் வேறுபல இடங்களிலும் வலியோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த இடத்தில் ஒரு கசக்கும் உண்மையைக் கூறியே ஆக வேண்டியிருக்கிறது. உதாரணமாக, புத்தளத்தில் வாழும் வடக்கு முஸ்லிம்கள் மீள் குடியேறுவதை விடவும் அங்கு இருப்பதையே சில முஸ்லிம் அரசியல்வாதிகள் விரும்புகின்றார்கள் என்று கவலையோடு கூறினார் அங்குள்ள நமது நண்பரொருவர்.

பிச்சைக்காரனின் புண்ணைப்போல், இந்த 'அகதி'கள் விவகாரத்தைத் காட்டிக் காட்டியே, தமது அரசியலையும், பொருளாதாரத்தையும் குறித்த அரசியல்வாதிகள் வளர்த்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பது நமது நண்பர் கவலைப்பட்டுக் கூறிய மற்றொரு விடயமாகும். இந்த 'அகதி'கள் இல்லாமல் போவது இந்த அரசியல்வாதிகளுக்கு ஆபத்தானதாம்!

இப்படியான அவலங்கள் அசிங்கங்களுக்கெல்லாம் அப்பால், வேரை இழந்த அந்த மக்களின் வலி குறித்து இன்றைய தினம் நாம் எல்லோரும் ஒரு கணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

வேர்களையும், அவை பரவிக் கிடந்த மண்ணையும் இழத்தலின் வலி மிகக் கொடுமையானது!

வலி என்பது எல்லா இனங்களுக்கும் ஒன்றுதானே!! 


  Comments - 0

 • Mohd Ishaq Sunday, 31 October 2010 04:40 PM

  மனம் உருகும் உன்மைகள்,
  மற்றவரை துன்பப்படுத்தி அதில் நியாயம் காண்பவன் தனது துன்பதிலாவது உன்மை, உணர்வு, வலி என்பவற்றை உணரட்டும்.
  நீ விதைத்ததயே நீ அறுப்பாய்
  இதில் பாமரன் என்ன, அதிகாரி ஆனால் என்ன, அரசியல்வாதி ஆனால்தான் என்ன
  காத்திரு,,, உனக்கும் வலி வரும் வரை.
  கிழக்கான்,,,,,,,,,,,

  Reply : 0       0

  azhar mohamed ismail Sunday, 31 October 2010 09:59 PM

  அகதிகளை வைத்துத்தான் அரசியல் நடத்த வேண்டும் என நினைக்கும் அரசியல் வாதிகள் நம் சமூகத்தில் இருக்கும் வரை அகதிகள் பிரச்சினை என்றைக்குமே முடியப் போவதில்லை......

  Reply : 0       0

  jeyarajah Tuesday, 02 November 2010 12:02 PM

  கட்டுரையை வாசித்தேன்.எனது நண்பர் ஒருவர் இஸ்லாம் மதத்தை
  சேர்த்தவர். ஆசிரியர்.பிள்ளைகளுடன் மிகவும் கவலையுடன் வெளியேறினார்.தமிழினம் வெட்கப்பட வேண்டிய விடயம்.பல தமிழர்கள் கவலை அடைவதை இஸ்லாம் நண்பர்கள் உணர்ந்து கொள்ள வேண்டுகின்றேன்.இவ் விடயத்தை
  தமிழ்இ இஸ்லாம் என்று பார்க்கவேண்டாம். இதேவிடயம் அமிர்தலிங்கத்திற்கும் யாழ் தமிழ் மக்களுக்கும் நடந்தது கண்கூடு.
  யாழ் தமிழ் மக்கள் ஒரு இரவில் யாழ் மண்ணைவிட்டு வெளி ஏறினர்.
  உரிமைக்காக போராடுகின்ற ஒரு இனம் இன்னொரு இனத்தின் உரிமையைப் பறிப்பது அநியாயம்.

  Reply : 0       0

  Nifrees ismail lebbe Thursday, 04 November 2010 09:53 PM

  சில உண்மைகளைச் செவிமடுக்க முடிந்தது.
  இன்றும் கூட தமிழ் சகோதரர்கள் முஸ்லிம்கள் மீது வீண் பலி சுமத்துவதைக் கேட்டுக் கொண்டே இருக்கிறம். சிலர் fb கூட பகிரங்கமா முஸ்லிம்களைக் காண்கிறார்கள். உண்மையை அவர்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை.
  வரலாறுகளை கொண்டு கொண்டு கற்றுக்கொள்ளாத பட்சத்தில் வரலாறு அதன் ஆரம்பத்துக்கே பாயும்.

  Reply : 0       0

  puttalam citizan Monday, 08 November 2010 01:22 AM

  இதில் வழக்கமாக இருட்டடிப்பு செய்யப்படும் ஒரு கசப்பான உண்மை ஒளிந்துள்ளது. அகதி வாழ்வை காட்டி வளர்ந்த அரசியல் ஒரு பக்கம் வெளிநாட்டு NGO க்கள் அள்ளி இறைத்து அதன் மூலம் கோடீஸ்வரர் அனோர் இன்னொரு பக்கம் இடம் பெயர்ந்து புத்தளத்தில் வாழும் அகதிகளை விற்றுப் பிழைப்பு நடத்தி வருகின்றனர். போதாக்குறைக்கு புத்தளம் மண்ணின் மைந்தர்களின் வாழ்வை இந்த இரு தரப்பும் சூறையாடுவது யார் கண்ணிலும் படுவதில்லை. அதற்கு ஆண்டவன் தான் சாட்சி!

  Reply : 0       0

  EKSaar Monday, 08 November 2010 08:59 PM

  தமிழர்களில் அதிகமானோர் முஸ்லிம்களின் வெளியேற்றத்தை வெறுத்தார்கள் என்று கட்டுரையாளர் கூறுகிறார். இதை அவரால் நிரூபிக்கமுடியுமா? வெறுமனே தமிழ் தரப்பை தாஜா செய்வதற்காக இவ்வாறான பிழையான தகவல்கள் பரப்பப்படுவது எவ்வகையில் ஊடக தர்மம்? அதிகமானோர் வெறுத்த ஒன்றை செய்வதற்கு தமிழ் தரப்பு எப்படி புலிகளை அனுமதித்தது?

  Reply : 0       0

  EKSaar Monday, 08 November 2010 09:00 PM

  தமிழர்களில் அதிகமானோர் முஸ்லிம்களின் வெளியேற்றத்தை வெறுத்தார்கள் என்று கட்டுரையாளர் கூறுகிறார். இதை அவரால் நிரூபிக்கமுடியுமா? வெறுமனே தமிழ் தரப்பை தாஜா செய்வதற்காக இவ்வாறான பிழையான தகவல்கள் பரப்பப்படுவது எவ்வகையில் ஊடக தர்மம்? அதிகமானோர் வெறுத்த ஒன்றை செய்வதற்கு தமிழ் தரப்பு எப்படி புலிகளை அனுமதித்தது?

  Reply : 0       0

  Mabrook Tuesday, 09 November 2010 04:45 PM

  என்பவருக்குரிய பதில்: நீங்கள் சொல்வது போல், தமிழ் தரப்பை தாஜா பண்ண வேண்டியிருந்தால் இந்தக் கட்டுரையை நான் எழுதாமல் விட்டிருப்பதே மிகச் சிறந்த முடிவாக இருந்திருக்கும். மேலும், தமிழ் நண்பர்களோடு எனது வாழ்நாளின் கணிசமானதொரு காலத்தைக் கழித்தவன் என்கிற வகையில் எனக்குத் தெரியும், வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட ஈனச்செயலலை தமிழர்களில் அதிகமானோர் விரும்பவேயில்லை. ஆனால், இதையெல்லாம் வாக்கெடுப்பு நடத்தி நிரூபிக்க முடியாது. அதேவேளை, அதிகமானோர் வெறுத்த ஒன்றைச் செய்வதற்கு தமிழ் தரப்பு எவ்வாறு புலிகளை அனுமதித்தது என்று அப்பாவித்தனமாக ஒரு கேள்வியை முன்வைத்திருக்கின்றீர்கள். புலிகளின் கைகளில் கொடிய ஆயுதங்கள் இருந்தபோது புலிகளைக் கண்டித்து அல்லது விமர்சித்து விட்டு வாழ்ந்திருக்கலாம் என்று நீங்கள் நம்புகிறீர்களா? புலிகள் இருந்திருப்பார்களேயானால் இந்தக் கட்டுரை கூட வெளிவந்திருக்காது. காரணம், எனக்கோ - தமிழ் மிரர் நண்பர்களுக்கோ ஆயுத மொழியில் பேசத் தெரியாது!

  உங்கள் கருத்துக்களுக்கு நன்ற

  Reply : 0       0

  Eksaar.blogspot.com Wednesday, 10 November 2010 04:43 AM

  இந்த கட்டுரையை எழுதாமல் விட்டுருந்தால் தமிழ் தரப்பை தாஜா செய்ததாக இருக்க முடியும் என்று நீங்களே கூறுகிறீர்கள். இது தமிழர்களின் மனநிலையை தெளிவாக படம்பிடிக்க இல்லையா? யாழ் முஸ்லிம்களின் வெளியேற்றம் பற்றி தமிழ் தரப்பு பேசுவதைக்கூட விரும்பவில்லை என்பதை இது நிரூபிக்கவில்லையா? இன்று தமிழ் இணையத்தில் எழுதும் தமிழர்களில் எத்தனை பேர் ஆயுத அச்சுறுத்தல் இல்லாத இன்றைய காலகட்டத்தில் இதை பற்றி எழுதுகிறார்கள்? எத்தனை யாழ் தமிழர்கள் முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் பற்றி உண்மையான அக்கறை கொள்கிறார்கள்? எழுதுவோர் பேசுவோர் எல்லோரும் அகதி என்ற பிச்சைகார புன்னை வைத்து அவர்கள் வாழ்கிறார்கள் அரசியல் செய்கிறார்கள் என்று மட்டுமல்லவா சொல்கிறார் நன்றி மப்ரூக் பதிலுக்கு. நான் சில யதார்த்தங்களை மறைக்காமல் சொல்லவே விரும்புகிறேன்.

  Reply : 0       0

  Mabrook Friday, 12 November 2010 02:25 AM

  Eksaar அவர்களுக்கான பதில்: என்னுடைய பதிலை நீங்கள் சரியாக விளங்கிக் கொள்ளாமல், எதிராளியை வீழ்த்த வேண்டும் என்கிற இலக்கினை மட்டுமே கொண்ட ஒரு பட்டிமன்றக் காரரின் மனநிலையோடு வாசித்திருக்கின்றீர்கள்! நான் குறிப்பிட்டிருக்கின்றேன், 'நீங்கள் சொல்வது போல் தமிழ் தரப்பை தாஜா பண்ண வேண்டியிருந்தால்' என்று! ஆக, அந்த வாக்கியத்தை 'நீங்கள் சொல்வது போல்' என்கிற இடத்திலிருந்து வாசியுங்கள். உங்கள் கருத்தை மையப்படுத்தியே அந்தப் பதிலை எழுதினேன். நண்பரே, மற்றவரின் முதுகு சொறிவதற்கு பேனா தேவையில்லை, அதற்கு காய்ந்து போன ஒரு மிலாற்றுத் துண்டே போதுமானது! மீண்டும் உங்கள் கருத்துகளுக்கு நன்றி!

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .