2025 ஜூலை 03, வியாழக்கிழமை

நீரின் கோரமுகம்! (நீர் என்பது இங்கு நீர் மட்டுமல்ல)

A.P.Mathan   / 2011 ஜனவரி 17 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

• மப்றூக்

சுனாமிக்குப் பிறகு நாட்டில் ஏற்பட்டுள்ள மிகமோசமான அழிவு – தற்போதைய வெள்ள அனர்த்தமாகும். கிட்டத்தட்ட 11 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 06 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், தொகை அதை விடவும் பெரிதாகும். மக்களின் விவசாயம் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தொழில்கள் அனைத்தும் முடக்கம். இந்த நிலைக்கு இயற்கைதான் காரணம் என்றாலும் கூட, இயற்கையை மட்டும் காரணமாகக் கூறிவிட முடியாது!

மழையால் தற்போது ஏற்பாட்டுள்ள வெள்ளம் மற்றும் அதன் பாதிப்பின் கடுமை போன்றவைகளுக்கு நம்மவர்களில் சிலரே காரணம் என்றால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?

வெள்ள நிலைமைகள் தொடர்பாக நாம் செய்தி சேகரிக்கச் சென்ற இடங்களிலெல்லாம், வெள்ளம் இவ்வாறு கடுமையாக ஏற்பட்டமைக்கும், நீர் - விரைவாக வடிந்தோட முடியாமல் தேங்கி நிற்பதற்கும் பிரதான காரணம் - சரியான திட்டமிடல்கள் இல்லாமல், தவறான முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வடிகான்களேயாகும் என்று மக்கள் புகார் கூறினார்கள்.

இந்தக் குற்றச்சாட்டு நூறு வீதம் உண்மையாகும். அரசியல்வாதிகள் - தமது ஆதரவாளர்களும், கையாட்களும் உழைக்க வேண்டும் என்பதற்காக தங்களின் வரவு செலவுத்திட்ட நிதியிலிருந்து ஒரு தொகை நிதியினை ஒதுக்கி - கொந்தராத்து எனும் பெயரில் கொடுத்துவிடுகின்றனர்.

கொந்தராத்துக்களைப் பெற்ற ஆதரவாளர்களோ, தமக்கு வழங்கப்பட்ட நிதியில் எங்காவது ஒரு வீதியினை அல்லது வடிகான் என்கிற பெயரில் ஒன்றை மிகவும் தரம்குறைந்த முறையில் நிர்மாணித்து விட்டு, செலவு போக - மிகுதிப் பணத்தினைச் சுருட்டிக் கொள்கின்றனர். இப்படியான வீதிகளையும் வடிகான்களையும் நீங்கள் ஊருக்கு ஆயிரம் காணலாம்.

இவ்வாறு அமைக்கப்பட்ட வீதிகளும், வடிகான்களுமே இன்று – வெள்ளம் வடிந்தோட முடியாதவாறு தடுத்து நிற்கின்றன.

இது மட்டுமல்ல இன்னொரு கூத்தும் இருக்கிறது. வடிகான்களை அமைப்பதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் வருகிறார்கள். வடிகான்களை அமைப்பதற்கான இடங்களை தெரிவு செய்கிறார்கள். ஆனால், வீதியின் எல்லையில் பலர் கட்டிடங்களைக் கட்டி வைத்துக் கொண்டிருக்கின்றனர். இதனால், வடிகான்களை அமைக்கும் பொருட்டு அந்தக் கட்டிடங்களை உடைத்துத் தருமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் கேட்கிறார்கள். இதற்கமைய ஒரு சிலர் உடைத்து இடம் கொடுக்கின்றனர். இன்னும் சிலரோ தமது கட்டிடங்களை உடைக்கமாட்டோம் என சண்டித்தனம் பண்ணுகின்றனர். கேட்டால் - தாங்கள் யாராவது ஒரு ஆளுங்கட்சி அரசியல்வாதியின் வால் அல்லது கை என்கின்றார்கள்.

இதனால், வீதி அபிவிருத்தி அதிகாரசபையினரால் திட்டமிட்டதொரு வடிகான் முறையை பல பிரதேசங்களில் நிர்மாணிக்க முடியவில்லை. இதன் காரணமாகவும் - வெள்ளம் வடிந்தோடுவதற்குரிய சீரான வடிகான் முறைமை இல்லாமல் பல ஊர்கள் இந்த வெள்ளத்தில் மூழ்கியிருக்கின்றன.

ஆக, இப்போது சொல்லுங்கள்! தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்துக்கு இயற்கை மட்டும்தான் காரணமா?

இதில் ஆச்சரியமான விடயம் என்னவென்றால், இந்த வெள்ளத்தின்போது கடற்கரையை அண்டிய பல பகுதிகளும் மூழ்கியிருக்கின்றன. சாதாரணமாக கடல்கரை சார்ந்த மண்ணில் நீர் தேங்குவதில்லை. அந்த மண் மிக இலகுவில் நீரை உறிஞ்சி விடும். ஆனால், தற்போதைய வெள்ளத்தில் கடற்கரைப் பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. காரணம், அப்பகுதிகளில் முன்யோசனைகளின்றி அமைக்கப்பட்டுள்ள கொங்றீட் மற்றும் கிரவல் வீதிகளும், பிழையான முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வடிகான்களுமாகும்.

இப்படி, நம்மவர்களின் முட்டாள்தனங்களை மளிகைக்கடைத் துண்டில் பொருட்களை எழுதுவது  மாதிரி அடுக்கிக் கொண்டே போகலாம்.

இம்முறை பெய்த மழை - வரலாறு காணாதது என்பதும், ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் தடுக்க முடியாதது என்பதும் உண்மைதான். ஆனால், அனர்த்தத்தின் கடுமைக்குக் காரணம் - நாம் மேலே சொன்ன இவர்களும், இவைகளும்தான் என்பதை மறுத்துரைக்க முடியாது!

இது ஒருபுறமிருக்க, இந்த வெள்ளம் பல அரசியல்வாதிகளின் கருணையற்ற முகத்தைத் தோலுரித்துக் காட்டியிருக்கின்றது. மக்கள் வெள்ளத்தில் அந்தரித்துக் கொண்டிருந்தபோது, அந்தப் பகுதிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள் பலர் - கொழும்பில் ஹாயாக இருந்திருக்கின்றார்கள்! சிலர் ஊரில் இருந்தும் எட்டிப் பார்க்கவில்லை!

குறிப்பாக, அம்பாறை மாவட்டம் நீரில் தத்தளித்துக் கொண்டிருந்தபோது, இந்த மாவட்டத்தின் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும், அம்பாறை மாவட்ட முஸ்லிம்களுக்கு ஆயுள் முழுவதும் கடமைப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களும் - இந்த மாவட்ட மக்களை வந்து பார்க்கவேயில்லை என்பது மாபெரும் துரோகமாகும்!

அதேவேளை, ஒரு சில மக்கள் பிரதிநிதிகள் மட்டும், வெள்ள அனர்த்தத்தின் போது, மக்களுக்கு ஆறுதலாகவும் உதவியாகவும் இருந்தனர் என்பதையும் இங்கு கூறியே ஆகவேண்டும்.

குறிப்பாக, அம்பாறை மாவட்ட மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸின் மனிதாபிமானமும் சமூக அக்கறையும் மெச்சத்தக்கது. மழையில் நனைந்து - அலைந்து, மக்களுக்கு உதவிக்கொண்டேயிருந்தார் அவர்! மட்டுமன்றி, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அம்பாறைக்கு வந்திருந்தபோது, அவரை கல்முனை மாநகரப் பிரதேசங்களுக்கு அழைத்து வந்து, அமைச்சர் மூலமாக மக்களுக்கு நன்மைகளையும் பெற்றுக் கொடுத்திருந்தார். இவைதவிர, உணவு மற்றும் நிதியுதவிகளையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினார்.

இந்த இடத்தில் குறிப்பிடத்தக்க மற்றுமொருவர் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம். இவரும் வெள்ள அனர்த்தம் மிகக் கடுமையாக இருந்த காலப்பகுதியில் மக்களைச் சந்தித்ததோடு, உதவிகளையும் வழங்கியிருந்தார்.

ஆனால், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு மு.கா. நாடாளுமன்ற உறுப்பினரான ஹசனலி, பாதிக்கப்பட்ட மக்களை இந்தக் கட்டுரை எழுதப்படும் வரை, சென்று பார்த்ததாகவோ, ஆறுதல் கூறியதாகவோ தகவல்கள் இல்லை. இத்தனைக்கும், இந்தப் பிரதேச முஸ்லிம் மக்களுக்கு இவர் இரட்டிப்புக் கடமைப்பட்டவர். தேர்தலில் போட்டியிடாமல், மக்களின் வாக்குகளுக்குக் கிடைத்த தேசியப்பட்டியல் நாடாளுமன்ற நியமனம் மூலம் ஒன்றுக்கு இரண்டாவது தடவையாக உறுப்பினரானவர்! ஆனாலும், மக்களின் துயரத்தில் இவர் கடைசிவரை பங்கெடுக்கவேயில்லை!!

இவர் இப்படியென்றால், கிழக்கு மாகாணத்தின் ஒரேயொரு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரான அதாஉல்லாவை பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மருந்துக்கும் காணக் கிடைக்கவில்லை என்று அவரின் கட்சிக்காரர்களே சொல்லிக் கவலைப்பட்டுக் கொண்டார்கள். பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து அதாஉல்லாவின் வலது மற்றும் இடது கைகள் என அறியப்பட்டவர்கள் தமது பிரதேசங்களின் நிலைமைகளைக் கூறி, உதவிகள் எதையாவது பெறலாம் என நினைத்து அமைச்சரைத் தொலைபேசியில் பலமுறை அழைத்தும் பதிலில்லையாம்! சிலவேளை அமைச்சர் அதாஉல்லா, வெள்ள அனர்த்த காலத்தில் வழமைபோல் அவரின் அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் மட்டும் குதிரையோட்டிக் கொண்டிருந்திருக்கலாம். அதுபற்றி நாம் அறியோம்!

ஆனாலும், அமைச்சர் அதாஉல்லாவின் கட்சியைச் சேர்ந்த கிழக்கு மாகாணசபை உறுப்பினரான துர்கர் நயீம் - பாதிக்கப்பட்ட மக்களுக்கும், பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்குமென்று அவரின் சொந்தப் பணத்தில் உதவிகளைச் செய்திருந்தார்.

கிழக்கு மாகாணசபையின் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த உறுப்பினர்களான ஜெமீல் மற்றும் ஜவாத் ஆகியோரும் பாதிக்கப்பட்ட பிரதேச மக்களின் கஸ்டத்தில் பங்கெடுத்ததோடு, நிதியுதவிகளையும் வழங்கியிருந்தனர்.

இது இவ்வாறிருக்க, மு.காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் - அம்பாறை மாவட்டத்தில் கிட்டத்தட்ட வெள்ளமெல்லாம் வடிந்து முடிந்துவிட்ட நிலையில் 'பறவைக் கப்பலில்' (அதுதான் ஹெலிகொப்டர்) வந்து இறங்கி – பார்த்து விட்டுச் சென்றிருந்தார்.

ஹக்கீம் ஏன் வந்தார் - என்ன செய்தார் என்று தெரியவில்லை. பாதிக்கப்பட்ட மக்களைக் காண்பதற்காக அவர் வந்தபோது - ஒரு பாண் துண்டினைக் கூட கொண்டுவந்திருக்கவில்லை! மருதமுனையின் அல்-மனார் மத்திய கல்லூரி நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்தவர்களைக் காணவந்திருந்த அமைச்சர் ஹக்கீமிடம் இதுகுறித்து நாம் நேரடியாகவே விசாரித்தோம். 'பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன செய்யப் போகிறீர்கள்? எதைக் கொண்டு வந்தீர்கள்?' என்று பலமுறை அவரிடம் கேட்டும் கூட, ஹக்கீமிடமிருந்து மழுப்பலான பதில்களே நமக்குக் கிடைத்தன. ஆமாம் மகாஜனங்களே, முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவர் ரவூப் ஹக்கீம் பாதிக்கப்பட்ட மக்களைக் காண - வெறுங்கையுடனேயே வந்திருந்தார்!  

மக்கள் அந்தரித்துக் கொண்டிருந்தபோது வேறெங்கோ இருந்துவிட்டு, கடமை கழிப்பதற்காக வந்த பயணமாகவே, மு.கா. தலைவரின் இந்த 'பறவைக்கப்பல்' பயணத்தைப் பார்க்க முடிகிறது!!

ஒரு தேர்தல் என்றால் மழை, வெயில், வெள்ளம் என்று எதையும் பார்க்காமல் மக்களின் வாசற்படிகளில் காத்துக் கிடந்து வாக்கும் கேட்டுத் திரியும் நமது அரசியல்வாதிகளுக்கு, மக்கள் ஆபத்திலும், சோகத்திலும் மூழ்கிப்போய்க் கிடக்கும்போது, ஓர் ஆறுதலுக்காகவேனும் வந்து போக முடியாமல் போனமை கொடுமையானதே!

கொட்டும் மழையிலும், வெள்ளத்திலும் அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பகுதிகளுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் வரமுடிகிறது. ஆனால், மு.காங்கிரஸின் தலைவராலோ, அந்தக் கட்சியின் செயலாளராலோ வந்து பாரக்க முடியவில்லை என்பது - இவர்களைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் மக்களுக்குப் பெருத்த அவமானம்தான்!

சரி, தமது துன்பத்தில் பங்கெடுக்காத, தமக்கு ஆபத்தில் உதவாக இந்த அரசியல்வாதிகளுக்கும், அவர்களின் கட்சிகளுக்கும் நல்லதொரு பாடத்தைக் கற்பிப்பதற்கான சந்தர்தப்பம் உள்ளூராட்சித் தேர்தல் எனும் பெயரில் விரைவில் கிடைக்கவுள்ளதல்லவா? அப்போது மக்கள் இவர்களைத் தண்டிக்கலாம்தானே என்று கேட்டார் சமூக அக்கறையாளரொருவர்!

'ஆனால், நமது மக்களும் திருந்தமாட்டார்கள். மீண்டும் - கடந்த தேர்தல்களில் செய்த அதே தவறையே இந்தத் தேர்தலிலும் செய்வார்கள். தம்மை ஆபத்தான அனர்த்த நேரங்களில், எட்டிக்கூடப் பார்க்காத அரசியல்வாதிகளுக்கும், அவர்களின் கட்சிகளுக்கும்தான் இவர்கள் மீண்டும் வாக்களித்துத் தொலைப்பார்கள்.

ஆக, மக்கள் இவைகளையெல்லாம் புரிந்து கொள்ளாதவரை, அரசியல்வாதிகளும் மக்களின் விடயங்களில் இப்படி – கண்டும் காணாத போக்கினையே கடைப்பிடித்து வருவார்கள்' என்று ஆதங்கப்பட்டுக் கொண்டார் நமது ஊடக நண்பரொருவர்!

'ஆடுகள் தங்களை ஆடுகள் என்று உணரும்போது மந்தையிலிருந்து விலகிவிடுகின்றன' என்கிற கலீல் ஜிப்ரானின் வரிகள் இந்த இடத்தில் – நினைவுக்கு வருகின்றன.

மேலுள்ள வரிகள் கூறவரும் விடயம் மாறாமல், அதை - இப்படியும் சொல்லிப் பார்க்கலாம்...

'ஆடுகள் தங்களை ஆடுகள் என்று உணராதவரை மந்தையிலிருந்து விலகப் போவதேயில்லை!'

இது ஆடுகளுக்கு மட்டுமல்ல – நமது மக்களுக்கும் பொருந்தும்!!


You May Also Like

  Comments - 0

  • nakeer Tuesday, 18 January 2011 01:59 PM

    மப்ரூக் அவர்களே வெள்ள அனர்த்தத்தின் போது வீட்டிலே உறங்கிக் கொண்டிருந்த மட்டக்களப்பு மாவட்ட அரசியல் வாதிகளை பற்றியும் எழுதி இருந்தால் உண்மையை உலகம் அறிந்து கொள்ளுமல்லவா. .நான் கண்ட உண்மை சமூக ஆர்வலர்கள் வசூல் செய்து அகதிகளுக்கு கொடுக்கும் பொருட்களுக்கு அரசியல்வாதிகள் வந்து உரிமைகோரி போட்டோ பிடித்தது புதுமை .

    Reply : 0       0

    Mohamed Tuesday, 18 January 2011 03:27 PM

    நன்றி. ஹரிஸ், பைசல் காசிம் எம்பிக்கள் வந்தார்கள் என்று அவர்களின் சேவையை பாராட்டுங்கள். கட்டுரையிலிருந்து ஒன்று மட்டும் நல்லாவே புரியுது. நீங்க எதை உணர்துரீங்க என்று. ஆட்டிலிருந்து மந்தையா? அல்லது மந்தையிலிருந்து ஆடா பிரியப்போகின்றது? பொறுத்திருந்து பார்ப்போம்! சபல புத்தி கொண்ட அரசியல் வாதிகலால்தான் நம்ம சமூகமே பின்னோக்கி போகுது. ஒற்றுமைக்கு கட்டுரை எழுதுங்க. தலைமைக்கும் உறுப்பினர்களுக்கும் மக்களுக்கும் பிரிவு வராமல். நலவுக்கு நினையுங்க., நல்லதே நடக்கும்.

    Reply : 0       0

    nilam Tuesday, 18 January 2011 04:12 PM

    well said mabrook your article it was such a true and reality

    Reply : 0       0

    oork kuruvi Tuesday, 18 January 2011 05:38 PM

    கட்டுரை சிறப்பாக இருக்கிறது. வரிக்கு வரி புத்தளத்துக்கு பொருந்திப் போகிறது. படங்களும் பெரும்பாலும் புத்தளத்தை பார்ப்பதைப் போலவே இருக்கிறது. எங்கெல்லாம் சிறுபான்மை "தனித்துவ" அரசியல் சில பத்து வருடங்களாக நடைபெற்றதோ அங்கெல்லாம் இந்த அவலம் தான். மந்தைகள் எப்போதும் தாம் வெறும் கால்நடைகள் என்பதை அறிவதில்லை. ஒவ்வொரு தேர்தலிலும் புதிதாக ஒரு மேய்ப்பனை தெரிவு செய்யும். மீண்டும் மீண்டும் ஏமாறுவதற்கு!

    Reply : 0       0

    EKSaar Wednesday, 19 January 2011 05:38 PM

    மப்ரூக்..

    ஊடகங்களில் கவனிப்பாரற்றுக் கிடந்த அம்பாறை மாவட்டம் உங்கள் மூலம் வெளிச்சத்துக்கு வருவதில் மிக்க மகிழ்ச்சி.

    ஆயினும்,

    //'ஆனால், நமது மக்களும் திருந்தமாட்டார்கள். மீண்டும் - கடந்த தேர்தல்களில் செய்த அதே தவறையே இந்தத் தேர்தலிலும் செய்வார்கள். தம்மை ஆபத்தான அனர்த்த நேரங்களில், எட்டிக்கூடப் பார்க்காத அரசியல்வாதிகளுக்கும், அவர்களின் கட்சிகளுக்கும்தான் இவர்கள் மீண்டும் வாக்களித்துத் தொலைப்பார்கள்.//

    உங்கள் முழுக்கட்டுரையையும் கறைபடுத்திய பகுதி இது. நடுநிலைமையை பேணி இருக்கலாமே!

    இன்னும், வரப்போகும் உள்ளூராட்சித் தேர்தல்களில் அதாவுல்லாவோ, ஹசனலியோ ஹக்கீமோ போட்டியிடப்போவதில்லை.

    இன்னும் ஹரீஸ் தனக்கு அமைச்சர் பதவி ஒன்றை வேண்டுவதற்கான அழுத்தத்தை மக்களிடமிருந்து உருவாக்க இதை பயன்படுத்தியிருக்கலாம்.

    மக்கள் அவுலியாக்களுக்கு வாக்களிப்பதில்லை. தெரிந்துகொண்டே உள்ள கள்ளன்களில் யதார்த்தமான, தன் வீட்டை திருடாத சின்ன கள்ளனை தெரிகிறார்கள்.

    இச்சந்தர்ப்பத்தில் ஒப்பீட்டளவில் எம்மோடு எப்போதும் இருக்க வாய்ப்புள்ள தகுதியான தலைவர்களை கட்சி என்ற பெயரில் ஒதுக்கலாமா?

    //ஆக, மக்கள் இவைகளையெல்லாம் புரிந்து கொள்ளாதவரை, அரசியல்வாதிகளும் மக்களின் விடயங்களில் இப்படி – கண்டும் காணாத போக்கினையே கடைப்பிடித்து வருவார்கள்' என்று ஆதங்கப்பட்டுக் கொண்டார் நமது ஊடக நண்பரொருவர்!//

    ஊடகவியலாளர்களை விட மக்கள் யதார்த்தமாக சிந்திக்கிறார்கள் என்றும் தமது முதல் நோக்கத்திலிருந்து விலகாமலிருக்கிறார்கள் என்பதையும் தெளிவுபடுத்தும் பகுதி இது.

    இன்னும் பொறுப்புணர்ச்சியுடனும் சமூக அக்கறையுடனும் தொடர்ந்தும் கட்டுரைகளை தரவேண்டும் என எதிர்பார்க்கிறேன்/

    Reply : 0       0

    Mabrook Thursday, 20 January 2011 12:44 AM

    EKSaar: எப்போதும் ஏதோவொரு நிறத்தையே காட்டுகின்றதோரு கண்ணாடியினை அணிந்து கொண்டே நமது கட்டுரைகளை படிக்கின்றீர்கள் அல்லது உங்களை ஒரு மேதாவியாகக் காட்டிக் கொள்ள விரும்புகின்றீர்கள் என்பதை - உங்கள் கருத்துக்களினூடாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

    மேலும், #ஊடகவியலாளர்களை விடவும் மக்கள் தெளிவாகச் சிந்திக்கின்றார்கள்# எனும் உங்களின் வரியினூடாக, நீங்கள் ஊடகவியலாளர்களைச் சிறுமைப்படுத்தி அல்லது நையாண்டி செய்து பார்க்க விரும்புகின்றீர்கள் என்பதும் தெளிவாகத் தெரிகிறது.

    மக்கள் தெளிவாகச் சிந்தித்தால் சந்தோசமே.... அதுவே ஊடகவியலாளர்களின் இலக்காகும்!.

    Reply : 0       0

    Nakeel Thursday, 20 January 2011 02:10 AM

    மப்ரூக் அவைகளே,
    நல்ல முயற்சி ஒன்று செய்துள்ளீர்கள். என்னதான் எழுதினாலும் நீங்கள் என்ன சொல்ல வந்தீர்கள் என்பதும் மக்களுக்கு புரிந்திருக்கும். எதிலும் ஒரு சமநிலை வேண்டும். செய்தியை என்ன, எங்கே, எப்போ எவ்வாறு ... நடந்தது என்பதுடன் உங்கள் அபிப்பிராயம் சமநியில் இருக்கவில்லை. அரசியல் கால நோடீஸ் மாதிரியும் ஒருவஹையில் உங்கள் செய்தியை பார்க்கலாம். முஸ்லிம் சமூகம் முன்னேற கருத்து முன் வைக்க வேண்டும். அதை விட விமர்சனம் மட்டும் போதாது. ஆலோசனைகள் மக்களுக்கு மட்டுமல்ல தலைவர்களுக்கும் வேண்டும். .

    Reply : 0       0

    EKSaar Thursday, 20 January 2011 05:30 PM

    என்னைப்பற்றிய விமர்சனத்தை தவிர்த்திருக்கலாம். ஆயினும் உங்கள் எழுத்துக்களில் இழையோடும் சாயத்தை கண்டேன். அது கண்ணாடியல்ல. உங்களின் வளர்ச்சியை விரும்புபவனும் அவசியத்தை உணர்ந்தவனும் என்ற வகையில் மட்டுமே எனது விமர்சனங்களை முன்வைத்தேன்.

    நீங்கள் ஊடகவியலாளர்களைச் சிறுமைப்படுத்தி அல்லது நையாண்டி செய்து பார்க்க விரும்புகின்றீர்கள் என்பதும் தெளிவாகத் தெரிகிறது.

    அதைகாட்டிலும்

    ஆக, மக்கள் இவைகளையெல்லாம் புரிந்து கொள்ளாதவரை, அரசியல்வாதிகளும் மக்களின் விடயங்களில் இப்படி – கண்டும் காணாத போக்கினையே கடைப்பிடித்து வருவார்கள்' என்று ஆதங்கப்பட்டுக் கொண்டார் நமது ஊடக நண்பரொருவர்!

    என்பதில்தான் அதிக சிறுமைப்படுத்தல் தெரிகிறது! ஊடகம் என்பது மக்களுக்கே.. அவர்களை சிறுமைப்படுத்தவல்ல..

    இன்னும் அதிகமாக உங்களிடம் எதிர்பார்க்கிறேன்

    Reply : 0       0

    xlntgson Thursday, 20 January 2011 09:06 PM

    எல்லா ஊடகவாதிகளும் மக்களை நையாண்டி செய்கின்றனர் என்பது தான் உண்மை, எவ்வளவு ஆக்க பூர்வமாக சிந்தித்தாலும் மக்கள் தம்மக்கள் அல்ல- பொது மக்கள் என்றால் அவர்களுக்கு கிள்ளிக்கீரை மாதிரி, அரசியலரை எள்ளி நகையாடி பொதுமக்களின் ஆதரவை பெற்று பின் யாரை குறை கூறினார்களோ அவர்களோடு பதவிக்காகச் சேர்ந்து கொள்வர்! உயிரோடு அவுலியாவை எப்படி தேட இயலும் எல்லாரும் பொய் சொல்லும்போது முக்கியமாக அரசியலர்களும் ஊடகவாதிகளும் பயங்கரப்பொய்கள் சொல்லும் போது மக்களுக்கு அவ்வளவு நாசூக்காக பொய் சொல்லத் தெரியாது.
    ஊடக பட்டம் வேண்டுமோ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .