2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

இளம் தலைமுறையினருக்காக திருமதி சந்திரிகா ஆரம்பித்துள்ள தலைமைத்துவ பயிற்சி நிலையம்

Super User   / 2011 ஜனவரி 24 , பி.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கெலும் பண்டார, ஆர்.சேதுராமன்)

லங்கையில் அரசியல் முதல் வர்த்தகம் வரை பல துறைகளில் தலைமைத்துவ திறனுள்ள நபர்களின் குறைப்பாடு நீடித்து வருகிறது. தலைமைத்துவ திறனுள்ள நபர்களை உருவாக்குவதற்கு பல தரப்புகளிலிருந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சமூகத்தின் ஒவ்வொரு மட்டத்திலும்  சிறந்த தலைவர்கள் இல்லாவிடின் நாட்டில் சமூக பொருளாதார அபிவிருத்தி கற்பனை செய்ய முடியாததாகவே இருக்கும்.

இச்சூழ்நிலையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுரங்க இளம் தலைமுறையினருக்கு தலைமைத்துவ பயிற்சிகளை  அளிப்பதற்காக 'தலைமைத்துவ கற்கைகளுக்கான சிறிமாவோ பண்டாரநாயக்க நிலையம்' எனும் பயிற்சி நிலையத்தை உருவாக்கியுள்ளார்.
பிரிட்டனில் பதிவு செய்யப்பட்ட ஜனநாயகத்துக்கும் நீதிக்குமான மன்றம் எனும் அறக்கட்டளையின் கீழ் இந்நிலையம் செயற்படுகிறது.

கம்பஹா மாவட்டத்தின் நிட்டம்புவையில், 255 கண்டி வீதி, ஹொரகொல்ல , நிட்டம்புவ எனும் முகவரியில் அமைந்துள்ள இந்நிலையம் கடந்த செப்டெம்பர் மாதம் முதல் இயங்கி வருகிறது.

சிறந்த  தலைவர்களுக்கு அதிகார சுபாவத்திற்கு அப்பால் ஆழ்ந்த மனிதாபிமானப் பண்புகள் அவசியம்.  தீர்மானம் மேற்கொள்வதில் ஏனையோரைவிட சிறந்தவர்களாக இருக்க வேண்டும்.   நேர்மை, ஒழுக்கம், மதிப்பு, பெருந்தன்மை, விவேகம் என்பனவற்றை கொண்டிருக்க வேண்டும்.

 

பாடசாலை கல்வியைப் பூர்த்தி செய்து வெளியேறுவோருக்காக சிறிய வழியிலாவது தலைமைத்துவ பயிற்சிகளை வழங்குவதற்கு தீர்மானித்தாக திருமதி குமாரதுங்க டெய்லி மிரர்  மற்றும் தமிழ் மிரருக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின்போது இந்த கற்கை நிலையத்தை ஆரம்பித்தமைக்கான காரணம் குறித்து பேசினார்.

'இந்த நாட்டுக்கு  நல்ல தலைவர்கள் தேவை. பொதுத் துறையில் சொற்ப அளவிலான சிறந்த தலைவர்கள் உள்ளனர். அரசியலில் மாத்திரமல்ல, அரச சேவைத் துறையிலும் சொற்ப அளவிலான சிறந்த தலைவர்களே உள்ளனர். தனியார் துறையில்  சில சிறந்த  தலைவர்கள் உள்ளனர். கொலை செய்யாத பொய் சொல்லாத, கசிப்பு, போதைப்பொருள் விற்காத நல்ல தலைவர்கள் சிலரை நாம் உருவாக்க வேண்டும். இன்றைய அரசியல்வாதிகள் இவற்றைக்கூட செய்கின்றனர். ஆனால் அவர்கள் நாட்டிற்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்' என சந்திரிகா கூறினார்.

இதனால் இரு வருடங்களுக்கு முன்னர் தான் மேற்படி திட்டத்தை ஆரம்பித்ததாக திருமதி சந்திரிகா குமாரதுங்க கூறுகிறார். பண்டாரநாயக்க குடும்பத்திற்கு சொந்தமான காணியொன்றில் இப்பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது.

'பாடசாலை மாணவர்களுக்கு இருநாள் பயிற்சித்திட்டமொன்றை நாம் நடத்தினோம். அது சிறப்பாக அமைந்தது. அதன்பின் கல்விசார் ரீதியில் இதை செயற்படுத்த எண்ணினேன். அதனால் கடந்த செப்டெம்பர் மாதம் இந்த பயிற்சி நிலையத்தை ஆரம்பித்தேன்' என அவர் தெரிவித்தார்.
எனது தாயார் சிறிமாவோ பண்டாரநாயக்க உலகின் முதலாவது பெண் பிரதமராக பதவியேற்று 50 வருடங்கள் பூர்த்தியடைந்ததையொட்டி இந்நிலையம் ஆரம்பிக்கப்பட்டாகவும் திருமதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார்.

'முதலாவது தொகுதி மாணவர்கள் ஆரம்பத்தில் மிகவும் கூச்ச சுபாவமுடையவர்களாக இருந்தனர். பேசுவதற்கும் தயங்கினர். ஆனால் பயிற்சியின் இறுதிக்கட்டத்தில் மிகவும் தன்னம்பிக்கையானவர்களாக உள்ளனர். அண்மையில் நான் பயிற்சி வகுப்புகளை பார்வையிடுவதற்காக சென்றேன். அப்போது அம்மாணவர்கள்  என்னுடனும் விவாதம் புரிந்தனர். அது மிக நல்ல விடயம் ' என சந்திரிகா தெரிவித்தார்.

தற்போது சிங்கள மொழியில் மாத்திரம் பிரதான பயிற்சிகள் வழங்கப்படுகின்ற போதிலும் எதிர்காலத்தில் தமிழ் மாணவர்களுக்குத் தேவைப்படின் தமிழ் விளக்கங்களையும் வழங்கத் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். தமிழ் இளைஞர் யுவதிகளிடமிருந்தும் இப்பயிற்சிகளுக்கு எதிர்பார்ப்பதாக தமிழ் மிரருக்கு திருமதி சந்திரிகா குமாரதுங்க கூறினார்.

அடுத்த தொகுதி மாணவர்களுக்கான விண்ணப்பக் கோரல்கள் விரைவில் ஊடகங்கள் வாயிலாக விளம்பரப்படுத்தப்படும் எனவும் அப்போது மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

இப்பயிற்சி நிலையத்தின் நிர்வாகப் பணிப்பாளராக ஜஸ்டின் பெர்னாண்டோ விளங்குகிறார். முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளரான அவர் இந்நிலையத்தின் இப்பயிற்சித் திட்டம் குறித்து கூறுகையில், மாணவர்களுக்கு 3 மாதகாலம் வார இறுதி நாட்களில் இப்பயிற்சிகள் வழங்கப்படுகிறது.



நாட்டின் வௌ;வேறு பாகங்களைச் சேர்ந்த 24 மாணவர்கள் இப்பயிற்சி நெறிக்காக தெரிவு செய்யப்பட்டனர். கல்வியில் சிறந்த திறமையை வெளிப்படுத்தியவர்கள் இப்பயிற்சிக்கு சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

ஆளுமை அபிவிருத்தி, மேடைப்பேச்சாற்றால், சகிப்புத்தன்மை, செவிமடுத்தல், ஒழுக்கம், நேர்காணல் திறமை முதலானவை தொடர்பாக பயிற்சிகள் வழங்கப்படுகின்றன என ஜஸ்டின் பெர்னாண்டோ கூறினார்.

தேசிய கல்வியல் கல்லூரிகளின் முன்னாள் தலைவர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள்; ஆகியோரைக் கொண்ட குழுவொன்று இப்பயிற்சிகளுக்கான பாடத்திட்டத்தை தயாரித்ததாகவும் அவர் கூறினார்.

பயிற்சி பெறும் மாணவர்களை பிரபல தனியார் நிறுவனங்களுக்கு அழைத்துச் சென்று தலைமைத்துவ பயிற்சிகளை வழங்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

பல்கலைக்கழகத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களும் இந்நிலையத்தில் பயிற்சி பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையத்தில் பயிற்சி பெறும் க.பொ.த. உயர்தர வகுப்பு மாணவியான நதி ரட்ணாயக்க கருத்துத் தெரிவிக்கையில், இன்றைய சமூகத்தில் தலைமைத்துவம் எந்தளவு முக்கியமானது என்பதை உணர்ந்தால் இப்பயிற்சி நெறியை தெரிவு செய்ததாக கூறினார்.
தனது அன்றாட பணிகளை சிறப்பாக செய்வதற்கு இந்நிலையத்தில் பெற்ற பயிற்சிகள் உதவுவதாகவும் அவர் கூறினார். கேகாலை மாவட்டத்தின் கலிகமுவவிலிருந்து வாரம்தோறும் இந்நிலையத்திற்கு அவர் பயிற்சிக்காக வருகிறார்.

இந்நிலையில் தூர இடங்களிலிருந்து வரும் மாணவர்களுக்காக தங்குமிட வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக நிலையத்தின் நிர்வாகப் பணிப்பாளர் ஜஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

தேயிலை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள துஷார கருனாரட்னவும் இந்நிலையத்தின் மாணவர்களில் ஒருவராவார். தனது வர்த்தகத்தை திறம்பட நடத்திச் செல்வதற்கு இந்நிலையத்தில் தான் பெற்ற தலைமைத்துவப் பயிற்சிகள் மிகவும் உதவியாக உள்ளதென அவர் தெரிவித்தார்.

இந்நிலையத்தின் பயிற்சி பெறும் முதலாவது தொகுதி மாணவர்களுக்கான பயிற்சி நெறிகள் எதிர்வரும் பெப்ரவரி இறுதியுடன் பூர்த்தியடைவுள்ளன. இம்மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவை விமர்சையாக நடத்தத்  திட்டமிட்டுள்ளதாக ஜஸ்டின் பெர்னாண்டோ கூறினார்.

(Pic BY: Pradeep Dilrukshana)


 


You May Also Like

  Comments - 0

  • mam.fowz Wednesday, 23 February 2011 10:22 AM

    உண்மையில் இந்த அம்மா ஆட்சி சுப்பர்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .