2021 ஜனவரி 20, புதன்கிழமை

தமிழக சட்டமன்றத்தின் வைரவிழா: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பேசப்போவது என்ன?

A.P.Mathan   / 2012 நவம்பர் 19 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழக சட்டமன்றத்தின் வைரவிழா வருகின்ற 30ஆம் திகதி நடைபெறுகிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதா, இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, தமிழக ஆளுநர் ரோசைய்யா ஆகியோர் அந்த விழாவில் பங்கேற்கிறார்கள். சட்டமன்றத்தில் இருக்கும் உறுப்பினர்கள், முன்னாள் உறுப்பினர்கள் பலருக்கும் கடிதங்கள் அனுப்பப்பட்டு சட்டமன்றம் பற்றிய சிறப்புக் கட்டுரைகள் கோரப்பட்டுள்ளன. இந்திய ஜனநாயக வரலாற்றில் தமிழக சட்டமன்றம் வைரவிழா காணுவதை பெருமிதமாக நினைக்கிறார்கள்.

பெரும்பான்மை கிடைக்காத முதல் சட்டமன்றம்
தமிழக சட்டமன்றம் முதலில் "மெட்ராஸ் லெஸில்லேட்டிவ் கவுன்சில்" என்று அழைக்கப்பட்டது. பிறகு "மெட்ராஸ் லெஸிஸ்லேட்டிவ் அஸெம்பிளி" என்று மாறியது. இந்தியா குடியரசான பிறகு தமிழ்நாட்டில் அமைந்த முதல் சட்டமன்ற பேரவை 1952. அதைக்குறிக்கும் வகையில்தான் இப்போது தமிழக சட்டமன்ற வைரவிழா கொண்டாடப்படுகிறது. "சென்னை மாகாணம்" என்பது அப்போது ஆந்திர மாநில பகுதிகள், தென் கர்நாடகப் பகுதிகள், கேரளத்தில் உள்ள மலபார் பகுதிகள் அனைத்தும் இணைந்த மாகாணமாக இருந்தது. இன்று வைரவிழா நடக்கின்ற நேரத்தில் 151 சட்டமன்ற உறுப்பினர்களுடன் நிலைத்த ஆட்சியை அ.தி.மு.க. வழங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் அப்போது இந்தியா குடியரசான பிறகு நடைபெற்ற முதல் தேர்தலிலேயே (1952 தேர்தல்) எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. ஆனால் காங்கிரஸ் கட்சிக்குத்தான் அதிக உறுப்பினர்கள். அப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட 350 சட்டமன்ற உறுப்பினர்களில் 152 பேர் மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு இருந்தார்கள். ஆனாலும், அதிக எம்.எல்.ஏ.க்கள் உள்ள தனிப்பட்ட பெரும் கட்சி என்ற வகையில் காங்கிரஸின் சார்பில் ராஜாஜி முதலமைச்சரானார். அதற்கு உதவிக்கரமாக இருந்தவர் "காமன்வீல்" கட்சியின் சார்பில் 13 எம்.எல்.ஏ.க்களுடன் இருந்த மாணிக்கவேல் நாயக்கர். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் ராஜாஜி முதல்வரான போது அவர் எம்.எல்.ஏ.வோ, அல்லது எம்.எல்.சி.யோ அல்ல! அவரை அப்போதிருந்த கவர்னர் பிறகு எம்.எல்.சி.யாக நியமித்தார். அமைச்சரவையின் பரிந்துரை இல்லாமல் கவர்னர் ராஜாஜியை எம்.எல்.சி.யாக நியமித்து விட்டார் என்று பெரும் சர்ச்சை எழுந்தது.

முதல்வரே "ஆண்டவனை" பிரார்த்திக்க வேண்டுகோள் விடுத்தது!
இன்று மதசார்பற்ற கொள்கை பற்றி விளக்கமாகப் பேசுகிறோம். ஆனால் அன்றைய தினம் முதல்வராக ராஜாஜி பொறுப்பேற்ற போது ஒரு வித்தியாசமான சூழ்நிலை நிலவியது. குடிநீர் பஞ்சம், இரண்டாம் உலகப்போரின் விளைவால் ஜப்பான் படையெடுக்கலாம் என்று அச்சம் போன்றவை சென்னை மக்களை பீதியில் உறைய வைத்தது. மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாவட்டங்களை நோக்கி வெளியேறினார்கள். அந்த நேரத்தில், "சென்னையைக் காப்பாற்றும் படி ஆண்டவனை வேண்டிக் கொண்டு ஒரு குறிப்பிட்ட தினத்தன்று எல்லா ஆலயங்கள், மசூதிகள், கிறிஸ்துவ தேவாலயங்கள் போன்றவற்றில் பிரார்த்தனை செய்யுங்கள்" என்று ராஜாஜி வேண்டுகோள் விட்டார். ஒரு மாநில முதலமைச்சர் கர்நாடக மாநிலத்தில் இப்படி வறட்சியைப் போக்க வேண்டுகோள் விடுத்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஆனால் அன்று உருவான முதல் சட்டமன்றத்தின் முதல்வராக இருந்த ராஜாஜியே இப்படியொரு வேண்டுகோளை விடுத்திருக்கிறார். இதே சட்டமன்றத்தில் தான் தீவிரமாக "நாத்திகம்" பேசி திராவிடர் கழகத்திலிருந்து, பிறகு திராவிட முன்னேற்றக் கழகம் கண்டு, "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ற கோட்பாட்டை உருவாக்கி, தமிழக முதலமைச்சராக 1967இல் பொறுப்பேற்றார் அறிஞர் அண்ணா என்பதும் குறிப்பிடத்தக்கது.

இடைத் தேர்தல் தோல்விக்காக நம்பிக்கை கோரிய "ராஜாஜி"!
ராஜாஜி காலத்தில் நடைபெற்ற இன்னொரு முக்கியமான விடயம் உண்டு. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் - ராமநாதபுரம் மாவட்டத்தில் இரு மக்களை தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தார். அவற்றில் ஒரு தொகுதியான அருப்புக்கோட்டையிலிருந்து ராஜினாமா செய்தார். அங்கு காங்கிரஸின் சார்பில் வேட்பாளரை நிறுத்திய ராஜாஜி, " நான் முதல்வராக நீடிக்க வேண்டுமென்றால் காங்கிரஸ் வேட்பாளரை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்" என்று அந்த இடைத் தேர்தலை முத்துராமலிங்கத் தேவருக்கும், தனக்குமான "கௌரவப் பிரச்சினையாக" மாற்றினார் ராஜாஜி. ஆனால் காங்கிரஸ் வேட்பாளர் தோற்றார். ஓர் இடைத் தேர்தலில் தன் கட்சி வேட்பாளர் தோற்றதற்காக சட்டமன்றத்தில் நம்பிக்கைத் தீர்மானம் கோரிய ஒரே முதலமைச்சர் ராஜாஜி என்றால் மிகையாகாது. நான்கு நாட்கள் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. இறுதியில் நடைபெற்ற வாக்கெடுப்பில் ராஜாஜிக்கு 200 பேர் ஆதரவாக வாக்களித்தனர். எதிர்ப்பாக 151 பேர் வாக்களித்தனர். சபையின் நம்பிக்கையைப் பெற்று முதலமைச்சராக மீண்டும் பணியைத் தொடர்ந்தார். வைரவிழா காணும் சட்டமன்றத்தில் இருந்த முதல்வர் ஒருவரே விரும்பி கொண்டு வந்த முதல் நம்பிக்கை கோரும் தீர்மானமும் அதுதான்!

வாழ்த்திய சங்மா, வரவிருக்கும் பிரணாப் முகர்ஜி!
இந்த வைர விழா சட்டமன்றத்தின் மூத்த உறுப்பினர்களாக பொள்ளாச்சி மகாலிங்கம் (1952-1957) போன்ற முன்னாள் எம்.எல்.ஏ.க்களும், மூத்த அமைச்சராக பூரவாகன் (1957) போன்றோரும் இருக்கிறார்கள். ஏற்கனவே தி.மு.க. ஆட்சியில் 14.7.1997 அன்று ஒருமுறை தமிழக சட்டமன்றத்தின் பவள விழா கொண்டாடப்பட்டது. அது  1921ஆம் வருடம் முதல் மாகாண சுயாட்சிச் சட்டமன்றம் தொடங்கி வைக்கப்பட்டதைக் குறிக்கும் பவள விழாவும், 1935ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தின் படி 1937இல் அமைந்த சென்னை "மெட்ராஸ் லெஸிஸ்லேட்டிவ் அஸெம்பிளி"யின் வைரவிழாவையும் இணைத்து நடத்தப்பட்ட விழா. அதற்கு அப்போது இந்திய குடியரசுத் தலைவராக இருந்த சங்கர் தயாள் சர்மா வாழ்த்திச் செய்தி அனுப்பியிருந்தார். பி.ஏ. சங்மாகதான் அப்போது நாடாளுமன்ற சபாநாயகர். அவர் விடுத்திருந்த செய்தியில், "தமிழக சட்டமன்றத்தின் பாரம்பரியம் மிகச் சிறப்பு வாய்ந்தது. மிகவும் சிறப்பாக சபை நடவடிக்கைகள் நடக்கும் சட்டமன்றம். சாதாரண மனிதனின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் செயல்படும் சட்டமன்றம்" என்றார். அந்த சபாநாயகர்தான் சமீபத்தில் நடந்து முடிந்த இந்திய குடியரசுத் தேர்தலில் போட்டியிட்டு பிரணாப் முகர்ஜியிடம் தோல்வியடைந்தவர். வெற்றிபெற்று குடியரசுத் தலைவரான பிரணாப் முகர்ஜி இப்போது அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெறும் தமிழக சட்டமன்ற வைரவிழாவில் பங்கேற்கிறார். அவர் சிறப்பு விருந்தினராக பங்கேற்க, தமிழக ஆளுநர் ரோசைய்யா தலைமை வகிக்கிறார் என்று ஏற்கனவே தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இந்தியா குடியரசு ஆன பிறகு உருவான 1952ஆம் வருட சட்டமன்றத்தை கணக்கில் வைத்து இப்போது தமிழக சட்டமன்றத்தின் வைரவிழா கொண்டாடப்படுகிறது.

சூப்பர் ஸ்டார்போல் மாறுவாரா பிரணாப் முகர்ஜி?
பிரணாப் முகர்ஜி - தமிழக சட்டமன்ற வைரவிழாவில் கலந்து கொள்ளும் நேரத்தில் சபையின் சீனியர் உறுப்பினர்களாக தி.மு.க. தலைவர் கருணாநிதி, அக்கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் உள்ளிட்டோர் இருக்கிறார்கள். தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் சார்பில் அதன் தலைவர்களில் ஒருவரான பன்ருட்டி ராமச்சந்திரன் இருக்கிறார். நடந்து முடிந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜி வெற்றி பெற தி.மு.க. தனது வாக்குகளைச் செலுத்தியிருந்தாலும், அவர் குடியரசுத் தலைவரான பிறகு இரு தரப்பிற்கும் அவ்வளவாக நெருக்கமான உறவு இருப்பதாகத் தெரியவில்லை. சென்றமுறை சென்னை உயர்நீதிமன்றத்தின் 150ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்க சென்னை வந்திருந்தார் பிரணாப் முகர்ஜி. முன்னாள் முதல்வர் கருணாநிதி அவரை சந்திப்பதாக ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்பட்டன. ஆனால் கடைசி நேரத்தில் அது ரத்து செய்யப்பட்டு, தனக்குப் பதில் மு.க. ஸ்டாலினை அனுப்பி ராஜ்பவனில் தங்கியிருந்த பிரணாப் முகர்ஜியைப் பார்க்க வைத்தார். ஏற்கனவே அவர் நிதிஅமைச்சராக இருந்த போது, காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணியில் நெருக்கடி வரும் போதெல்லாம் தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்த வந்தவர் பிரணாப் முகர்ஜி. குறிப்பாக இலங்கைப் போரின் உச்சகட்டத்தில் தி.மு.க. முரண்டு பிடித்த போது, சென்னைக்கே வந்து அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியின் இல்லத்தில் சந்தித்து சமாதானப்படுத்திவிட்டுப் போனவர். அதேபோல் 2-ஜி அலைக்கற்றை விவகாரம் பெரிதாக வெடித்த நேரத்தில் அமைச்சராக இருந்த ராஜா உள்ளிட்டோரின் ராஜினாமா விவகாரத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு கண்டவர். இது மாதிரி நேரங்களில் தி.மு.க.தலைவர் கருணாநிதிக்குக் கொடுத்த உத்தரவாதங்கள் சிலவற்றை பிரணாப் முகர்ஜி நிறைவேற்றவில்லை என்ற கோபம் தி.மு.க. தரப்பில் இருக்கிறது. அதுவும் சென்றமுறை பிரணாப் முகர்ஜி சென்னை வந்த போது நிலக்கரி பேரத்தில் பெரும் நஷ்டம் என்று சி.ஏ.ஜி (இந்திய தணிக்கை ஆணையம்) அறிக்கை வெளியிட்டு, அது பற்றிய சர்ச்சை நடைபெற்ற நேரம். இதே மாதிரி அறிக்கை சர்ச்சை 2-ஜி அலைக்கற்றை விவகாரத்தில் வெளியான போது காங்கிரஸ் நிலைப்பாடு தி.மு.க.வை குற்றம் சாட்டுவதாக இருந்தது. ஆனால் இந்த நிலக்கரி அறிக்கை வெளியான போது காங்கிரஸே சி.ஏ.ஜி.யை குற்றம் சாட்டியது. இந்த அணுகுமுறை மாற்றத்தைப் பார்த்த பிறகுதான் பிரணாப் முகர்ஜி மீது தி.மு.க. கோபம் கொண்டது.

இதுபோன்ற சூழ்நிலையில் இப்போது இம்மாதம் 30ஆம் திகதி தமிழக சட்டமன்ற வைரவிழாவிற்கு வருகிறார் பிரணாப் முகர்ஜி. அன்றைய தினம் தி.மு.க. தலைவர் கருணாநிதி விழாவில் பங்கேற்பாரா? என்பது இன்னும் முடிவாகவில்லை. அப்படிப் போகாத பட்சத்தில் அந்த விழாவில் மூத்த உறுப்பினர்கள் பற்றிப் பேசும் போது தி.மு.க. தலைவரின் கருணாநிதி பற்றியும் பிரணாப் முகர்ஜி பேசுவாரா அல்லது மற்றபடி பொதுவாக பேசிவிட்டு தலைவர்கள் பற்றி குறிப்பிடுவதை தவிர்ப்பாரா என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ளது. ஏனென்றால் தமிழக சட்டமன்றத்தில் ராஜாஜி, காமராஜர், பக்தவத்சலம் போன்றோர் முதலமைச்சர்களாக இருந்துள்ளார்கள். இந்திய குடியரசுத் தலைவராக இருந்த ஆ.வெங்கட்ராமனே அமைச்சராக இருந்திருக்கிறார். இதுவரை தமிழக முதல்வரை மேடையில் வைத்துக் கொண்டு தி.மு.க. தலைவரை யாரும் பாராட்டியது இல்லை. சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற சினிமா விழா ஒன்றில் முதல்வர் ஜெயலலிதாவை மேடையில் வைத்துக் கொண்டு கருணாநிதியையும் பாராட்டினார் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த். அதை மிகவும் பெருந்தன்மையுடன் எடுத்துக் கொண்டார் முதல்வர் ஜெயலலிதா. இதற்கு முன்பு சென்ற தி.மு.க.ஆட்சியில் புதிய தலைமைச் செயலகக் கட்டிடத் திறப்பு விழாவிற்கு வந்திருந்தார் பிரதமர் மன்மோகன்சிங். அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியை மேடையில் வைத்துக் கொண்டு, "சத்துணவுத்திட்டம் கொண்டு வந்து நமக்கெல்லாம் உதாரண புருஷராக திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர். அதை நாம் மேலும் சிறப்பாக இப்போது நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறோம்" என்று பிரதமர் மனம் திறந்து பாராட்டினார். இத்தனைக்கும் காங்கிரஸுக்கும், அ.தி.மு.க.விற்கும் எப்போதுமே சத்துணவுத் திட்டத்தை யார் முதலில் கொண்டு வந்தது என்று அடிக்கடி அறிக்கைப் போர் நடக்கும். சட்டமன்றத்தில் கூட விவாதம் அடிக்கடி எழும். அப்படிப்பட்ட விடயத்தில் சத்துணவுத்திட்டம் கொண்டு வந்தவர் என்று எம்.ஜி.ஆரை பாராட்டினார் பிரதமர் மன்மோகன்சிங். இப்போது அதேபோன்றதொரு நிலை இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு ஏற்பட்டிருக்கிறது. சட்டமன்ற வைரவிழாவில் அனைத்து தலைவர்கள் வரிசையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பெயரையும் சொல்ல வேண்டிய தர்மசங்கடத்தை எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

பெண்கள் புரட்சி செய்த சட்டமன்றம்!
இப்போது வைரவிழா காணப்போகும் தமிழக சட்டமன்ற வரலாற்றில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பல முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. 1921இல் மெட்ராஸ் லெஸிஸ்லேட்டிவ் கவுன்சிலின் முதல் கூட்டத்திலேயே பெண்களுக்கு வாக்குரிமை கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல் 1923இல் முதல் முறையாக பெண்கள் சட்டமன்ற மற்றும் மேலவை உறுப்பினர்களுக்கு வாக்களித்தார்கள். பெண்களும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடலாம், சட்டமன்றத்திற்கு நியமிக்கப்படலாம் என்று வகை செய்யும் சட்டம் 1926இல் நிறைவேற்றப்பட்டது. அதுமாதிரி கிடைத்த உரிமையின் அடிப்படையில் கமல் சட்டோபாத்யா என்ற பெண்மணிதான் முதன் முதலில் மெட்ராஸ் லெஸிஸ்லேட்டிவ் கவுன்சிலுக்குப் போட்டியிட்டார். ஆனால் அவரை காங்கிரஸ் கட்சி தோற்கடித்தது. அதன் பிறகு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியை கவர்னர் நியமன உறுப்பினராக்கினார். அவர்தான் முதல் பெண் சட்டமன்ற மேலவை உறுப்பினர். அது மட்டுமல்ல அவையின் துணைத் தலைவராகவும் இருந்தார். அதேபோல் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் ருக்மணி லட்சுமிபதி. இவரே சட்டமன்ற துணை சபாநாயகராகவும் இருந்தார். அவரைத் தொடர்ந்து அம்மண்ண ராஜா இருந்தார். அதன் பிறகு இன்றுவரை துணை சபாநாயகராக பெண் யாரும் தேர்வு செய்யப்படவில்லை. அது மட்டுமின்றி தமிழகத்தின் முதல் பெண் அமைச்சரும் ருக்மணி லட்சுமிபதியே. பிரகாசம் அமைச்சரவையில் இவர் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தார். அதேபோல் இந்தியா குடியரசான பிறகு உருவாகிய தமிழக சட்டமன்றத்தின் (தற்போது வைரவிழா கொண்டாடப்படுவது) முதல் பெண் அமைச்சர் ஜோதி வெங்கடாஜலம். அவர் ராஜாஜி அமைச்சரவையில் மதுவிலக்குத்துறை அமைச்சராக இருந்தார். இன்று வைரவிழா காணும் நேரத்தில் தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா இருக்கிறார் என்பது தனிச்சிறப்பு. தி.மு.க. தரப்போ பிரணாப் முகர்ஜி என்ன பேசப் போகிறார் என்ற டென்ஷனில் இருக்கிறது!

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .