2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

சீன 'மாதிரி' என்ன செய்யும்?

A.P.Mathan   / 2012 நவம்பர் 19 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

அதிகார பரவல்முறை குறித்த படிப்பினைகளுக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய அங்கமான இலங்கை தமிழ் அரசு கட்சியின் மூன்று உறுப்பினர் குழு சீனா சென்றிருக்கிறது. அவர்கள் அங்கு படித்த படிப்பினை எதுவாக இருந்தாலும், அவர்களது சீனா விஜயமே, அதிகாரபரவல் முறை குறித்து கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய தயாராயிருக்கிறது என்ற எண்ணத்தை தோற்றுவித்துவிட்டது.

தமிழ் அரசு கட்சியோ அல்லது கூட்டமைப்போ சீனாவிற்கு குழு அனுப்புவது இதுவே முதல் முறை அல்ல. இதுவே கடைசி முறையாகவும் ஆகிவிடக் கூடாது. இலங்கை உட்பட்ட தென் ஆசிய நாடுகளில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சீனாவிற்கு வரவழைத்து அளவளாவுவதை அந்த நாட்டின் அரசியல் தலைமை சில வருடங்களாக மேற்கொண்டு வந்திருக்கிறது. உலக அரங்கில் வல்லரசாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று விரும்பும் சீனா, இந்தியவில் உள்ள பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களையும் தனது நாட்டிற்கு வரவழைத்து பேச்சுவார்த்தைகள் நடத்தி உள்ளது. அந்த விதத்தில், கூட்டமைப்பு பிரதிநிதிகள் சீனா சென்று வந்தமை எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயமும் கூட.

சீனா சென்ற தமிழ் அரசு கட்சி குழுவினர் அங்குள்ள குவாங்ஸி-ஷீயுயாங் சுயாட்சி அமைப்பின் ஆட்சிமுறை குறித்து தெரிந்து கொள்வார்கள் என்று பத்திரிகை செய்தி கூறுகிறது. சீனாவின் 'சுயாட்சி அமைப்புகள்' அங்குள்ள சிறுபான்மை இனத்தவர்களின் உரிமைகளுக்கு அரசு செவிசாய்கும் முறையாக கருதப்படுகிறது. என்றாலும், அது இலங்கையில் உள்ள தமிழ் சமூகமும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட்ட மிதவாத அரசியல் தலைமைகளும் கோரி வந்துள்ள மாகாண அதிகாரங்களோடு ஏணி வைத்தாலும் எட்டாது.

அதிகாரபரவல் முறைக்கு மாகாணங்களே அடிப்படை அரசியல் அமைப்பு அல்லது 'யூனிட்' என்ற முடிவிற்கு கூட்டமைப்பும் அதற்கு முந்தைய காலகட்டத்தில் பிற தமிழ் அரசியல் தலமைகளும் வந்து, தசாப்தங்கள் உருண்டோடி விட்டன. இப்போதும் கூட அரசுடனான பிரச்சினை மாகாண அமைப்பு குறித்து அல்ல. மகாணங்களுக்கு வழங்கப்பட வேண்டிய அதிகாரங்கள் குறித்தே அரசு - கூட்டமைப்பு தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
அந்த பேச்சுவார்த்தைகள் முறிவதற்கும் 'மாகாணம்' என்ற யூனிட்டை மாற்றி அமைக்க வேண்டும் என்ற அரசின் தற்போதைய நிலைப்பாடு காரணம் அல்ல.

தமிழ் அரசு கட்சி குழுவினர் சீனா சென்று வந்த ஒரே காரணத்தினால் மட்டும், அதிகார பரவல் குறித்த கூட்டமைப்பின் நிலைப்பாடு ஒரேயடியாக மாறிவிட்டது என்றோ, அல்லது மாறிவிடும் என்றோ எண்ணிவிட முடியாது. ஆனால், இலங்கை அரசும் அதுபோன்ற எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ள நிலையில், இந்த விஜயம் அனாவசிய கருத்துக்களுக்கு அடிகோலி உள்ளது. எப்போது, மாற்று அரசு அமைப்பு 'மொடல்' குறித்து கூட்டமைப்பு அறிந்துகொள்ள தயாராகி விட்டதோ, அதன் அடிப்படையில் அரசியல் தீர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்த அரசும் முயற்சி செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.

இன்னும் சொல்லப் போனால், முதலில் மாகாண சபை 'மொடல்' குறித்து பேசிய இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் கூட, சீனாவைப் போன்றே சிறுபான்மையினரின் நலம் பேண, அந்தந்த மாநில அரசுகளுக்கு உள்ளடங்கிய சுயாட்சி அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றை, இந்திய அரசியல் சட்டத்தின் கீழ் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதீத அதிகாரங்களோடு ஒப்பிட்டு குழம்பி விடக்கூடாது. இதுபோன்றே இலங்கையில் உள்ள முஸ்லிம் அரசியல் கட்சி தலைமைகள் கூறி வரும், இந்தியாவின் 'பாண்டிச்சேரி மொடல்'. இவை அனைத்தோடு, உலகின் பிற பகுதிகளில் செயல்பட்டு வரும் சிறுபான்மையினருக்கான அரசு அமைப்புகள் குறித்து ஆராய்ந்து அறிந்து விட்டே தற்போதைய மாகாண சபைகளுக்கு வடிவம் கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அண்மையில், அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தின் முன்வைத்து பேசிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நிலையில் உள்ள மாகாணங்களை ஒட்டிய அதிகார பகிர்வு முறையால் அரசிற்கு அதிக செலவினங்களே ஏற்பட்டுள்ளன என்று குறிப்பிட்டார். இதன் காரணமாக மாற்றுவகையிலான அதிகார பகிர்வு முறைகள் கண்டெட்டப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். அதாவது, தற்போதுள்ள பதிமூன்றாம் சட்டதிருத்தத்தின் கீழ் மாகாண அடிப்படையிலான அதிகார பகிர்வு முறையை குறித்தே, குறி வைத்தே அவர் பேசினார் என்று கூறலாம்.

பின்னர், பட்ஜெட் விவாதத்தின் போது பேசிய கூட்டமைப்பு தலைவர் சம்மந்தனும் தற்போதைய மாகாண சபைக்கு மாற்று குறித்து பேசியுள்ளார். ஜனாதிபதியின் கருத்து என்னவோ, தற்போதைய பிராதேசிய சபைக்கு ஒத்த அமைப்பினூடே அதிகாரங்கள் மக்களை சென்றடைய வேண்டும் என்ற கருத்தை ஒட்டி அமைந்திருந்தது என்று கருதலாம். மாறாக, சம்மந்தனோ, தற்போதுள்ள ஒன்பது மாகாணங்களுக்கு பதிலாக, ஒருங்கிணைந்த நான்கு அல்லது ஐந்து பிராந்தியங்களை உருவாக்கலாம் என்ற கருத்தை முன் வைத்தார்.

அதாவது, அரசியல் காரணங்களுக்காக பதிமூன்றாம் திருத்தத்தை அரசு ஏற்றுக் கொள்ளாவிட்டால், அதற்கு மாற்றாக, தமிழர்கள் ஏற்றுக்கொள்ள முடிந்த ஒரு தீர்வு திட்டதிற்கான அடிப்படையை சம்மந்தன் கூறியுள்ளார். அதே சமயம், அத்தகைய திட்டம், தமிழ் கூட்டமைப்பு எதிர்பார்ப்பது போல் வடக்கு - கிழக்கு இணைப்புக்கு வழிவகுக்கும் என்ற ரீதியில் சம்மந்தனின் நாடாளுமன்ற பேச்சு அமைந்துள்ளது.

சம்மந்தன் கூறியுள்ள பிராந்திய அடிப்படையிலான அரசு அமைப்பு போன்ற ஒன்றையே பத்து ஆண்டுகளுக்கும் முன்னால் ஜனாதிபதி சந்திரகா குமாரதுங்கவின் வரைவு திட்டம் முன்வைத்திருந்தது. இலங்கை அரசும் சிங்கள அரசியல்வாதிகளும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் ஒன்பது மாகாணங்களை ஐந்து அல்லது ஆறாக குறைப்பது அந்த திட்டத்தின் ஒரு பகுதி. அதே சமயம், தமிழ் தலைமை ஏற்றுக்கொள்ளும் வகையில் 'மாகாணம்' என்ற அலகை தொடர்வது அதன் மற்றொரு பகுதி. தற்போது, சம்மந்தன் அதனையே தற்போதைய சிங்கள அரசியல் தலைமகள் ஏற்றுக்கொள்ளும் வகையில் 'பிராந்தியம்' என்று பெயர் சூட்டியுள்ளார்.

என்றாலும், அரசும் சிங்கள அரசியல் தலைமைகளும் இதனை ஏற்றுக்கொள்வார்களா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். தற்போதைய அலசல்களுக்குப் பின்னர், அரசு கூறிவரும் நாடாளுமன்ற குழுவில் கூட்டமைப்பு இடம் பெறுமா என்பதையும் அதன் தலைமை வெளிப்படுத்த வேண்டும். என்றாலும், தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் காவல்துறை மற்றும் நிலம் (காணி) குறித்த அதிகாரங்கள் புதிய அரசு அலகுகளுக்கு வழங்கப்படுமா என்பதும் விளக்கப்பட வேண்டும். அதுபோன்றே. வடக்கு - கிழக்கு இணைப்பிலும் முஸ்லிம் தலைமைகளின் நிலைப்பாடு குறித்தும் அறியப்பட வேண்டும்.

இவை அனைத்தும் குறித்து தமிழ் கூட்டமைப்பு சிந்தித்து செயல்பட வேண்டும். அதை விட குறிப்பாக, தங்களது நிலைமை குறித்து தமிழ் சமுதாயத்திற்கும், புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் சரியான சமயங்களில் சரியான சமிக்ஞைகள் கொடுத்து வரவேண்டும்! இல்லையெனில், இனப்போர் முடிவிற்கு வந்த பின்னர், அரசியல் தீர்வு குறித்து, கூட்டமைப்பு எடுத்து வந்துள்ள முந்தைய அடிகளைப் போலவே, இவையும் புலம்பெயர் குழுக்களாலும், வடக்கில் ஒரு பகுதியினராலும் வேண்டுமென்றே நிராகரிக்கப்படும் நிலைமை தோன்றலாம். கூட்டமைப்பும், வழக்கம் போலவே அவர்களை மீண்டும் அரவணைத்துக் கொள்ளும் வழியாக, அரசையும் சிங்கள அரசியல் தலைமைகளையும் சந்தேகம் கொள்ளும் வகையிலான முடிவுகளை மீண்டும், மீண்டும் எடுக்கலாம். இவை எதுவுமே, பிரச்சினைக்கான முடிவிற்கு வழி வகுக்காது.

  Comments - 0

  • வசந்தகுமார். Tuesday, 20 November 2012 06:24 AM

    8 ஆடி 1985இல் ஆரம்பிக்கப்பட்ட திம்பு பேர்ச்சுவார்த்தை முதற்கொண்டு ஒஸ்லோ பேச்சுவார்த்தை வரை இலங்கையில் சிங்கள கட்சிகளின் அரச அபிலாசைகளை நிறைவேற்றும் முகமாக இனப்பிரச்சினைத் தீர்வுகள் அமூல்படுத்தப்படாமல் கிடப்பில் போட்டதும் தீயிட்டு கொளுத்தின வரலாறுகள்தான் பதிவு. இலங்கையை பொறுத்த மட்டில் நாட்டிற்கு பொறுத்தமான அதிகாரப் பகிர்வினை மொழியின் ஆளுகைக்கு அமைவாக அமைப்பதுவே நிரந்தரத் தீர்வாக அமையும். கைவிரலுக்கு தக்க வீக்கம்தான் உகந்தது. அது ஒரு தீங்கையும் விளைவிக்காது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .