2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

ஜோன் கெரி: இலங்கை அரசைக் காப்பாற்ற வந்த மீட்பரா?

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 27 , மு.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}-கே.சஞ்சயன்

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமைகள் பற்றிய விவாதம் ஒன்றுக்கான வாய்ப்புகள் உள்ள நிலையில், அமெரிக்காவில் ஏற்படப்போகும் அரச நிர்வாக மாற்றங்களை இலங்கை அரசாங்கம் அதிக நம்பிக்கையுடன் எதிர்கொண்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் பராக் ஒபாமா வெற்றி பெறுவதை இலங்கை அரசாங்கம் விரும்பவில்லை. அதற்குப் பதிலாக மிட் ரோம்னி வெற்றி பெற்றால், இலங்கை தொடர்பான அமெரிக்காவின் கொள்கையில் மாற்றங்கள் ஏற்படும் என்று அரசாங்கம் கருதியிருந்தது.

ஒபாமா வெற்றி பெற்றதும், இலங்கை அரசாங்கத்துக்கு நாடி, நரம்புகள் தளர்ந்து போனது உண்மை. அடுத்து, ஒபாமாவின் இராஜாங்கத் திணைக்கள நியமனங்கள் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டன.
காரணம், தற்போது அமெரிக்க இராஜாங்கச் செயலராக உள்ள ஹிலாரி கிளின்ரன், ஓய்வெடுக்கப்போவதாக ஏற்கனவே அறிவித்துவிட்டார். சற்று ஓய்வெடுத்த பின்னர், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதே அவரது திட்டம் என்ற கருத்தும் உள்ளது.

இராஜாங்கச் செயலர் பதவி மூலம் ஹிலாரி கிளின்ரன் - அமெரிக்காவிலும் சரி, உலகளவிலும் சரி போதியளவுக்கு நற்பெயரைச் சம்பாதித்துக் கொண்டுவிட்டார். அடுத்தமுறை அவர் போட்டியிட்டால், அவர் பெற்று வைத்துள்ள இந்த நற்பெயர் நன்றாகவே கைகொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

ஹிலாரி கிளின்ரனின் பதவிக்காலத்தில், இலங்கை அரசாங்கத்தை அவர் மிரள வைத்தார் என்றே கூறலாம். இலங்கையில் போருக்குப் பிந்திய நிலைமைகளை அவரது இராஜாங்கத் திணைக்களம் கடுமையான தொனியிலேயே கையாண்டது.

ஹிலாரி கிளின்ரன், றொபேட் ஓ பிளேக், சுசன் ரைஸ், சமந்தா பவர் என்று இலங்கைக்கு நெருக்கடி கொடுக்கும் அணியொன்று இராஜாங்கத் திணைக்களத்தில் வலுவாக இருந்தது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை  நடைமுறைப்படுத்துவதற்கான செயற்றிட்டத்தை இலங்கை அரசாங்கம் அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதற்குக் கூட, இராஜாங்கத் திணைக்களமே முக்கிய காரணமாக இருந்தது. இலங்கை அரசாங்கம் அவ்வாறு இல்லை என்று மறுத்தாலும் கூட உண்மை அது தான்.

ஒபாமாவின் இரண்டாவது பதவிக்காலத்தில், இலங்கை மீதான அமெரிக்க நெருக்குதல் இன்னும் அதிகமாகும் என்ற எதிர்பார்ப்பு பரவலாகவே இருந்தாலும், அதை தீர்மானிக்கக் கூடிய சக்தியாக புதிய இராஜாங்கச் செயலரே இருப்பார் என்ற கருத்து உறுதியாக உள்ளது.

தனது முதலாவது பதவிக்காலத்தில் ஒபாமா பல விடயங்களில் உண்மையான பலத்தைக் காட்டவில்லை. இலங்கை விவகாரத்திலும் கூட பல சமயங்களில் நெகிழ்வுப்போக்கை அவரது அரசாங்கம் கடைப்பிடித்ததை மறுக்க முடியாது.

ஆனால், இரண்டாவது பதவிக்காலத்தில் அவர் தனது அதிகாரத்தை உச்ச அளவில் பயன்படுத்துவார் என்று கருதப்பட்டாலும், அது இலங்கையைப் பொறுத்தவரை பெரும் பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்வி ஏற்கனவே உருவாகிவிட்டது. அதற்குக் காரணம், புதிய இராஜாங்கச் செயலராக அறிவிக்கப்பட்டுள்ள ஜோன் கெரி தான். இவரை இராஜாங்கச் செயலராக நியமிக்கும் திட்டம் முன்னர் ஒபாமாவிடம் இருந்திருக்கவில்லை. அவர் இந்தப் பதவிக்கு எதிர்பார்த்திருந்தது சுசன் ரைசைத் தான். சுசுன் ரைஸ் ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவராக இருப்பவர். இலங்கை விவகாரத்திலும் கூட இவரது பெயர் அடிக்கடி அடிபட்டதுண்டு. ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் சூத்திரதாரி என்று கூட இவரைக் கூறலாம்.

சுசன் ரைஸ் இராஜாங்கச் செயலரானால், ஹிலாரி காலத்து நிலைமையை விடவும் மோசமான நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிய வரலாம் என்று  இலங்கை அரசாங்கம் கடுமையாகவே யோசித்துக் கொண்டிருந்தது. ஆனால், ஒபாமா மற்றும் சுசன் ரைசின் துரதிர்ஷ்டமோ அல்லது, இலங்கை அரசு மற்றும் ஜோன் கெரியின் அதிர்ஷ்டமோ தெரியவில்லை – லிபியாவில் பெங்காசியில் இருந்த அமெரிக்கத் தூதரகம் தாக்கப்பட்ட விவகாரத்தில் சுசுன் ரைஸ் சரியாகச் செயற்படவில்லை என்ற சர்ச்சையில் சிக்கினார். இது தொடர்பான விசாரணை அறிக்கையில் சுசன் ரைஸ் மீது எந்தக் குற்றச்சாட்டும் கூறப்படவில்லை. ஆனால், அவர் இராஜாங்கச் செயலர் பதவிக்கான போட்டியில் இருந்து ஒதுங்கிக் கொள்வதாக ஒபாமாவுக்கு கடிதம் எழுதினார். இதையடுத்து பாதுகாப்புச் செயலர் பதவிக்கு நியமிக்கத் திட்டமிட்டிருந்த ஜோன் கெரியை இந்தப் பதவிக்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளார் ஒபாமா.

ஜோன் கெரி, முன்பின் அறியப்பட்டிருக்காத ஒருவரல்ல. 2004ஆம் ஆண்டு ஜூனியர் புஷ்ஷுடன் ஜனாதிபதி தேர்தலில் மோதி தோல்வி கண்டவர். தற்போது செனெட்டின், வெளிவிவகாரக் குழுவின் தலைவராகப் பதவி வகிப்பவர்.

இவரது வெளிவிவகாரக் கொள்கை பற்றிய அணுகுமுறை, ஹிலாரியின் அணுகுமுறையுடன் வித்தியாசமானதாக இருக்கும் என்று கருத்து பரவலாகவே உள்ளது. இலங்கை விவகாரத்திலும் ஜோன் கெரியின் அணுகுமுறையில் மாற்றம் இருக்கும் என்று அரசாங்கம் உறுதியாகவே நம்புகிறது. அதற்குக் காரணமும் இருக்கிறது. நட்பு நாடுகளை பலப்படுத்திக் கொள்ளும் தன்மை இவரது வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சம்.

சீனாவின் செல்வாக்கிற்கு அதிகம் உட்பட்டுள்ள இலங்கைக்கும் அது பொருந்தும் என்பது பரவலான கருத்து. இவர் ஏற்கனவே இலங்கை தொடர்பாக, செனெட்டில் சமர்ப்பித்திருந்த அறிக்கையும் அதற்கு இன்னொரு காரணம்.

போர் முடிவுக்கு வந்த பின்னர், 2009இல், ஜோன் கெரி தனது இரண்டு பிரதிநிதிகளை இலங்கைக்கு அனுப்பி தகவல்களை திரட்டியிருந்தார். அதன் அடிப்படையில் அவர் வெளியிட்ட அறிக்கை, புலம்பெயர் தமிழர்கள் குறிப்பாக அமெரிக்காவில் வாழும் தமிழர்களை கொதிப்படைய வைத்திருந்தது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில், ஜோன் கெரியின் வெளிவிவகாரக் கொள்கை வகுக்கப்படுமானால், அது இலங்கை அரசுக்கு சாதகமான பல அம்சங்களை வெளிப்படுத்தும். அதுவே இலங்கை அரசுக்கு இப்போதுள்ள ஒரே நம்பிக்கையாக உள்ளது.

எப்படியாவது ஜோன் கெரி பதவிக்கு வந்துவிட்டால் போதும், எல்லா எதிர்ப்புகளையும் சமாளித்து விடலாம் என்று அரசாங்கம் கணக்குப் போடக் கூடும். ஆனாலும், அடிப்படையில் சில அம்சங்களை இலங்கை நிறைவேற்றியே ஆக வேண்டியது கட்டயமாகவே இருக்கும்.

மனித உரிமைகள், பேச்சு, ஊடக சுதந்திரம் உள்ளிட்ட பல விடயங்களில் கெரி தமது எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதை கண்டிப்புடன் எதிர்பார்ப்பார் என்று கூறப்படுகிறது. தற்போதைய நிலையில் இலங்கை அரசாங்கம், ஜோன் கெரியினதோ, ஹிலாரியினதோ எதிர்பார்ப்புகளை நிறைவேற்றக் கூடிய நிலையில் இல்லை என்பதே உண்மை.

இத்தகைய நிலையில் அடுத்த ஆண்டின் மூன்றாவது வாரத்தில் தொடங்கப்போகும் ஒபாமாவின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் இலங்கை எத்தகைய நிலையை எதிர்கொள்ளப்போகிறது என்ற கேள்வி வலுத்து வருகிறது.

அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கையை முற்றுமுழுதாகத் தீர்மானிக்கும் ஒருவராக ஜோன் கெரி இருக்கப்போவதில்லை. ஒபாமாவின் நெருக்கமான நண்பர்களாக உள்ள சமந்தா பவர், சுசன் ரைஸ் போன்றவர்களும் இதில் முக்கியமானவர்கள். இவர்கள் இருவரும் இராஜாங்கத் திணைக்களத்தில் முக்கிய பதவிகளில் உள்ளனர். தொடர்ந்தும் அவ்வாறே இருப்பர் என்றும் நம்பப்படுகிறது.

அதுபோலவே, றொபேட் ஓ பிளேக்கும் கூட தெற்கு, மத்திய ஆசிய விவகாரப் பிரிவிலேயே பணியாற்றுவார் என்று கருதப்படுகிறது. இவர்கள் எல்லோரும், கடந்த காலங்களில் இலங்கை தொடர்பான இறுக்கமான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வந்தவர்கள்.

இவர்களின் மத்தியில் தனி ஒருவராக, ஜோன் கெரி இலங்கை அரசுக்கு முற்றிலும் சார்பாக செயற்பட்டு விடமுடியாது. அதேவேளை அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை முன்கொண்டு செல்லும் அவரது பொறுப்பையும் குறைத்து மதிப்பிட்டு விடவும் முடியாது.

எது எவ்வாறாயினும், இலங்கை தொடர்பான அமெரிக்க வெளியுறவுக் கொள்கை எந்தளவுக்கு இறுக்கமானதாக அமையும் என்பதை - ஜோன் கெரியின் அணுகுமுறை, ஹிலாரியின் அணுகுமுறையில் இருந்து வித்தியாசப்படுமா என்பதை உறுதி செய்துகொள்வதற்கு நீண்டகாலம் தேவைப்படப்போவதில்லை.

அடுத்த ஆண்டின் மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 22ஆவது கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பான அறிக்கையை, ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை சமர்ப்பிக்கப் போகிறார்.

கடந்த மார்ச் மாதம் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இலங்கை ஒத்துழைத்துள்ளதா என்பதை வெளிப்படுத்தும் அந்த அறிக்கை இலங்கை அரசுக்கு சார்பானதொன்றாக இருக்க வாய்ப்பேயில்லை.

இத்தகைய சூழ்நிலையில் அடுத்த கட்டம் என்ன என்பதை தீர்மானிக்கும் கட்டம் வரப்போகிறது. அதில் அமெரிக்கா அடக்கி வாசிக்குமேயானால், ஜோன் கெரி இலங்கை விவகாரத்தில் பாரிய விட்டுக்கொடுப்புகளுக்குத் தயாராகிவிட்டார் என்பதை வெளிப்படுத்தும் ஒரு சந்தர்ப்பமாக எடுத்துக் கொள்ளலாம்.

அதற்கு முன்னதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வொஷிங்டனுக்கு வருமாறும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அழைத்துள்ளது. அந்தப் பயணம் இடைநிறுத்தப்பட்டால் அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் கூட, ஜோன் கெரி வித்தியாசமான நடந்துகொள்ளப் போகிறார் என்று வெளிப்படும்.

எவ்வாறாயினும், ஜோன் கெரியின் நியமனத்தை இப்போதைக்குத் தமக்குச் சாதகமானதொன்றாகவே அரசாங்கம் பார்க்கிறது. அது எந்தளவுக்கு அர்த்தபூர்வமானது என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

  Comments - 0

  • fernando Friday, 28 December 2012 07:14 AM

    அமைதியான நாட்டை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றுபடுதல் தான் நமக்கு உள்ள ஒரே வழி. கெடுதலை மட்டும் ஆதரிக்கும் சிங்கள மக்களும் இல்லை நன்மைகளை மட்டும் செயும் தமிழர்களும் இல்லை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .