2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

தமிழகத்தில் குறிவைத்து கொல்லப்படும் பா.ஜ.க. தலைவர்கள்

A.P.Mathan   / 2013 ஜூலை 23 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 பாரதீய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் ஒடிட்டர் ரமேஷ் சேலத்தில் படுகொலை செய்யப்பட்டிருப்பது தமிழக அரசியல் தலைவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. இதுவரை இல்லாத அளவிற்கு அனைத்துத் தலைவர்களும் இக்கொலையைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ள "அபூர்வ அரசியல்" நீண்ட நாட்களுக்குப் பிறகு தோன்றியிருக்கிறது. குறிப்பாக காங்கிரஸ், மறுமலர்ச்சி தி.மு.க., திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி போன்ற கட்சிகளின் தலைவர்கள் கண்டன அறிக்கை வெளியிட்டிருக்கின்ற அதே நேரத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் இக்கொலையை வன்மையாக கண்டித்துள்ளார். அத்துடன் இக்கொலை பற்றி சிறப்பு புலனாய்வுக் குழு மூலம் விசாரிக்கவும் தமிழக டி.ஜி.பி.க்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
சமீப காலமாக பாரதீய ஜனதா கட்சி, அதன் மற்ற ஆதரவு இயக்கமான இந்து முன்னணி போன்ற கட்சிகளின் தலைவர்கள் தமிழகத்தில் ஆங்காங்கே வெட்டிக் கொல்லப்படுகின்ற அபாயம் நிகழ்ந்து வருகிறது. குறிப்பாக மதுரையில் பா.ஜ.க. தலைவர் அத்வானியை குறி வைத்து நடத்தப்பட்ட சதி திட்டத்தை தமிழக காவல்துறையினர் முறியடித்தனர். ஆனால் அக்கட்சியின் மாநில நிர்வாகிகள் ஒவ்வொருவராக ஆங்காங்கே கொல்லப்படுகின்றனர். அவ்வப்போது குற்றவாளிகளைக் கைதுசெய்ய தமிழக காவல்துறை முயற்சிகளில் ஈடுபட்டாலும், இந்தக் கொலைகளை தடுக்க முடியவில்லை. ஒவ்வொருமுறை கொலை நிகழும் போதும் "தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்து விட்டது" என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் அறிவித்து வருகிறார். ஆனால் கொலைகள் நின்றபாடாகத் தெரியவில்லை.
 
சென்ற வருடம் ஜூலை மாதம் 4ஆம் திகதி முதல் கொலை அரங்கேறியது. பா.ஜ.க.வின் மாநில செயற்குழு உறுப்பினர் புகழேந்தி நாகபட்டினத்தில் வெட்டி சாய்க்கப்பட்டார். மூன்று மாதம் கழித்து ஒக்டோபர் 23ஆம் திகதி பா.ஜ.க.வின் மருத்துவ அணி மாநில செயலாளர் அரவிந்தன் ரெட்டி வேலூரில் வெட்டி வீழ்த்தப்பட்டார். 2013ஆம் வருடம் மார்ச் மாதம் 19ஆம் திகதி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி நகராட்சி முன்னாள் கவுன்சிலர் கொலை செய்யப்பட்டார். அதன் பிறகு நான்கு மாதங்கள் கழித்து ஜூலை 1ஆம் திகதி இந்து முன்னணி மாநில செயலாளர் வெள்ளையப்பன் கொலை செய்யப்பட்டார். அடுத்த ஒரு வாரத்தில் ஜூலை 8ஆம் திகதி ராமேஸ்வரம் இந்து முன்னணி ஒன்றிய செயலாளர் வெட்டிக் கொல்லப்பட்டார். அடுத்த பதினொரு நாளில் ஜூலை 19ஆம் திகதி சேலத்தில் உள்ள பா.ஜ.க. மாநில செயலாளர் ஒடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் அடுத்தடுத்து மூன்று கொலைகள்! இவரது கொலை அகில இந்திய பா.ஜ.க.வை டென்ஷன் ஆக்கியுள்ளது. பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படும் நரேந்திர மோடி, பா.ஜ.க.வின் நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் சுஸ்மா சுவராஜ் ஆகியோர் உடனடியாக கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். "உண்மை குற்றவாளிகள் உடனடியாக பிடிக்கப்பட வேண்டும்" என்று நரேந்திரமோடியே கூறியிருக்கிறார்.
 
இது ஒருபுறமிருக்க, கொலை வெறி தாக்குதலில் இருந்து தப்பித்தவர்களும் இருக்கிறார்கள். நாகர்கோயிலில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ஆர்.காந்தி மீது கத்திக்குத்து. அதிலிருந்து தப்பித்தார். பிறகு திருப்பூர் ஆர்.எஸ்.எஸ். மாவட்டச் செயலாளர் ஆன்ந்த் மீது கொலை வெறி தாக்குதல். அவரும் தப்பித்தார். ஊட்டியில் இந்து முன்னணி நிர்வாகி ஹரி மீது தாக்குதல். அவரும் உயிர் பிழைத்தார். இப்படி தப்பித்தவர்கள் தவிர, மறைமுகமாக மிரட்டப்பட்டவர்களும் உண்டு. பா.ஜ.க.வின் மாநில துணை தலைவர்களில் ஒருவரான எச்.ராஜாவின் வீடு காரைக்குடியில் இருக்கிறது. அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென்று தாக்குதலுக்கு உள்ளானது. அதே போல்தான் இந்த ஒடிட்டர் ரமேஷ் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காரும் முன்பு அடித்து நொறுக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது அவரே தன் அலுவலகத்திற்கு சென்றபோது கொலை செய்யப்பட்டுள்ளார்.
 
தப்பித்தவர்களும் சரி, கொலை செய்யப்பட்டவர்களும் சரி பாரதீய ஜனதா கட்சி, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். போன்ற முக்கியமான அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என்பதும், அந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமே குறி வைக்கப்படுகிறார்கள் என்பதும்தான் கவலைக்குரியதாக இருக்கிறது. அதனால்தான் ஒடிட்டர் ரமேஷுக்கு இரங்கல் தெரிவிக்க சேலம் வந்த முன்னாள் அகில இந்திய பா.ஜ.க. தலைவர் வெங்கய்யா நாயுடு, "ஜெயலலிதா முதல்வராக இருக்கும் தமிழகத்தில் இந்து தலைவர்கள் கொல்லப்படுவது ஆச்சர்யமாக இருக்கிறது. ஆகவே இந்தக் கொலைகளின் நோக்கம், பின்னணி என்ன என்பது கண்டுபிடிக்கப்பட வேண்டும்" என்று பேட்டி கொடுத்தார். அக்கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளரான நிர்மலா சீத்தாராமன், "பா.ஜ.க. தலைவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து உயர்மட்ட சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்றை அமைத்து விசாரணை நடத்த வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.
 
இந்த படுகொலைகளைப் பார்த்து சம்பந்தப்பட்ட இயக்கங்கள் மட்டுமல்ல, மற்ற கட்சி தலைவர்களும் தங்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். குறிப்பாக பா.ஜ.க.விற்கு நேரடி எதிர்க்கட்சியாக இருக்கும் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஞானதேசிகன், "கொலை செய்கின்ற கூலிப்படையினருக்கு நீதிமன்றம், காவல்துறை,சமூகம் இவைகளைப் பற்றி எந்த பயமும் இல்லை. அதனால் இக்கொலைகள் நடைபெறுகிறது. தமிழக அரசு உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ், "ஒரு தேசிய கட்சியின் மாநில செயலாளர் கொலையை காவல்துறை தடுக்காதது கண்டிக்கத்தக்கதாகும்" என்று கூறியிருக்கிறார். மக்கள் உரிமை கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன், "தொடர்ந்து நடைபெற்று வரும் அரசியல் ரீதியான படுகொலைகள் தமிழகத்தில் பொது வாழ்வை கேள்விக்குறியாக்கியுள்ளன. அரசியல் கட்சி தலைவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற நிலை உருவாவது அபாயகரமானது. கருத்து வேறுபாடுகளை கொலையின் மூலம் தீர்க்க முனைவது நாட்டில் அராஜகத்தையே தோற்றுவிக்கும்" என்று மிகவும் கறாராக கண்டன அறிக்கை கொடுத்துள்ளார். இதே வரிசையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியும் "அரசியல் கொலைகள் தொடருகின்றன" என்று கண்டித்துள்ளார்.
 
பா.ஜ.க.வைப் பொறுத்தமட்டில் அக்கட்சிக்கு தமிழகத்தில் பெரும் செல்வாக்கு இல்லை. கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் கூட 2.22 சதவீத வாக்குகளையே அக்கட்சி தமிழகத்தில் உள்ள 204 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு பெற்றது. அதாவது அக்கட்சி பெற்ற வாக்குகள் 8.19 லட்சம் மட்டுமே! இது ஒரு புறமிருக்க, 1998களில் கோவையில் இருந்தது போன்று (கோவை குண்டு வெடிப்பு நிகழ்ந்த சம்பவம்) வெப்பத்தைக் கக்கும் சூழ்நிலைகள் ஏதும் பெருமளவில் தமிழகத்தில் இப்போது இல்லை. பா.ஜ.க.வின் மாநில தலைவர்களோ, செயலாளர்களோ முந்தைய காலங்கள் போல் "எதிர்ப்பு அரசியலையும்" தமிழகத்தில் அதிரடியாகச் செய்து கொண்டிருக்கவில்லை. இப்படியொரு சூழ்நிலையில்தான் மதுரைக்கு வந்த அத்வானி குறி வைக்கப்பட்டார். அதுவே பலருக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால் இந்துக்களும், முஸ்லிம்களும் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற தமிழகத்தில் சில தீவிரவாதிகளின் முயற்சி அந்த ஒற்றுமையைக் கெடுத்து விடக்கூடாது என்றே அனைத்து சமுதாயத்தினரின் எண்ணம். குறிப்பாக இஸ்லாமிய சமுதாயத்தினரும் அப்படியே நினைக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்து அமைப்புகள், அவர்களுக்காக முழுவதும் போராடும் கட்சிகள் என்று சொல்லப்படும் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி போன்றவற்றின் முக்கிய நிர்வாகிகள்- அதுவும் மாநில அளவில் உள்ள நிர்வாகிகள் அடுத்தடுத்து கொலை செய்யப்படுவது அதிர்வு அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
 
இந்தக் கொலையின் பின்னணி மிகவும் மோசமாக இருக்கிறது. இந்துக்களும், இஸ்லாமியர்களும் அதிகம் இருக்கும் பகுதிகளும், சென்ஸிட்டிவாக இருக்கும் பகுதிகளுமான வேலூர், நாகபட்டினம், திருப்பூர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களை குறி வைத்து இந்த கொலை வெறித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. இப்போது புதிதாக கோவைக்கு அருகில் உள்ள சேலம் மாவட்டத்தையும் தேர்வு செய்து அங்கேயும் ஒரு கொலை அரங்கேற்றப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கடையடப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளது பா.ஜ.க. அதை பாட்டாளி மக்கள் கட்சி போன்றவை ஆதரித்திருப்பது கவனிக்கத்தக்கது. ஏனென்றால் இந்தக் கட்சி திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று கூறிவிட்டு இப்போது தனியாக தமிழகத்தில் பவனி வந்து கொண்டிருக்கிறது. இதேபோல் எக்கூட்டணியிலும் இல்லாத மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இக்கொலையை கடுமையாக கண்டித்துள்ளவர், "கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அதற்காக கொலை என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று அறுதியிட்டுச் சொல்லியிருக்கிறார். தமிழக சட்டமன்றத்தில் இஸ்லாமிய உறுப்பினர்களைக் கொண்டுள்ள மனித நேய மக்கள் கட்சி இக்கொலையை கண்டித்திருக்கிறது. அதே சமயம் "விசாரணை என்ற பெயரில் அப்பாவி முஸ்லிம்களை குறி வைக்கக்கூடாது" என்றும் தமிழக காவல்துறையை கேட்டுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பிரிவுதான் இந்த மனித நேய மக்கள் கட்சி என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
 
இப்படிப்பட்ட பரபரப்புகளுக்கு இடையில் இந்து அமைப்புகளின் தலைவர்களைக் கொலை செய்தவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க முதலமைச்சர் ஜெயலலிதா மாநில டி.ஜி.பி. ராமானுஜத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கிடையில் கொலை நடந்த இடத்திலிருந்த காவலாளி கொடுத்த தகவலின் அடிப்படையில் சந்தேகப்படும் குற்றவாளியின் வரைபடத்தை வெளியிட்டிருக்கிறது. அந்த வரைபடம் வெளிவந்துள்ள அதே தினத்தில் அத்வானியை குறி வைத்த வழக்கில் தேடப்படும் குற்றவாளிகள் உள்பட மூவரின் படங்களையும் வெளியிட்டுள்ள காவல்துறை அவர்கள் பற்றி தகவல் சொல்வோருக்கு தக்க சன்மானம் அளிக்கப்படும் என்று தடாலடியாக அறிவித்துள்ளது. அப்படித் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளவர்கள் பொலிஸ் பக்ரூதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் உள்ளிட்டோர் ஆவார்கள். இவர்கள் தமிழகத்தில் நடைபெற்றுள்ள பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது என்று உயர் பொலிஸ் அதிகாரிகள் வட்டாரம் தெரிவிக்கின்றது. 
 
தமிழக தேர்தல் களம் நாடாளுமன்ற தேர்தலை நோக்கி அமைதியான முறையில் நகர்ந்து சென்று கொண்டிருக்கிறது. இப்படியொரு "இந்து- முஸ்லிம்" தகராறை மையமாக வைத்துத்தான் 1998 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு தமிழகத்தின் தொழில் வளர்ச்சி நகரம் என்றழைக்கப்படும் கோயம்புத்தூரில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. அப்போது கிளம்பிய "மதவாத" தீயை அணைத்து சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை சமாளிப்பதே இமாலய பிரச்சினையானது. அதை சகஜ நிலைமைக்குக் கொண்டு வரவே பல வருடங்கள் உருண்டோடி விட்டன. இப்போது இந்துக்களும்- முஸ்லிம்களும் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் இந்துக்களும்- முஸ்லிம்களும் சென்ஸிட்டிவாக உள்ள மாவட்டங்களில் "பா.ஜ.க." உள்ளிட்ட அது தொடர்புடைய அமைப்புத் தலைவர்களை கொலை செய்யும் கொடூரமான நிகழ்வுகள் அரங்கேறுகின்றன. இவை வேறோடு பிடுங்கி வீசப்பட வேண்டியவை என்பதில் இரு வேறு கருத்துக்களுக்கு இடமிருக்க முடியாது என்றே அனைத்து சமுதாய தலைவர்கள் எண்ணுகிறார்கள். இந்தப் பின்னணியில், நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடிப்பதற்கு முன்பாகவே இந்தக் கொலைகளில் ஈடுபட்டுள்ள உண்மை குற்றவாளிகளை கண்டிபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது தமிழக காவல்துறை. அதனால்தான் தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், "சொந்த லாபத்திற்கோ அல்லது அரசியல் லாபத்திற்கோ நடைபெறும் வன்முறை அல்லது கொலைகளையும், மத, இன, சாதி பெயரிலும், தீவிரவாதத்தின் பெயரிலும் அல்லது வேறு எந்த வடிவத்திலும் வன்முறை மற்றும் கொலை நடப்பதையும் நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தீர்மானமாக பிரகடனப்படுத்தியுள்ளார். இந்தப் பிரகடனத்தின் பின்னணியில் காவல்துறை முழு வீச்சில் களமிறங்கி இது போன்ற "அரசியல்" அல்லது "மதம் சார்ந்த" கொலைகளை தடுக்கும் என்றே மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்!

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--