2021 மார்ச் 04, வியாழக்கிழமை

தீர்க்கமான தருணம்

Thipaan   / 2015 ஓகஸ்ட் 14 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹமட் பாதுஷா

இன்று நள்ளிரவுடன் கூட்டங்கள் எல்லாம் முடிவுக்கு வருகின்றன. அதனைத் தொடர்ந்து சிலரது ஆட்டங்களும் முடியப் போவதாக வாக்காளர்களின் உள்மனதுக்கு தெரிகின்றது. அடுத்த  நாடாளுமன்றம் என்கின்ற மேடையில் மக்கள் யாரை ஆடவிடப் போகின்றீர்கள்? யாருடைய கூத்தைக் காண விரும்புகின்றார்கள் என்பதை தீர்மானிக்கும் ஒரு தீர்க்கமான கடைசிக் கட்டத்துக்கு நாம் வந்திருக்கின்றோம்.

ஒவ்வொரு தேர்தலும் அந்தந்தச் சமூகங்களில் அரசியல் தலைவிதியை நிர்ணயிக்கும் ஆற்றலைக் கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறப் போகின்ற வாக்கெடுப்பு என்பது சிறுபான்மை மக்களுக்கு மாத்திரமன்றி நாட்டில் வாழும் பெரும்பான்மை மக்களுக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமைந்துள்ளது. நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கான மக்கள் எழுச்சியை மீண்டும் பூச்சியத்தில் இருந்து ஆரம்பிப்பதா? என்ற கேள்வியுடன் வாக்களிக்க வேண்டியுமிருக்கின்றது. 

சந்திரிகா அம்மையாரிடம் இருந்து மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியைக் கைப்பற்றிய போது அவர் பற்றிய பெரிய எதிர்பார்ப்புக்கள் இருக்கவில்லை. ஆனால், 2009இல் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தபோது மஹிந்த ஒரு ஹீரோவானார், எதிர்பார்ப்பு அதிகமானது. உயர் பதவி வகித்த ஏனைய 'ராஜபக்ஷக்கள்' இரண்டாம் நிலை ஹீரோக்களாகப் பார்க்கப்பட்டனர். ஆயினும் அவரது இரண்டாவது ஆட்சிக்காலம் வேறு ஒரு முகத்தைக் காண்பித்தது. அந்த மறுபக்கத்தைப் பார்த்து மக்கள் அதிர்ச்சியடைந்தனர். 

யுத்த வெற்றியைச் சந்தைப்படுத்தி, 2010இல் மீண்டும் ஜனாதிபதியாகிய மஹிந்த, அபிவிருத்தித் திட்டங்களை மக்களுக்கு பராக்கு காட்டிக் கொண்டு தனக்கு வேண்டியதை எல்லாம் திரை மறைவில் செய்து கொண்டார். மிகப் பெரிய ஊழல், மோசடி, குடும்ப ஆட்சியென நாறிப் போனது இரண்டாவது ஆட்சிக்காலம். உண்மையில் குடும்ப ஆட்சியும் ஊழலும் பெரும்பான்மை மக்களிடைய கடுமையான விமர்சனத்தைத் தோற்றுவித்திருந்தாலும், சிறுபான்மைத் தமிழர்களும் முஸ்லிம்களும் அதனைப் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை என்றே சொல்ல வேண்டும்.

இந்நிலையில், மெதுமெதுவாக இனவாதக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. முதலில் முஸ்லிம்கள் இலக்காக்கப்பட்டனர். ஹலால், ஹிஜாப், பள்ளிவாசல்கள்... என ஒவ்வொரு மதநம்பிக்கையும் பௌத்தத்தின் பெயரால் சவாலுக்கு உட்படுத்தப்பட்டன. முக்கியமாக, பொதுபலசேனா என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.

அப்போது பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ இந்த இனவாத அமைப்புடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணி வந்தார். மௌனமாக இருந்ததன் மூலம் மஹிந்த ராஜபக்ஷ இந்த அடாவடித்தனங்களுக்கெல்லாம் ஒப்புதல் வழங்கியிருந்ததாகவும் சொல்ல முடியும்.

அரபுலக மன்னர்களின் வரலாற்றைப் படித்து, அவர்களுடன் நெருக்கமான உறவைப் பேணி வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரகடனப்படுத்தப்படாத ஒரு மன்னராக ஆண்டாண்டு காலம் ஆட்சியில் இருப்பதற்கு விரும்பியது மட்டுமன்றி, அதனை முழுமையாக நம்பியும் இருந்தார் என்பது, பின்னாளில் அவருடைய ஆடம்பர வாழ்க்கை பற்றிய ரகசியங்கள் வெளிவந்தபோது உறுதியாகியது. எனவே, நீண்டகாலத்துக்கு ஆட்சியைத் தக்க வைப்பதற்கு இனவாதத்தை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்துவதற்கு முன்னைய ஆட்சியாளர்கள் எண்ணியிருக்கலாம். ஆனால், அதுவே அவர்களுக்கு வினையானது.

ஊழல் நிறைந்த குடும்ப ஆட்சியை அலட்டிக் கொள்ளவில்லை என்றாலும் மட்டற்ற இனவாதத்தை விட்டு வைக்க முடியாது என்ற முடிவுக்கு குறிப்பாக முஸ்லிம்களும் தமிழர்களும் வந்தனர். கடந்த ஜனவரியில் ஆட்சிமாற்றம் ஒன்றை நிகழ்த்திக் காட்டுவதற்கு அம்மக்களே முடிவு எடுத்தனர். இதுவரை காலமும் அரசியல் கட்சிகள் எடுக்கும் முடிவுக்கு பின்னால் மக்கள் பயணிப்பதே வழக்கமாக இருந்தது. ஆனால், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள்தான் முடிவை எடுத்தனர்.

மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களிக்க வேண்டுமென்று மக்கள் முடிவு எடுத்த பின்னர்தான் அரசியல்வாதிகள் ஓடோடி வந்து அந்த முடிவுடன் சேர்ந்து கொண்டார்கள். உதாரணத்துக்கு, முஸ்லிம் காங்கிரஸை குறிப்பிடலாம். தபால்மூல வாக்களிப்பு நிறைவடைந்த பின்னரே அக்கட்சி மைத்திரிக்கான தனது ஆதரவை அறிவித்தது. அப்போதும் ஆறுமுகன், அதாவுல்லா போன்ற சில சிறுபான்மை தலைவர்கள் மஹிந்தவின் சால்வையைப் பிடித்துத் தொங்கி, கீழே விழுந்து மூக்கை உடைத்துக் கொண்டார்கள் என்பது வரலாறு.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானதும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மெதமுலனையில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுப்பார் என்றே பொதுவாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பதவி பறிக்கப்பட்டது பற்றிய அவரது வெஞ்சம் அவரை முன்னாள் ஜனாதிபதி என்ற அந்தஸ்தில் இருந்து இறங்கிவரச் செய்தது. மிகச் சாதாரணமான ஓர் அரசியல்வாதி போல நடந்து கொண்டார். இன்னும் எங்காவது அரசியல் அதிகாரம் கிடைக்காதா என்ற ஏக்கம் அவரது செயற்பாடுகளில் தெரிந்தது. நல்லாட்சியோடு ஒத்துப்போக முடியாத நாடாளுமன்ற உறுப்பினர்களில் கணிசமானோரும் அவருக்கு ஆதரவளித்துக் கொண்டிருந்தமையால், 100 நாள் வேலைத்திட்டத்தில் ஆயிரம் தடங்கல்கள் ஏற்பட்டன. வேறு வழியின்றி ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைக்க - தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இந்தப் பின்புலத்தோடே நாம் இத்தேர்தலை முன்னோக்கி இருக்கின்றோம். இதில் - வென்றதைப் பாதுகாப்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.மு.) போட்டியிடுகின்றது.

மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக, சுதந்திரக் கட்சியை பிரதானமாகக் கொண்ட கட்சிகளின் கூட்டமைப்பான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு போட்டியிடுகின்றது. தமிழ், முஸ்லிம் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகளில் அதிகமானோர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தும், தமது சொந்த கட்சிகளிலும் களமிறங்கியிருக்கின்றனர் என்பதையும் ஓரிரு சிறுபான்மை அரசியல்வாதிகள் ஐ.ம.சு.கூ.வில் களமிறங்கியுள்ளனர் என்பதையும் நாமறிவோம். குறிப்பாக இரண்டு விடயங்களை மறந்து விடக் கூடாது. ஒன்று - பிரதமர் பற்றிய கனவுடன் முன்னாள் ஜனாதிபதி போட்டியிடுகின்றார் என்பதையும் இரண்டாவது - இனவாத அமைப்பான பொது பலசேனா முதற்தடவையாக களத்தில் குதித்துள்ளது என்பதையும்.

கடந்த ஒரு மாதகாலமாக மேற்கொள்ளப்பட்ட தேர்தல் பிரசார கூட்டங்கள், விளம்பரங்களில் நல்லாட்சியைப் பாதுகாப்பதற்காக வாக்களிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி வாக்காளப் பெருமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அத்துடன் ஊழல்மிக்க குடும்ப ஆட்சி மீள உருவாகுவது குறித்தும் அச்சமூட்டி இருக்கின்றது.

உண்மையில் ஐ.தே.க.வுக்கு பெரிதாக பிரசித்தப்படுத்தல்கள் தேவையில்லை. ஏனெனில், கடந்த 6 மாத ஆட்சியே ஒருவிதமான விளம்பரம்தான். அதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தனது தேர்தல் பிரசாரங்களில் ஜனாதிபதியைச் சாடுவதை நிறுத்தி, ஐ.தே.க. ஆட்சியை விமர்சிப்பதைக் காண முடிகின்றது. முக்கியமாக முன்னாள் ஜனாதிபதியும் அக்கட்சியின் குருணாகல் வேட்பாளருமான மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி மைத்திரியை தனது நெருங்கிய சகா போல காட்ட வேண்டிய வங்குரோத்து நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

ஜனாதிபதியை விமர்சித்தால் கிடைக்கவிருக்கும் வாக்குகளும் கிடைக்காது என்பது அவருக்குப் புரிந்திருக்கின்றது. அதுமட்டுமன்றி, எப்படியும்  சிறுபான்மை மக்களின் வாக்குகள் கணிசமாக கிடைக்காது என்பதை முன்னுணர்ந்து கொண்டுள்ள மஹிந்த- நேரடியாக சிங்கள மக்களைக் குறிவைத்து இனவாத கருத்துக்களை முழங்கி வருவதையும் குறிப்பிட வேண்டியுள்ளது.

இம்முறை நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியே தனியொரு கட்சியாக அதிக ஆசனங்களைப் பெறும் சாத்தியமிருக்கின்றது. ஆதலால் ஐ.தே.க.வை பிரதானமாகவும், ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராகவும் கொண்ட தேசிய அரசாங்கம் அமையும் என்று ஊகிக்கப்படுகின்றது. மறுபக்கத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும் கணிசமான வாக்குகள் அளிக்கப்படும். குருணாகலில் போட்டியிடும் மஹிந்த வெற்றிபெறுவார்.

ஆகையால் ஐ.ம.சு.கூ.வின் குழப்பக்கார அணி அவரையே பிரதமராக நியமிப்பதற்கான பகீரத பிரயத்தனங்களை மேற்கொள்ளும் என்பதும் வெள்ளிடைமலை. முன்னரை விட பலப்படுத்தப்பட்டிருக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் ஆசனங்கள் இம்முறை அதிகரிக்கவில்லையாயினும் நிச்சயமாக வாக்கு வங்கி அதிகரிக்கும் என்று குறிப்பிடலாம்.

தேசிய அரசியல் இவ்வாறிருக்க சிறுபான்மை அரசியலும் கிட்டத்தட்ட தேசிய அரசியலுக்கு ஒத்திசைவான போக்கை இத்தேர்தலில் வெளிப்படுத்தும் என்று கூற முடியும். வடக்கு, கிழக்கு  தமிழர்களில் பெரும்பான்மையானோர் தமிழரசுக் கட்சிக்கு வழக்கம் போல வாக்களிப்பார்கள். தலைநகர மற்றும் மலையகத் தமிழர்களின் வாக்குகளைப் போல சிறுபான்மை முஸ்லிம்களின் வாக்குகள் கடுமையாக சிதறடிக்கப்படும். எவ்வாறிருப்பினும் ஒப்பீட்டளவில் அதிகமான முஸ்லிம் மக்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கே வாக்களிப்பார்கள் என்பது, பிழையான கணிப்பாக இருக்க முடியாது.

மஹிந்த ராஜபக்ஷவின் கையில் சுதந்திரக் கட்சி இல்லை. அவரிடம் தற்போதைக்கு நேரடி அதிகாரங்களும் கிடையாது. சுதந்திரக் கட்சிக்காக பகிரங்கமாக பிரசாரம் செய்யாமல் நடுநிலை பேணிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே இப்போது அதன் தலைவராக இருக்கின்றார். எனவே, சிறுபான்மை மக்கள் அக்கட்சிக்கு வாக்களிப்பதில் தவறில்லை என்ற ஒரு கருத்தும் இருக்கின்றது.

ஆனால் ஒன்று, ஜனாதிபதியை மீறியும் சில விடயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. ஐ.ம.சு.கூ.வில் அங்கம் வகிக்கும் மஹிந்த விசுவாசிகளின் அழுத்தம் எங்கு கொண்டுபோய் விடும் என்பது தெரியாதிருக்கின்றது. எனவே, வெற்றிலைக்கு அளிக்கப்படும் வாக்குகள் மஹிந்தவை பிரதமராக்கி விடுமோ என்ற நியாயமான அச்சம் -சிறுபான்மை மக்களின் மனங்களில் இருக்கின்றது.

இன்னும் சொல்லப்போனால், வெற்றிலை என்றால் மஹிந்த ராஜபக்ஷ என்ற எண்ணம்தான் தமிழ், முஸ்லிம் மக்களின் மனங்களில் ஏற்படுகின்றது. அத்துடன், வெற்றிலைக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும் மஹிந்தவைப் பிரதமராக்கும் என்று முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா அறிக்கை விட்டிருக்கின்றார்.

இவ்வாறான ஒரு நிலையில், உண்மையாகவே இந்நாட்டில் நல்லாட்சிக்குக் காரணமான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் அவரது கட்சியையும் தோற்கடித்துவிட்டு மைத்திரிபால சிறிசேன என்ற ஒரு மனிதரின் முகத்துக்காக, அவர்மீது கொண்டிருக்கும் நல்லெண்ணத்துக்காக ஐ.ம.சு.மு.வுக்கு வாக்களிக்க வேண்டிய எந்தக் கடப்பாடும் மக்களுக்கு கிடையவே கிடையாது.

ஆகவே, வாக்காளப் பெருமக்களாகிய நீங்கள், எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்த்து வாக்களிக்க வேண்டும். இந்த நாட்டில் எவ்வாறான ஆட்சி அமைய வேண்டும் என்று முதலில் தீர்மானியுங்கள். அதற்கு எந்தக் கட்சி பொருத்தமானது என்பதை அறிந்துணருங்கள். அதற்குப் பிற்பாடு, மக்கள் சேவகனான, பணத்தாசை இல்லாத, நேர்மையுள்ள. அரசியல் நாகரிகம் தெரிந்த ஒரு வேட்பாளருக்கு உங்களது விருப்பு வாக்கை அளியுங்கள். வாக்களிக்கும் உங்களது ஜனநாயக உரிமை வீணாகிவிடக் கூடாது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .